Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 37. நிறைவான மழை!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 37. நிறைவான மழை!

veda vakyam

37. நிறைவான மழை! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“சிவா ந: ஸந்து வார்ஷிகீ:” -அதர்வண வேதம்.

“ஒவ்வொரு ஆண்டும் பொழியும் மழை நமக்கு சுபமாக இருக்கட்டும்!”

பருவநிலை ஆண்டுக்கொருமுறை மாறக் கூடியது. ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் பிரகிருதியின் மூலம் கடவுள் அருளும் கருணையின் மறுவடிவங்களே. இந்த மாற்றங்கள் நமக்கு நன்மை விளைவிக்க வேண்டும் என்பது மேற்சொன்ன வேத வாக்கியத்தின் விருப்பம்.

“வார்ஷிகம்” என்றால் வருடத்தோடு தொடர்புடையது. வர்ஷம் என்றாலே ஆண்டு என்று பொருள்.

பருவமழை சரியான காலத்தில் நிறைவாகப் பொழிய வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். வெள்ளம், வறட்சி இரண்டுமே துன்பம் அளிப்பவை. இந்த துன்பங்கள் இன்றி பயிர்களின் விளைச்சலுக்கும் நதி, குளங்கள் நிறையும்படியும் மழை பொழிய வேண்டும் என்ற விருப்பம் இந்த வேத வாக்கியத்தில் வெளிப்படுகிறது.

இயற்கையாகப் பெய்யும் மழை நீரை எவ்வாறு சேமிப்பது? எவ்வாறு பயன்படுத்துவது? என்பது பற்றி பண்டைய சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன. குளம் வெட்டுவது, ஏரிகளின் அமைப்பு, கால்வாய் தோண்டுவது போன்றவை அனைத்தும் நீர் நிலை பற்றிய சூட்சுமங்களைத் தெரிவிக்கின்றன. 

பெய்த மழை நிலத்தடி நீராக சேமிப்பாகும்படி நகரங்களில் வடிவமைப்பு இருக்க வேண்டும். தற்காலிக பலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு அவசரப் பணி புரியாமல் நீண்டகால பலன்கள் மீது தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மரங்கள் செறிவாகவும், குளம் கிணறு ஏரிகள் நிறைந்தும் இருக்கும் விதமாக பண்டைக் கால அரசர்கள் கவனம் எடுத்துக்கொண்டார்கள். இவற்றின் மூலம் ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை நீர் அந்த ஆண்டு முழுவதும் கைவசம் இருக்கும்படியும் சரியான விதத்தில் பயன்படும்படியாகவும் எச்சரிக்கை எடுத்துக் கொண்டார்கள். இவற்றின் மூலம் ஆண்டுதோறும் பெய்யும் மழைநீர் அந்த ஆண்டு முழுவதும் கைவசம் இருக்கும்படியும் சரியான விதத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மழை பொழிய வேண்டுமென்று விரும்பியதோடன்றி, அதற்கான முயற்சிகளையும் உள்ளத் தூய்மையோடு மேற்கொண்டனர். அதற்கு ஏற்ப மரங்களை நட்டுப் பேணுவதை ஊக்குவித்தனர். மரங்களை வெட்டுவதை உயிர்வதைக்குச் சமமான குற்றமாக கருதினர் நம் முன்னோர். வேறு வழியின்றி ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால் அதற்கு மாற்றாக வேறு சில மரங்களை நட்டு அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி கூறினார். அதுமட்டுமன்றி மழை வேண்டி யாக, யக்ஞங்களை நடத்தினர். 

இவை வெறும் மூட நம்பிக்கை என்று நாம் எடுத்தெறிந்து பேசி விடுவோம். இயற்கையை ஒரு ஜடப் பொருளாகப் பார்க்கும் நவீன அறிவியலால் வந்த விபரீதம் இது.

இயற்கையில் உள்ள சூட்சும சக்திகளை முற்றும் உணர்ந்த நம் ருஷிகள் அவற்றில் இருக்கும் திவ்ய சொரூபங்களை தரிசித்தார்கள். ப்ரக்ருதி சைதன்யத்தோடு கூடியது என்றும் நம் விருப்பையும் வெறுப்பையும் அறிந்து எதிர்வினையாற்றும் இயல்பு கொண்டது என்றும் வேத ருஷிகள் கண்டறிந்தனர்.

சப்த அலைகளால் இயற்கையை கட்டுப்படுத்துவது வேத மந்திரங்களால் இயலக் கூடியது. அந்த மந்திர சக்தியோடு கூடிய யாகங்களில் பயன்படுத்தும் யக்ஞ திரவியங்கள் வாயுமண்டலத்தோடு கலந்த பின் நிகழும் பரிணாமங்கள் மழைப்பொழிவிக்கக் கூடியவை என்று வேத விஞ்ஞானம்  நிரூபித்தது. தற்போதுவளர்ந்து வரும் நவீன அறிவியல், பண்டைய பாரதிய விஞ்ஞானத்தையும் புராதன சிறப்புகளையும் ஏற்காமல் இருக்க முடியவில்லை.

வார்ஷிகீ” என்ற சொல் மழை என்று பொதுவாக குறித்தாலும், ஒரு ஆண்டில் பொழியும் பருவகால மாற்றங்கள் எல்லாம் நமக்கு மங்களகரமாக வேண்டும் என்ற பொருளையும் அளிக்கிறது.

மழை பொழியச் செய்யும் மார்க்கங்களில் பிரதானமாக தர்மம் என்பதை குறிப்பிட்டார்கள் சனாதன நூல்களில். தர்மத்தோடு கூடிய அரசாட்சியில் மாரி தவறாது என்பது புராதன கொள்கை.

தெய்வீக சைதன்யம் நிறைந்துள்ள பிரகிருதியில் ஒவ்வொரு அணுவும் தர்மத்தின் மூலம் மகிழ்ந்து அமைதியடைந்து மங்களகரமாக விளங்கும். அதர்மத்தால் கேடு விளையும்.

மழைக்குக் காரணமான தர்ம பரிபாலனை, பொழியும் மழையையும் மங்களகரமாக்கக் கூடிய திறன் கொண்டது.

காலே வர்ஷது பர்ஜன்ய:” என்று மனதார வேத மார்க்கத்தை அனுசரித்து கடவுளை வேண்டுவோம்.  

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version