Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 10)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 10)

-கு.வை.பாலசுப்பிரமணியன் –

இல்லறமா அல்லது துறவறமா, எது சிறந்தது? என்ற விவாதம் இந்திரனின் சபையில் நடந்து கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம்.

தேவேந்திரனின் கோபம் எல்லை கடந்தது. ‘தேவகுருவே! இல்லற வாழ்க்கையில் கிடைக்கும் சில இன்பங்களைத் தவிர்த்துப் பசி, வறுமை, போட்டி, பொறாமை, பயம், நோய் என்று எத்தனையோ துன்பங்கள் அவர்களுக்கு வந்து சேர்கின்றன. அந்தத் துன்பங்களையெல்லாம் கடந்தும், துன்பங்களுக்கு மத்தியிலும்தான் அவர்கள் இறைவனை வேண்டி உயர்நிலையை அடைகிறார்கள்.

இந்த உண்மை தெரியாமல் பேசிய நீங்கள், பூலோகத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பசி, வறுமை போன்ற துன்பங்களை அடைந்து மனித வாழ்க்கையின் உண்மையை உணர்வீர்களாக’ என்று சாபமிட்டு விட்டு அவையில் இருந்து வெளியேறினான். இந்திரனின் சாபத்தைக் கேட்டு பிரகஸ்பதி அதிர்ச்சியடைந்தார். அவையில் இருந்தவர்களும் எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.

இந்திரனிடம் சாபம் பெற்ற பிரகஸ்பதி, பூலோகத்தில் பிறந்தார். அவருடைய குடும்பம் அதிகமான குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவருக்குப் பல நாட்கள் உணவு கிடைக்காமல் போனது. அதனால் துன்பமடைந்த அவர், தனது பசியைத் தீர்க்கத் தேவையான உணவு கிடைத்தால் போதுமென்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.

அவருடைய வேண்டுதலை இறைவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவு கிடைப்பதே மிகவும் கடினமாக இருந்தது. வறுமையில் இருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் மனம் வருந்தியபடியே இருந்தார்.

இந்நிலையில் ஒருநாள், அவருக்குக் கிடைத்த சிறிது உணவைச் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நாய் அவரிடம் இருந்த உணவைப் பறித்துச் சாப்பிட முயன்றது. இதனால் பதற்றம் அடைந்த பிரகஸ்பதி, கிடைத்திருக்கும் சிறிது உணவையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த நாயை விரட்டினார்.

அப்போது நாய் பேசியது. ‘சென்ற பிறவியில் மனிதனாக இருந்த நான், எனது வீட்டில் என் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாய் உணவுக்காக என்னைத் தேடி வந்தது. நான் அந்த நாயை விரட்டியடித்ததால், இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்து துன்பம் அடைந்து கொண்டிருக்கிறேன்.

தேவ குருவாக இருந்த நீ, இந்திரனின் சாபத்தால் இப்போது வறுமையில் உழல்கிறாய். என்னையும் விரட்டி அடித்து அடுத்த பிறவியில் நாயாக பிறந்து துன்பம் அனுபவிக்கப் போகிறாயா?’ என்றது அந்த நாய்.

ஆனால் பசியின் பிடியில் இருந்த பிரகஸ்பதிக்கு அந்த பேச்சு எதுவும் பெரிதாகப்படவில்லை. அவர் நாயை விரட்டி விட்டு, உணவை சாப்பிட்டு முடித்தார். பசி அடங்கியதும் நாயின் எச்சரிக்கை மனதில் சஞ்சலத்தை வரவழைத்தது. தான் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து துன்பமடைவேனோ என்று அஞ்சத் தொடங்கினார். அந்த நினைவுகளுடனேயே, கால்போன போக்கில் நடந்து சென்றார்.

வழியில் ஒரு மரத்தடியில் பரத்வாஜர் என்னும் முனிவர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்ற பிரகஸ்பதி, ‘எனக்கு இந்திரன் கொடுத்த சாபமே மிகவும் துன்பத்தைத் தருகிறது. இதில் ஒரு நாய் வேறு என்னை எச்சரித்துச் சென்றிருக்கிறது’ என்று தன் நிலையைக் கூறி, துன்பங்களில் இருந்து விடுபட ஒரு வழியைக் காட்டும்படி வேண்டினார். 

பரத்வாஜர் அவரை காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை வணங்கி சாப விமொசன்ம் பெறுமாறு அருளானார். 

இல்லற வாழ்க்கை என்பது துன்பமுடையதுதான். அந்தத் துன்பத்திலும் இறைவனைத் தேடி உயர்நிலையை அடைந்திட முயற்சிக்க வேண்டும் என்பதையே பிரகஸ்பதி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன…

(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version