Home கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-8)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-8)

manakkula vinayakar and bharathi 3

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் ஒன்பது – வெண்பா

களியுற்று நின்று கடவுளே யிங்குப்
பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் – ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமை யெலா நன்காற்றித்
தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து!

பொருள் – ஞான ஒளிபெற்று, எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறப்படும் கல்வி பல கற்றுத் தேர்ந்து, கடமை எல்லாவற்றையும் நன்கு ஆற்றி, பழவினையால் ஏற்படுகின்ற துன்பத்தையெல்லாம் பழியற்று வாழ்ந்திட களியுற்று நின்று விநாயகக் கடவுளே எனக்கு கருணை காட்டும் விதமாய் இங்குக் கண் பார்ப்பாய்.

நாம் ஆற்ற வேண்டிய கடமைகள்தான் எவை? 

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நமக்கென பல்வேறு கடமைகள் இருக்கும். கடமை என்றால் என்ன? அதை நிர்ணயிப்பவர் யார்? அதனால் என்ன பலன்? இந்தக் கேள்விகள் மனத்தில் எழலாம். கடமைகள் என்று வரும்போது அவை நாம் வகுத்துக்கொள்வது மட்டுமே அல்ல. சமுதாயத்தின் பார்வையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, பள்ளிப் பருவத்தில் ஒரு மாணவர் நன்கு படிக்கவேண்டும் என்பது அவரின் கடமை. அத்துடன் அவர் நற்பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், சேட்டைகள் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்தக் கடமைகளைச் செய்யத் தவறும்போது மற்றவர்கள் அவர் மீது கொண்டுள்ள பார்வை மாறுகிறது.

மகள்/மகன், மனைவி/கணவன், தோழி/தோழன், ஊழியர் என்று தினமும் பல பொறுப்புகளைச் சுமக்கிறோம். அவை அனைத்தையும் தராசைப் போல கவனமாகச் சமன்படுத்த வேண்டும். வாழ்க்கை அதிவேகத்தில் செல்வதால் சில சமயங்களில் நம்மிடையே எதிர்பார்க்கப்படும் கடமைகளை நாம் உன்னிப்பாக கவனிப்பதில்லை. கடமை தவறும்போதுதான் “அடடா மறந்துவிட்டோமே” என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.

பொன்முடியார் என்னும் பெண்பாற்புலவர் (மறம்-வீரம்) மறக்குடிப் பெண்ணின் கூற்றில் வைத்துப் பாடிய ஒரு புறநானூற்றுப் பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்கைளத் தாங்கி விளங்குகிறது. இப்பாடல் மூதின்முல்லை என்ற புறத்துறை வகையைச் சேர்ந்தது.  மறக்குடி மகளிரின் வீரத்தைப் பற்றிக் கூறுவது இத்துறையின் தன்மையாகும். 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

(திணை- வாகை, துறை – மூதின் முல்லை, பாடியவர் – பொன்முடியார், புறநானூறு -312)

◊ மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.

◊ அவனைச் சான்றோனாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும்.

◊ வேல் வடித்துக்கொடுத்தல் கொல்லனின் கடமை.

◊ நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்.

◊ விளங்கும் வாளைக் கையிலேந்தி களிற்றுயானைகளை அழித்து பகைவரை வெல்லுதல் அந்த ஆண்மகனின் கடமையாகும். என்பது பாடலின் பொருளாகும். இதனை இப்பாடல் விளக்குகிறது.

காலம் மாறியிருக்கிறது. அதற்குத் தகுந்தார்போல இப்பாடலுக்கு பொருளும் மாற வேண்டும். அதாவது,

◊ சங்ககால மகளிரின் கடமைகளுள் ஒன்றான ஆண்மகவைப் பெறுதல் என்ற மரபு கடந்து இன்றைய பெண்கள் சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பல செயல்களைச் செய்வதைக் கடனாகக் கொண்டிருக்கின்றனர்.

◊ ஆண்மகனைப் பெறுவதில் சங்ககாலச் சமூகத்துக்கிருந்த மகிழ்ச்சி இன்றும் உள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

◊ சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன் என்பது இன்றும் மாறவில்லை. ஆனால் சான்றோன் என்பதன் பொருள் மாறியிருக்கிறது. சங்ககாலத்தில் சான்றோன் என்பவன் வீரன் என்ற பொருள் இருந்தது. இற்றைக்காலத்தில் சான்றோன் என்பவன் அறிவாளி, திறமைசாலி என்ற பொருள் மாறியிருக்கிறது.

◊ வாழ்க்கையை எதிர்கொள்ளும் கருவி செய்வோன் கல்வியாளன். சங்ககாலத்தில் கொல்லனின் பணியை இன்றைய கல்வியாளர்கள் செய்கிறார்கள். வீரனின் கையில் உள்ள கருவி அவன் போரில் வெற்றிபெற உதவும். இன்றைய கல்வியாளர்கள் தரும் அறிவு என்னும் அற்றங்காக்கும்  கருவி மனிதன் வாழ்க்கையில் வெற்றிபெற உதவும்.

◊ சங்ககாலத்தில் நல்லொழுக்கம் சொல்லித்தந்தவன் வேந்தன். இன்று நல்லொழுக்கம் சொல்லித்தரவேண்டியது அரசு. நீதிமன்றம், காவல்நிலையம் என வடிவம், வழக்கம் மாறினாலும் இமரபுகள் மாறிப்போவதில்லை.

எனவே இன்றைய சூழலில் இப்பாடல் வழி, நல்ல மகனையோ, மகளையோ ஈன்றெடுப்பது தாயின் கடன். அந்த மகவை கல்வியில் சிறந்த சான்றோனாக்குவது தந்தையின் கடன். கல்வி என்னும் செயல்வழி அறிவு என்னும் ஆயுதத்தைச் செய்து தருவது கல்வியாளரின் கடன். நல்ல சமூக ஒழுக்கத்தைச் சொல்லித்தரவேண்டியது அரசின் கடன்.

இவ்வாறு அவரவர் செய்யவேண்டிய பணிகளை (கடமை என்று கூட கூறவில்லை, கடன் என்றே கூறியிருக்கிறார்.) அவரவர் செய்தபின்பு அந்த மகனோ, மகளோ செய்ய வேண்டிய பணி என்ன? போர்க்களத்துக்குச் சென்று யானைகளுடன் போரிடத்தேவையில்லை. நல்லொழுக்கம் என்னும் தேர் ஏறி, வாழ்க்கை என்னும் போர்க்களம் சென்று அறிவு என்னும் வேல் தாங்கி வரும் எதிர்ப்புகளை சந்தித்து மண்பயனுற வாழ்ந்தால் போதும்.

பாரதியும் இதைத்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். 

பாடல் ‘களி’ எனத் தொடங்கி, ‘துறந்து’ என முடிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version