Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 11)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 11)

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

பாடல் 11 – விருத்தம்

தவமே புரியும் வகை யறியேன், சலியா துற நெஞ்சறியாது,

சிவமே நாடிப் பொழுதனைத்துந் தியங்கித் தியங்கி நிற்பேனை,

நவமா மணிகள் புனைந்த முடி நாதா, கருணாலயனே, தத்

துவமாகியதோர் பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே.

பொருள் – நவமணிகளை தனது மணிமகுடத்தில் அணிந்தவனே, ஓம் என்ற பிரனவ தத்துவமான வடிவுடையவனே, கருணைக் கோயிலே, நான் தவம் எவ்வாறு செய்வது என்ற முறையினை அரியாதவன். சலிப்பின்றி, நெஞ்சம் தன்னையறியாமல் சிவத்தினை நாடுவது எவ்வாறு என்பது அரியாதவன். நாள் முழுவதும் உன்னை வணங்கும் வகையறியாது மயங்கி நிற்கும் மனமுடையவன். எனக்கு பயத்தினை விட்டொழி என்றொரு வார்த்தை சொல்லுவாயா?

பாடல் ‘தவமே’ எனத் தொடங்கி ‘சொல்லுதியே’ என முடிகிறது.

நவமணிகள் – நவமணிகள் வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம் ஆகியவை நவமணிகள் ஆகும். பொதுவாக மணிகள் விரைவில் தேயாமல் இருந்தால்தான் சிறந்த நகைகள் செய்ய முடியும், மணிகளின் கடினத் தன்மையைக் குறிக்க அவற்றுக்கு 1 முதல் 10 வரை எண்கள் கொடுக்கப் புட்டுள்ளன. நகைகள் செய்யப் பயன் படும் மணிகளின் கடினத்தன்மை ஏழிற்கு மேல் இருக்கவேண்டும்.

வைரம் – நவமணிகளில் வைரமானது மிகவும் விலை உயர்ந்த ஒன்று. வைரத்தின் கடினத் தன்மை எண் 10.

மரகதம் – மரகதம் குறைந்த கடினத்தன்மை உடையது. இது பச்சை நிறமுள்ளது. யூரல் மலை, கொலம்பியா, தென் ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் மரகதம் கிடைக்கிறது.

நீலம் – இது மிகவும் அழகிய மணியாகும். இதில் ஒளி ஊடுருவிச் செல்லும். நீல நிறத்தில் மட்டுமன்றி வேறு சில நிறங்களிலும் நீலக்கல் காணப்படுகிறது. உலகில் மிகச் சிறந்த நீலக் கற்கள் இந்தியாவில் காஷ்மீரத்தில் கிடைக்கின்றன. இதற்கு அடுத்து இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன. தாதுக் கற்களில் இது மிகவும் மலிவானது.

கோமேதகம் – பொன்னிறத்திலோ, சிவப்பு, பழுப்பு நிறத்திலோ இது காணப்படும். இந்தியா, அரேபியா, பிரேசில், உருகுவே முதலிய நாடுகளில் இது கிடைக்கிறது.

பவளம் – பவளம் என்பது ஆழ் கடலில் வாழும் சிலவகைப் பிராணிகள் இறந்த பின் எஞ்சும் வலிமையான உடல் பகுதியாகும்.

மாணிக்கம் – மாணிக்கம் செந்நிறமானது. இதன் கடினத்தன்மை எண் குறைவு தான். இதன் நிறமே இதற்கு அழகையும் மதிப்பையும் தருகிறது. மிகச் சிறந்த வகை மாணிக்கம் பர்மாவில் கிடைக்கிறது.

முத்து – முத்து கடலில் மிகவும் ஆழமான பகுதிகளில் கிடைக்கிறது.

புட்பராகம் – நவமணிகளில் இது கடினமானது” இதன் கடினத்தன்மை எண் 8. இதை கத்தியால் கீறமுடியாது. இதைக் கொண்டு படிகக் கல்லையும் கீறலாம். மஞ்சள், நீலம் முதலிய நிறங்களில் இது காணப்படுகிறது. தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டிலும், சோவியத் னியனில் யூரல் மலைப்பகுதிகளிலும் இது கிடைக்கிறது.

வைடூரியம் – பலவேறுபட்ட தாதுக்களுக்கு வைடுரியம் என்று பெயர். வைடுரியத்தில் முக்கிய மாக நான்கு வகைகள் உள்ளன, பொன்னைப் போன்ற மஞ்சள் நிறத்திலும், பச்சை, சாம்பல், பழுப்பு, கருமை ஆகிய பல நிறங்களிலும் வைடூரியம் காணப்படுகிறது. இது இலங்கை, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version