― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பஜனை சம்பிரதாயத்தை உயிர்ப்புடன் திகழ வைத்த ‘ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்’!

பஜனை சம்பிரதாயத்தை உயிர்ப்புடன் திகழ வைத்த ‘ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்’!

- Advertisement -
<em>ஆவுடையக்காள் வாழ்ந்து வந்த செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம் உஞ்சவிருத்தி பஜனை<em>

கட்டுரை: கே.ஜி.ராமலிங்கம்

இன்றளவும் சில சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் விளங்குவதற்கு ஶ்ரீதர ஐயாவாளே காரணம்!! அவர்கள் வாழ்வில் நடந்த மூன்று நிகழ்வுகளை அதிசயம், அற்புதம், ஆனந்தம் என்று மூன்று வகையில் வெளிப்படுத்தலாம்…

அதிசயம்

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற அமாவாசையன்று இந்த வருடம் (14/12/2020) வருகிறது. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிச நல்லூரில் குடியமர்ந்து விட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர். இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார். நீராடி இல்லம் திரும்பும் போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம் சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் என கேட்டார்.

அவர் மீது இரக்கம்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம் என்றனர். ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா என்பது தான் அவர்கள் சொன்ன பரிகாரம். ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்ப முடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க கனவில் சிவன் காட்சி கொடுத்து உன் இல்லக் கேணியில் கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன் என உறுதியளித்து மறைந்தார். இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார். கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டு முன் கூடி விட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்ற படி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து. திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கங்கை நீராடினார்கள். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று 300 ஆண்டுகளுக்கு முன் கங்கை பொங்கி வந்தது போல ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்று நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடிய பின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

sengottai aiyawal utsav

அற்புதம்

ஒரு நாள் (சர்வீஸில் இருந்தபோது) கீழே உள்ள எங்கள் அலுவலக நூலகத்தில் (சாகித்ய அகாடமி நூலகம் – அனைத்து மொழி புத்தகங்கள் இருக்கும் இடம்) மதிய உணவு நேரத்தில் நானும் என் நண்பன் பத்மநாபன் இருவரும் பேசிக்கொண்டே இருந்த சமயத்தில் ஒரு தமிழ் பெண் செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல்களை பற்றிய விவரங்கள் எங்கே கிடைக்கும் என்று வினவ பத்மநாபன் என்னிடம் கேட்கவும் நான் அந்தப் பெண்ணிடம் ஒரு வாரம் கழித்து வேண்டிய தகவல்களை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அதன்பிறகு பத்மநாபன் accession register ஐ பார்க்கும் போது Oxford University press பதிப்பித்துள்ள Image:Transgressing Boundaries (The Advaitic songs of Shenkottai Avudai Akkal) Translated and with an Introduction by Kanjana Natarajan, (Deptt. of philosophy, Delhi University) காண்பித்தான் இதற்கிடையில் முகநூல் நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் மூலமாக விவரம் கிடைக்கப்பெற்றதும் அந்த பெண்ணிற்கு தகவல் அனுப்பினேன்.

“ஓளியை விளக்க ஓர் ஒளி உண்டோ பெண்ணே! வெளியாக நான் உனக்கு விளம்பினேன்! விண்ணில் சூரியனை பார்க்க கண்ணே போதாதோ? விளக்கைக் கொண்டு காட்டி அதை விளக்குவாருண்டோ? ஒருக்கால் உண்மை சொன்னால் உதிக்குமோ? அறிவு உபமானம் உரைத்திட்டால் உடனே நான் அறிவேன்! ஒப்பிக்க அதற்கு இங்கே உபமானம் இல்லையே, உன் உணர்வால் அனுபவித்து உணர்ந்து கொள்…!!”
*செங்கோட்டை ஆவுடையக்காள்

யார் இந்த ஆவுடையக்காள்? ஒரு பெண்மணியான அவர் எப்படி ஞானியானார்? அவர் அப்படி எவ்வளவு பாடல்கள் எழுதியுள்ளார்..? அவரின் பாடல்கள் எப்படிப்பட்டவை? அறிந்து கொள்ள ஆவல்தானே?

*
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு அது திருவிதாங்கூர் ராஜ்யத்தின் எல்லையாய் இருந்த அழகிய கிராமம். ஆலயங்களும் வழிபாடுகளுமாய் மக்களின் இறையன்பை வளர்த்தெடுத்த பக்தி பூமி. இந்த காரணங்களால் சிவன்கோட்டை என்றே திகழ்ந்தது அதுவே காலப்போக்கில் மருவி செங்கோட்டை ஆனது. இன்று வரைக்கும் அதே இளமையும் வளமையும் மாறாமல் இருக்கிறது.

தென்றல் காற்று இனிமையாய் வீசித் தவழும் பூலோக சொர்க்கம். மரம் செடி கொடிகள் விரிந்து பச்சை மரகதப் போர்வையாய் பூமியில் போர்த்திய இயற்கை அழகு தவழும் இன்ப பூமி.

சிவனடியார்கள் மிகுந்திருந்த கர்ம பூமி. இதன் சுற்றுப் பகுதிக்கு பலம் சேர்க்கும் விதமாக ஹரிஹரா நதி சலசலத்து ஓடுகிறது. பொதிகை மலைச் சாரலும் தென்றலும் சுகமாய் வீசுகிறது.

மலையிற் பிறந்து குளங்களில் நீர் பெருக்கி வளப்படுத்தும் ஹரிஹரா நதியை ஒட்டிய வீரகேரளவர்மபுரம் தெருவில் பக்தி மணம் கமழ்கிறது. ஆற்றின் கரையில் இருந்ததால் ஆற்றங்கரைத் தெரு என்றே அழைக்கப்பட்ட அந்தத் தெருவில் கிழக்கே மண்டபத்தினை ஒட்டிய வீட்டில் பிறந்தது அந்தக் குழந்தை. பெண் குழந்தை என்றால் செல்லம் அதிகம்தானே! செல்வ மகளாய் செல்லமாய் திகழ்ந்த குழந்தைக்கு ஆவுடை எனப் பெயரிட்டனர். ஓடி விளையாடும் சிறுமியாய் வளர்ந்திருந்தாள், கல்விப் பயிற்சிக்கு வழியில்லை. பாவாடை சட்டை போட்டு, ஒற்றைச் சடை பின்னி, நெத்திச்சுட்டியும் ஒட்டியாணமும் சூட்டி அலங்கரித்த அவர்களுக்கு என்ன தோன்றியதோ? அவளை ஒருவனுக்கு மணம் முடித்தனர். கழுத்தில் பூண்ட மஞ்சளும், பூ மணமும் போகுமுன்னே அவள் கணவனின் உயிர் பிரிந்தது.

avudaiakkal sridhara venkatesa aiyavaal

உறவும் சுற்றமும் கூடி அழுதன, பூ மணம் குன்றாத அந்த பூவை அம்மாவிடம் கேட்டாள், “ஏனம்மா எல்லோரும் அழுகிறீர்கள?” தாய் என்ன சொல்வாள்? பையன் செத்து போயிட்டாண்டி… “அவாத்து பையன் செத்தால் நீங்களெல்லாம் ஏன் அழனும்?”

ஆவுடையின் இந்தக் கேள்வி, அந்தத் தாயாருக்கு பொட்டிலடித்தாற்போல் தோன்றி, விவேகத்தால் அழுவதை நிறுத்திக் கொண்டு ஆவுடையை கட்டியணைத்துக் கொண்டார். குழந்தையின் உள்ளர்த்தம் புரிந்தது. இதற்காக அழுவதற்கு நாம் யார் என்று எண்ணி, அன்று முதல் குழந்தையை முன்னிலும் கவனமாக பராமரித்து, சீவி முடித்து சிங்காரித்து, கல்வி பயிற்றுவிக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஆனால்… ஊர் வாய்? வம்பு பேசியது ஊரில்தான் கேலிப் பேச்சு என்றால், குடும்பத்துக்குள்ளோ பலத்த எதிர்ப்பு! அந்த தாயார் அனைத்தையும் மலை போல் நின்று தடுத்தார்.

நாட்கள் நகர்ந்தன. குழந்தைப் பருவத்தை கழித்த குழந்தை, பருவம் அடைந்த வேளையில், உலகம் அவளின் கைம்மைக் கோலத்தை அந்தச் சிறு வயதில் வலியத் திணித்தது. தாயார் அழுது புரண்டார், அவளின் கனவு, கனவே என்றானது. தெருக்களில் ஓடியாடிய கால்கள், ஒற்றை அறையில் ஓர் மூலையில் முடங்கி, நாட்களைக் கடத்தி, அந்த நிலையை மனத்தில் ஒருவாறு ஏற்றுக் கொண்டார்!

இந்த சூழலில் ஒரு நாள்… ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கதிரவன் விழித்தெழும் முன்னே வாசல் தெளித்து, அழகுக் கோலமிட்டு, வீடுகளின் முன்னே மாவிலைத் தோரணங்கள் கட்டி வீதி எங்கும் அலங்கார மயம்தான்! பெரியவர்கள் குளித்து மடி வஸ்திரங்கள் கட்டிக் கொண்டு பஜனை மடத்தின் வாசலில் கூடி, மாவிலை, பூக்கள் தரித்த பூர்ண கும்பமும் பஜனை மடத்தின் திண்ணையில் தயாராய் இருக்க, எல்லோர் உள்ளமும் அந்த பெரிய மகானின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன.

ஆம்… அவர் அவரேதான்…. திருவிசநல்லூர் ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள். அவர்களின் தரிசனத்துக்காய் ஊரார் அனைவரும் காத்திருந்தனர். அவருக்கு என்னென்ன வசதிகளைச் செய்து கொடுப்பதென்று பெரியோர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நேரம் கடந்தது. வயதானவர் ஆயிற்றே… எவ்வளவு தொலைவுக்கு நடந்து வரவேண்டும்.? தென்காசிக்குச் சென்று, குற்றாலம் வழியாக வரப் போவதாய்ச் சொல்லியிருந்தார்களே! கவலை ஆட்கொண்டது அவர்கள் முகங்களில்!

ஒருவழியாய் தொலைவில் ஜால்ராக்களின் சத்தம் கிண்கிணியாய்க் காதில் விழுந்தது. பஜனைப் பாடல்களின் வசீகரம் அவர்களைக் கவர்ந்திழுத்தது. அய்யாவாள் அங்கே எழுந்தருளினார். கால்களில் கட்டிய சதங்கை. ஜில் ஜில் என்ற ஒலியெழுப்பியது. கைகளில் சிப்ளாக் கட்டை. தலைப்பாகையாய்க் கட்டப்பட்ட சிவப்புத் துணி தோள்களில் புரண்டு நீளமாய்ச் சிறகு விரித்தாடியது. தோளில் உஞ்சவிருத்தி செம்பு. சுருதிப் பெட்டி. தம்புரா, டோல்க்கி என இசைக்கருவிகளுடன் சூழ்ந்து நின்றபடி சிலர். “கோவிந்தம் பஜ…” என நாமாவளி சகிதமாய் சுற்றிச் சுற்றிச் சுழன்றாடியபடி கிராமத்துக்குள் புகுந்தார் ஸ்ரீஅய்யாவாள்.

ஓவ்வொரு வீட்டின் முன்னும் சற்று நின்று அந்த வீட்டினர் தரும் உபசாராதிகளை ஏற்றுக் கொண்டு நகர்ந்தார் அய்யாவாள். வாசலில் இட்ட கோலத்தின் மீது மணை வைத்து, ஸ்ரீஅய்யாவாள் அதில் ஏறி நின்றதும் அவரது பாதங்களை நீரால் சுத்தம் செய்து, ஸ்ரீபாத தீர்த்தம் எடுத்துக் கொண்டு, அவரின் உஞ்சவிருத்திச் செம்பில் அரிசி, தான்யங்களை இட்டு நமஸ்கரித்தனர். ஸ்ரீஅய்யாவாள் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் நின்று சென்றார்.

தெருவின் கடைக்கோடியில் ஒரு வீடு. வாசல் குப்பை கூளம் நிறைந்து, ஊரோடு ஒன்றாகி இல்லாமல் தனித்திருந்தது. அருகேயிருந்த வீட்டின் வாசலில் கோலம் பளிச்சென்றிருக்க, இங்கோ அலங் கோலமாய்க் கிடந்தது வீட்டின் வாசல்! சுற்றிலும் மகிழ்ச்சிக் குரல் ஆரவாரிக்க, இங்கோ வீட்டின் உள்ளிருந்து அழுகைக் குரல்!

உடன் வந்தவர்களோ அந்த வீட்டின் வாசலில் நிற்பதும் தகாதென ஒதுங்கிச் சென்றனர். ஆனால் ஸ்ரீஅய்யாவாளோ அந்த வீட்டின் வாசலில் சற்றே நின்றார். அவரை அங்கே நிற்க வேண்டாம் என்று சொல்ல மற்றவர்களுக்கு தைரியமும் தெம்பும் இல்லை. உற்சாக மிகுதியால் ஸ்ரீஅய்யாவாள் பாடத் தொடங்கிவிட்டார்.

<em>ஆவுடையக்காள் வாழ்ந்து வந்த செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம் உஞ்சவிருத்தி பஜனை<em>

பாட்டின் வேகத்துக்கு ஏற்ப காற்சதங்கைகள் இனிய லயத்தை எழுப்பி ஆவுடையின் மனத்தைக் கொள்ளை கொள்வதாய் இருந்தது. வீட்டின் உள்ளே வெறுமையையும் இருட்டையுமே வாழ்வின் கதியெனக் கொண்டிருந்த ஆவுடைக்கு ஒரு வெளிச்சக் கீற்று தென்பட்டது. அறையை விட்டு ஆவேசமாய் எழுந்தாள். உடனிருந்தோர் தடுத்தனர். திமிறிக் கொண்டு வந்தாள் ஆவுரை. வீட்டின் கதவு படீரெனத் திறந்தது. அடுத்த நொடி, வாசலில் பாடியாடிக் கொண்டிருந்த ஸ்ரீஅய்யாவாளின் காலடியில் விழுந்து கிடந்தாள் ஆவுடை.

பதினாறு வயதுப் பெண். கைம்பெண் கோலத்தில்! அய்யாவாள் தன் பாட்டை நிறுத்தினார். கனிவுடன் ஆவுடையை நோக்கினார். நயன தீட்சை அளிப்பது போல் அவளைத் தேற்றும் விதமாய், “குழந்தாய் வருந்தாதே! பகவான் இருக்கிறார். சந்த்யா காலத்தில் ஆற்றங்கரைக்கு வா” என்று கூறி ஆவுடையின் தலையில் மெதுவாய் வருடினார். ஸ்ரீஅய்யாவாளின் ஸ்பரிச தீட்சை, அந்தக் கணமே ஆவுடை மனத்தில் குருநாதர் அருள் தமக்குக் கிட்டியதாய் எண்ண வைத்தது.

ஆனால்… ஊரார்? கேலிப் பார்வை பார்த்தனர். அதுவரை சுவாமிகள் என்று சுற்றி வந்த கும்பல், வெறுப்பைக் காட்டி ஒதுங்கியது. தெருப் பெண்கள் சிலரைத் தவிர வேறு எவரும் இல்லை. அதன்பிறகு அவருக்கான உபசாரமும் அப்படி இப்படித்தான் இருந்தது. அவரோ எதிலும் மனத்தைச் செலுத்தவில்லை. வழக்கம்போல் பாடிக் கொண்டு மாலை நேரம் ஆற்றங்கரை மண்டபத்தை அடைந்தார்.

வீட்டிலோ ஆவுடைக்குத் தடை போட்டார்கள். ஆற்றங்கரை மண்டபத்துக்குச் செல்வதாவது? குரல்கள் பலவிதம்! தாயார் சமாதானம் சொன்னார். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேறு வழியின்றி ஒரு பெண்ணை ஆவுடைக்குத் துணையாக இருக்க வைத்து, வீட்டில் உள்ளோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். ஆவுடை அந்தப் பெண்ணையே நல்ல வார்த்தை சொல்லி உடன் வரச் செய்தாள்.

ஆதவன் தன் கிரணங்களை பொதிகை மலையின் உச்சியில் மறைத்துக் கொண்டு அப்புறம் சென்றான். ஆற்றங்கரை மண்டபத்தின் முன்னே இருள் கவியத் தொடங்கியிருந்தது. ஸ்ரீஅய்யாவாள் சொன்னபடி மண்டபத்தின் ஓரத்தில் நின்றிருந்தாள் ஆவுடை. சந்தியாவந்தனாதிகள் முடித்துக் கரையேறினார் அய்யாவாள். விபூதி ருத்திராட்சாதிகளுடன் அவரது திருமுகம் கண்ட நொடி, ஆவுடை அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கையில் புனித நீர் எடுத்து ஆவுடையின் சிரத்தில் தெளித்த அய்யாவாள்…. “குழந்தாய்! கண்களைத் திற. என்னை குருவாக ஏற்று நான் உனக்கு உபதேசிக்கப் போகும் மந்திரத்தை உயிரெனப் பற்றி உச்சரித்து வா. உனக்கான ஞான வாசற் கதவு திறந்தது. உலகைப் பற்றிக் கவலைப் படாதே! நான் அடிக்கடி வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன். தெம்புடனிரு” என்றார்.

ஆவுடையக்காள் வாழ்ந்து வந்த செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம் உஞ்சவிருத்தி பஜனை

ஆவுடையின் கண்கள் திறந்தன. ஸ்ரீவேங்கடேசரின் அந்த ஞான உபதேசம், ஆவுடையை ஆத்மானுபூதியில் லயிக்கச் செய்தது. மந்திர ஜபம் மனத்தில் பற்றி, உன்மத்தையாய் ஏக சிந்தையில் லயித்திருந்தாள். அவளின் நிலை கண்டு, ஊரார் அவளை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தனர். குருதேவர் கட்டளைப்படி, ஆவுடை ஊரில் இருந்து வெளியேறினாள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டாள். நாட்கள் கடந்தன. ஆவுடையின் பக்தியும் பாடல்களும் இதற்குள் பல ஊர்களிலும் புகழ் பெற்றிருந்தது. அது அவளது சொந்த ஊரான செங்கோட்டையையும் எட்டியிருந்தது. ஊரை விட்டு வெளியே சென்ற பின்னர்தான் ஆவுடையின் மகிமை ஊராருக்குத் தெரியவந்தது.

ஒரு நாள் துலாக்காவேரி ஸ்நானத்துக்கு மாயவரத்துக்கு வந்து சேர்ந்தாள் ஆவுடை. துலாக்காவேரி ஸ்நானத்தில் ஆவுடைக்கு பேதாபேதம் அற்று, சர்வ சமரஸ பரிபூர்ண ஸ்வனுபோதம் கிட்டியது. காவேரி நீரில் எச்சில் பட்ட மாவிலை மிதந்து வந்தது. அதை எடுத்து பல்துலக்கினார் ஆவுடையக்காள். சுற்றிலும் ஸ்நானம் செய்து கொண்டிருந்த பெண்கள் அவரை பரிகாசம் செய்தனர். ஆனால் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் புன்சிரிப்புடன் படியேறினார் ஆவுடையக்காள். அங்கே அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஸ்ரீஅய்யாவாள், பீஜாட்சரத்தை ஆவுடையக்காளின் நாக்கில் தர்ப்பையினால் எழுதி, அவரை ஆசீர்வதித்தார். “உனக்கு ஜீவன்முக்தி நிலை ஏற்பட்டு விட்டது. நீ எங்கிருந்தாலும் இனி உன்னை கர்ம பந்தம் அணுகாது. உன் சொந்த ஊருக்கே சென்றிரு” என்று உபதேசித்தார்.

ஆவுடையக்காள் ஊர் திரும்பினார். பழைமை மறந்து புதுமை ஏற்று ஆவுடையக்காளை ஊரார் வரவேற்றனர். மரியாதை செய்தனர். அவரின் அத்வைத ஞானத்தைப் பெற்று அவரை ஏற்றுப் போற்றினர்.

நாட்கள் வருடங்களாகின. ஓர் ஆடி நன்னாள். திருக்குற்றால அருவியில் ஸ்நானம் செய்துவிட்டு, மலையின் மீதேறிச் சிறிது தொலைவு சென்று தியானம் செய்யப் போவதாய் சிஷ்யைகளிடம் கூறிச் சென்றார் ஆவுடையக்காள். சென்றவர் சென்றவர்தாம். எங்குத் தேடியும் ஆவுடையக்காள் அதன்பின்னர் தென்படவில்லை. அவரின் உடலும் கிடைக்கவில்லை.** இது யாருக்குமே புரிபடாத ரகசியம்தான்!

ஆனந்தம்

புடார்ஜுனம் – ரங்கசமுத்திரத்தின் அக்கரையில் தாம்ரபரணி கரையில் அமைந்துள்ள திருப்புடைமருதூர் என்கிற சிவத்தலம் இங்கே ஸ்ரீநாறும்பூத நாத சமேத கோமதியம்மன் அருள் பாலிக்கிறார்கள். (தாம்ரபரணி புஷ்கர வருட நிறைவு விழா இங்கு காஞ்சி பெரியவா முன்னிலையில் நடந்தேறியது) மத்யார்ஜுனம் – திருச்சி அருகே உள்ள திருவிடைமருதூர் – மல்லிகார்ஜுனம் – ஆந்திர மாநிலத்தில் உள்ளது இந்த மூன்றும் இடங்களும் விடையேறும் பெருமானின் ப்ரத்யஷமான முக்கிய தலங்கள்.

ஸ்ரீதர ஐயாவாள் காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் வசித்து வந்தார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர்.

அன்றொருநாள், தினமும் காவேரி வெள்ளம் ஓடும் வாய்க்காலைத் தாண்டி திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்று மஹாலிங்கத்தை தர்சிக்காமல் அன்னம் புசிப்பதில்லை என்ற வ்ரதத்தில் இருக்கும் ஶ்ரீதர ஐயாவாள் அன்றிரவு உபவாஸம் இருப்பதாகத் தீர்மாணித்துக் கொண்டு!! “மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!!” என்றபடி திருவிசைநல்லூர் க்ருஹத்திலிருந்து வெளியில் எட்டிப் பார்த்தார்.

பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இம்மழையைத் தாண்டி, காவேரி வெள்ளம் ஓடும் வாய்க்காலைத் தாண்டி திருவிடை மருதூர் கோவிலுக்கு எப்படி போக முடியும்! என்று சிந்தித்த வேளையில் திடீரென்று ராத்ரி நேரத்தில் வீட்டுக் கதவை யாரோ படபடவென்று தட்டும் சப்தம்!! கதவைத் திறக்கிறார் ஶ்ரீதரர். திருவிடைமருதூர் மத்யார்ஜுனர் கோவில் சிவாச்சாரியார்!!

“அடாடாடாடா!! ஸ்வாமி!! இந்த கொட்ற மழைல நனைஞ்சுண்டு வந்துருக்கேளே!! உள்ளே வாங்கோ!! வாங்கோ!!” தொப்பலாக மழையில் நனைந்து கொண்டு வந்திருக்கும் மஹாலிங்கஸ்வாமி அர்ச்சகரை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

“மஹாலிங்கஸ்வாமி ப்ரஸாதம் கிடைக்காம நீங்க சாப்பிட மாட்டேள்ன்னு நேக்குத் தெரியும்!! இந்த மழையில நீங்க எப்படி வர முடியும்!! சரின்னு நானே வந்துட்டேன்!!” ஶ்ரீதர ஐயாவாள் கண்களில் ஜலம் தளும்பி வழிகிறது!! மஹாலிங்கத்தின் கருணையை நினைத்தா அல்லது சிவாச்சாரியாரின் அன்பை நினைத்தா!! இரண்டுமே கலந்து தான்!!

புது வஸ்த்ரம் கொடுத்து அவரை உடுத்திக்கச்சொல்லி விட்டு, இருவருமாக பேசிக்கொண்டே ஶ்ரீதர ஐயாவாளின் மனைவி பரிமாறிய அன்னைத்தை இருவரும் சாப்பிட்டனர்!!
“ஆஹா!! ஸ்வாமி!! மழைல நனைஞ்சுண்டு வந்தது ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுடுத்து!! உங்க பார்யை கையாலே புசிக்கற அன்னம் தேவாம்ருதமா இருக்கு!!”

இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் கூடத்திலேயே படுத்துக்கொண்டனர்!! இருவரும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு எப்போது தூங்கினாரென்றே தெரியாதபடிக்கு ஶ்ரீதர ஐயாவாள் அசந்து விட்டார்!!

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த சிவாச்சார்யாரைக் காணவில்லை.
“காலம்பற சீக்கிரம் எழுந்து போய்ட்டார் போல!! என்ன கார்யம்ன்னு தெரியல்லே!! நோக்கு ஏதாவது தெரியுமோ!! எப்போ புறப்பட்டார்ன்னு!!” தன் மனையாளிடம் கேட்டார் ஶ்ரீதர ஐயாவாள்.

“தெரியலியேந்நா!! நானும் உள்ள அசந்து தூங்கிட்டேன்!! சரி எழுப்ப வேண்டாமேன்னு கிளம்பிட்டார் போலருக்கு அண்ணா!! விடுங்கோ!! கோவிலுக்கு போறேளோன்னோ!! அங்க தான் இருப்பார்!! விஜாரிச்சுக்கலாம்!!” இது மனைவி.

“இல்லேடீ!! வாய்க்கால்லே வெள்ளமா ஜலம் ஓடறதேடீ!! எப்படி அவர் தாண்டி திருவிடைமருதூர்க்கு போவார்ன்னு தெரியல்லியே!!”

“ஏன்னா!! இதே வெள்ளம் தானே நேத்து ராத்ரியும் இருந்துருக்கும்!! எப்படி அவர் வந்தார்ன்னு நீங்க கேட்கல்லியே!!”

“அடாடாடா!! அது ஞாபகமில்லையே!! இந்த ப்ரளய ஜலத்துல மனுஷன் எப்படி நீந்திண்டு வந்தார்!! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!!” என்றபடி அங்கலாய்த்துவிட்டு ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் சிவபூஜை எல்லாம் முடித்து மத்யார்ஜூனேச்வரன் கோவிலுக்கு கிளம்பினார் ஶ்ரீதர ஐயாவாள்.

மழை நன்றாக விட்டிருந்தது!! வாய்க்காலில் முட்டிக்கால் அளவு ஜலம் ஓடிக்கொண்டிருந்தது!! எப்படியோ தாண்டி மத்யார்ஜுனர் கோவிலை அடைந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

நேராக மஹாலிங்கம் ஸந்நிதிக்கு சென்றார்!! அர்ச்சகரிடம் “ஏன் ஸ்வாமி!! மஹாலிங்கம் ஏதோ ரொம்ப களைப்பா இருக்கறாப்ல இல்லே!! மழை கொட்றதோல்லியோ!! ஒத்துக்கலை போலருக்கு!!” என்றார்!!

“இருக்கட்டும் ஸ்வாமி!! ஒரு நாள் தவறாத மஹாலிங்கம் ஸந்நிதியை தர்சிக்காத ப்ரஸாதம் வாங்காத நீங்க சாப்டதே இல்லே!! நேத்து ப்ரளயம் மாதிரி மழை!! என்னாலேயும் வந்து ப்ரஸாதம் கொடுக்க முடியல்லே!! என்ன பண்ணினேள்!! சிவாச்சாரியாரின் கேள்வியில் அதிர்ந்தார் ஶ்ரீதர ஐயாவாள்.

“ஸ்வாமி!! என்ன சொல்றேள்!! நீங்க தானே!! கொட்ற மழைல காவேரி வாய்க்காலைத் தாண்டி ஆத்துக்கு வந்து ப்ரஸாதம் கொடுத்தேள்!! புது வஸ்த்ரம் கூட கொடுத்தேன்!! அதைக் கட்டிண்டு எங்கூட சாப்டேள்!! விடியகாலம்பற தானே கிளம்பா போனேள்!! ராத்ரி எப்படி ப்ரளய ஜலம் மாதிரி ஓடற வாய்க்காலை எப்படி தாண்டினேள்ன்னு கேட்கனும் என்று நினைத்து கொண்டு இருக்கேன்!!”

“என்ன சொல்றேள்!! நானா!! நான் வரவேயில்லையே!! இந்த மழைல வரமுடியல்லியேன்னு நீங்க என்ன பண்ணுவேளோன்னு நினைத்து கொண்டு இருந்தேன்!!”

“அப்போ… !! வந்தது… !!” மஹாலிங்கம் ஸந்நிதியில் பார்த்தால், நேற்று இரவு எந்த வஸ்த்திரத்தை சிவாச்சாரியாருக்கு கொடுத்தோமோ, அதே வஸ்த்ரம் மஹாலிங்கத்தின் மேல்!!

ஶ்ரீதர ஐயாவாளுக்கு விதிர்விதித்து போய்விட்டது!! “ஆஹா!! ஆஹா!!அப்பா !! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!! சங்கரா!! நீயா வந்தே!! எனக்காகக் கொட்ற மழைல நனைஞ்சுண்டு, உன் ப்ரஸாதத்தை நீயே கொடுத்து, புது வஸ்த்ரம் கட்டிண்டு, என் பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிட்டு, என் கூடவே இருந்துண்டு, பரமேச்வரா!! பரமேச்வரா!! ஸர்வேச்வரா!! என்னால தாங்க முடியல்லே!!” இரண்டு கண்களும் ஜலத்தை ப்ரவாஹமாக பொழிந்தது!!

மஹாலிங்கத்தினுடைய அவ்யாஜ கருணையை என்னவென்று கூறுவது!! பக்தனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவே அலாதியானது!! பக்தனுக்காக பரமேச்வரன் எதையும் செய்வார் என்பதற்கான ப்ரத்யக்ஷ ஸாக்ஷியே ஶ்ரீதர ஐயாவாளுக்காக பரமேச்வரன் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version