
நவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா
125 வது பிறந்தநாள் இன்று
(செப். 28, 1895 – ஜூலை, 24, 1974)
– ராஜி ரகுநாதன்
தன் கவிதைப் பயணம் என்னும் வெற்றிக் கொடியை தெலுங்கு இலக்கிய வானில் உயரப் பறக்கவிட்ட உலக மனிதர் குர்ரம் ஜாஷுவா.
குர்ரம் ஜாஷுவா விடாமுயற்சியுள்ள கவிஞராக நவயுக கவிச்சக்ரவர்த்தாக தேஜோமூர்த்தியாக தெலுங்கு இலக்கிய உலகில் தனது கவிதை திறமையால் சிறந்து விளங்கியவர். நவீன தெலுங்கு கவிஞர்களிடையே ஒரு முக்கிய கவிஞரான இவர், சமகால கவிதை பாணியான உணர்ச்சிவசப்பட்ட கவிதைகளிலிருந்து விலகி சமூகத்தின் நலனுக்காக எழுதினார்.
ஜாஷுவா கவிதையை ஆயுதமாகக் கொண்டு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக திரும்பினார். எங்கு கடின சொற்களைக் கேட்டாரோ அதே இடத்தில் விருதுகளையும் பெற்றார். வாழ்வின் கடினங்களை மென்மையான கவிதைகளால் எதிர்கொண்டார்.
அவர் ஒருமுறை கூறியது போல், “எனக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். வறுமை மற்றும் சாதி பாகுபாடு. ஒன்று பொறுமையை கற்றுக்கொடுத்தது. இன்னொன்று என்னில் எதிர்க்கும் வலிமையை அதிகரித்தது”. வெங்கடகிரி அரசரின் அழைப்பிற்கிணங்கி ரயிலில் நெல்லூருக்குச் செல்லும் வழியில், சக பயணியான ஒரு கவிஞருக்கு அறிமுகமானார்.
அவரது விருப்பப்படி ஜாஷுவா சொந்தக் கவிதையைப் பாடினார். மகிழ்ச்சியடைந்த அந்தக் கவிஞர் உங்கள் கவிதை அற்புதமானது என்றார். ஆனால் ஜாஷுவாவின் சாதியைக் கேள்விப்பட்டதும் உடனடியாக எழுந்து வெளியேறினார். கலைக்கு சாதிகள் இருக்கிறதா? என்று ஜாஷுவா வெங்கடிகிரி மன்னரிடம் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார். .
ஜாஷுவாவைப் பற்றி தெரிந்து கொள்வது என்றால், ஆசைப்படுவது, எதிர்பார்ப்பது, போராடுவது போன்றவற்றை அறிவதே. கடலில் அலைகள் மகத்தானவை. வெளியே தெரிபவை மட்டும் சிலவே. ஜாஷுவாவின் வாழ்க்கைக் கடலும் அது போன்றதே.
ஜாஷுவாவைப் பற்றி குறிப்பிடும் விஸ்வநாத சத்யநாராயணா ஜாஷுவா ஒரு மதுர கவி என்று கூறினார். ஒரு மாதுர்யம் சாரதா தேவியின் அருளால் அவரது கவிதைகளுக்கு கிடைத்துள்ளது என்று விஸ்வநாத சத்யநாராயணா கூறியுள்ளார்.
ஜாஷுவா 28-09-1895 அன்று குண்டூர் மாவட்டம் வினுகொண்டாவில் குர்ரம் வீரய்யா, லிங்கம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் வெவ்வேறு குலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜாஷுவாவின் குழந்தை பருவம் வினுகொண்டா கிராமத்தின் பசுமையான வயல்களின் இடையே வசதியாக கழிந்தது. 1910ல், அவர் மேரியை மணந்தார். ஜாஷுவா ஒரு மிஷனரி பள்ளியில் மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்தார்.
அந்த வேலையை இழந்த பிறகு, ராஜமுந்திரிக்குச் சென்று 1915-16ல் திரைப்பட விரிவுரையாளராக பணியாற்றினார். டாக்கி (பேசும்) திரைப்படங்கள் இல்லாத அந்த நாட்களில் திரையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏற்ப பின்னணியில் கதை மற்றும் வசனங்களைப் படிப்பதே பணி.
பின்னர் குண்டூரில் உள்ள லூதரன் சர்ச் ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1928 முதல் 1942 வரை குண்டூரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணிபுரிந்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது போர் பிரச்சாரகராகவும் பணியாற்றினார். 1957-59க்கு இடையில் மெட்ராஸ் வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி மேலாளராக பணியாற்றினார்.
ஒருமுறை வினுகொண்டாவில் நடந்த கவி அவதானம் மேடையில் ஜாஷுவா தன் கவிதைகளைப் படித்தார். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்து கொண்டு ஹிந்து மத கவிதைகள் எழுதுகிறார் என்று கிறிஸ்தவ குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவரது குடும்பம் கிறிஸ்தவ சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. படிப்படியாக அவர் நாத்திகத்தை நோக்கி நகர்ந்தார். வாழ்க்கைக்காக பல வேலைகளைச் செய்த ஜாஷுவா 1964ல் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரானார்.
சிறுவயதிலிருந்தே ஜாஷுவாவிடம் படைப்பாற்றல் இயல்பாக இருந்தது. அவர் படம் வரைந்து பாட்டு பாடுவார். தனது சிறுவயது நண்பரும் பிற்கால எழுத்தாளருமான தீபால பிச்சய்ய சாஸ்திரியின் தோழமையால் ஜோஷுவாவுக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
ஜுபூடி ஹனுமன் சாஸ்திரியிடம் மேகசந்தேசம் குமாரசம்பவம், ரகுவம்சம் கற்றார். ஜாஷுவா 36 நூல்களையும் பல கவிதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை கிறிஸ்து சரித்திரம், கபிளம் (வவ்வால்), பிர்தௌசி, ருக்மிணி கல்யாணம், மயானவாடிகா, விவேகானந்தர், ஜெபுன்னீசா, நாகார்ஜுனசாகரம். அவர் தனது சுயசரிதையையும் ‘நா கத’ என்ற தலைப்பில் எழுதினார்.
வவ்வால் (1941) அவரது படைப்புகளில் சிறந்தது. காளிதாசரின் மேகசந்தேசம் போன்றது. ஆனால் இதில் செய்தி அனுப்புவது யக்ஷன் அல்ல. ஒரு கதாநாயகன் தன் துயரத்தை காசி விஸ்வநாதரிடம் சேர்க்கும்படி ஒரு வவ்வாலை தூது அனுப்புகிறான்.
ஏனெனில் அவனால் ஆலயத்துக்குள் செல்ல முடியாது. ஆயினும் ஒரு வௌவால் செல்லத் தடையில்லை. கதாநாயகன் தனது வேதனையை விவரிக்கும் விதம் இதயத்தைத் தொடுகிறது. தலித் இளைஞன் கதாபாத்திரத்தின் மூலம் அவர் தனது உணர்வுகளை அத்தனை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
ஜாஷுவா 1932ல் பிர்தௌ சி என்ற மற்றொரு பெரிய படைப்பை எழுதினார். பாரசீக பேரரசன் கஜினி முகமதுவின் ஆஸ்தானத்தில் இருந்த கவிஞர் ஃபிர்தௌசி. அரசர் கவிஞர்களின் சொல்லுக்கு ஒரு தங்க நாணயம் கொடுப்பார் என்று கேள்விப்பட்டு பிர்தௌசி பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து ஒரு மகாகாவியத்தை எழுதினார்.
கடைசியில் மன்னர் பொறாமை கொண்டவர்களின் வார்த்தைகளைக் கேட்டு தன் வார்த்தைகளை மறந்தார். மன வேதனையால் தற்கொலை செய்து கொண்ட கவி பிர்தௌசியின் இதயத்தை ஜாஷுவா அற்புதமாக விவரித்தார்.
“சிறந்த கவிஞன் மக்களின் நாவில் வாழ்கிறான்” (சுகவி ஜீவிஞ்சு பிரஜல நாலுகலயந்து) என்ற கவிதையில் ஜாஷுவா கவிதை உலகிற்கு உன்னதமான இடத்தை அளிக்கிறார்.
ஜாஷுவா நகைச்சுவை உணர்வு மிக்கவர். ” விலங்குகள் சிரிக்காது. மனிதன் சிரிப்பான். மனதின் வளர்ச்சிக்கு சிரிப்பு என்பது ஒளிவிளக்கு” என்று சிரிப்பின் மகத்துவம் கூறுகிறார். எத்தனை துயரங்கள் நேர்ந்தபோதிலும் பொருளாதார கஷ்டங்கள் இருந்தபோதிலும் அவர் புன்சிரிப்போடு வாழ்ந்தார்.
அவரது நிதி நிலைமையை அறிந்த அவரது தோழர் ஸ்ரீ ஏகாதண்டய்ய பந்துலு குண்டூரிலிருந்து 25 ரூபாய் மணியார்டர் செய்து, “ஜாஷுவா! கடவுள் நேற்று இரவு கனவில் தோன்றி உனக்கு 25 ரூபாய் அனுப்பச் சொன்னார்” என்று கூப்பனில் எழுதினார்.
ஜாஷுவா தன் நன்றி தெரிவித்து பதிலளிக்கையில், “உங்கள் கடவுள் 25க்கு அடுத்ததாக பூஜ்ஜியத்தை வைக்கச் சொல்லவில்லையா?” நகைச்சுவையாக வினவினார்.
இரட்டை கவிஞர்களாக சிறந்து விளங்க முடியும் என்றெண்ணி ஜாஷுவா தனது நண்பர் ஸ்ரீ தீபால பிச்சய்ய சாஸ்திரியுடன் சேர்ந்து கவிதை எழுத விரும்பினார். ஆயின் இரட்டையர்களுக்கு முன்னால் உள்ள பெயர் நன்கு சேர வேண்டுமல்லவா? இவர் ஜாஷுவா, அவர் பிச்சைய்யா.
ஜாஷுவா என்ற பெயரை முன்னால் வைத்தால், ‘ஜாஷுவா பிச்சி’ ஆகிவிடும். பிச்சையா பெயரை முன்னால் வைத்தால் ‘பிச்சி ஜாஷுவா’ ஆகிவிடும். எப்படி வைத்தாலும் ஜாஷுவாவுக்கு பைத்தியம் பிடித்தாற்போல் ஆகிவிடும் என்பதால் அந்த முயற்சியை கைவிட்டார்.
“மருந்து உட்கொள்கிறீர்களே! காய்ச்சல் குறைந்ததா?” என்று யாராவது கேட்டால், “குறைந்தது” என்பார். “எவ்வளவு குறைந்தது?” என்று கேட்டால், “பாட்டிலில் பாதி குறைந்தது” என்பார். “பாட்டிலில் என்ன இருக்கிறது?” என்றால், ‘அதுதான் மருந்து. அது குறைந்தது.” என்று கூறிச் சிரிக்க வைப்பார்.
1948ல் ‘பாபுஜி’ என்ற நினைவஞ்சலியை மகாத்மா காந்தி இறந்த செய்தியைக் கேட்டு ஜாஷுவா எழுதினர். ஒருமுறை ஆந்திர விஸ்வகலா பரிஷத் ஜாஷுவாவுக்கும் மற்றொரு பிரபல கவிஞர் ஸ்ரீ விஸ்வநாத சத்யநாராயணாவுக்கும் ‘கலாப்ரபூர்ணா’ என்ற விருது வழங்கியது.
குர்ரம் ஜாஷுவா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த கவி விஸ்வநாத சத்யநாராயணா, “குதிரையையும் (குர்ரம் என்றால் குதிரை) கழுதையையும் ஒன்றாகக் கட்டிவிட்டீர்களே!” என்றார்.
ஜாஷுவா எழுதிய “சத்ய ஹரிச்சந்திரா” நாடகத்தின் ‘ஸ்மசான வாடிக’ படைப்பில் உள்ள கவிதைகள் இன்றியமையாதவை. இவர் எழுதிய ‘சிசுவு’ (குழந்தை) என்ற பாடலை கண்டசாலா அற்புதமாகப் பாடியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் கான கந்தர்வரான கண்டசாலா, ஜாஷுவாவையும் நினைவுகூறும் வண்ணம் ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துரைத்தார்.
கண்டசாலா இந்த பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது ஜாஷுவா அவர் வீட்டிற்கு வந்து வாயில் திண்ணையில் அமர்ந்தார். கண்டசாலா வெளியே வந்து, “என்ன! நீங்கள் வெளியே உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “நான் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவன். பிராமணரே! உங்கள் அனுமதியின்றி நான் எப்படி உள்ளே வர முடியும்?” கேட்டார்.
கண்டசாலா, “எனக்கு கவலையில்லை, நீங்கள் சுதந்திரமாக உள்ளே வரலாம். மேலும், நீங்கள் சரஸ்வதியின் மகன். நீங்கள் தீண்டத்தகாதவராக இருந்தால், சரஸ்வதி தேவியும் தீண்டத்தகாதவர் என்று பொருளல்லவா?” என்று கூறி தன் இல்லத்திற்குள் அழைத்துச் சென்று தன் உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தினார்.
ஜாஷுவா தனது வாழ்நாளில் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். திருப்பதி இரட்டைக் கவிஞர்களில் ஒருவரான வெங்கட சாஸ்திரி, ஜாஷுவாவின் காலில் கண்டபெண்டேரம் அணிவித்து, “இந்த கவிஞரின் பாதத்தைத் தொட்டு என் பிறப்பை உய்வித்துக் கொண்டேன்” என்று கூறினார். அதனை ஜாஷுவா தனக்குக் கிடைத்த மிக உயர்ந்த விருதாகக் கருதினார்.
கவிதா விசாரத, கவி கோகிலா, கவி திக்கஜா, நவயுக கவிச் சக்ரவர்த்தி, மதுர ஸ்ரீநாத, விஸ்வகவி சாம்ராட் போன்றவை பிரபலமானவை. பத்ம பூஷண், கேந்திர சாகித்ய அகாடமி விருது, ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாடமி விருது, கலாப்ரபூர்ணா போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
1964ல் இவர் எழுதிய கிறிஸ்து சரித்திரத்திற்கு மத்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. 1964ல் அவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப் பட்டார். 1970ல் ஆந்திர விஸ்வ வித்யாலயம் கலாப்ரபூர்ணா விருது வழங்கி கௌரவித்தது. 1970ல் இந்திய அரசாங்கம் பத்மபூஷண் அளித்து கௌரவித்தது.
‘ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு துளி ரத்தம் தன் உடலிலிருந்து குறையும்படி’ எழுதியதாகப் புகழப்படும் சிறந்த கவிஞர், சாரதாதேவி அருள்பெற்றவரான ஜாஷுவா 24-07-1971 அன்று குண்டூரில் காலமானார்.
ஜோஷுவாவின் மகள் ஹேமலதா லவணம் தன் தந்தையின் நினைவாக ஜாஷுவா இலக்கிய விருதை நிறுவினார். இந்த விருது ஆண்டுதோறும் பல்வேறு இந்திய மொழிகளில் சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
‘ஒரு அரசன் மரணிக்கும்போது ஒரு நட்சத்திரம் தரையில் விழும். ஒரு சிறந்த கவி மரணிக்கும்போது ஒரு நட்சத்திரம் வானில் எழும். அரசன் கற்சிலைகளில் வாழ்வான். சிறந்த கவிஞன் மக்களின் நாவில் வாழ்வான்’ என்று அவரே கூறியுள்ளார் அல்லவா!