Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 18. சிரத்தை உள்ளவன் வெற்றி பெறுவான்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 18. சிரத்தை உள்ளவன் வெற்றி பெறுவான்!

18. சிரத்தை உள்ளவன் வெற்றி பெறுவான்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஸ்ரத்தே ஸ்ரத்தாபயேஹ ந:” – ருக் வேதம் 

“ஓ ஸ்ரத்தா தேவி! எங்கள் உள்ளத்தில் விளங்கி எம்மை சிரத்தை உள்ளவர்களாக மாற்றுவாயாக!”

ச்ரத்தை என்பது தெய்வீக குணம். அது மட்டுமல்ல. அது ஒரு தெய்வீக சக்தி. இத்தகைய சக்தி நிரம்பிய குணம் காரியசித்தியை ஏற்படுத்துகிறது. 

ஒருமுகப்பட்ட மனதோடு கூடிய விடாமுயற்சியை ‘ஸ்ரத்தை’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். சாஸ்திரங்கள் மீதும் கடவுள் மீதும் ‘உள்ளது’ என்ற  நம்பிக்கையே ஸ்ரத்தை என்று பெரியவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஸ்ரத்தாவான் லபதே ஞானம்” என்ற கீதை வாக்கியம் ஸ்ரத்தை உள்ளவனுக்கே ஞானம் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

“அஞ்ஜாஸ்ச அஸ்ரத்ததானஸ்ச சம்ஸயாத்மா வினஸ்யதி”
-மூர்க்கன், ஸ்ரத்தையற்றவன், சந்தேகப்படும் இயல்பு உள்ளவன் அழிவான் என்று கூட பகவான் எச்சரிக்கிறார்.

வேதங்களில்  ‘சிரத்தா சூக்தம்’ என்று உள்ளது. சிரத்தையை கடவுளின் சொரூபமாக வழிபட்டு அது தன்னில் நிலைபெற வேண்டும் என்று சூக்தத்தில் வேண்டுகிறார்கள். 

யக்ஞம் போன்ற கிரியைகளில் ‘சிரத்தா தேவி’யின் அருள் இருந்தால்தான் அவை பூரணம் அடையும். வேதம் முதலான சாஸ்திரங்களின் மீதும் கடவுள் மீதும் ‘உள்ளது என்ற இருப்பினை’ உணர்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது.

நாம் புலன்களால் அறியக் கூடிய எல்லையை மீறிய சத்தியம் சாஸ்திரங்களில் விளக்கப்படுகிறது. அவற்றினை நம்பும் அறிவே ஸ்ரத்தை என்று அறிய வேண்டும். அதனால்தான் சிரத்தையோடு கூடிய விசுவாசம் பெற்றிருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக இரண்டையும் ஜோடியாக சேர்த்தே குறிப்பிடுவார்கள்.

“கோஸ்வாமி துளசிதாஸ், “பவானீ சங்கரௌ வந்தே ஸ்ரத்தா விஸ்வாச ரூபிணௌ” என்கிறார்.  “சிவனையும் பார்வதியையும் போல பிரியாத தாம்பத்தியம் போன்ற தொடர்பே சிரத்தைக்கும் விசுவாசத்திற்கும் உள்ளது” என்று தீர்மானமாக கூறுகிறார். 

கடவுளும் சாஸ்திர தர்மமும் கண் முன்னால் தோன்றினால்தான் நம்புவோம். இல்லாவிட்டால் நம்ப மாட்டோம் என்பார்கள் சிலர். ஆனால் நம்பாவிட்டால் அவை அனுபவத்தில் தோன்றாது. அந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால் அந்த தர்மத்தை சரியாக நாம் கடைபிடிப்போம். சாஸ்திரம் கூறியபடி தர்மத்தை கடைப்பிடிப்பதற்கு அவற்றின் இருப்பின் மீது உள்ள நம்பிக்கையே ஆதாரம். கடைபிடித்தால்தான் பலன் கிட்டும்.

சிவபுராணத்தில் ‘ஸ்வதர்மத்தை கடைப்பிடிப்பதே சிரத்தை’ என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள். சாஸ்திரம் விதித்துள்ள தர்மமே ஸ்வதர்மம். அந்த சிரத்தையே  மனிதனின் உலகில் முன்னேற்றத்திற்கும் ஆன்மிக பலன் அடைவதற்கும் உதவுகிறது.

பக்தியையும் தர்மத்தையும் கூட சிரத்தை என்ற சொல்லால்தான் குறிப்பிட்டனர் நம் முன்னோர். “சிரத்தை உள்ளவன் என்னை அனுபவத்தில் உணர்வான்” என்பது சிவபுராணத்தில் பரமேஸ்வரனின் வசனம். 

வேதத்தில் இருந்து கிடைத்த ‘சிரத்தை’ என்ற திவ்யச்சொல், பவித்திரமான ஜீவிதம்,  ஆஸ்திக புத்தி, கடவுள் பக்தி,  தீட்சை,  ஒருமுகப்பட்ட மனம் போன்ற பல அர்த்தங்களை ஒரே நேரத்தில் ஸ்புரிக்கச் செய்கிறது.

பயனில் மனதைச் செலுத்தாமல் கடவுள் மீது பாரத்தை போட்டு பணிபுரிவது சிரத்தை என்று சிலர் விளக்குவர். மொத்தத்தில் நாம் உலக விவகாரங்களில் மிக எளிதாக பயன்படுத்தும் அளவுக்கு இந்தச் சொல் அத்தனை எளிதானதல்ல. மிகவும் ஆழ்ந்த சக்தி இந்த சொல்லில் உள்ளது.  

“ஸ்ரத்தயா சத்யமாப்யதே” -யஜுர்வேதம். – “சிரத்தை மூலமாகவே சத்திய வஸ்துவான பரமாத்மா கிடைக்க பெறுகிறார்” என்பது வேத வசனம்.

‘உள்ளது’ என்ற எண்ணம் இருந்தால்தான் சாதனை செய்து அடைவது என்பதும் இருக்கும். ‘இல்லை’ என்பவருக்கு தேடுதலும் இல்லை. சாதனையும் இல்லை. இனி கிடைப்பது எங்கனம்? ‘இருக்கிறது’ என்ற அறிவின் மூலம் மட்டுமே உண்மை தத்துவத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்பது இதன் பொருள்.

மேதைமை, தாரணை சக்தி, ப்ரக்ஞை போன்ற புத்தியின் சக்திகள் அனைத்திற்கும் அடிப்படை சிரத்தையே. யக்ஞங்களில் ஸ்ரத்தா தேவதையை வழிபடுவதால் அந்த செயல் மீது மனம் ஒன்றி யக்ஞ பலன்களைப் பெற முடிகிறது. தேவதைகளின் சக்திகளை எல்லாம் அனுகூலமாகச் செய்கிறது.  ‘ஸ்ரத்தா சக்தி’ பெற்றவர் எத்தகைய செயலிலும் வெற்றி பெறுவது உறுதி.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version