-Advertisement-
Home கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 34. ஆரியர் யார்?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 34. ஆரியர் யார்?

இத்தகு ஆரிய தர்மத்தை உலகிற்கு கற்றுத் தருவோம். நாம் கடைபிடித்துக் காட்டி உலகை கடைபிடிக்கச் செய்வோம்.

Dhinasari Jothidam

34. ஆரியர் யார்? 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“க்ருண்வந்தோ விஸ்வமார்யம்” – ருக்வேதம்
“விஸ்வத்தை ஆரியமாகச் செய்வோமாக!”

‘ஆர்யர்’ என்ற சொல்லுக்கு பூஜிக்கத் தகுந்த என்று பொருள் அதாவது கௌரவம் மிக்க உயர்ந்த ஸ்தானம் என்று கருத்து.

அவ்வளவுதானே தவிர ஆரியர்கள் என்ற ஒரு பிரிவு எங்குமில்லை. ஆரியர்-திராவிடர் என்ற வேற்றுமை அறியாமையால் பிறந்த கற்பனை.அதனை வரலாறாகக் காட்டியதால் நாம் நம்பி வருகிறோம். 

திராவிடம் என்பது அங்கம், வங்கம், கலிங்கம் என்ற தேசங்களைப் போலவே இடப் பகுதியின் பெயர். இது ஒரு வர்க்கத்தையோ ஜாதியையோ குறிப்பிடுவது அல்ல.

பாரதிய கலாச்சாரம் என்பது ‘ஆரியத்துவம்’என்பதை  ஆதர்சமாகக் காட்டியது. ஆரியர் என்பது மதத்தோடு தொடர்புடைய சொல் அல்ல. ‘வைதீக’ மதத்தவர் ஆரியர்கள் என்றும், ‘அவைதிகர்கள்’ திராவிடர்கள் என்றும், இவர்களை அவர்கள் வென்றார்கள் என்றும் செய்த கபட கற்பனை நம்மைப் பிரிப்பதற்காக மேல் நாட்டவர் செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியே. இந்த உண்மையை வரலாற்று ஆய்வாளர்கள் இப்போது அங்கீகரித்துள்ளார்கள். ஆனால் நம் வரலாற்று பாட நூல்கள் அவற்றை கவனிப்பதில்லை.

பிரபஞ்சமெங்கும் ஆரியர்களால் நிரம்ப வேண்டும் என்ற கூற்று,‘என் மதமே உலகெங்கும் கடைபிடிக்கப்பட வேண்டும்’ என்று ஆக்கிரமித்த மதங்களின் கொள்கை போன்றது அல்ல.

பிரபஞ்சத்தில் அனைவரும் வணக்கத்துக்குரிய இடத்தை, கௌரவமிக்க ஸ்தானத்தை பெறவேண்டுமென்ற வாழ்த்து இது.

கௌரவம்எதன் மூலம் கிடைக்கும்?  சத்தியம், ஞானம்,  தர்ம மயமான வாழ்க்கை, கல்வியறிவு, தியாக சீலம், பரோபகாரம் முதலானவற்றாலும் சிறந்த செல்வத்தாலும் கிடைக்கும். இவ்வாறு அனைவராலும் மதிக்கப்படும் பௌதிக செல்வமும், நற்குணச் செல்வமும் கொண்ட மனிதர்களால் உலகெங்கும் நிறைய வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலையை அனைவரும் பெறவேண்டும் என்ற அற்புதமான பரந்த எண்ணம் இதில் உள்ளது.

“சர்வே பத்ராணி பஸ்யந்து” 

அனைவரும் சுபங்களையே அனுபவிக்க வேண்டும் என்று விரும்பும் பரந்த வேத தத்துவம் இந்த வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

வெறும் பௌதிக  முன்னேற்றம் ‘ஆரியத்துவம்’ ஆகாது.தவம், புலனடக்கம், சுத்தம், நட்பு, தர்மசீலம் இவை ஆரிய வாழ்க்கை இயல்புகள். இந்த இயல்புகள் உலகெங்கும் நிறைந்தால் பூமியே சுவர்க்கமாகும் அல்லவா? அதை விட உலக நன்மைக்கான விருப்பம் வேறென்ன இருக்க முடியும்? வசுதைவ குடும்பம் என்ற உயர்ந்த கருத்தை பல யுகங்களுக்கு முன்பே வெளியிட்ட ருஷிகளின் இருப்பிடம் இந்த பாரத பூமி.

இத்தகைய உயர்ந்த கருத்தை உலகெங்கும் பரவச் செய்யும் விருப்பத்தோடு கூறப்பட்ட வாக்கியம் இது. 

பூமி மட்டுமே அல்ல. அந்தரிக்ஷம்,  கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் அமைதியோடு விளங்க வேண்டும் என்று விரும்பி அமைதியை மட்டுமே உள்ளத்தின் நாதமாக கொண்ட பாரதம் உலகிற்கே ஆதர்சமானது. 

ஆரியத்துவத்தை சாதிப்பதற்கு, கடைப்பிடிக்கத் தகுந்த வழிமுறைகளையும் அமைப்பையும் கூட நிலையாக ஏற்படுத்திக் கொண்ட உயர்ந்த நாகரீகம் நமக்கு உள்ளது.

மிக முற்பட்ட புராதன நூல்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆராய்ந்தால் அற்புதமான நாகரீகம் நம் கண்முன் தோன்றும். பேச்சில் பண்பாடு, உணவில் கட்டுப்பாடு, அடுத்தவரை மதித்து உபசரிப்பதில் நேர்மை, குடும்ப உறவுகளில் மரியாதை வழிமுறைகள், உடை அலங்காரங்களில் அடக்கம், பணிவு, சுற்றுச்சூழலை வருத்தாமல் மென்மையான அனுபந்தம்,  ஆச்சாரிய, மாணவர் தொடர்புகள்… போன்றவை நம் புராண நூல்களிலும், காளிதாசர் முதலான கவிகளின் காவியங்களிலும் விரிவாக காணப்படுகின்றன.

இந்த பண்டைகால அமைப்பையும் இந்த வித்யைகளையும் பயிற்சி செய்து மீண்டும் ஆத்ம கௌரவத்தை வளர்த்துக் கொண்டு கௌரவிக்கத் தக்க மதிப்பைப் பெறும் வகையில் நம் பாரத தேசத்தை நடத்தும் முயற்சியில் ஈடுபடுவோம்!

இத்தகு ஆரிய தர்மத்தை உலகிற்கு கற்றுத் தருவோம். நாம் கடைபிடித்துக் காட்டி உலகை கடைபிடிக்கச் செய்வோம். 

ஆரிய தர்மமே வேத தர்மம். இந்த தர்மத்திற்கு பீடம் பாரத தேசம். இதுவே சனாதன தர்ம மேடை.

முதலில் இந்த பூமியில் ஆரிய தர்மத்தை நிலை கொள்ளச் செய்து சிறிது சிறிதாக உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை திடமாக உணர்வோம்! ஆரிய தர்மம் ஒரு மதமல்ல! அது உயர்ந்த மானுட தர்மம்!

Show comments