Home கட்டுரைகள் அது… ஆத்மாவின் குரல்!

அது… ஆத்மாவின் குரல்!

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் என்ற கவியரசரின் காவியம் படைத்த வரிகள்.

ஆத்மாவின் குரல்:

இல்லத்திற்கு அரசி இல்லத்தின் அரசி அவள் தாயாகவோ, மனைவியாக, மகளாகவோ, மருமகளாகவோ இருக்கலாம், ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி அவளிடம் குடிகொண்டுள்ளது என்றே சொல்லலாம்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை – 55 திருக்குறள்

அம்மா… வேண்டாம் இந்த ஆறின இட்லி. சூடா எடுத்துட்டு வா” அப்பா என் ஐ.டி கார்டு தேடிக் கொடு; என் சைக்கிளை துடைச்சு வை…’ கல்லுாரிக்குச் செல்லும் பெண்ணின் வீட்டில் தினசரி நடக்கும் உரையாடல்.

காட்சி மாறுகிறது. இப்போது அந்த கல்லுாரிப் பெண்ணுக்குத் திருமணமாகி விடுகிறது. மகளைக் காண வரும் பெற்றோர், மகள் அங்கே பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறாள். ‘ஏங்க….இன்னொரு இட்லி வைச்சுக்கோங்க…’ கணவனிடம் கெஞ்சும் மகள்.. அதற்குள் அத்தையின் குரல். ‘இதோ வர்றேன் அத்தை..’ பரபரவென ஓடும் மகளைக் கண்டு அதிசயிக்கின்றனர் பெற்றோர்.

பசி சற்றும் பொறுக்காத அந்த செல்லப் பெண், புகுந்த வீட்டில் காலை நேரத்து உணவை உண்ணவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

மனைவி என்ற ஆத்மாவின் குரல் யாருக்கும் கேட்பதில்லை. பின் துாங்கி முன் எழும் பத்தினியாகவே பழக்கப்படுத்தி விட்டது சமுதாயம். ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதை தவற விட்டால் துாக்கமில்லை மகளே’ என்ற கவிஞனின் கானம் காற்றில் மெல்லத் தேய்கிறது. தனக்கென எதையும் யோசிப்பதில்லை மனைவி என்ற பெண் பாத்திரம்.

அம்மா வீட்டில் கதாநாயகி வேடம் தான் எப்போதும். கணவன் வீட்டில் குண சித்திர வேடம்.

மனைவிக்கு என்ன செய்து விட்டோம். இது ஆண்கள் அனைவருக்குமான கேள்விகள். இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள், மனைவியை நேசிப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? பிடித்த நிறம் எது? பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்கெல்லாம் பெரும் பாலும் விடை தெரியாது என்பது தான் உண்மை. சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகள் கொடுத்தால் கூட சொல்ல முடியாது என்பதே கூடுதல் சோகம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினமாய் இருந்தால் கேள்விகளைக் கேட்பவர்களாக இருங்கள். சாப்பிட்டியாமா? உடம்பு சரியில்லையா? ஏன் முகம் வாடியிருக்கு? உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

ஆம்… அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகள் தான், புகுந்த வீட்டின் பம்பரங்கள். இறக்கைகள் மட்டுமே இல்லை இந்த தேவதைகளுக்கு. வேரோடு பிடுங்கிய செடியை வேறோர் இடத்தில் நடப்படும் போது அந்த சூழலையும் கிரகித்துக் கொள்கிறது. புதிய சூழலை அங்கீகரித்தும், சுவீகரித்தும் கொள்கிறார்கள். ஆனால் அங்கே அவளுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மனைவியின் மன வலிகள் எல்லாம் மறைந்து மட்டுமல்ல; மறந்து கூட போய் விடும். உடல் வலிகள், மன வலிகளைத் தீர்க்கும் இடமாக புகுந்த வீடும் இருக்கலாமே…!!!

ஒரே ஒரு நாள் ஊருக்குச் சென்று விட்ட மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை. வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவள் மனைவி என்ற பெண் பாத்திரம். அதனால் தான் ஔவைப் பாட்டி

‘தாயோடு அறுசுவை போம் தந்தையோடு கல்வி போம் சேயோடு தான் பெற்ற செல்வம் போம் மாய வாழ்வு உற்றாருடன் போம் உடன் பிறப்பால் தோள் வலி போம் பொற் தாலியோடு எல்லாம் போம்’ என்று பாடியிருக்கிறார்.

யாதுமாகி நிற்பவள் மனைவி இழப்பிற்குப் பின்னாலான கணவனின் வாழ்நாள் இருப்புகள் குறைந்து விடுகிறதாம். காரணம் என்ன தெரியுமா? எல்லாமுமாகிப் போனவள் ஏதுமற்று போய் விடுவதால் தான்.

‘அவர் சொன்னா சரியா இருக்கும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகள், ‘அவள் சொன்னா சரியாகத் தான் இருக்கும்’ என்று அந்தப் பக்கமும் இடம் பெயர்வது எப்போது? தன் துன்பத்திற்கான தீர்வைத் தரும் மனிதர்களாக கணவரை எதிர் பார்ப்பதில்லை. அப்படியாம்மா.. என்று கேட்கும் கணவர்களாக இருந்தால் கூட போதும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

உங்கள் வீட்டில் ரிமோட் யாரிடம் இருக்கும்? இது ‘டிவி’ ஒளிபரப்பில் கேட்கப்பட்ட கேள்வி…’அதுவா கணவர் கிட்ட இருக்கும். அவர் இல்லாதப்ப என் மகன் கிட்ட இருக்கும்..’ வெள்ளந்தி தனமாய் பதில் வருகிறது அந்தப் பெண்ணிடம். உடல் சார்ந்த பார்வையை விடுத்து மனம் சார்ந்த பார்வையில் பெண்களை நோக்கும் போது மட்டுமே பெண் என்பவளின் பெருமை புரியும்.

வாழ்வெனும் பரமபதத்தில் பாம்பினால் கடிபட்டுச் சறுக்கும்போதெல்லாம் “எல்லாம் சரியாயிடும்”ன்னு மார்போடு அணைத்துக்கொண்டு ஆதரவாச் சொல்லும் பொண்டாட்டி இருக்கும் போது எல்லா தினமும் மகளிர் தினம்தான்.

“அப்பா… ஐ லவ் யூ” என்று நமக்கு எண்பது ஆனாலும் பிரியத்தோடுக் கழுத்தைக் கட்டிக்கொள்ளும் மகள்கள் இருக்கும் போது எல்லா தினமும் மகளிர் தினம்தான்.

“மொதல்ல சாப்டுட்டு பின்ன எங்க வேணுமின்னாலும் சுத்தப் போ” என்று தலையில் தட்டி, தட்டில் பாசமா அன்னமிடும் அம்மா இருக்கும் போது எல்லா தினமும் மகளிர் தினம்தான்.

“இந்தா… விபூதி இட்டுக்கோ… எல்லாம் சரியாப்போயிடும்” என்று நெற்றிக்கு இட்டுவிட்டு தலையைக் கோதிவிடும் பாட்டி இருக்கும் போது எல்லா தினமும் மகளிர் தினம்தான்.

“என் தம்பி பாவம்டீ…. என் அண்ணா மாதிரி தியாகி இந்த ஊர்ல யாராவது உண்டா?…” என்று பாசமழை பொழியும் சகோதரி இருந்தால் எல்லா தினமும் மகளிர் தினம்தான்.

சண்டைகளில் அப்பாவிடமிருந்து தம்பிகள் அடிவாங்காமல் காத்திடுவது அக்காமார்களே, அரவணைக்கும் அக்காமார்கள் இருந்தால் எல்லா தினமும் மகளிர் தினம் தான்.

“கவலைப்படாதீங்க.. நாங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்கோம்.. பார்த்துப்போம்…” என்று எல்லாவற்றிற்கும் ஓடோடி வந்து நட்பு பாராட்டும் ஸ்நேகிதிகள் இருந்தால் எல்லா தினமும் மகளிர் தினம்தான்.

எப்பவுமே எனக்கு பாசத்துக்குத் தினம் கொண்டாடறதுல இஷ்டமில்லைதான். ஏன்னா பாச ஊற்று வற்றிப் போனால் மானுட ஜென்மமாக இருப்பதில் அர்த்தமில்லை.

இருந்தாலும் இவ்வுலகை இயக்கும் பெரும் சக்தியாக இருக்கும் மகளிருக்கு இன்று ஒரு நாள் எவ்வித காரணமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம் என்பதால்…….

வாழ்வில் எல்லா கட்டங்களிலும் உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் அனைத்து மகளிருக்கும் (மகளாக, தாயாக, தமக்கையாக, தங்கையாக, மனைவியாக நண்பியாக ஆசிரியையாக இன்னும் பலவாக, உயிரினும் உயிராக) எனது இதயம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!

  • கே.ஜி.ராமலிங்கம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version