Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்?

தினசரி ஒரு வேத வாக்கியம்: 38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்?

veda vakyam

38. தர்க்கத்தால் என்ன கிடைக்கும்? 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“நைஷாதர்கேண மதிராபனேயா” -கடோபநிஷத்.

“இந்த (ஆத்ம) ஞானம் தர்க்கத்தின் மூலம் பெற இயலாது”.

தர்க்க புத்தி வாழ்க்கை விவகாரத்தில் இருக்க வேண்டியதுதான். அதன் எல்லைகள் அதற்கு உண்டு.ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். 

ஒரு பெரிய கருத்தை நம்புபவர், நம்பாதவரின் தர்க்கத்தால் தோல்வி அடையலாம். அதற்காக அந்த கருத்து தோற்றதாகப் பொருள் இல்லை. அந்த நேரத்தில் அந்த நம்பிக்கை இல்லாதவரிடம் இருந்த சாமர்த்தியம், நம்பியவரிடம் இல்லாமல் இருந்திருக்கலாம். சிறிது காலத்திற்குப் பிறகு நம்பிக்கை உள்ளவர்களில் சாமர்த்தியம் மிக்கவர்கள் தோன்றி, நம்பிக்கையற்றவரின் தர்க்கத்தை உடைத்தெறியலாம்.

ஒருவர் நீண்ட தவம் செய்து ஒரு உண்மையை அனுபவத்தில் உணர்ந்து அதனை சித்தாந்தமாக பரிந்துரைக்கிறார். அவரை அனுசரிப்பவகளிடம் அத்தகைய தவம் இல்லாமல் இருக்கலாம். சிறிது சிறிதாக அனுபவம் இல்லாமல் அனுசரிப்பவர்கள் மட்டுமே மீதி இருப்பதால் அந்த கொள்கை பலவீனமாகிறது. அதற்காக அந்த சித்தாந்தம் சத்தியமல்ல என்று கூற இயலாது.

அனுசரிப்பவர் அந்த கொள்கையை பலமாக எடுத்துரைக்க இயலாமல் இருக்கலாம். மீண்டும் சிறந்த தவசக்தி உடைய மகாத்மாக்கள் தோன்றி அந்த சித்தாந்தத்தை சத்தியம் என்று நிரூபிக்கும் காலம் வரும். அதனால் தர்க்கத்தின் மூலம் தத்துவத்தை தீர்மானிக்க முடியாது. வாக்கு வாதங்கள் மூலம் நிரூபிக்கவும் இயலாது.

ஆயின் உலகியல் விவகாரத்தில் தர்க்கத்தின் தாக்கம் எவ்விதம் இருந்தாலும், வேதம் எடுத்துக்கூறும் பரமாத்மாவின் தத்துவம் தர்க்கத்தால் கிட்டாது. 

உண்மையான விசாரணைக்கும் சத்தியத் தேடலுக்கும் தொடர்பான தர்க்கத்தை வேதங்களும் உபநிடதங்களும் ஆமோதித்தன. சத்தியத்தை நிரூபிப்பதற்கு பலவித சோதனைகளையும் சாதனைகளையும் கூறின. அந்த சோதனைகளோ சாதனைகளோ சிறிதும் இன்றி நேரடியாக சித்தாந்தத்தை எதிர்த்தால் நாம் சத்தியத்தில் இருந்து  விலகிச் செல்பவராவோம்.

நம் புராதன சத்திய சித்தாந்தத்தை மறுத்துப் பேசுவர் பலர். தர்க்கம் செய்கிறோம் என்பர். இவர்களுடைய தர்க்கம் வெறும் எதிர்ப்பதற்கு மட்டுமே பயன்படும். சத்தியத்தை அறிவதற்குப் பயன்படாது. அதில் ஜிஞ்ஜாசையோ, தேடும் நோக்கமோ இருக்காது.

இன்று சமத்காரமான பேச்சால் ஒரு உயர்ந்த கொள்கையை ஏளனம் செய்து, யாரோ ஒருபத்து பேரின் பாராட்டைப் பெற்றவர், சிறிது காலம் கழித்து எதோ ஞானோதயமோ தனிப்பட்ட அனுபவமோ ஏற்படும்போது தன் அபிப்பிராயம் தவறு என்று புரிந்து கொள்ள நேரிடலாம். ஆனால் அவரைப் பின் தொடர்பவர்கள் அத்தகைய ஞானமும் அனுபவமும் இன்றி அவர் எதிர்த்த கொள்கையை இன்னும் அதிகமாகப் பின்பற்றுவார்கள்.

அதனால்தான் புராதன சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஒரு பாரம்பரியமான பழக்கவழக்கத்தை மறுப்பதில் தற்காலிகமாக ஒரு சாகசம் செய்யும் சந்தோஷமும் உற்சாகமும் ஏற்படும். அவருக்கு சிறிது புகழும் இருந்து விட்டால் அவர் எதிர்க்கும் நாத்திகப் பேச்சு சற்று பிரச்சாரமாகும். பிரசாரத்திற்கு அவருடைய திறமையே காரணமாக இருக்கத் தேவையில்லை. பிற அம்சங்களின் பிரபாவம் கூட இருக்கலாம். உண்மைகள் அனைத்தும் தர்க்கத்திற்கு அடங்காமல் போகலாம்.

மனிதனின் அறிவுத் திறனுக்கு பலவித எல்லைகள் உண்டு. யோக நிஷ்டை, ஆன்மீக சாதனை போன்றவற்றால் சோதித்து சாதித்து அடைய வேண்டியவற்றை, எளிதாகப் பெற்று விடலாம் என்று நினைப்பது சரியான வழியல்ல.

புத்தக படனம், சிரவணம், பாண்டித்தியம் போன்றவை சத்திய தேடலுக்கு வழி காட்டி, சாதனைக்கும் பிரேரணைக்கும் தூண்டுமே தவிர சத்தியத்தை அனுபவத்தில் எடுத்து வராது. பரமாத்மாவின் தத்துவத்தை அறிவது என்றால் அதுவே உயர்ந்த இலக்கு என்று தேர்ந்தெடுத்துக் கொள்வது. அப்போது அந்த தத்துவம் தன்னைத் தேர்ந்தெடுத்தவனை வந்தடையும்.

“யமேவைஷ வ்ருணுதே தேனலப்ய:
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்” என்ற உபநிஷத் வாக்கியம் கூட இதே கருத்தை போதிக்கிறது.

“வ்ருதா கண்டக்ஷோபம் வஹிசிதரசா தர்கவசனா
பதாம்போஜம் சம்போர்பஜ பரம சௌக்யம் ப்ரஜசுதீ” என்றார் ஆதிசங்கரர். “தர்க்க வசனங்கள் தொண்டைவலிக்குத் தவிர வேறு எதற்கும் உதவாது. பரமாத்மாவை சரணடை” என்று போதிக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version