― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தினசரி ஒரு வேத வாக்கியம்! 20. சகிப்புத்தன்மை யாருடையது?

தினசரி ஒரு வேத வாக்கியம்! 20. சகிப்புத்தன்மை யாருடையது?

- Advertisement -

20. சகிப்புத்தன்மை யாருடையது? 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஸஹோ௨ஸி ஸஹோமயிதேஹி!!” -ருக் வேதம்.

“(ஓ பரமாத்மா!)  நீ சகிப்புத்தன்மை உடையவன். எனக்கு சகிப்பு சக்தியை அருள்!”

சகித்துக் கொள்ளும் சக்தி கடவுளின் சொரூபம். இந்த சக்தியால் விஸ்வம் அனைத்தும் வியாபித்துள்ளான் இறைவன். அந்த சக்தியை நம்மிடம் நிலைநிறுத்தும்படி பிரார்த்தனை செய்யவேண்டும்.

விஸ்வத்தில் கிரகங்கள்,நட்சத்திரங்கள் அனைத்தும் அதனதன் இடங்களில் உறுதியாக நிற்பதற்குக் காரணம் பரமாத்மாவின் சகிப்புத்தன்மையே. சூரிய பகவான் அந்தந்த கிரகங்களை அவ்வவற்றின் ஸ்தானங்களில் தன் ஆகர்ஷண சக்தியால் சகித்து வருகிறான். ப்ருதிவியின் இந்த சகிப்பு சக்தியே மிகப்பெரும் மலைகளையும் கடல்களையும் நதிகளையும் அபாரமான உயிரினங்களையும் தாங்குகிறது. பொறுத்துக் கொள்ளும் வலிமை கொண்ட சக்தியே தாங்கக் கூடிய சக்தி.

இந்த சகிப்பு சக்தியால்தான் ‘க்ஷமா’ (பொறுமை)  என்று பூமிக்குப் பெயர். வால்மீகி முனிவர் ஸ்ரீராமனை வர்ணிக்கையில், “க்ஷமயா ப்ருதிவீ சம:” – ‘பொறுமையில் பூமிக்கு சமமானவன்’ என்றுகுறிப்பிடுகிறார். மேலும் சீதை பூமியின் புதல்வியாக அத்தகைய பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து காட்டினாள்.

வாழ்வின் கடினமான நேரத்தில் பொறுமை குணம் மிகவும் உதவிபுரிகிறது. தர்மத்தின் இயல்புகளில் பொறுமையும் ஒன்று.

“தேஜ: க்ஷமா த்ருதி: சௌசம்” – ‘தேஜஸ், சகிப்புத்தன்மை, தைரியம், சுத்தம்… இவை தெய்வீக குணங்கள் என்று கீதாசார்யன் விவரிக்கிறான்.

ஆத்திரமடைந்து திருப்பித் தாக்கும் ஆற்றல் இருந்தும் தர்மத்திற்கு அடங்கி பொறுமை வகிப்பது உத்தமர்களின் இயல்பு. தேவர்களுக்குச் சமமாக பராக்கிரமம் பெற்றிருந்த போதிலும் பாண்டவர்கள் பொறுமையைக் கைவிடவில்லை. வனத்தில் தங்கி தவச் சக்தியை வளர்த்துக் கொண்டார்கள். நேரம் காலம் ஒத்துழைக்காத போது அதனை தவத்திற்கு பயன்படுத்தி கொண்டார்கள். உன்னிப்பான அறிவாற்றல் கொண்டவர்களின் நடத்தை இவ்வாறு இருக்கும். யாரும் கண்டுகொள்ளாத ‘தனிமையை’ கொடுமையாக எண்ணாமல், பரிதாபமாக ஆக்கிக் கொள்ளாமல் ‘ஏகாந்தம்’ என்ற யோகமாக மாற்றிக் கொள்ள அவர்களால் இயலும். அதனை ஒரு தவமாக மாற்றிக் கொண்டார்கள். இக்காரணத்தால்தான் பாண்டவர்கள் வனவாசத்தை திவ்ய சக்திகளை பெறுவதற்கான தவக்காலமாக அமைத்துக் கொண்டார்கள்.

கைகேயியின் சொற்களை அறிந்து தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வனவாசத்தை சகித்துக் கொண்டான் ஸ்ரீராமன். பின்னர் ரிஷிகளின் பாதுகாப்பு என்ற பெரும் செயலை சாதித்தான். சபரி போன்ற பக்தர்கள் பொறுமையோடு யோகத்தை விடாமல் கடைபிடித்து பயனடைந்தார்கள்.

ALSO READ: தினசரி ஒரு வேத வாக்கியம்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

மனித மனம் கவலைகளின் நிலையம். கிளர்ச்சிகளின் வளையம். வெளியுலகின் சூழலால் தாக்கப்பட்டு உடனுக்குடன் எதிர்வினையாற்றுபவன் இத்தகைய மனக் கிளர்ச்சியால் தூண்டப்பட்டு செய்யும் சிறு தவறால் நீண்டகாலம் தீய பலனை அனுபவிக்க நேர்கிறது. அன்றாட வாழ்க்கையில் கூட இதற்கு உதாரணங்களைப் பார்க்க முடியும். காமம் குரோதம் சோகம் இம்மூன்றும் மனக்கிளர்ச்சிக்கு காரணங்கள். இவை தூண்டப்படும்போது  பொறுமை இழக்காமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதே அறிவுடைமை. 

சகிப்புத்தன்மையின்றி குரோதத்தோடு அம்பரீஷனை அவமதிக்க நினைத்த துர்வாசர் அதன் பயனாக விஷ்ணு சக்கரத்திலிருந்து தப்பிப்பதற்கு திண்டாடினார். காம விருப்பத்தை பொறுத்துக்கொள்ள இயலாத விசுவாமித்திரர் போன்றோர் செய்த தவம் வீணாகிப் போனது. அதனால் காரியசித்திக்கு சகிப்புத் தன்மை மிக முக்கியம். 

‘பொறுமை காத்த பெண் தெளிந்த நீரைப் பெறுவாள்’ என்று பழமொழி கூட உள்ளது. சீதை தானாகவே ராவணனைப் பார்வையால் எரித்து சாம்பலாக்கும் திறன் பெற்றிருந்தும் அரக்க வம்சத்தை முழுவதுமாக நிர்மூலமாக்கி மக்களைக் காத்து உலக நன்மை ஏற்படுத்த வேண்டும் என்று பொறுமையாக இருந்தாள்.  ராமனுடைய சங்கல்பத்தை உணர்ந்து ஹனுமானைக் கூட பொறுமை காக்கும்படி அறிவுறுத்தினாள்.

பராத்பரனின் தெய்வீக சகிப்புத் தன்மையை நமக்கு அருளும்படி மேற்சொன்ன மந்திரத்தின் மூலம் பிரார்த்திப்பதன்  பொருள் இதுவே.

ஆயின், இந்த திவ்ய குணத்தின் மற்றும் ஒரு கோணத்தைக் கூட ஆராயவேண்டும். ‘சஹனசக்தி’ என்றால் பொறுத்துக் கொள்ளும் திறன் மட்டுமல்ல. எதிர்கொள்ளும் சக்தி கூட. எத்தகைய எதிரியானாலும் எதிர்கொண்டு போராடும் வலிமையை சஹன சக்தியாகவே உணர வேண்டும். இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போராடும் வலிமையை அருள்வாயாக!’ என்று இந்த மந்திரத்திற்கு பொருள் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சிவசங்கல்பம்

பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. எல்லை மீறிய பொறுமை அதர்மத்தில் சேரும். ராவணன் சீதையை அபகரித்த போது ராமன் பொறுமை காட்டவில்லை.”க்ஷமயா ப்ருத்வீ சம:” என்று போற்றப்பட்ட ராமன், “காலாக்னி ஸத்ருஸ: க்ரோதே” – ‘குரோதம் வந்தால் காலனுக்குச் சமமானவன்’ என்பதை நிரூபித்தான். வனவாசம், அஞ்ஞாத வாசம் எல்லாம் முடிந்தபின் பாண்டவர்கள் தம் பராக்கிரமத்தைக் காட்டினார்கள். 

ஒவ்வொரு குணத்தையும் அதனதன் உசிதம் அறிந்து வெளிப்படுத்துவதே தர்மம். அப்போதுதான் அது தெய்வீக குணமாக விளங்கும்.ஆன்மீக சாதனையில் பிரதிகூல சூழ்நிலைகளை எதிர் கொள்ளும்போது உறுதியோடு இருக்க வேண்டும். சாதனைக்குத் தடை ஏற்படுத்தும் காமம் குரோதம் போன்ற தீய குணங்களை எதிர்த்து வெல்வது பெரிய போராட்டம். பிரதிகூலங்களை கவனமாக எதிர்கொண்டு அனுகூலமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மையை அருளும்படி கடவுளை பிரார்த்திப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version