Home இலக்கியம் ஸ்ரீமத் ராமாயண கல்பவிருக்ஷ காவியம் படைத்த ‘ஞானபீட’ எழுத்தாளர்!

ஸ்ரீமத் ராமாயண கல்பவிருக்ஷ காவியம் படைத்த ‘ஞானபீட’ எழுத்தாளர்!

teluguwriter
teluguwriter
  • அண்டை மாநில அறிஞர்களை அறிந்து கொள்வோம்:
  • கவி சாம்ராட், பத்மபூஷண் விஸ்வநாத சத்யநாராயணா (1895-1976)

‘கவி சாம்ராட்’ என்று தெலுங்கு மொழி பேசும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் திரு விஸ்வநாத சத்தியநாராயணா. இவர் எழுதிய ‘ஸ்ரீமத் இராமாயண கல்ப விருக்ஷம்’ என்ற காவியத்திற்காக 1971ல் தெலுங்கு இலக்கியத்தின் முதல் ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர், கவிஞர் விஸ்வநாத சத்தியநாராயணா.

சாஹித்ய அகாடமி விருதும் (1962), பத்ம பூஷணும் (1970) அவரைத் தேடி வந்தடைந்து பெருமை பெற்றன.

இருபதாம் நூற்றாண்டின் ஆந்திர இலக்கியத்திற்கு அதிலும் குறிப்பாக மரபு இலக்கியத்திற்கு வழிகாட்டியாக விளங்கிய பிதாமகராகக் கருதப்படும் இவர் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் தொடாத இலக்கிய வகையே இல்லை எனலாம்.

ஸ்ரீமத் இராமாயண கல்ப விருட்சத்தோடு கூட 25 க்கும் மேற்பட்ட காவியங்கள், 60 க்கும் மேற்பட்ட நாவல்கள், 6 சதக சாகித்யங்கள், 13 கவிதை நூல்கள், 15 நாடகங்கள், 10 சமஸ்கிருத நாடகங்கள், 10 விமர்சன நூல்கள், இன்னும் எத்தனையோ சிறுகதைகள், கட்டுரைகள், வரலாற்று நூல்கள், குறிப்புகள், வானொலி நாடகங்கள், சொற்பொழிவுகள் என்று இவருடைய பாண்டித்தியம் விரிகிறது. தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்கு விஸ்வநாத சத்யநாராயணா நூற்றுக்கணக்கில் படைப்புகளை அளித்துள்ளார்.

அவர் மொழியிலேயே கூற வேண்டுமானால், “நான் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வெளிவந்தவை சுமார் இருபதாயிரம் இருக்கலாம். நான் கிழித்தெறிந்தவை சுமார் ஐம்பதாயிரம் இருக்கலாம்”.

telugu writer satyanarayana

மஹா காவியம் எழுதினாலும், செய்யுள் எழுதினாலும், அந்தாதி எழுதினாலும் நாவல் எழுதினாலும் விஸ்வநாதரின் எழுத்தில் அவருடைய தனி முத்திரை வெளிப்படும். அவர் ஒரு மகா கவி, தத்துவ வாதி, தீர்க்கதரிசி, இவையனைத்திற்கும் மேல் சிறந்த யோகி. இவருடைய வார்த்தைகளில், வாக்கியங்களில், பொருளில், இலக்கணத்தில், உணர்ச்சியில், பாவனையில், காட்சியில், விமரிசனத்தில், மொழியில், அலங்காரத்தில் ஒரு சிறப்பான அழகு வெளிப்படும்.

விஸ்வநாதர் எழுதிய பல படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் தெலுங்கு சாகித்திய சித்தாந்தத்திலும் வாதங்களிலும் உதாரணம் காட்டப்படும் மிக முக்கிய நூல்களாக நிலைத்திருக்கின்றன.

telugu writer satyanarayana

இவர் எழுதிய ‘விஸ்வநாத மத்யாக்கரலு’ என்ற காவியத்திற்கு 1962ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. (‘மத்யாக்கரலு’ என்பது தெலுங்கு மொழியில் ஒரு பா வகை).

இவர் எழுதிய ‘புராண வைர கிரந்த மாலா’ என்பது 12 நாவல்களின் தொகுப்பு. இவற்றில் புராணங்கள் விவரித்துள்ள அரசர்களின் வரலாறு மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ‘சந்திர குப்தனின் சொப்பனம்’.

மேலும் ‘நேபாள ராஜு சரித்ர’ என்ற 6 நாவல்களும், ‘காஷ்மீர ராஜு சரித்திர’ என்ற 6 நாவல்களும் ஒரே சமயத்தில் ‘ஆசு’ வாக இவர் கூறக் கூற இவருடைய சீடர்கள் 12 பேர் ஒரே சமயத்தில் எழுதினார்கள்.

இவர் எழுதிய ‘வேயி படகலு’ (ஆயிரம் நாகங்கள்) நாவல் வாசகர்களின் மிக அதிக ஆதரவைப் பெற்ற நூல்.
“வேயி படகலு” (ஆயிரம் நாகங்கள்) நாவல்:-

அவர் 1934 ல் எழுதிய “வேயி படகலு” நாவல் நவீன இதிகாசமாக விமர்சகர்களால் போற்றப்படுகிறது. ஆயிரம் முறைகளுக்கு மேல் பதிப்பிக்கப்பட்ட ‘ஆயிரம் நாகங்கள்’ நாவல் ஒரே மாதத்தில் எழுதப்பட்டதென்றால் வியக்காமல் இருக்கமுடியாது.

1933-34 கால கட்டத்தில் ஆந்திரா பல்கலைக்கழகம் ஒரு நாவல் போட்டி அறிவித்தது. ஆயிரம் ரூபாய் பரிசு என்று தீர்மானித்திருந்தார்கள். அந்த போட்டிக்காக விஸ்வநாதர் ‘வேயி படகலு’ நாவலை எழுதினார். அதுவும் 29 நாட்களில் 999 பக்கங்கள் அவர் கூறக் கூற அவருடைய தம்பி வெங்கடேஸ்வருலு எழுதினார். ஆந்திர பல்கலைகழகம் பரிசுத் தொகையை உயர்த்தி, வேயி படகலு நாவலுக்கும், ‘அடவி பாபிராஜு’ அவர்களின் ‘நாராயண ராவு’ என்ற நாவலுக்கும் தலா எழுநூறு ரூபாய் பரிசளித்தார்கள்.

தெலுங்கு இலக்கியத்தில் நிலைத்த இடத்தைப் பிடித்த ‘வேயி படகலு’ நாவலை முன்னாள் பாரத பிரதம மந்திரி ஸ்ரீ பி.வி. நரசிம்ம ராவ் ஹிந்தியில் ‘சகஸ்ர பாண்’ என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார்.

telugu writer satyanarayana

உலகம் என்னும் கதைக் களத்தின் மீது 350 கதா பாத்திரங்களோடு மூன்று தலைமுறை மக்களை விளக்கும் மகா நாவல் வேயி படகலு. பாரத நாட்டின் அரசியல், சமுதாயம், கலாசாரம், பொருளாதாரம், கல்வி அமைப்புகள் இவற்றின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுக்கு இதிகாச உருவம் கொடுத்த நாவல் வேயி படகலு. கிராமம், விவசாயம் என்று சிறந்து விளங்கிய இந்திய கலாசாரம் அந்நிய ஆட்சியால், அயல் நாகரிக மோகத்தினால் எப்படி சீரழிந்தது என்பதை விளக்குகிறது இந்நாவல்.

இடிந்து விழும் மகா சாம்ராஜ்யத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக வேயி படகலு நாவல் விளங்குகிறது. அழிந்து வரும் பாரத நாட்டின் மேன்மைகளைப் பற்றி வேதனைப்படும் ஜீவன்களின் இதய வெளிப்பாடான வேயி படகலு நாவல் இதயமுள்ள வாசகனை கண்ணீர் விட வைக்கிறது. உலகப் படைப்புகளில் வேயி படகலு போன்ற நாவல் இன்னொன்று இல்லை என்பது விமர்சகர்களின் ஏகோபித்த அபிப்பிராயம்.

புகழ் பெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் தாகூரைப் போலவே இவருடைய எழுத்துக்களில் சிலவற்றையாவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் இவர் அகில உலகப் புகழ் பெற்றிருப்பார் என்பது இவருடைய அன்பர்களின் கருத்து.

விஸ்வநாத சத்யநாராயணா வரலாறு:-

விஸ்வநாத சத்யநாராயணா 1895ல் செப்டம்பர் 10ம் தேதி கிருஷ்ணா ஜில்லா நந்தமூரு கிராமத்தில் வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் சோபனாத்ரி, தாயார் பார்வதி. தந்தை சோபனாத்ரி சிறந்த தெய்வ பக்தர். அவர் ஒருமுறை வாரணாசி சென்று கங்கையில் குளிக்கையில் கிடைத்த விச்வேஸ்வரரின் லிங்கத்தை எடுத்துவந்து தன் கிராமமான நந்தமூரில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார்.
விஸ்வநாதரின் படிப்பு எத்தனையோ தடைகளின் இடையே தொடர்ந்தது.

இவர் ‘பந்தர்’ உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில் இவருக்கு ‘செல்லப் பிள்ள வேங்கட சாஸ்த்ரி’ என்பவர் தெலுங்கு ஆசிரியராக இருந்தார். இவர் ‘திருப்பதி வேங்கட கவிகள்’ என்று போற்றப்படும் இரட்டைக் கவிஞர்களுள் ஒருவர். பந்தர் பள்ளியில் செல்லப்பிள்ளையிடம் படித்த மாணவர்கள் பிற்காலத்தில் மகா பண்டிதர்களாக, மகா கவிகளாக ஆந்திர பிரதேசத்தில் மிகப் பிரசித்தமாக விளங்கினார்கள். அவர்களுள் விஸ்வநாத சத்திய நாராயண முதன்மையானவர்.

விஸ்வநாதர் கல்லூரியில் படிக்கும் போது மஹாத்மா காந்தியின் அழைப்பினால் படிப்பை பாதியில் நிறுத்தி ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். தந்தை மரணமடைந்து குடும்பம் வறுமையில் வாடியபோது இவர் அத்தகைய சாகசத்தைச் செய்தார். 1921 முதல் 1926 வரை பந்தரில் ஆந்திர கலாசாலையில் ஆசிரியராக பணி செய்து கொண்டே பாதியில் நிறுத்தியிருந்த பி. எ படிப்பை பூர்த்தி செய்தார்.

இவர் சொற்களிலேயே கூறுவதென்றால், ‘பிறக்கும்போது சுகத்தோடு பிறந்தேன். சிறு வயதில் ஒரு இளவரசன் போல் வாழ்ந்தேன். பிறகு கஷ்ட ஜீவியானேன். என் இஷ்ட தெய்வங்கள் என் விஷயத்தில் ஆன்மீகத்தில் அதிகமாகவும் லௌகீகத்தில் கஞ்சதனமாகவும் அனுகிரகம் செய்துள்ளார்கள்”.

பெரும்பாலும் ஆசிரியர் தொழிலிலேயே இவருடைய வாழ்நாள் கழிந்தது. பின் ஐந்தாண்டுகள் நிலையான வேலை இன்றி எழுத்து, பிரசங்கம் போன்றவற்றின் மூலம் வருமானம் வரப் பெற்று வாழ்க்கை நடத்தினார்.

teluguwriter

1916 ல் தங்கள் கோவில் தெய்வமான விஸ்வநாதரின் மேல் பாடிய விஸ்வேஸ்வர சதகத்துடன் விஸ்வநாத சத்யநாராயணாவின் படைப்புலகம் தொடங்கியது. அன்றைய கால கட்டத்தில் நிலவிய தேச விடுதலை போராட்டங்களின் தாக்கத்தால் அச்சமயத்தில் ‘ஆந்திர பௌருஷம்’ என்ற ஆவேச நூலை எழுதினர். ஏக வீரா, கின்னெரசானி பாடலு (தேவதைப் பாடல்கள்). கோகிலம்மா பெள்ளி, ஆந்த்ரா பிரஸஸ்துலு போன்றவை மக்களின் பேராதரவை பெற்றன.

1920 களில் மிகக் கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலக் கட்டத்தில் தெலுங்கில் மிகப் புகழ் பெற்ற கவிஞராக அறியப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு விஸ்வநாதரின் எழுத்துக்கள் அருவி போல் பொழியத் தொடங்கின. 1942ல் சங்கராந்தியன்று கஜாரோஹனம் (யானை மேல் ஊர்வலம்) நடத்தி இவரை கௌரவித்தனர் மக்கள்.

1961ல் கரீம்நகர் அரசு கல்லூரியில் பிரின்சிபாலாக பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றபின் முழு மூச்சாக தன் நேரத்தை இலக்கிய படைப்புகளுக்கே உரித்தாக்கினார்.

விஸ்வநாதரின் மனைவி பெயர் வரலக்ஷ்மி. மிக நல்ல பெண்மணியான அவரால்தான் தன்னால் சிறந்த கவிஞனாக உயர முடிந்தது என்று தன் படைப்புகள் பலவற்றில் கூறியுள்ளார் விஸ்வநாதர். இத்தம்பதிகளுக்கு அச்சுத தேவராயன் என்ற மகன் பிறந்தான்.

1932ல் விஸ்வநாதரின் மனைவி நோய்வாய்பட்டு காலமானார். மனைவியின் இழப்பு இவர் மனதில் தீவிரமான முத்திரை பதித்தது. வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மனைவியுடைய மரணத்தின் தாக்கம் அவரை விட்டு இறுதிவரை நீங்கவில்லை.

அவருடைய 36 வது வயதில் மனைவி மறைந்த பின் தன் 80 வது வயதில் தான் மரணமடையும் சமயத்தில் கூட அவள் நினைவாகவே இருந்தார் என்று நெருங்கிய உறவினர்கள் கூறுவர். வரலட்சுமி மரணமடைந்த பின் அந்த துக்கத்தில் எழுதிய கவிதைகளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரலட்சுமி திரிசதி என்ற பெயரில் வெளியிட்டார்.

அவர் எழுதிய மகா காவியமான இராமாயண கல்ப விருட்சத்தில் கூட வரலட்சுமி மரணத்தோடு தொடர்பு காணப்படுகிறது. ஸ்ரீராமசந்திரமூர்த்தி முப்பத்தாறு வயதில் சீதையைப் பிரிய நேர்ந்தது. அதே வயதில் இவரும் மனைவியைப் பிரிந்து மகா துக்கத்தை அனுபவித்தார்.

அந்த பிரிவின் வலி எப்படிப்பட்டது என்று தெரியாவிட்டால் தன்னால் ராமர் கதையை உயிரோட்டத்தோடு எழுத முடியாது என்பதால் தனக்கு இறைவன் அந்த தகுதியை எற்படுத்திக் கொடுப்பதற்காக மனைவியைப் பிரித்து விட்டதாக விஸ்வநாதர் ஓரிடத்தில் கூறியுள்ளார்.

வாழ்வில் பல காலம் விஜயவாடா நகரத்திலேயே வாழ்ந்து வந்த விஸ்வநாத சத்தியநாராயணா, கல்ப விருக்ஷங்களான தன் இலக்கியச் செல்வங்களை நமக்களித்து விட்டு 1976 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

1996ல் அவருடைய நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது விஜயவாடாவில் அவருடைய சிலையை அன்றைய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா திறந்து வைத்தார்.

“என் படைப்புகள் அனைத்தும் என் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பே. உலக மனிதன் காவிய மனிதனானேன். என்னைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தில் வெளிப்படும் எண்ணங்களும் அனுபவங்களும் என் மனதில் ஏற்படுத்தும் முத்திரைகள் என் எழுத்துக்களில் முட்டி மோதிக் கொண்டு வெளிப்படுகின்றன. அனைவருக்கும் அனுபவங்கள் உள்ளன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த தெரிந்தவன் கவிஞனாகிறான்” என்கிறார் விஸ்வநாதர்.

தன் படைப்புகளில் ஸ்ரீமத் இராமாயண கல்ப விருக்ஷம் தனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த திருப்தியளித்த நூல் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version