Home கட்டுரைகள் இந்தியாவின் பறவையியல் வல்லுநர் சலீம் அலி பிறந்த நாளில்!

இந்தியாவின் பறவையியல் வல்லுநர் சலீம் அலி பிறந்த நாளில்!

salim-ali
salim ali

சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்
சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

“இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும்.

1876 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் அன்றைய பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சலீம் அலி ஒரு வேட்டை பிரியர். பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சித்தப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார்.

மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது. அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் பர்மா சென்றுவிட்டார். அங்குச் சென்றும் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.

saleemali

பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு விலங்கியல் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது.

பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (Dr Irwin Strassman) என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.

சலீம் அலியின் 18-ஆவது வயதில், 1918 டிசம்பரில் சலீம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சலீம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர். திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை.

வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.

சலீம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்த பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம்.

இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது. இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது.

இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, வலசை போதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன. பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பாணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார்.

மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே.

சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சியினை பரத்பூர்,மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், இமாலய மலைகள், கிழக்கு இமாலய மலைகள், இராஜஸ்தானின் பாலைவனங்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பனிச் சிகரங்கள்,மியான்மர், நேபாளம்,தக்கான பீடபூமி மிக முக்கிய இடங்களில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்

சலீம் அலி 1987 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாள் (prostate)புற்றுநோயால் இயற்கை எய்தினார்.

பத்ம பூஷண் (1958), பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் விருது (1967), ஜோன் சி. பிலிப்ஸ் விருது (World Conservation Union – 1969), பத்ம விபூஷண் (1976) J. Paul Getty Wildlife Conservation Prize of the World Wildlife Fund (1976) Commander of the Netherlands (Order of the Golden Ark) (1986) உள்ளிட்ட விருதுகளை பெற்றார்

சலீம் அலி மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

  • கட்டுரை: விஜயகுமார்
    (நிர்வாக அறங்காவலர், அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை, திருச்சி)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version