May 15, 2021, 6:37 am Saturday
More

  விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 29)

  அதாவது தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற

  manakkula vinayakar and bharathi 5 - 1

  விளக்கம்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

  பாடல் 36 – அகவல்

  மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
  எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
  பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
  இன்புறச் செய்வேன்; எதற்கு மினியஞ்சேல்;
  ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் 5

  அபய மிங்களித்தேன்.. நெஞ்சே
  நினக்கு நானுரைத்தன நிலை நிறுத்திடவே
  தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
  வெவ்விட முண்பேன். மேதினி யழிப்பேன்;
  மூடநெஞ்சே, முப்பது கோடி 10

  முறையுனக் குரைத்தேன்; இன்னுமொழிவேன்;
  தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே;
  ஏது நிகழினு ‘நமக்கேன்’ என்றிரு;
  பராசக்தி யுளத்தின்படி யுலக நிகழும்;
  நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள் 15

  இல்லை; நானெனும் எண்ணமே வெறும் பொய்’
  என்றான் புத்தன்; இறைஞ்சுவோ மவன்பதம்.
  இனி யெப்பொழுது முரைத்திடேன். இதை நீ
  மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!
  கவலைப்படுதலே கரு நரகம்மா! 20

  கவலையற்றிருத்தலே முக்தி;
  சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

  பொருள்–ஆசைப்பட்டு ஆசைப்பட்டுத் துயரில் வீழ்வாய், எத்தனை கூறியும் விடுதலைக்கு இணங்கமாட்டாய், என்னுடைய பாவி நெஞ்சே, இந்த உலகில் உன்னை இன்புறச் செய்வேன்; எதற்கும் இனி அஞ்சாதே; ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் அபயம் இங்கு அளித்தேன். நெஞ்சே உனக்கு நான் உரைத்தவற்றை நிலை நிறுத்திடவே, தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன், கடுமையான விடத்தைக்கூட உண்பேன். இந்த உலத்தையே அழிப்பேன்.

   மூடநெஞ்சே, முப்பது கோடி முறையுனக் குரைத்தேன்; இன்னும் எத்தனை முறை வேண்டுமானும் கூறுவேன். தலையிலிடி விழுந்தால் கூட நீ வருத்தப்படாதே. ஏது நிகழ்ந்தாலும் நமக்கென்ன’ என்றிரு; பராசக்தியின் திருவுள்ளத்தின் படி இந்த உலகில் அனைத்தும் நிகழும்; இதில் நம்முடைய பொறுப்பு என்ன உள்ளது? ‘நான் என்றோர் தனிப்பொருள் இல்லை; நானெனும் எண்ணமே வெறும் பொய்’ என்று சொன்னார் புத்தன்; புத்தனின் திருப்பாதங்களை வணங்குவோம்.

  இனி நான் உனக்கு மீண்டும் உரைக்க மாட்டேன். இதை நீ மறவாது இருப்பாய், என்னுடைய, மடமை நிறைந்த, நெஞ்சே. கவலைப்படுதல் என்பதே இருள் நிறைந்த நரகமாகும். கவலையற்று இருத்தலே முக்தி நிலை ஆகும்; சிவனின் ஒரு மகனான விநாயகன் உனக்கு இதனை அருளுவானாக.

  பாடல் ‘மேவு’ எனத்தொடங்கி, ‘செய்கவே’ எனமுடிகிறது.

  பாரதியார் இப்பாடலில் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். சில நேரங்களில் நாம் அற்பமான விஷயங்களுக்கு கவலைப்படுவோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நமது வாழ்க்கை, உடல்நலம் அல்லது நம் அன்புக்குரியவர்களை ஏதேனும் தீவிரமாக அச்சுறுத்தும்போது, இதனைஅனுபவிப்பதற்கு உண்மையான காரணங்கள் ஏதும் இல்லை, ஏன் இவ்வாறு நிகழ்கிறது என எண்ணி கவலைப் படாதீர்கள்.

  உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இன்னும் புறநிலையாகப் பாருங்கள், நிலைமையை நாடகமாக்காதீர்கள், உங்களை நீங்களே மூடிமறைக்காதீர்கள். சில நேரங்களில் ஒரு அற்பமானது கூட சமநிலையற்றது, ஏனெனில் இது ஒரு நபரின் பொதுவான அமைதியற்ற நிலையில் உள்ளது. ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க கற்றுக் கொள்ளுங்கள். கவலைக்கான அல்லது உற்சாகத்திற்கான காரணத்தை பெரிதுபடுத்த வேண்டாம். மனக்கவலை பற்றி திருவள்ளுவர்,

  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
  மனக்கவலை மாற்றல் அரிது

  (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:7)

  என்று கூறுவார். அதாவது தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

  மன அழுத்தம் பற்றி மேலும் விரிவாக நாளைபார்க்கலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,241FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,188FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-