Home கட்டுரைகள் அயோத்தியில் ராமர் கோயில்!

அயோத்தியில் ராமர் கோயில்!

விக்ரகங்கள், தேர்கள் சிதைந்தாலும் புதியவை வந்துவிட்டன அல்லவா என்று இந்துக்கள் அமைதி அடைய வேண்டுமா? அல்லது

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

அயோத்தியிலேயே ராமர் கோவிலை எதற்காக கட்ட வேண்டும்? ஸ்ரீராமன் அயோத்தியில் பிறந்தான். அதற்காக கட்ட வேண்டும். 2077 ஆண்டுகளுக்கு முன் ராஜா விக்ரமாதித்யன் அதே இடத்தில் ராமனுக்காக நிர்மாணித்த தெய்வீக ராமமந்திரம் இடித்து தள்ளப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் நிரூபித்ததால் அங்குதான் கட்டவேண்டும். பல நூறு ஆண்டுகளாக ஆலய புனர்நிர்மாணத்திற்காக பலர் போராடி மதவெறியர்களின் கொடூரத்தால் பலியாகி உயிர்த் தியாகம் செய்ததால் ராமமந்திரம் கட்டப்பட வேண்டும். சுதந்திரம் வந்த பின் பண்டைய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதால் அங்கு கட்ட வேண்டும்.

ராமர் கோயில் நிர்மாணம் பாரத தேச கீர்த்திக்கும் கௌரவத்திற்கும் கலாச்சார ஆதரிசத்திற்கும் சான்று. அதனால்தான் மதங்களுக்கு அப்பாற்பட்டு நல்லுள்ளம் கொண்ட பலர் ஆதரிக்க முன் வந்தனர். உலக நாடுகள் பாராட்டின. நல்வாழ்த்துக்களை தெரிவித்தன. ஆனால் ஓட்டு வங்கிகளின் ஆதரவுக்காக பாடுபடும் மாநிலத் தலைவர்கள் வாய்மூடி கிடக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் மக்களின் எழுச்சி ராமநாம உயிர்த்துடிப்போடு கோஷமிடுகிறது. நகரம், கிராமம், சிறியவர், பெரியவர் என்று அனைவரும் ராம நாமத்தை உச்சரித்து பரவசம் அடைகிறார்கள். தெய்வீக ராமமந்திரம் கட்டுவதில் அனைவரும் பங்கு கொள்கிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் தேசபக்தியும் தெய்வபக்தியும் வெளிப்படுகிறது. சாமானிய மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்கொண்டு மதங்களுக்கு அப்பாற்பட்டு மகிழ்ச்சியோடு பங்கேற்கிறார்கள்.

அன்றைய அழிவுக்கும் இருட்டு வரலாற்றுக்கும் வெறுப்போடு செய்த தப்புகளுக்கும் பரிகாரமாக சாதித்த வெற்றியே அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் ஏற்பாடு. மத மாற்றத்ததால் பிற மதங்களுக்குச் சென்ற சில தேசிய எதிர்ப்பாளர்களும் வெறுப்பு அரசியல் செய்பவர்களும் தம் விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலும், பிற மதத்தவர் பலரும் சகோதர உணர்வோடு ராமர் கோயில் கட்டுவதற்கு மனதார நிதி அளித்து வருகிறார்கள்.

இந்தியர்களின் நாடித்துடிப்பு ராம தாரக மந்திரமே என்று இந்த சம்பவம் நிரூபிக்கிறது. இத்தகு பின்னணியில் தேசியத்தையும் சனாதன தர்மத்தையும் வெறுப்பவர்கள் இதனை ஏற்கவும் பாராட்டவும் இயலாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசம் மொத்தமும் மகிழ்ந்திருக்கையில் இந்துக்களை மதம் மாற்றும் கூட்டம், தலைவர்கள் அளிக்கும் ஆதரவோடும் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்போடும் சில மாநிலங்களில் மதக் கிளர்ச்சியையும் வெறுப்பையும் தூண்டி வருகிறார்கள்.

ராமதீர்த்ததில் ராமர் சிலையின் தலையை துண்டித்த பின்னர் மீண்டும் புது விக்கிரகம் பிரதிஷ்டை செய்தது அரசாங்கம். அதற்கு முன்பு அந்தர்வேதியில் தீக்கிரையான ரதத்திற்கு பதில் புதிய ரதத்தை அமைத்தது அரசு. அதோடு ஹிந்து வெறுப்பு முரடர்கள் செய்த கொடுமைகள் துடைக்கப்பட்டதாக எண்ணி கையை கழுவிக் கொண்டார்கள். அந்த குற்றவாளிகளைப் பிடித்து தண்டிக்க முயற்சி செய்யவில்லை. ஒருவேளை அவர்கள் பிடிபட்டாலும் தம்மைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு விட்டுவிடும் அரசியல் இருக்கவே இருக்கிறது.

விக்ரகங்கள், தேர்கள் சிதைந்தாலும் புதியவை வந்துவிட்டன அல்லவா என்று இந்துக்கள் அமைதி அடைய வேண்டுமா? அல்லது பல நூற்றாண்டு வரலாறும் கலாச்சாரமும் சிரத்தையும் அழிவுக்கு ஆளாகும்போது வருத்தப்பட வேண்டுமா?

மதச் சின்னங்களாக அன்றி, வரலாற்று சின்னங்களாகக் கூட பண்டைய கோவில்களுக்கும் சிலைகளுக்கும் கட்டடங்களுக்கும் மதிப்பு உள்ளது. அவற்றை அழிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனாலும் இந்து மதத்தைத் தவிர பிற மதப் பிரிவுகளை பரப்பும் திட்டத்தோடு குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். அதன் மூலம் மேலும் பல குற்றங்களைப் புரிவதற்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறது என்பதே உண்மை.

சிலையை புதிதாக அமைப்பதற்கும் ரதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் யாரிடமிருந்து உதவி பெற்றார்கள்? நிச்சயம் அறநிலையத் துறையிடம் இருந்துதான். இந்து தர்மத்தின் மீதும் கோவில்கள் மீதும் தாக்குதல்களும் அழிவுகளும் நடந்தாலும் இந்து ஆலய அமைப்பிடம் இருந்து ஒரு சிறு எதிர்ப்புக்குரல் கூட வருவதில்லை. யாரும் எதிர்வினை ஆற்றுவதும் இல்லை.

காரணம் என்ன? அவை அரசாங்கத்தின் ஆதீனத்தில் இருப்பதால் அரசுக்கு ஆதரவாக இயங்குமே தவிர தர்மத்திற்காகவோ தெய்வத்திற்காகவோ பணிபுரியாது. இதுவே பிறமத நிலையங்களுக்கு ஒரு துளி தீங்கு நேர்ந்திருந்தாலும் அவர்களின் மத நிலையங்கள் அனைத்தும் முன்வந்து கண்டனம் தெரிவித்திருக்கும். ஏனென்றால் அவை அரசின் பிடியில் இல்லை.

ஓட்டு வங்கியை பாதுகாத்துக்கொள்ளும் திட்டத்தோடு பதவிக்கு வந்த உடனே அறநிலையத்துறையின் நிதியை தம் இஷ்டத்திற்கு எங்கெங்கே பயன்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த பகிரங்கமான உண்மை.

எத்தனை அரற்றினாலும் சமூக ஊடகங்களில் புலம்பினாலும் இந்துக்களின் குரல்களை கண்டுகொள்ளத் தேவையில்லை என்பதே தலைவர்களின் தீர்மானம். அதிவேக மதமாற்றும் திட்டத்தால் பலகோடி மத ஓட்டுகளும் அதற்கும் மேலாக அக்கிரம அராஜகங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுடையது.

மிக விரைவில் முழுமையாக தம் மத அரசாக மாநிலங்களை மாற்றுவதற்கும் தேசிய வாதத்தையும் இந்து தர்மத்தையும் அழித்து விடுவதற்கும் வெளிநாட்டு சக்திகளின் உதவியோடு தீவிரமாக முயற்சித்து வருபவர்கள் பதவி மோகம் பிடித்தவர்களின் அரவணைப்போடு ஆட்டம் போட்டு வருகிறார்கள்.

அப்பாவி இந்துக்கள் கோவில்களும் தான் சமர்ப்பிக்கும் காணிக்கைகளும் பத்திரமாக இருப்பதாக பிரமையில் உள்ளார்கள். அண்மையில் சாத்துவிக, தத்துவ வாழ்க்கை நடத்தி வரும் பீடாதிபதிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு தர்ம ரட்சணைக்காக ஒருமித்த குரலில் தம் வேதனையை வெளிப்படுத்தினர். அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மத அரசியல் வாதிகள் அலட்சியப்படுத்தினார்கள்.

பிற மதங்களை உள்ளடக்காத அரசாங்க அறநிலைய அமைப்பு உள்ளூர நொறுங்கி வருகிறது. இந்துக்களை நடிப்பால் ஏமாற்றி விட முடியும்… அவர்கள் எப்படியும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்ற இந்த இரண்டு நம்பிக்கைகளோடு அனைத்து அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா போடும் தந்திர ஸ்வாமிஜிகளும் அறிய வேண்டிய உண்மை ஒன்று உள்ளது.

சாத்வீக தர்மத்தில்தான் மகாசக்தி மறைந்துள்ளது. அது வசிஷ்டரின் பிரம்மதண்டமாக அசுர சக்திகளை நிர்மூலமாக்கக் கூடியது. தர்ம ரக்ஷணை சக்தி விஜய ராமனாக, வீர ஹனுமானாக, துர்க்கையாக, நரசிம்மனாக, வீரபத்திரனாக பராக்கிரமத்தை வெளிப்படுத்தக் கூடியது.

  • Source: ருஷிபீடம் தலையங்கம் மார்ச் 2021

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 10 =

Translate »