spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வந்தேறிகளின் வம்பு பிரசாரம்… விளைவுகள்! உண்மைகள்! (மனுஸ்மிருதி மீது ஏன்?) பகுதி - 13

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்… விளைவுகள்! உண்மைகள்! (மனுஸ்மிருதி மீது ஏன்?) பகுதி – 13

- Advertisement -

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Manusmriti insults women and advocates caste differences , discrimination and it is irrelevant book. – மனுஸ்மிருதி பெண்களை இழிவுபடுத்துவதாகவும் சாதிகளிடையே பிரச்சனை ஏற்பட்டுத்துவதாகவும் உள்ளது. இது ஒரு தேவையற்ற நூல்… என்பது வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்.

இதன் பின்னுள்ள சதி என்ன? உண்மை என்ன? இந்த நூலில் உள்ளது என்ன? என்பதைச் சற்று விரிவாக பார்ப்போம்.

சுமார் ஐம்பதுக்கும் மேலாக உள்ள ஸ்மிருதிகளில் மனு ஸ்மிருதிக்கே பிரத்தியேகமாக பிரச்சாரம் அதிகமாக உள்ளது. இந்த நூல் எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என்பது குறித்து யாரும் பேசுவதில்லை. இந்த நூலை வஞ்சகமானதாக ஆபாசம் நிறைந்து விவேகமற்று இருப்பதாக போலி மேதாவிகள் தீய எண்ணத்தோடு மொழிபெயர்ப்பு செய்ததால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. வேண்டுமென்றே கற்பனை செய்து இணைத்த இடைச்செருகல்களுக்கும் வாய்ப்பில்லாமல் இல்லை.

ஆயினும் ஸ்மிருதிகள் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி கொள்ளும் வாய்ப்பு உள்ள நூல்கள். இந்த உண்மையை மறந்த சமூக விரோத சக்திகளுக்கும் நாட்டைச் சீரழிக்கும் சக்திகளுக்கும் மதமாற்றம் செய்பவர்களுக்கும் ஒரு ஆயுதமாக மனுஸ்மிருதி பயன்படுகிறது.

அண்மைக்காலம் வரை பெண்களை மனித இனத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்காத பைபிள் கூட்டம், பெண்ணுக்கு ஓட்டுரிமை அளிப்பதற்குத் தயங்கிய மேற்கத்தியவாசிகள் நம்மை விமர்சிப்பது நகைப்புக்கு இடமானது.

பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்க்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிர் சிறப்புக்கு சில உதாரணங்கள்.

இதற்கு மாறாக பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் மகளிர் குறித்து அவர்களின் உண்மையான கருத்தை வெளிப்படுத்துகின்றன.

“பெண் மௌனமாக அடங்கியிருக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்கவோ ஆண்களை அதிகாரம் செய்யவோ நான் அனுமதிக்க மாட்டேன். ஏனென்றால் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டவர். பிறகுதான் ஏவா உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் ஏமாற்றப்படவில்லை. பெண் தான் ஏமாந்து கட்டளையை மீறினாள்” (1 திமோதி- 2 :11 -14)

“Thou shalt not suffer a witch to live” – “ஒரு மந்திரவாதியைக் கூட உயிரோடு விடக்கூடாது” என்ற ஒரு பைபிள் வாசகம் லட்சக்கணக்கான பெண்களை சர்ச் விசுவாசிகள் வேட்டையாடி உயிரோடு எரிக்கக் காரணமானது.

இதற்கு மாறாக முதலிலிருந்து இறுதிவரை அற்புதமான கலாச்சாரத்தோடு தர்மத்தை போதிக்கும் மனுஸ்மிருதியை எதற்காக வெறுக்கிறார்கள்? உண்மையில் மனுஸ்மிருதியில் என்ன உள்ளது? ஆட்சேபிக்கும் படி அதில் இருப்பது என்ன? பார்ப்போமா…

ALSO READ: வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்… விளைவுகள் உண்மைகள்…!

மனு ஸ்மிருதி மிக மிக பழமையான, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தர்ம சாஸ்திர நூல். மானுட வாழ்க்கையின் நியமங்களையும் தர்ம நெறி முறைகளையும் விவரிக்கும் நூல். மனிதன் சுகமாகவும் மகிழ்வாகவும் வாழ்வதற்காக நியமித்த சூத்திரங்கள், தனிமனிதனுக்கும், அவன் மூலம் சமுதாயத்துக்கும் அளித்த நடத்தை விதிமுறைகள்.

அரசாட்சி விதிகள், தர்மங்கள், வழிமுறைகளை மீறி நடந்தால் அளிக்கவேண்டிய தண்டனைகள் போன்றவை குறித்து விவரிக்கும் இந்த நூல் வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. ரிஷிகள் நியமித்த ஸ்மிருதிகளில் ஆதி நூல் மனு எழுதிய மனு ஸ்மிருதி. இது கிருத யுகத்தைச் சேர்ந்தது. வேறு சில ரிஷிகளும் அந்தந்த காலத்திற்கேற்ப எழுதிய யாக்யவல்கிய ஸ்மிருதி, கௌதம ஸ்ம்ருதி (திரேதாயுகம்), சங்கர் எழுதிய ஸ்ம்ருதி (துபாபரயுகம்), பராசர ஸ்மிருதி ( கலியுகம்) உள்ளன.

ஸ்மிருதிகளில் என்ன உள்ளது? சிருஷ்டியின் தொடக்கம் குறித்தும், மாணவர்கள், கணவன், மனைவி, அரசாளும் அரசன், அமைச்சர்கள்… இத்தனை ஏன்? மனித இனம் முழுமையும் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள், தவறிழைத்தவர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் இதில் உள்ளன.

மனிதன் என்ற சொல்லே ‘மனு’ என்ற தாதுவில் இருந்து தோன்றியதுதான். நாம் நவீன மொழியில் குறிப்பிடும் குடியுரிமை, குற்றவியல், சிவில், கிரிமினல் சட்டங்கள்… இந்த உயர்ந்த நூலில் விரிவாக ஆதியோடு அந்தம் விவாதிக்கப்பட்டுள்ளன.

உலகிற்கு குரு ஸ்தானத்தில் இருக்கும் பாரத தேசத்திற்கு கல்வி கற்க வந்த மாணவர்களுக்கு பாட நூலாக விளங்கியது இந்த நூல். இந்த புராதன நூலைப் பார்த்த வெளிநாட்டு மேதாவிகள் பலர் வியந்தனர். பொறாமை கொண்டனர். பிரபஞ்ச மனிதனுக்குப் பயன்படும் சிறந்த நூலாகப் பாராட்டினர்.

சுமார் 50 வகையான மனுஸ்மிருதிகளின் கையெழுத்துப் பிரதிகள் நமக்கு கிடைக்கின்றன. சில சற்றும் பொருத்தமற்று இருப்பதால் இடைச்செருகல்கள் நிகழ்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பழங்கால பாரத தேச பிரிவுகளிலும், பாரதீய கலாச்சாரம் பரவிய அனைத்து நாடுகளிலும் மனுஸ்மிருதி நூல் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு அரசாட்சி தர்மங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

“தர்மத்திற்குப் புறம்பான செல்வத்தையும் கோரிக்கையையும் அரசன் விரும்பக் கூடாது. இந்த நூலில் உள்ள மக்கள் நலன் கூறும் சூத்திரங்களை அரசன் கடைபிடிக்கவேண்டும். உலகம் வெறுக்கக்கூடிய, உலகிற்கு தீமை விளைவிக்கும் சூத்திரங்களை விட்டுவிடவேண்டும்” (4வது அத்தியாயம் 176) சாட்சாத் மனுவே இவ்வாறு கூறிய பின்னும் இந்த நூல் குறித்து இந்தியாவிலும் பிற இடங்களிலும் கலகம் நடந்து வருவது துரதிருஷ்டமானது.

தேச, காலத்திற்கு ஒத்து வராதவையும் வேண்டாதவையும் வம்பு புரிபவர் இடையில் செருகியவையும் இந்த நூலில் இருக்கலாம் என்பது ஆய்வாளர் கூற்று.

இவற்றை உணராமல் இந்த நூலை தீண்டத்தகாததாக முடிவெடுப்பதா? பல அற்புதமான, கடைபிடிக்க ஏற்புள்ளதான கருத்துகள் உள்ள இந்த நூலை இகழ்வது சரியா? யோசிக்க வேண்டும்.

ALSO READ: வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்… விளைவுகள் உண்மைகள்.

இந்த நூலில் உண்மையிலேயே பெண்களை அவமதிக்கும் கருத்துக்கள் உள்ளனவா?

மனு பெண்களை இழிவுபடுத்துகிறார் என்பது சிலர் அபிப்ராயம். வாழ்நாள் முழுவதும் பெண் யாருடைய ஆதரவிலாவது இருக்க வேண்டும். ஆனால் பெண்ணுக்கு சுதந்திரம் அளிக்க கூடாது என்று மனு விரும்புகிறார் என்பது அந்த ரிஷி மீது இன்றைய போலி மேதாவிகள் எழுப்பும் குற்றச்சாட்டு. இதைவிட பொய்க் குற்றச்சாட்டு வேறெதுவுமில்லை. அந்த ஸ்லோகம் என்ன கூறுகிறது?

பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே
ரக்ஷந்தி ஸ்தாவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரய மர்ஹதி

“சிறு வயதில் பெண்ணை தந்தை பாதுகாக்கவேண்டும். மணமான பின் யௌவன வயதில் கணவன் பாதுகாக்க வேண்டும். முதிய வயதில் மகன் பாதுகாக்க வேண்டும். எப்போதுமே பெண்ணை பாதுகாப்பு அற்றவளாக விடக்கூடாது” என்பது இதன் பொருள்.

மேலுள்ள ஸ்லோகத்தை பொருள் கொள்வதில் தோல்வியுற்றதால் மனுஸ்மிருதி மீது விஷம் கக்குகிறார்கள். பெண்ணை இழிவுபடுத்தவோ, அடக்கி ஆளவோ, அவமதிப்பதற்கோ உத்தேசித்தவை அல்ல இந்த சொற்கள். ஒரு பொறுப்பான ஆண் புதல்வியை மனைவியை தாயை காப்பாற்ற வேண்டும். அது அவன் கடமை. அவ்வளவே தவிர… பெண்ணை முதலில் தந்தையிடமும் பின் கணவனிடமும் பின் மகனிடமும் அடிமையாக இருக்க வேண்டும் என்று பொருள் கொள்வது தவறான வியாக்கியானம் ஆகும்.

இந்த ஸ்லோகத்தை ஜஸ்டிஸ் ராமாஜோயன் எழுதிய Legal and constitutional history of India என்ற நூலில் நிறைய உதாரணங்களோடு விளக்கி உள்ளார். அதில் ஓரிரண்டைப் பார்ப்போம்.

“இயல்பாகவே பெண் என்பவள் நளினமானவள். அவளுக்கு பாதுகாப்பு தேவை. உதாரணத்திற்கு தன் புதல்வனை ஒரு டியூஷன் மாஸ்டர் வீட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கிறார் ஒருவர் என்று எடுத்துக்கொள்வோம். தேர்வு நேரத்தில் மேலும் கருத்தொருமித்து படிக்க வேண்டும் என்று அவர் வீட்டிலேயே ஒரு பத்து நாட்கள் தங்கட்டும் என்று கேட்டால் நாம் தயங்கமாட்டோம். அதேபோல் ஒரு புதல்வியை பிறர் வீட்டில் தங்க வைப்பதற்கு நாம் தயங்குவோம். அவ்வாறின்றி பிறர் வீட்டில் இருக்க விட்டுவிடுவது பொறுப்பற்ற தன்மையே ஆகும்” என்கிறார் நீதிபதி. இதுபோன்ற பல உதாரணங்களை ராமாஜோயன் குறிப்பிடுகிறார்.

பல நேரங்களில் சிறுமிகளுக்கு அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. ஒரு பொதுநல வழக்கில் தீர்ப்பளிக்கும் போது பெண்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை நடவாமல் இருக்கும்படி கவனிப்பது அரசின் கடமை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு மனுஸ்மிருதியில் குறிப்பிட்ட பிதா ரக்ஷதி என்ற சுலோகத்தின் கருத்தை திடமாக, சந்தேகத்திற்கிடமின்றி ஏற்கிறது அல்லவா?

எவ்விதமாகப் பார்த்தாலும் மனுஸ்மிருதியில் உள்ள இந்த ஸ்லோகம் ஆட்சேபணைக்குரியதல்ல!

அந்தக் காலத்திலிருந்த வர்ண அமைப்பை காலக்கிரமத்தில் மாறிய சாதி அமைப்புகளோடு ஒப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் சில குலங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பளிக்க வில்லை என்ற கூற்று கூட பொய்யே!

திரு தர்மபால் எழுதிய தி பியூட்டிஃபுல் ட்ரீ என்ற நூலில் பிரிட்டிஷார் வரும் முன்பே பாரத தேசத்தில் பல இடங்களில் இருந்த பள்ளிகளில் கல்வி கற்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது என்பதை நிரூபித்துள்ளார்கள்.

மிகப் பழமையான சம்பிரதாயங்கள், ஆசார பழக்க வழக்கங்களை இப்போதைய சிவப்புக் கண்ணாடி அணிந்து பார்த்து ஆராய்வது சரியல்ல. எந்த நாகரீகம் ஆனாலும் அப்போதைய தேச கால சூழ்நிலைகளுக்கேற்ப விளங்கும். இத்தனை முக்கியமான விஷயத்தை வேண்டுமென்றே மறந்து, தமக்குத் தேவையானபடி பொருள்படுத்திக் கொள்வது தீமை விளைவிப்பதும் முறையற்றதும் துன் மார்க்கமுமாகும்.

மனுஸ்மிருதியை விமரிசித்து மேற்கத்தியர் செய்த கருத்துக்களுக்கு சுவாமி விவேகானந்தர் கடினமாக பதிலளித்தார்… “எந்த பாரதிய நூலைத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ கூட்டம் மதித்தது? அதேபோல் மனுஸ்மிருதி மீதும் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையில் மனுஸ்மிருதியை முழுவதும் படித்த மூஞ்சிகளா இவை?” என்று கேட்ட சுவாமி விவேகானந்தர், “அதை எழுதிய சுமார் 4 ஆயிரம் ஆண்டு காலத்திற்கு தகுந்தாற்போல் சில கருத்துக்கள் இருக்கலாம். சனாதன தர்ம உபதேசங்களில் சாஸ்வதமான உண்மைகள் வேதம், பகவத்கீதை, உபநிஷதம், பிரம்ம சூத்திரங்கள். அவற்றுக்கு மாறுபட்டு உள்ள நூல்களை விட்டுவிடவேண்டும். இவ்வாறு நம் நூல்களை விமர்சனம் செய்பவர்கள் பைபிள் பழைய ஏற்பாட்டில் பெண் விரோத வாக்கியங்கள் எத்தனை உள்ளனவோ என்று கவனித்தார்களா? இளம் பெண்ணடிமைகளிடம் ஆண்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று அவர்களுடைய பைபிளில் எழுதியுள்ளதை அவர்கள் படிக்க வில்லையா?” என்று கர்ஜித்தார்.

எந்த பாரதிய நூலைத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ கூட்டம் மதித்தது? அதேபோல் மனுஸ்மிருதி மீதும் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையில் மனுஸ்மிருதியை முழுவதும் படித்த மூஞ்சிகளா இவை?

– சுவாமி விவேகானந்தர்

பிரதீப் கங்கோபாத்யாய என்ற ஆய்வாளர் தன் நூலில், “மனு பெண்களை உயர்வாக புகழ்ந்து போற்றியுள்ளார்” என்று பல சுலோகங்களை உதாரணமாக காட்டியுள்ளார். அப்படிப்பட்ட ரிஷியாகிய மனு, பெண்களை இழிவு படுத்தியதாக கூறுவது தகாது என்றார். மேலும் மனு பயன்படுத்திய ‘சூத்திரர்’ என்ற சொல்லைக்கூட ஆராயவேண்டும். 2, 238, 4- 61, 8- 104 ஸ்லோகங்களில் கல்வியும் அரசு உரிமையும் அனைத்து வர்ணங்களும் சமமாகவே இருந்தது என்பது புரிகிறது என்று கூறுகிறார்.

மனுஸ்மிருதியை தீக்கிரையாக்கிய நிகழ்வைக் குறித்து வினவியபோது காந்திஜி 1928 மே 14-ஆம் தேதி திரு டிபி பல்லே என்பவருக்கு கடிதம் எழுதினார். விடுதலைப் போராட்டத்தில் வெளிநாட்டு பொருட்களையும் துணிகளையும் எரித்ததை மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தியதோடு ஒப்பிட்டுப் பேசுவதை நான் ஏற்கமாட்டேன். இதில் முதலாவது நமக்கு அபாயகரமானதை எரித்தோம். பல நல்ல கருத்துக்கள் உள்ள ஒரு நூலில் உள்ள நன்மைகளை ஏற்க வேண்டும். ஆபத்தான, சந்தேகத்திற்கிடமான விஷயங்களை விட்டு விடலாமே என்றார் காந்திஜி.

டாக்டர் சுரேந்திர குமார் என்ற ஆரிய சமாஜத்தை சேர்ந்த அறிஞர் மனுஸ்மிருதியை ஆழமாக ஆராய்ந்தார். அவர் கூறுகிறார், “சம்ஸ்கிருத மொழியில் இருப்பவை அனைத்தையும் ஏற்க வேண்டிய தேவையில்லை. மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் இருப்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஆங்கிலேய மேதாவிகள்… மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் வேண்டுமென்றே ஜாதி விரோத கருத்துக்களை இந்த நூலில் நுழைத்துள்ளார்கள்“.

“மனு குறித்து மற்றொரு விமர்சனம் ஜாதி பாகுபாட்டிற்கு அவருடைய நூலே மூலம் என்பது. இதுகூட உண்மையல்ல. குலம் என்பது மனு எடுத்து வந்தது அல்ல. தற்காலத்தில் தலித்துகள், எஸ்சிக்கள், பின்தங்கிய பிசிக்கள் படும் துன்பங்களுக்கும் பரம்பரையாக அனுபவிக்கும் வேதனைக்கும் மனு காரணமல்ல” என்கிறார் பிரபல எழுத்தாளர் எம்விஆர் சாஸ்திரி தன்னுடைய ‘நமக்குப் பிடிக்காத மனு தர்மம்’ என்ற நூலில்.

“கிறிஸ்தவ மிஷனரிகளின் திட்டப்படி தொடங்கிய தீயபிரச்சாரம் நம் கண்களுக்கு மாயத் திரையிட்டு விட்டது” என்கிறார். மனுஸ்மிருதி கூறியது ‘வர்ணம்’ என்பதைக் குறித்து. வர்ணம் என்பது வேறு. ஜாதி என்பது வேறு வர்ணம் என்பது ‘வ்ருண்’ என்ற மூலச் சொல்லிலிருந்து வருவது. தேர்ந்தெடுப்பது என்பது அதன் பொருள்.

“சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:” – பகவத்கீதை 4/13.

குணங்களைப் பொறுத்து நான்கு வர்ணங்களை நான் தோற்றுவித்தேன் என்கிறான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன். வர்ணம் என்றால் கிளாஸ் சிஸ்டம். சமுதாயத்திற்கு தேவையான ஞானத்தை அளிப்பவர், அரசாட்சி மூலம் பாதுகாப்பு அளிப்பவர், மக்களின் தேவைக்காக உற்பத்தி, விநியோகம் செய்பவர், தமது உடல் உழைப்பால் சமுதாயத்திற்கு வேண்டிய சேவை புரிபவர், இவர்களுக்கு வைத்த நான்கு பெயர்கள்… பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை. மனுவின் கண்ணோட்டத்தில் வர்ணம் என்பது ஃப்ளக்ஸிபிள் என்று புரிந்து கொள்ள வேண்டும். பிற்காலத்தில் வந்த விபரீதங்களுக்கு மனுவை பொறுப்பாக்கக் கூடாது.

பிறப்பை பொறுத்து சில குலங்களை தீண்டத்தகாதவர்கள் என்று பார்த்தது பிற்காலத்தில் ஹிந்து சமூகத்தில் வந்து சேர்ந்து நோய் என்கிறார் எம்விஆர் சாஸ்திரி.

ஜெய்ப்பூர் ஐகோர்ட்டில் உள்ள மனுவின் சிலையை நீக்கிவிட வேண்டுமென்று பிரிவினைவாதிகள் செய்த வாதங்களுக்கு பதிலாக 1989 ஜூலை 28 டாக்டர் சுரேந்திர குமார் மனு பற்றியும் மனுஸ்மிருதியை பற்றியும் நீதிமன்றத்திற்கு அளித்த 15 அம்சங்கள் வாசகர்களுக்குத் தெளிவை அளிக்கும். இவற்றை எம்விஆர் சாஸ்திரி தன் நூலில் இறுதியில் அனுபந்தமாக அளித்துள்ளார். அவையாவன…

  1. மனு மகரிஷி தர்மசூத்திர சம்ஹிதையை எழுதிய முதல் அறிஞர்.
  2. மனு மத ஆச்சாரியர், தர்ம போதகர்.
  3. மனுஸ்மிருதி புனிதநூல்.
  4. மனு உலகிலேயே முதன்முதலில் நியாய சாஸ்திரம் எழுதியவர்.
  5. நவீன அறிஞர்களின் பார்வையில் மநுஸ்மிருதிக்கு ஆதாரபூர்வமான நம்பிக்கை உள்ளது.
  6. மனுவின் சிலை சுப்ரீம் கோர்ட்டிலும் உள்ளது.
  7. இந்தியாவின் வெளியில் மனுவுக்கு சிறந்த மதிப்பு உள்ளது.
  8. மனு மனித இனத்திற்கு தந்தை போன்றவர்.
  9. மனுவின் வர்ண அமைப்பு பகுத்தறிவோடு கூடியது.
  10. மனுவின் பார்வையில் சூத்திரர் தீண்டத்தகாதவர் அல்லர்.
  11. மனு எழுதிய தண்டனை ஸ்மிருதி சூத்திர்களுக்கு விரோதமானது அல்ல.
  12. வர்ணத்தை மாற்றிக்கொள்வது சாத்தியமே என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள், சான்றுகள். உள்ளன.
  13. மனு கூறியபடி வர்ணத்தை மாற்றிக் கொள்வதை நவீன காலத்தில் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம்.
  14. மனுஸ்மிருதியில் ஆட்சேபகரமானது என்று தற்போது அடிக்கடி காதில் விழும் சுலோகங்கள் போலியான வெற்றுச் சவடால்கள்.
  15. மனு ஸ்ம்ருதியில் அவை இடைச்செருகல்கள் என்று ஐயத்திற்கு இடமின்றி நிரூபணமாகி விட்டது.

பழங்கால நூலான மனுஸ்மிருதியை விவாதத்தில் இழுப்பவர்கள் சரியான மூல மனுஸ்மிருதி நூலை முழுமையாக படித்து விட்டுப் பேச வேண்டும்.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா | தமிழில்: ராஜி ரகுநாதன்
source: https://dhinasari.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe