June 21, 2021, 9:42 pm
More

  ARTICLE - SECTIONS

  பீஹார் என்னும் செழுமையான பல்கலைக் கழகம்!

  nalanda-university1
  nalanda-university1

  வட மாநிலம் என்றாலே பீஹாரி எனும் நக்கல் பலரிடையே வந்துவிடும் .அதுவும் குறிப்பாக திராவிடஸ்தானில் இருக்கும் மழு மட்டைகளுக்கு கேட்கவே வேண்டாம்.

  “பீகார் எனும் தங்கப் பறவை ” மாநிலத்தை பற்றி தெரிந்து கொள்ள அவசியம் படியுங்கள். சில மாதங்களுக்கு முன்பு படித்து Bookmark போட்டு வைத்தேன். இப்போது பகிர்வதுதான் சரியாக இருக்கும்

  ‘வாழ்ந்து கெட்ட மனிதன்’ கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ‘வாழ்ந்து கெட்ட ஊர்’ கேட்டதுண்டா?

  சும்மா சொல்லக்கூடாது, செம்மையாக வாழ்ந்து, இன்று சக்கையாகிப் போன ஒரு நிலம்தான் பீகார். பல வருடங்களாக இந்தியாவின் கீழ்நிலை மாநிலங்களில் ஒன்றாகத் தவறாமல் இடம்பிடிக்கும் மாநிலம் பீகார்.

  அறிக்கைகளை, புள்ளி விவரங்களை எல்லாம் ஓரமாய் வையுங்கள். ஒரு பீகாரி எப்படி இருப்பார் என உங்கள் மனதில் ஒரு உருவத்தைக் கற்பனை செய்யுங்கள். அந்த மாநிலத்தின் நிலை சட்டெனப் புரிந்துவிடும்.

  சமீபத்தில் ‘சிறந்த ஆளுமை மிக்க மாநிலங்கள்’ என அதிகாரபூர்வ பட்டியல் ஒன்று வெளியானது. வழக்கம்போல பீகார்
  கடைசி இடம். ஆனால், வரலாற்றைப் படிப்பவர்களுக்குப் புரியும், ஒரு காலத்தில் பீகார்தான் அகண்ட பாரத தேசத்தின் முக்கிய அடையாளமாகத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

  பீகார் என்பதன் அர்த்தம் விஹார் என்ற சொல்லில் இருந்து வந்தது. விஹாரம் என்றால் இருப்பிடம். புத்தர் ஞானம் பெற்ற புத்த கயா இன்றும் பீகாரின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. புத்தரின் ‘விஹாரம்’ என்பதே மருவி பீகார்/பீஹார் என்றானது.
  உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றான புத்த மதம் இங்கிருந்தே தொடங்குகிறது.

  அதன் நிலப்பரப்பின் சிறப்பு என்றும் அழியாத பல பேரரசுகளையும், பிரம்மாண்ட நகரங்களையும், மாபெரும் வரலாற்று மனிதர்களையும் இன்றும் தன்னுள்ளே புதைத்து வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறது.

  மகாபாரதத்தில் சொல்லப்படும் அங்க தேசம் என்பது இன்றைய பீகார்தான். மாவீரன் கர்ணனுக்கு துரியோதனன் அரசனாக முடிசூடி அழகுபார்த்த மகா நிலம். இராமாயணத்தில் சொல்லப்பட்ட மிதிலை அரசும் இன்றைய பீகார்தான். எப்பேர்ப்பட்ட புண்ணிய பூமியாக இருந்திருந்தால் சீதையே பூமியிலிருந்து குழந்தையாக உதித்திருப்பாள். அது மட்டுமா, பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றான விதேக தேசமும் இந்த பீகார்தான்.

  சரி, புராணங்களை விடுங்கள், பொது யுகத்திற்கு வருவோம். இந்தியாவின் ஆதாரபூர்வ முதல் சாம்ராஜ்ஜியமான மகத சாம்ராஜ்யத்தின் மன்னன் அஜாதசத்ரு உருவாக்கியதுதான் பாடலிபுத்திரம் எனும் தேவலோக நகரம். இன்றைய பாட்னா.
  தொடர்ந்து, இந்தியாவின் மாபெரும் நிலப்பரப்புக்கு மூத்த சொந்தக்காரன் என, தனக்கென ஒரு மௌரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி முதன்முதலாக பரந்த பாரத தேசத்தைக் கட்டியாண்ட சந்திர குப்த மௌரியன் உருவானது இந்த பீகாரில்தான். சந்திர குப்தரின் நீட்சியாக அவரது பேரன் பேரரசன் அசோகர் பாடலிபுத்திரத்தை ஒரு சொர்க்கமாகவே மாற்றியிருந்தான்.

  maurya-empire
  maurya-empire

  உலகமே பாடலிபுத்திரத்தை அதிசயமாகக் கண்ட கனவு நாட்கள் அவை. அன்றைய காலகட்டத்தில் பாடலிபுத்திரம்தான் உலகின் மிகப்பெரிய நகரம். ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல, கல்வியிலும், கலாசாரத்திலும் உலக நாடுகளுக்கெல்லாம் ஒளியை வழங்கியவர்கள் அன்றைய பீகாரிகள். உலகின் தலைசிறந்த, மூத்த பல்கலைக்கழகங்களான நாளந்தாவும், விக்கிரமஷீலாவும் உருவானது அங்கேதான்.

  பாரத தேசத்திலிருந்து மட்டுமல்ல, சீனம், பாரசீகம் முதல் ரோம் வரை கல்வி கற்பதற்காகவே நாளந்தாவை நோக்கி மக்கள் வெள்ளம் குவிந்த பொற்காலம் அவை. 5ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டு வரை பல தேசங்களின் புகழ்பெற்ற கல்வியறிஞர்கள் நாளந்தாவின் மாணவர்களே. (இன்று அடிப்படைக் கல்வியறிவில் கூட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது பீகார் என்பதுதான் கசப்பான உண்மை.)

  மூன்றாம் நூற்றாண்டின் மகத தேசத்தின் பட்டப்பெயர் என்ன தெரியுமா, அயல் நாட்டவர் இந்த நிலத்தை ‘தங்கப் பறவை’ என்றே அழைத்தனர். இந்த உலகிற்கே ஆட்சி அதிகாரத்தின் அகராதியாகவும், மேலாண்மை தத்துவத்தின் கிரீடமாகவும் விளங்கும் அர்த்தசாஸ்திரத்தை இதே பூமியில் இருந்துதான் அருளினார் சாணக்கியர்.

  அறிவியல், விஞ்ஞானம், கணிதம், வானவியல், பொருளியல், தத்துவம், சமயம் என ஒட்டுமொத்த உலகிற்கும் ஒளி வழங்கிக்கொண்டிருந்த தங்க நிலம்தான் இன்றைய இருண்ட பீகார் மாநிலம்.

  பொது யுகத்திற்கு முன்னர் ஆண்ட வஜ்ஜி வம்சத்தினர், ‘வைஷாலி’ எனும் வடக்கு பீகார் நகரம் ஒன்றைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர், உலகின் பழமையான ஜனநாயக முறை ஆட்சியைப் பின்பற்றியவர்கள் என்ற வரலாற்றுப் பெருமையைத் தாங்கி நிற்கின்றார்கள்.

  6ம் நூற்றாண்டில் மேலும் ஒரு மாமனிதர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். பாவம், அவருக்கு அறிவியலைக் கண்டுபிடிக்கத் தெரிந்ததே ஒழிய அதனை சொந்தம் கொண்டாடும் சுயநலக்கலை தெரிந்திருக்கவில்லை. வானவியலை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து ஆராய்ந்து பல உண்மைகளை பாரதமெங்கும் உரக்க ஒலித்தவர், அவர்தாம் ஆரியபட்டர்.

  nalanda-university
  nalanda-university

  பல ஆதாரத் தகவல்களின் பிதாமகனாக இருந்த ஆரியபட்டர் இன்றைய கல்வியறிவில் பின்தங்கிய பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் பிறந்தவரே.

  பல சாம்ராஜ்ஜியங்கள் உதாரணமாகக் காட்டும் கனவு தேசம், பல அயல்நாட்டு எதிரிகளைத் தொடர்ந்து தன்னை நோக்கிப் படையெடுக்கச் சுண்டியிழுத்து மண்ணைக் கவ்வ வைத்த செல்வ செழிப்பான தங்க நகரம், பல தத்துவங்களையும் அறிவியலையும் தோற்றுவித்த ஒளி பொருந்திய தேசம், தமது வாழ்நாளில் ஒரு முறையாவது பாடலிபுத்திர நகரின் அழகைக் கண்ணார கண்டுவிடமாட்டோமா எனப் பிற நாட்டு மக்களை ஏங்க வைத்த சொர்க்கபுரி, இன்னும் இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

  இரண்டாயிரம் வருடங்களாக இவ்வளவு அசைக்க முடியாத புகழையும், பெருமையும், அறிவையும், ஆற்றலையும் தன்னகத்தே வைத்திருந்த ஒரு மகாநிலம் எப்படி வெறும் இருநூறு ஆண்டுகளில் இந்த இழிநிலைக்குச் சென்றது? இன்று எங்கு பார்த்தாலும் பீகாரிகள் வெறும் தினக்கூலிகளாகவும், கல்வி, பொருளாதாரத்தில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குப் பின்தங்கிய கடைநிலை அடிமைகளாகவும், சிலர் கொள்ளைக்காரர்களாகவும் மாறிய அவலம் எப்படி நிகழ்ந்தது?
  பல காரணங்கள் உண்டு என்றாலும் மிகவும் வெட்டவெளிச்சமான காரணம் என்ன தெரியுமா?

  காலனி ஆதிக்கத்தில் வங்காள மாகாணத்தின் பகுதியாக இருந்த பீகாரில் ஒரு முக்கியப் புரட்சியைச் செய்தது ஆங்கிலேய அரசு. DE-INDUSTRIALIZATION. இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக விளங்கிய அங்க-வங்க தேசங்களான பீகாரும், வங்காளமும் முக்கியமாக நம்பியிருந்தது நூல் நூற்பு ஆலைகளையும், நெசவுத்தொழிலையும், பின் விவசாயத்தையும்தான்.

  பிரிட்டிஷ் காலத்திலும் அதற்கு முன்பும் கல்கத்தா என்பது உலகிற்கே நெசவு நூல்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மாபெரும் துறைமுகம். அதன் பாதிக்கும் மேற்பட்ட உற்பத்தி நிகழ்ந்து வந்தது பீகார் மாநிலத்தில்தான். இதர தொழில்கள் மீதி.
  இந்தியாவில் காலனி ஆதிக்கம் நூறு சதவிகிதம் பரவியதும் ஆங்கிலேயர்கள் முதலில் கைவைத்தது இங்குதான். திட்டம்போட்டு அவர்கள் நிகழ்த்திய அடக்குமுறைப் பொருளாதாரக் கொள்கைகள் கைத்தறி நெசவாளர்களை நிர்மூலமாக்கியது. அதேபோல தழைத்தோங்கியிருந்த விவசாயம், நிலச் சுவான்தாரர் முறையின் மூலம் அழியத் தொடங்கியது.

  18ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் சுதந்திரமாக இயங்கிவந்த வட இந்தியர்களை, குறிப்பாக பீகார், வங்காள மக்களின் சுய சம்பாத்தியத்தின் மீதும், அளவற்ற செல்வச் செழிப்பின் மீதும் குறிவைத்து ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

  ‘நிரந்தர குடியேற்றம்’ எனும் அந்தச் சட்டம்தான் சத்தமில்லாமல் வரலாற்றையே திருப்பிப்போட்டது. மக்களுக்கு (குறிப்பாக விவசாயிகளுக்கு) எந்தவொரு நிலமும் சொந்தம் கிடையாது, அனைத்து நிலங்களும் ஜமீன்தார்களுக்கே சொந்தம். பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளாக இந்த ஜமீன்தார்களே வரி வசூல் செய்வர். இந்த நில ஜமீன்தார்களின் குறிக்கோள் விவசாய நிலத்திற்கு வரி வசூலிப்பது மட்டும்தான், விவசாயத்தை வளர்ப்பது அல்ல. இப்படியொரு சட்டத்தை ஜமீன்தார்களும் மனமுவந்து ஏற்றனர், எந்த வேலையும் செய்யாமல் வரி வசூல் செய்து தருவதற்காகவே ஆங்கில அரசு இவர்களை நன்றாக ‘கவனித்து’ அவர்களது சின்ன கஜானா எப்பொழுதும் நிரம்பியே இருக்கும்படி பார்த்துக்கொண்டது.

  இதனால், பெரும் செல்வங்கள் அனைத்தும் பிரிட்டிஷாரின் பெரிய கஜானாவுக்குச் சென்றன. வறுமை இந்தியாவுக்கு வந்தது. சுயநலத்தால் இதனைக் கடைசிவரை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் அன்றைய ஜமீன்தார்கள் செய்த மாபெரும் தவறு.
  பின்னர் மெல்ல மெல்ல இந்த வரி வசூல் முறையை அப்போதைய மெட்ராஸ் மாகாணம் வரை விரிவுபடுத்தினார்கள்.

  ஆனால், இதில் பயங்கரமாக அடி வாங்கியது என்னமோ பீகார்தான். இந்த கோபம் மக்களுக்கு உள்ளுக்குள்ளேயே புழுங்கியிருக்க, 1857ல் மீரட்டில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் பெருமளவில் பங்குபெற்றனர் பீகாரிகள்.

  ஆங்கில அரசையும், மேற்கத்திய கலாசாரத்தையும் மிகப்பெரிய அளவில் வெறுத்தனர். அதன் பலனை வெகு சீக்கிரமே அறுவடையும் செய்தனர் (அதன் வழியே வந்த எதனையும் மனதளவில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதன் தொடர்ச்சியாகவே 19, 20ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியையும், நவீனத்துவத்தையும், புதிய யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்து தோல்வியைத் தழுவினர்).

  அதுமட்டுமல்ல, கங்கை நதிக்கரையின் நாகரிகமாக விளங்கிவரும் ஒரு பகுதியான பீகார், அதன் நதிக்கரை நாகரிகத்தையும் நாளடைவில் இழந்தது. தீவிர ஆங்கிலேய எதிர்ப்பு என்பது தீவிர ஆங்கில மொழி எதிர்ப்பாகவும் மாறியது.
  இதனாலேயே இந்தியை ஆராதித்து ஆங்கிலத்தை முழுமூச்சுடன் எதிர்த்தனர். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் அனைத்திலும் இது தொடர்ந்தது. (உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் பெருமளவில் வர்த்தக ரீதியிலான வளர்ச்சியைத் தழுவாமல் போனதற்கு அவர்களது ஆங்கில மறுப்பும் பிடிவாதமான இந்தி ஆராதனையும் ஒரு முக்கியக் காரணம்).

  நாளடைவில் நாடெங்கும் ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு மெல்ல மெல்ல நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், பீகார் மக்களால் அதன் பிடியிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியவில்லை. சாதிய ஆதிக்கம் தடுத்தது.

  நெசவாளர்கள், விவசாயிகள், கடைநிலை கூலித்தொழிலாளிகள் மீதான தங்களது அதிகாரம் என்றும் கைநழுவிவிடாமல் பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர் பீகாரின் நிலப்பிரபுக்கள். இதே நிலை வேறு சில அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்தாலும் இந்த அளவுக்கு மோசமாக இருக்கவில்லை.

  இன்னும் ஏராளமான தொழில்கள் மேலும் மேலும் நசுங்கிய நிலையில், பல பீகாரிகள் வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்களது குடிப்பெயர்ச்சி அண்டை மாநிலங்களோடு நிற்கவில்லை. புதிய தொழில்களைத் தேடி ஃபிஜி, மொரிஷியஸ் உட்பட பல வெளிநாடுகளுக்கும் படையெடுத்தனர். இதனாலேயே பீகார் தனது மிஞ்சியிருக்கும் அறிவுச்செல்வத்தையும் மெல்ல மெல்ல இழந்தது. 1921ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி ஏறத்தாழ பத்தொன்பது லட்சம் மக்கள் வறுமையால் பீகாரை காலி செய்தனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இன்னும் பல்வேறு காரணங்கள் தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு பீகாரை சீர்குலைத்துள்ளன.

  பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் நிகழ்ந்த கொடுமைகள் ஒருபுறம் இருக்கட்டும், விடுதலை பெற்றும் இன்னும் ஏன் அவர்களால் நிமிர முடியவில்லை? காரணங்கள்: இழந்தவைகளைத் திரும்பப்பெற மறந்தனர், சிதைந்த தொழில்களை மீட்டெடுக்காமல் விட்டனர், சாதி மேலும் தலைதூக்கியது. இன்றுவரை அங்கே அனைத்தையும் நிர்ணயிப்பது சாதிதான், ஆட்சி உட்பட. அதனாலேயே அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும் சாதியைக் காக்க முனைந்தனரே தவிர, நாட்டைச் சீர்திருத்த முயலவில்லை, முடியவில்லை.

  அதே சமயம் ஆட்சியாளர்களின் குறைதான் என்று ஒரேயடியாகப் பழிபோட்டுவிடவும் முடியாது, மக்களும் சாதி ஆதிக்க முறையிலிருந்து வெளிவர முயலவில்லை. நிலப் பண்ணை முறை சார்ந்த, மானியம் சார்ந்த பொருளாதாரத்தைச் சுற்றி மட்டுமே இயங்கி வருகின்றனரே தவிர உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் சந்தை சார்ந்த பொருளாதாரத்திற்கு அவர்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.

  சமூகம் சார்ந்த அரசியல்தான் அங்கே நிகழ்கிறதே தவிர சமூக ஒருமைப்பாடு நிகழத் தவறிவிட்டது. பீகார் மாநிலத்தை ஒரு விஷயம் இத்தனை ஆண்டுகள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அது சாதியும் சாதி சார்ந்த அரசியலும் தான். இதன் நடுவே கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வரும் ஜனத்தொகை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது.

  இதனாலேயே அங்கே தரமான கல்விக் கூடங்கள் அமையவில்லை, நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அமையவில்லை. தொழில் நிறுவனங்கள் பீகார் என்றாலே காத தூரம் ஓட ஆரம்பித்தனர்.

  தரமான சாலைகள் இல்லை. மாவட்டங்களை இணைக்கும் ரயில் பாதைகள் குறைவு. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதே இல்லாமல் போனது. இப்படி ஒரு நாடு/மாநிலம் இருந்தால் என்ன ஆகும்? பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் ஊரில் பயங்கரவாதம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்தது.

  ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆதிக்கவாத மக்களின் மீதான ஆயுதம் தரித்த போராகவே மாறியது. அதற்கு அடித்தளம் இட்ட இடம்தான் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி (இதுவே நக்சல் பெயர்க்காரணம்) எனும் சிறு கிராமம். அந்தச் சிறிய கிராமத்தில் தொடங்கிய சிறு தீப்பொறி 1950, 60களில் மத்திய கிழக்கு இந்தியா முழுவதும் விரவிப்படர்ந்து நக்சல் மாவோயிஸ்ட்டுகளின் எழுச்சியாக விஸ்வரூபமெடுத்தது. இதனால் அப்பாவிகளும் பலியாகும் அவலம் உருவாகித் தொடர்ந்து வருகிறது.

  நக்சல்களின் ஆரம்பம் என்னவென்று இணையத்தில் தேடிப் பாருங்கள், அது கொண்டுபோய் நிறுத்துமிடம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தரும். எனினும் நக்சல்கள் தங்கள் கால்களை ஆழ ஊன்றி நின்ற இடம் மத்திய பீகார் (அப்பொழுது ஜார்க்கண்ட் பிரிந்திருக்கவில்லை).

  இன்றும் பீகாரின் 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்தவை. எந்தவொரு வளர்ச்சியையும் விரும்பாமல் அனைத்தையும் ஆயுதத்தின் மூலமே சாதிக்கும் எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்துத் தவறான பாதையில் ஒருங்கிணைப்பதிலேயே சிலர் குறியாக இருந்தனர், இருக்கின்றனர்.

  சமீப காலங்களில் அவர்களின் பயங்கரவாத வேலைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், முழுவதும் குறைந்த பாடில்லை. பீகார், ஜார்க்கண்ட் மக்களும் இதுபோன்ற நக்சல்களால்தாம் அழிவையே சந்திக்கிறோம் என்பதை உணர்ந்து தற்போது மெல்ல அதிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளனர். ஆனால் இன்னும் ஆட்சியாளர்கள் அவர்களைத் தலைநிமிர்த்த எடுக்கும் முயற்சிகள் கேள்விக்குறியே!

  பீகார் என்பது வளர்ந்து வரும் இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தின் நிலைதான் என்று கடந்து செல்ல முடியாது, செல்லவும் கூடாது. வருங்கால இந்தியாவின் வளர்ச்சி வருங்கால பீகாரின் வளர்ச்சியையும் உள்ளடக்கியே இருக்கிறது.

  நிலையான அரசாங்கம், பக்குவப்பட்ட அரசியல் நிலைப்பாடு, சீர்திருத்தப் பொருளாதாரம் என இப்போதுதான் பீகார் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிப் பாதையை நோக்கித் திரும்ப முயல்கிறது. இது தொடர்ந்தால் மட்டுமே நல்ல எதிர்காலம் அமையும்.

  பீகாரின் இறங்குமுகம் தொடங்கியது தவறான பொருளாதாரக் கொள்கைகளால் என்றால், அது விடாமல் தொடர்ந்ததன் காரணம் மக்கள் சுதாரிக்காமல் தவறான பாதையில் செல்லக் காரணமாக இருந்த ஒரு சில இயக்கங்கள். இந்த நிலை மாறட்டும்.

  பீகார் என்பது எங்கோ நடந்த, நடந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பிழையல்ல, வரலாற்றின் ஏடுகளில் உதாரணமாகத் திகழ்ந்த தலைசிறந்த நாடுகள் கூட தவறான வழிநடத்தலால் தடம் மாறி அழிவை நோக்கி வேகமாகச் சென்றுவிடும் என்பதற்கான எச்சரிக்கை மணி.

  • கட்டுரை: கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  23FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-