Home அடடே... அப்படியா? தினசரி ஒரு வேத வாக்கியம்: 39. மதுர பக்தி!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 39. மதுர பக்தி!

veda vakyam

39. மதுர பக்தி!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“யஸ்ய தே ஸ்வாது சக்யம் ஸ்வாத்வீ ப்ரணீதி:” -ருக்வேதம்.

“பகவானின் சினேகம் இனிமையானது. அனன்ய பக்தி மதுரமானது.

பக்தியின் உயர்வை வேதம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. பகவானிடம் கொள்ளும் பிரேம பாவனையே பக்தி என்று விளக்கம் அளித்த நாரதர் வேதத்தின் உள்ளத்தையே வெளிப்படுத்துகிறார்.

மேற்குறிப்பிட்ட ருக்வேத மந்திரம் மதுர பாவனையை  விவரிக்கிறது. பக்தி ஆனந்தத்தை அளிக்கிறது. பக்தி  இனிப்பானது. பகவானின் நாமம், ரூபம், குணம், லீலை இவற்றின் மாதுர்யங்களை அனுபவிக்கும்போது அவை விருத்தியடைந்து அனைத்து பந்தங்களையும் விடுவிக்கிறது.

அதனால்தான் பக்தர்களனைவரும் பகவன்நாம சங்கீர்த்தனத்தில் உலகியல் விஷயங்களின் ருசிகளை ஒதுக்கிவிட்டு ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்.

“மதுராதிபதே ரகிலம் மதுரம்” என்று கீர்த்தனை செய்த பக்தர்கள், “ஜிஹ்வே கீர்தய கேசவம் முரரிபோ: சேதோபஜ ஶ்ரீதரம்…” – புலன்கள் பகவானுக்கு சமர்ப்பணம் ஆகும்போது வேறெதுவும் தேவையில்லை என்றார்கள்.

lordshiva

பக்திக்கு பக்தியே பலன். பகவானின் பிரேமமயமான பக்தியில் கோரிக்கைகள் எதுவும் இருக்காது. நிரந்தரம் பகவானை நினைக்கும் மாதுர்யத்தில் லீனமாவதே உயர்ந்த செல்வம்.

“பக்தி பிச்சமீயவே ராமய்யா!” என்று தியாகராஜர் கீர்த்தனை செய்தார். “பக்திப் பிச்சை இடு ராமா!” என்றார். இந்த பகவத் பிரேமானுபவத்தையே சாத்வீக பக்தி என்பர்.

“ஆனந்தாம்புதி வர்தனம் ப்ரதிபதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம்… ஶ்ரீக்ருஷ்ண சங்கீர்த்தனம்” என்று சைதன்ய மஹாபிரபு, ‘கிருஷ்ண பக்தி ரசம் மிகமிக மதுரம்’  என்றார்.

பகவான் நம்மோடு கொள்ளும் சினேகம், அவரிடம் நமக்குள்ள அனன்ய பக்தி இந்த இரண்டுமே மாதுர்யங்கள். முதலில் கூறப்பட்ட மாதுர்யத்தை உணர வேண்டும் என்றால் இரண்டாவது மாதுர்யம் இருக்க வேண்டும். அதாவது மதுரமான பகவானின் அருளை அனுபவிக்க வேண்டுமென்றால் அனன்ய பக்தி என்ற மாதுர்யம் நம்மில் இருக்க வேண்டும்.

பகவானின் நட்பு மதுரம், ஆனந்தம், ஆஹ்லாதம். அவரிடம் கொள்ளும் அனன்ய பக்தி அனைத்து கவலைகளையும் விலக்கி பிரம்மானந்தத்தை ஏற்படுத்தும் என்பது இந்த மந்திரத்தின் விளக்கம்.

பக்தி ஆனந்தத்தை அளிக்கும். “ஸ்வயம் பலரூபத்வாத்“என்பது நாரத பக்தி சூத்திரம். பக்தி கிடைப்பதே பக்தியின் பயன். வேறுஏதோ கிடைக்கும் என்பதல்ல.

பரமாத்மாவைத் தவிர எதுவும் வேண்டாம் என்று எண்ணும் அனன்ய பக்தியை இந்த மந்திரம் எடுத்துரைக்கிறது. நவவித பக்திகளில் ‘சக்ய பக்தி’ உயர்ந்தது. 

“சுஹ்ருதம் சர்வ பூதானாம் ஞ்ஜாத்வாமாம் சாந்திம்ருச்சதி” – 

“நான் அனைவருக்கும் ‘நண்பன்’ என்று அறிந்தவர் அமைதியை அடைவார்” என்பது கீதாச்சாரியனின் வசனம்.

‘சக்யம்’ பற்றி கூறுகையில், “விஸ்வாச: சக்ய லக்ஷணம்“என்று சிவ புராணம் விவரிக்கிறது.சினேகத்தின் முக்கிய லட்சணம் விசுவாசம். கடவுளின் சினேகத்தில் அனைத்தும் நல்லதே நடக்கும் என்று கூறாமல், பகவானை பிரேமை செய்பவனுக்கு எது நடந்தாலும் அது நல்லதே என்ற பொருளை கிரகிக்க வேண்டும். பகவானின் பிரசாதங்களே நம் அனுபவங்கள் என்று உணர்ந்தால் அனைத்தும் ஆனந்தமே.

“பாலமுன்ச்சு, மரி நீட்ட முன்ச்சு, நீ பாலபடிதினிக ஜாலமு சேயகு” என்பது ராமதாசர் கீர்த்தனை.

பக்தனுக்கு எந்த அனுபவமானாலும் அது கடவுளின் அருளே. வேறு ஒரு சிந்தனை இருக்காது. அதனால் அவன் கவலையற்று இருப்பான். சுக, துக்கங்கள் எதற்கும் அஞ்சாத ‘துவந்தாதீத’ (இருமைகளுக்கு அப்பாற்பட்ட) நிலையில் “என் சுவாமி அனைத்தும் நன்மையே செய்வார்” என்ற திருப்தியோடு ஒவ்வொரு சம்பவத்தையும் தயங்காமல் வரவேற்பான்.

Rukmani-krishnan

நிரந்தர பகவத் ஸ்மரணை, பிற எந்த சுகமோ துக்கமோ ஒட்டாத நிலையில் பக்தனைஇருத்துகிறது. பகவானின் நினைவு தவிர மற்ற எதையும் விரும்பாதவன் நித்தியம் ஆனந்தமாக இருப்பான். அந்த ஆனந்தம் பக்தனுக்கு மட்டுமே புரியும். ஊமை இனிப்பான பழத்தை ருசிக்க முடியும். ஆனால் அதை வர்ணிக்க முடியாது. அதே போல் பக்தனின் ஆனந்தம் வார்த்தைக்கு எட்டாதது.

“ஈலாகுன விவரிம்பலேனு சாலா ஸ்வானுபவைக வேத்யமே” என்று தியாகராஜர் இந்த கருத்தையே பாடினார்.

ப்ரணீதி, ப்ரணயம், ப்ரேமை, ப்ரீதி, பக்தி இவையனைத்தும் ஒரே பொருளைத் தரும். இத்தகு பிரேமை இல்லாதபோது ஞானம் கிடைக்காது.

“அனுராகமு லேனி மனசுன சுஞ்ஜானமு ராது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் தியாகராஜர். பகவானின் தர்மம் பிரேம மயமானது என்பதால் ‘ஸ்வாது’  (இனிப்பு) தத்துவமாக வேதம் தீர்மானித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version