Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 16. முழுமையான வாழ்க்கைக்கு என்ன தேவை?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 16. முழுமையான வாழ்க்கைக்கு என்ன தேவை?

vedavaakyam

16. முழுமையான வாழ்க்கைக்கு என்ன தேவை?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ப்ரஹ்ம த்ரும்ஹ க்ஷத்ரம் த்ரும்ஹ ஆயு: த்ரும்ஹ ப்ரஜாம் த்ரும்ஹ”
–யஜுர்வேதம்

“ஞானத்தை விருத்தி செய்யுங்கள். வலிமையைப் பெருக்கிக் கொள்ளுங்கள். ஆயுளை அதிகரித்து கொள்ளுங்கள். பிரஜைகளை வளருங்கள்!”

வேதம் உலக நன்மைக்காக செய்த ஈஸ்வர பிரார்த்தனையில் உள்ள வாக்கியங்கள் இவை. 

மனிதன் இக உலகிலேயே அனைத்தையும் சாதித்துக் கொள்ள வேண்டும்… வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்றால் என்ன என்ன தேவை என்பதை இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

முதலில் தேவையானது ஞானம். மனிதனுக்கு தேவையான முக்கிய செல்வம் ஞானம். அதனைப் பெறுவதற்காக சாதனை செய்வதே மனிதனின் முதல் கடமை. ஞானம் என்னும் பிரகாசத்திலேயே உலகியல் செல்வத்தை அனுபவிக்க வேண்டும். ஞானமற்ற வாழ்க்கை இருட்டில் தேடி அலைவதை போன்றது. அதனால்தான் மந்திரத்தில் முதலிடம் ஞானத்திற்கு அளித்துள்ளார்கள். ஞானமுள்ளவனின் உலகியல் வலிமைகள் தனிமனிதனுக்கும் உலக நலனுக்கும் உதவும்.

இரண்டாவது, வலிமை. திடமான உடலை பெற வேண்டும். புஷ்டியான உணவு, உடற்பயிற்சி மூலம் உடலுறுதியை சாதிக்கவேண்டும். ஹிந்து தர்மம் உடலுக்கும் உலகியல் வாழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. பலமான உடலில்தான் திடமான புத்தியும்  உறுதியான ஆளுமையும் உருவெடுக்கும்.

வலிமையின் பயன்களில் உடல் ஆரோக்கியமும் பிறரைப் பாதுகாக்கும் தன்மையும் முக்கியமானவை. பிறருக்கு வருத்தம் அளிக்காமல் பாதுகாக்கும் வலிமையை ‘க்ஷத்ரம்’ என்பார்கள். பிறருக்கு நலம் விளைவிக்கும் வலிமைக்காகவே இங்கு பிரார்த்தனை செய்கிறோம்.

மூன்றாவது அம்சம், ஆயுள்.   எதைச் சாதிக்க வேண்டும் என்றாலும் அதற்குத் தேவையான நேரம் கிடைக்க வேண்டும். அதுவே ஆயுள். வாழ்வின் பரமார்த்தத்தை அடையும் தர்மத்தோடு கூடிய முயற்சிக்கு நீண்ட ஆயுள் என்பது ஒரு வாய்ப்பு. பரிபூர்ணமான ஜீவிதத்தை அனுபவிப்பதே ஐஸ்வர்யம். அதனை மனிதன் பெற வேண்டும் என்று ருஷிகள் விரும்புகிறார்கள்.

மனிதன் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கும் தர்மத்தையும் பெற்ற பயன்களையும் பரம்பரையாகத் தொடர்வதே சந்ததி. மனிதனின் விருப்பங்களும் சாதித்த பயன்களும்  பின் வரும் சந்ததிகளுக்குச் சேர வேண்டும் என்ற கோரிக்கை நான்காவது விருப்பமான ‘பிரஜாவ்ருத்தி’ என்பதில் உள்ளது.

சந்ததி மூலம் நாகரீகம், விஞ்ஞானம், கலாச்சாரம், தர்மம் அனைத்தும்  பின் வரும் தலைமுறைகளுக்குத் தொடர வேண்டும். அது மட்டுமின்றி மற்றும் ஒரு பொருளில் ப்ரஜா என்றால் பொதுமக்கள். ஞானம், பலம், ஆயுள் ஆகியவற்றை பிற மக்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களை அன்பர்களாகப் பெறுவதே சிறந்த செல்வம். மக்கள் பலம் கூட ஞானம், தனம், ஆயுள் போன்ற வலிமைகளைப் போல் சிறந்ததே.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version