Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 4. சேர்ந்து நடப்போம்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 4. சேர்ந்து நடப்போம்!

vedha vaakyam

4. சேர்ந்து நடப்போம்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

ஸம் கச்சத்வம் ஸம் வதத்வம் !!” – ருக் வேதம் 

“சேர்ந்து நடப்போம்! கலந்து பேசுவோம்!”

சேர்ந்து வாழ்வதில் வேதம் சிறப்பான வழியைக் காட்டுகிறது. சிருஷ்டியோடு சமரசம் காண்பதே தனிமனித உயர்வுக்குச் சான்று. இத்தகைய ஒற்றுமை என்பதை மனிதர்களிடையே மட்டுமின்றி முழு விஸ்வத்துடனும் மனிதன் சாதித்துக் காட்ட வேண்டும். அத்தகைய ஒற்றுமையே முக்கியமானது.

வாழ்க்கைப் பயணத்தில் சேர்ந்து நடப்பது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மிகவும் அவசியம். ஒரு மனிதனின் வாழ்க்கை, பிற இயற்கை உயிர்களை அழிப்பதாக இருக்கக் கூடாது. ஒருவர் துயரப்படும் போது மற்றொருவர் அதில் ஆனந்தப்படுவது தர்மத்திற்கு விரோதமானது.

நட்பில் சீலம், பிறருக்கு உதவும் குணம்… என்பது பாரதீய வாழ்க்கை முறையில் இயல்பான ஒன்று. இப்படிப்பட்ட வேதவாக்கியங்களே இதற்குச் சான்று. உள்ளமும் சொல்லும் நட்போடு இணைந்திருக்கும் போது அங்கு அமைதி நிலவுகிறது.

“சேர்ந்து நடப்போம்!” என்பது வாழ்வின் வழியைக் குறிக்கிறது. “கலந்து பேசுவோம்!” என்பது உள்ளத்தின் வெளிப்பாட்டை குறிக்கிறது.

நம் நடத்தை, எண்ணம், சொல் மூன்றும் ஒன்றாக விளங்கவேண்டும். இவை உலக நன்மை என்ற லட்சிய நோக்கத்தோடு முன்னேற வேண்டும்.  லட்சியத்தோடு கூடிய ஒற்றுமையே உள்ளங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் ஒன்றிணைக்கும்.

வேற்றுமை வாதங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும் வேதக் கலாச்சாரம் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.

படைப்பில் புல், மண், கல், மரம், நதி, பறவை, விலங்கு… என்று ஒவ்வொரு அணுவோடும் சமரசம் ஏற்படுத்தி உலகமனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் கண்ணோட்டம் வேண்டும் என்று எடுத்துரைத்து அதற்கான வழிகளையே வேதம் போதிக்கிறது.

பிரக்ருதியில் ‘நன்மை’ என்பது ‘ஒருவருக்கொருவர் நட்பாக’ என்ற ஒரே வழி முறையால் மட்டுமே சாத்தியப்படும். அத்தகைய ஒற்றுமை இல்லாத போது வேற்றுமைகள் அதிகமாகும்.

சேர்ந்து வாழ வேண்டியவர்கள் எல்லோரும் இந்த வேத வாக்கியத்தை மந்திரம் போல் மனனம் செய்ய வேண்டும். இருவரின் இடையில் எண்ணமும் சொல்லும் ஒன்றாகும் போது இருவரின் நடத்தையும் பேச்சும் ஒரே அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும். அப்போது இருவரின் முயற்சியும் உழைப்பும் ஒருமுகப்பட்டு சிறப்பான பலனை அளிக்கும்.

குடும்பம், நண்பர்கள்,  சமூகம், சமுதாயம் அனைத்தும் இந்த வாக்கியத்தை மனதில் நிறுத்தி  இத்தகைய சமரசத்திற்கு உள்ளத் தூய்மையோடு பாடுபட்டால் நன்மைக்கும் சுகத்திற்கும் குறைவென்ன இருக்கப்போகிறது?

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version