
ஜிஎஸ்டி., வரி விவரங்கள்
கட்டுரை: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பகுதி 3
ஜி.எஸ்.டி GST வரி நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன:
சி.ஜி.எஸ்.டி – மத்திய அரசின் ஜி.எஸ்.டி
எஸ்.ஜி.எஸ்.டி – மாநில அரசின் ஜி.எஸ்.டி
யூ.டி.ஜி.எஸ்.டி – யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி.
ஐ.ஜி.எஸ்.டி – இன்டகிரேடெட் ஜி.எஸ்.டி.
பெயருக்கேற்றாற் போலவே சி.ஜி.எஸ்.டி – மத்திய அரசின் ஜி.எஸ்.டியில் இருந்து கிடைக்கும் வருவாய் மத்திய அரசுக்கும், எஸ்.ஜி.எஸ்.டி – மாநில அரசின் ஜி.எஸ்.டியில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநில அரசுகளுக்கும், யூ.டி.ஜி.எஸ்.டி – யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டியில் இருந்து கிடைக்கும் வருவாய் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும்.
இதில் ஐ.ஜி.எஸ்.டி மட்டும் கொஞ்சம் சிறப்பு. ஐ.ஜி.எஸ்.டி – இன்டகிரேடெட் ஜி.எஸ்.டி என்பது சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி அல்லது யூ.டி.ஜி.எஸ்.டி-ன் கலவைதான். ஐ.ஜி.எஸ்.டி ஒரு வரி அல்ல. சொல்லப் போனால் ஐ.ஜி.எஸ்.டி மூலம் எந்த ஒரு வருமானமும் அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை. ஐ.ஜி.எஸ்.டி முழுக்க முழுக்க வியாபாரிகளுக்கு டாக்ஸ் க்ரெடிட் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பெயரளவிலான வரி.
ஜி.எஸ்.டியின் ஐந்து வரி வரம்புகள்
ஒவ்வொரு பொருள் மற்றும் சேவைக்கும் இவ்வளவுதான் வரி வசூலிக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தி இருக்கிறது. அதன் படி
- வரி இல்லாதவை.5 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை
- 12 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை
- 18 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை
- 28 சதவிகிதம் வரி செலுத்த வேண்டியவை என ஐந்து வரி வரம்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
- எப்படி ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்?
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் வெல்லத்திற்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஓரிடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தை சென்னையில் விற்பனை செய்தால் அதற்கு சி.ஜி.எஸ்.டி – 2.5% மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி – 2.5% என்று 5% செலுத்த வேண்டும்.
இதையே கொஞ்சம் தள்ளிப் போய் திருப்பதியில் விற்பனை செய்தால் ஐ.ஜி.எஸ்.டி வரியாக 18% செலுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் 18 சதவிகித ஐ.ஜி.எஸ்.டி= சி.ஜி.எஸ்.டி 9% மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி 9% எனப் பிரிக்கப்படும். (இன்டர் ஸ்டேட் என்றழைக்கப்படும் இருவேறு மாநிலங்களுக்கிடையே நடக்கும் வணிகப் பரிமாற்றம்.) ஒரு வேளை அந்தமான் நிகோபார் தீவுகளுக்குக் வெல்லத்தை விற்பனை செய்தாலும் ஐ.ஜி.எஸ்.டி வரியாக 18% செலுத்த வேண்டும்.
ஒரு மாநிலத்துக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் நடக்கும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் 18 சதவிகித ஐ.ஜி.எஸ்.டி= சி.ஜி.எஸ்.டி 9% மற்றும் யூ.டி.ஜி.எஸ்.டி 9% எனப் பிரிக்கப்படும். (இன்டர் ஸ்டேட் என்றழைக்கப்படும் இருவேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையே நடக்கும் வணிகப் பரிமாற்றம்.).
எப்போது வசூலிக்கப்படும்?
ஒரு பொருளின், ஒவ்வொரு சப்ளையின் போதும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். தற்போதைய நடைமுறையில் (ஜி.எஸ்.டிக்கு முன்) ஒரு பொருளின் விற்பனையின் போது மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
எங்கு வசூலிக்கப்படும் ?
மேலே சொன்ன வெல்லம் உதாரணத்தில், எந்த மாநிலத்தில் விற்கப்படுகிறதோ அந்த மாநிலத்தில்தான் மாநில ஜி.எஸ்.டி (எஸ்.ஜி.எஸ்.டி) வசூலிக்கப்படும். சி.ஜி.எஸ்.டி வழக்கம்போல் மத்திய அரசுக்குச் சென்றுவிடும். சுருக்கமாகப் பொருளை வாங்குபவர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ அந்த மாநிலத்தில்தான் மாநில ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும்.
யார் வசூலித்து, யார் கட்டுவார்?
ஒரு பொருளை வாங்குகிறவர்தான், அந்தப்பொருளின் விலைக்கு வரியைச் செலுத்தார். பொருளை விற்கிறவர்தான் வரியை வசூலித்து அரசிடம் கட்டுவார்.
ஜி.எஸ்.டியில் சேர்க்கப்படாத பொருள்கள் எவை?
மனிதர்கள் உட்கொள்ளும் மதுபானங்களுக்கு (ஆல்கஹால்) பழையது போலவே மாநில வாட் மற்றும் கலால் வரிகள் செலுத்த வேண்டும். மதுபானங்களைப் போலவே பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் (ஏ.டி.எஃப்), இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்ற ஆறு பொருள்களுக்கும் பழையது போலவே வரிகள் தொடரும்.