― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்நீட் #NEET - தமிழக மாணவர்க்கு... ஹீரோவா? வில்லனா?

நீட் #NEET – தமிழக மாணவர்க்கு… ஹீரோவா? வில்லனா?

- Advertisement -
neet2020

நீட் – மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு
(NEET – National Eligibility cum Entrance Test) 
தமிழக மாணவ – மாணவியர்களுக்கு…
ஹீரோவா..? வில்லனா..?

சமீபகாலமாக தமிழக மாணவர்களுக்கு,  “நீட்” தேர்வு வில்லனாக சித்தரிக்கப் படுகின்றது.  மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒவ்வொரு மாணவரும், நீட் தேர்வு எழுதி, தேர்வு பெற்று தான் செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி இந்த சட்டம் இயற்றப்பட்டது. மருத்துவ படிப்பு படிப்பதற்கு, நீட் கட்டாயம் என்று சொன்ன நாள் முதல், தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், தமிழகத்தில் மிகவும் வில்லனாகவே சித்தரிக்கப்படுகின்றது இந்த நீட் தேர்வு.

நீட் தேர்வால் கிடைக்க இருக்கும் நன்மைகள்:

– பொதுவாக மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள்,  நாடு முழுக்க நடக்கும் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்வு பெற்றால், ஏதேனும் ஒரு இடத்தில் மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் அவர்களுக்கு பண விரயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக படிப்பதற்காக நேர விரையம், மன உளைச்சல், புத்தகங்கள் வாங்க வேண்டிய செலவு மற்றும் தேர்வுக் கட்டணம் என பலவகையான செலவுகள் ஏற்படும். இதனுடன் வெளி மாநிலங்களுக்கு செல்ல பயண கட்டணம் என அதிகமாக செலவாகும். வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் போது, அங்கே  அவர்கள் விடுதியில், தங்கும் செலவு என நிறைய பணம் விரயமாகும். இதனுடன் உணவுக் கட்டணம் வேறு என நிறைய செலவாகும்.

– பல மாநிலங்களில் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதாமல், ஒரே தேர்வு என “நீட்” தேர்வு எழுதுவதன் மூலமாக, நாடு முழுவதும் உள்ள எந்த மருத்துவக் கல்லூரிக்கும் அவர்கள் படிக்க முடியும்.  இதனால் பண செலவுகளும், நேர விரயங்களும், மன உளைச்சலும் குறையும்.

– வசதி படைத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பும், ஏழை மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பும் என இரு வாய்ப்புகள் இல்லாமல், எல்லோருக்கும் சரி சமமான வாய்ப்பு கிட்ட நீட் தேர்வு முக்கிய பங்கு வகிக்கின்றது. மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், பணம் இருந்தால், கோடிகள் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு மாற்றியுள்ளது. யாராக இருந்தாலும், என்ன வசதி படைத்து இருந்தாலும், நல்ல  மதிப்பெண் இருந்தால் மட்டுமே, மாணவர்கள் மருத்துவப் படிப்பை படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தி இருக்கின்றது.  இதன் மூலம் களத்தில் அனைத்து வகையான மாணவருக்கும் சமமான வாய்ப்புகள் கிட்டும்.

இந்த தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடைபெறுகின்றதா?

தமிழ்நாட்டில் 2006 வரை 120 க்கும் குறைவான சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களே இருந்து வந்தன. கலைஞர் ஆட்சி காலத்தில் 2006 முதல் 2011 வரை 450 க்கும் மேலான சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

நான்கு வகையான பாடத்திட்டம் நமது நாட்டில் பின்பற்றப்படுகின்றது.  ஒன்று சிபிஎஸ்இ மற்றவைகள் மெட்ரிக், மாநிலத் திட்டம், இன்டர்நேஷனல் ஸ்கூல் என அழைக்கப்படும் உலகத்தரம் வாய்ந்த திட்டம் என நான்கு வகையான பாடத்திட்டம் உள்ளன.  இருப்பினும் எல்லா பாடத் திட்டங்களுக்கும் மாநில அரசு தான் அனுமதி வழங்க வேண்டும்.

ஒரு மாநில அரசு அனுமதி வழங்கினால் தான், அவை இங்கே உருவாக முடியும். ஒரு திறமையான மாணவர்,  நன்கு பயிற்சி பெற்று மேலே உயர்ந்து சென்றால் தான் உலகம் அவரை மதிக்கும். அதற்கு மாறாக மற்றவரின் திறமையை குறைப்பது எந்த வகையில் நியாயம். உதாரணமாக ஓடும் குதிரை இன்னொரு குதிரையை விட நன்றாக ஓட வேண்டும் என்று எண்ணுவதை விட நன்றாக ஓடும் குதிரையின் காலை  வெட்டினால் அது எப்படி சரியாகும்.

அதுபோல சில குறிப்பிட்ட பாட திட்டம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக, “மாநில பாடத்திட்டம்” என மாநிலத் திட்டத்தையும், மெட்ரிக் திட்டத்தையும் இணைத்து “சமச்சீர் கல்வித் திட்டம்” என கொண்டு வந்ததன் மூலமாக,  நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சமச்சீர் கல்வியில் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லாமல், அதிலிருந்து விலக்கி சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களில் சேர்த்தனர்.

அதன் மூலம் தங்களது மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என அந்தப் பெற்றோர்கள் நினைத்தனர். நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், நீட் தேர்வுக்கு என ஒரு பாடத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில் கொடுக்கப்பட்ட பாடத் திட்டத்திற்கு ஏற்ப கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு பதில் அளிப்பது சுலபமாக இருந்தது. ஆனால், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற மிகவும் திணறினர், என்பதே நிறைய மாணவர்களின் கூற்றாக இருக்கின்றது.

தமிழக பாடத்திட்டம் தரத்தை உயர்த்தி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட, மிகவும் உயர்ந்த தரத்தில் ஏற்படுத்தினால், அதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.

இதற்கான  வாய்ப்பினை  ஏற்படுத்தித் தர இருக்கும், “புதிய கல்விக் கொள்கை”யை தமிழகத்தில் அரசியல் வாதிகள் எதிர்ப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். அதிகபட்ச வாய்ப்பையும் கொடுத்து, கல்வித் தரத்தையும் உயர்த்தினால், தமிழக மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என மக்கள் அனைவரின் எண்ணமாக இருக்கின்றது.

நாடு முழுவதற்கும் இந்திய குடிமைப் பணித் தேர்வு என நிறைய தேர்வுகள் ஒன்றாக இருக்கும் போது, நீட் தேர்வுக்கு மட்டும் ஒரே பாடத் திட்டத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவிப்பது, ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், விடை தெரியாத கேள்வியாகவும் உள்ளது.

21 July12 Neet exam 1

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப் படுகின்றதா?

நீட் தேர்வில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 85% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 15% மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவ – மாணவியர்களுக்கு ஒதுக்கப் படுகின்றன. தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதன் மூலம், நிறைய இடத்தை தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும்.

மேலும், தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள 15 சதவீத இடங்களுக்கும் போட்டி போட முடியும். எல்லோரும் அறியும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவப் படிப்பிற்கான ஒதுக்கீடு மேற்கொள்ளப் படுகின்றது.

நீட் தேர்வுக்கு முன்னரோ,  நான்கு சுவர்களுக்குள், யாருக்கும் தெரியாமல், பணத்தை வைத்து மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால்,  நீட் தேர்வால் அது சாத்தியம் இல்லை என்பதால், அரசியல்வாதிகளின் துணையோடு, பெரும் பண முதலைகள்  துணையோடு, மருத்துவக் கல்லூரிகளின் உரிமையாளர்கள் துணையோடு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு காட்டப்படுகின்றது. தமிழகத்தில் தமிழக மாணவர்களுக்கு நேசக் கரம் நீட்டுவது நீட் தேர்வு.

neet-exam-2020

நீட் தேர்வில் இட ஒதுக்கீடு.?

நீட் தேர்வில் 27% பிற்பட்ட வகுப்பினர்களுக்கும், 10% பொருளாதார ரீதியாக பிற்பட்டவர்களுக்கும், 15% பட்டியல் இன (SC) மக்களுக்கும், 7.5% பழங்குடியின (ST) மக்களுக்கும், 5% மாற்றுத் திறனாளிகளுக்கும் என ஒதுக்கப் படுகின்றது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் என உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும், எந்தவித குந்தகமும் விளைவிக்காமல், சரியான முறையில், மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு செய்யப் படுகின்றது. எந்த வகுப்பை சேர்ந்தவர்களுக்கும், பாதிக்காத வகையில், சமூக நீதி அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப் படுகின்றன.

சென்ற வருட (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாக கொடுத்துள்ளேன்…

a) மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள் -3050

b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945

(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679

(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110

(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20

(iv) பொதுப்பிரிவில்  (Un Reserved) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணரை தவிர வேறு சாதிகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)

d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)

e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579

(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)

f) சென்ற வருடம் சமூக வாரியாக தமிழ்நாட்டில் கிடைக்கப்பட்ட MBBS இடங்கள்

(i) FC-136

(ii) BC-1594

(iii) MBC-720

(iv) SC/ST-600

neet2

நீக்க முடியுமா நீட் தேர்வை?

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், “நீட் தேர்வை நீக்குவோம்”, என்ற கோரிக்கையை தமிழக மக்களிடம் முன் வைத்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும். நீட் தேர்வை நீக்கி விட்டார்களா..? இந்த வருடமும், நீட் தேர்வு நடைபெறுகின்றது. நீட் தேர்வை நீக்க வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் பேச்சைக் கேட்டு, ஓட்டளித்த மக்கள் சிந்திக்க வேண்டும்..!

வழக்கம் போல், ஓட்டுக்காக மக்களிடம் அரசியல் செய்வது எதிர்க் கட்சிகளின் வாடிக்கை. மாணவர்களின் நலனில், அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்வது உண்மையிலேயே வேடிக்கை.

நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எதிர் கட்சிகள் ஒன்று கூடி  வழக்கு தொடுத்தாலும்,  நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.  நீட் தேர்வு,  செப்டம்பர் 13 அன்று, நிச்சயமாக நடைபெறும் என்று வழிகாட்டி உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கபட நாடகம்:

தமிழக எதிர்க்கட்சிகளால், நீட் தேர்வை, “வில்லன்” போல காட்சி படுத்தி வந்தாலும், அது உண்மையிலேயே, தமிழக மாணவர்களுக்கு ஒரு “ஹீரோ” தான்.  என்ன  மதிப்பெண் எடுத்து இருந்தாலும், தங்களின் திறமைக்கு ஏற்ப, சரியான இடத்தில், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரு ஹீரோவே நீட் தேர்வு. அதனை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அதி விரைவில் தமிழக மக்களால் வில்லனாகப் பார்க்க படுவார்கள். கூடிய சீக்கிரத்தில் அதை எல்லோரும் உணர்வாளர்கள்.

 “உண்மையான ஹீரோ நீட் தேர்வு…

உண்மையான வில்லன் நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்” …

கட்டுரை: ஓம்பிரகாஷ்,
Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version