சனிப் பெயர்ச்சி
– கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
27-12-2020 இன்று அதிகாலை சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி நடந்தது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ந்து இருக்கிறார்.
பஞ்சாங்கம் என்பது கிரஹ நிலைகளைப் பற்றியதாக இருப்பதால் இதனைப் பஞ்சாங்கம் என்கிறார்கள். அதாவது பஞ்ச(ஐந்து) அங்கம்.பஞ்சாங்கம் வாக்கியப் பஞ்சாங்கம் என்றும் திருக்கணிதப் பஞ்சாங்கம் என்றும் இரண்டு முறைகளில் தமிழகத்தில் கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பிரதானமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோன்று தென்மாவட்டக் காரர்கள் வாக்கிய பஞ்சாங்கத்தைத் தான் பார்த்து பலன் தெரிந்து கொள்கிறார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய ரிஷிமார்கள் எல்லோரும் கூடி சில ஸ்லோகங்களை கணித அறிவுடன் செய்து கணிக்கப்பட்ட வையே பஞ்சாங்கம். இதை வாக்கியப் பஞ்சாங்கம் என்றார்கள். வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
திருக்கணிதம் சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கம். சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால் மற்ற கிரகங்கள் அதனை எளிதாக இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது மாறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட கணிதப் பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கம். இந்த திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி (24-1-2020)சனிப்பெயர்ச்சி நடைபெற்றது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று தான் (27-12-2020)சனிப்பெயர்ச்சி நடந்தது. இந்த வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய குடும்பத்தில் எந்தப் பஞ்சாங்கத்தை நமது முன்னோர்கள் பாவித்து வந்தார்களோ அதே பஞ்சாங்கத்தை நாமும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது தான் சாலச்சிறந்தது.
சனீஸ்வரனுக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன. எல்லா சிவாலயங்களிலும் இவருக்குத் தனி சன்னதியும் உள்ளது. திருநள்ளாறு, குச்சனூர் ஆகிய ஊர்களிலுள்ள சனீஸ்வரன் விசேஷமானது. இலங்கையில் திருகோணமலையில் உள்ள சனீஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. மகாராஷ்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் நய்வாசா வட்டத்தில் உள்ள சிறு நகரம் சிங்கனாப்பூர்.இங்கே உள்ள சனீஸ்வரர் ஆலயம் இந்தியா முழுக்கப் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக இடத்திலுள்ள கோள் சனி கோள் ஆகும். வியாழன் கிரஹத்திற்கு அடுத்த பெரிய கிரஹம் சனி கிரகம். சனியை ராஜ கிரஹம் என்றும் சொல்வார்கள். சூரியனைச் சுற்றி வர சனி 29.5ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பூமியானது சூரியனைச் சுற்ற முழுமையாக ஒரு ஆண்டு எடுத்துக் கொள்கிறது.
பூமியில் இருப்பதைப் போல் அதிக அளவு தண்ணீர் சனி கிரகத்தில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.பல பனிப்பாறைகள், இரும்புச்சத்துக்கள், பல வாயுக்கள் நிறைந்த பகுதியாக சனி கிரஹம் இருக்கிறது.
1610 ஆம் ஆண்டு கலிலியோ தனது தொலைநோக்குக் கருவி மூலம் சனி வளையத்தைக் கண்டறிந்தார். ஆனாலும் 1655 ஆண்டுதான் கிறிஸ்டின் ஹி கென்ஸ் சனி வளையத்தைப் அதிகாரபூர்வமாக அறிவித்த முதல் நபர் ஆவார்.
1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயணியர் விண்கலம் மூலம் சனிக்கிரஹம் முதன்முதலாக ஆய்வு செய்யப்பட்டது. இப்போது பல விண்கலன்கள் சனியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டச் செய்தியை அறிகிறோம். பூமியை விட ஆயிரம் மடங்கு மின்னல்களின் ஆற்றல் மின் ஆற்றலாக சனி கிரஹத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன!
சனீஸ்வரருக்கு மந்தாகரன் என்ற பெயரும் உண்டு. மெதுவாக நடப்பவர் என்று அர்த்தம். இவருடைய கால் சற்று ஊனமாக இருக்கும். எனவே மந்தன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவருடைய தோற்றம் கருமை. இவருடைய தாயின் பெயர் சாயா.
சூரியனின் மனைவியின் பெயர் சந்தியா தேவி. சூரிய பெருமானின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் சாயா என்கிற தன் நிழலையே சூரியனிடம் அமர்த்திவிட்டு தவம் செய்யப் புறப்பட்டாள் சந்தியா தேவி.சாயாவின் மகனாகப் பிறந்த இவரை சூரியன் அங்கீகரிக்கவில்லை. எனவே சூரியனையே இவர் ஆட்டிப் படைத்தார். சூரியன் மீது கிரகணங்கள் விழுந்தன.
சனியின் பெருமையை அறிந்து கொள்ள சிவபெருமானை நாடினார் சூரிய பகவான். சனி பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கக் கூடியவர். அவருடைய நீதி பரிபாலனம் சரியாக இருக்கும் என்று சிவபெருமானின் மொழிக்கு ஏற்ப சூரியன் சனியை ஏற்றுக்கொண்டார். சனிக்கு ஈஸ்வரப் பட்டமும் கிடைத்தது. சனீஸ்வரர் ஆன பின் தனக்காக ஒரு லோகம் அமைத்து ஆட்சி பரிபாலனம் செய்யப் புறப்பட்டார் சனீஸ்வர பகவான் என்று புராணக் கதையின் மூலம் தெரிய வருகிறது.ஈஸ்வரப் பட்டம் பெற்ற இன்னொருவர் ராவணேஸ்வரன்.
சனி பகவான் ஆட்சி செய்யும் திருநள்ளாறு பாடல் பெற்ற தலமாகும். ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தைப் பற்றி நான்கு பாடல்கள் எழுதியுள்ளார். சுந்தரர் ஒரு பாடலும், நாவுக்கரசர் இரண்டு பாடலும் திருநள்ளாறு பற்றி பாடி உள்ளார்கள். திருநள்ளாறில் உள்ள ஈஸ்வரனின் பெயர் தர்பாரண்யேஸ்வரர். இவர்தான் மூலவர். அம்மையின் பெயர் பிராணாம்பிகை .சனி இக்கோவிலில் ஒரு சன்னதியாகத்தான் உள்ளார்.ஆனால் இக்கோவிலில் சனீஸ்வரருக்குத் தான் பெரும் கூட்டம் கூடுகிறது!
சனி பெயர்ச்சி பலனை பல நாளிதழ்கள் மாத இதழ்கள் வெளியிடுகின்றன. சனிப்பெயர்ச்சி சம்பந்தமாக நாம் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.பொதுவான பலன்களைத் தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஜாதகருக்கும் தனித்தனியாகத்தான் பலன் பார்க்க வேண்டும். பொதுவான சனிப்பெயர்ச்சி பலன்கள் என்பது டிராபிக் லைட் போன்றது. டிராபிக் லைட் சரியானபடி போக்குவரத்திற்கு உதவுவதுபோல் சனிப் பெயர்ச்சி பலன்களும் நம் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புவோம்!!
சனீஸ்வர காயத்ரி:
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்