― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்அச்சத்தைக் கொல்! துணிந்து நில்! கொரோனாவை வெல்!

அச்சத்தைக் கொல்! துணிந்து நில்! கொரோனாவை வெல்!

- Advertisement -
covid vaccine

பயம் கொள்ளாதே மனமே!
– டாக்டர்.ஜோ.ஜாய்ஸ் திலகம் –

dr joice thilagam

எந்தச் சூழ்நிலையிலும், நிலைகுலையாது, சமாளித்து வாழும் கலையைக் கற்றறிந்தவன்தான் மனிதன். அதிலும் எதிர்பாராத சூழ்நிலையில் ஆபத்துக்களை கையாளத் தெரிந்த மனிதன் புத்திசாலி. கையாளும் விதத்தில், தனக்கும் பாதிப்பு இல்லாமல் அடுத்தவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல், திறம்பட செய்து முடிப்பவன் திறமைசாலி.

இந்த கொரோனா காலகட்டத்தில் நாம் புத்திசாலிகளாகவும், அதே சமயம் திறமைசாலிகளாகவும் இருந்து, கொரோனாவை சமாளிக்க வேண்டியது அவசியமாகிறது. நாம் என்னதான் அக்கறை காட்டினாலும், சில நேரம் கொரோனாவின் தொற்றுக்கு ஆளாக வேண்டியுள்ளது. வெளியே செல்லும்போது, முகக்கவசம், சமூக இடைவெளி, கை கால்களை கழுவுதல் போன்ற சட்டதிட்டங்களை கைக் கொண்டாலும் அவற்றையும் மீறி, கொரோனாவின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதற்குக் காரணம் என்ன?

கொரோனாவின் அளவு,  நமது முகக்கவசத்தில் உள்ள சிறியச் சிறிய துளைகளின் வழியாகக் கூட உள்ளே நுழையக் கூடிய, மிக மிகச் சிறிய உருவமாகும். அதற்காக, நாம் சுவாசிக்க முடியாத அளவு முகக்கவசம் அணிய முடியாது. இந்த மிகச் சிறிய நுழைவு வாயில் மூலமாகக் கூட நம் உடலுக்குள் நுழைந்து விட வாய்ப்பு உள்ளது. அதற்காக எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா? 

நாம் உணவு உண்ணும்போதும், பேசும்போதும் காற்றின் மூலம் உள்ளே செல்ல பல வாய்ப்புக்கள் உள்ளது. யாருக்கு எப்போது, எந்த நேரத்தில் நோய்த் தொற்று ஏற்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது; பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆண், பெண் இருவருக்குமே, கொரோனாவின் தொற்று வர வாய்ப்புக்கள் உண்டு. அதனால் பணிக்கு போகாமல் இருக்க முடியாது. வேண்டிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்து கொண்டுதான் போக வேண்டும்.

இந்நிலையில் கணவனுக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? அல்லது மனைவிக்கு தொற்று ஏற்பட்டால் எப்படி கையாளுவது? இது போன்ற கேள்விகள் மக்களை புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது.

நாம் முதலில் செய்ய வேண்டியது, நோயாளிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களை ஒதுக்கிவிடக் கூடாது.  தீண்டாதவர்கள் போல நடத்தக் கூடாது. மனம் கோண பேசக்கூடாது. குறிப்பாக பயமூட்டும் வகையில் எந்தவிதச் செயலும் இருக்கக் கூடாது.

நோயாளிக்கு முன்பு, ‘‘ஐய்யய்யோ என்று விழி பிதுங்கி வருத்தமான பாவனை’’ செய்து காட்டக் கூடாது. மாறாக, அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து தர முன் வரவேண்டும். அதே சமயம் நம்மையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

முதலில், கொரோனா தொற்று கண்டவருக்கு தனி அறை கொடுக்கப்பட வேண்டும். தொற்றுக் கண்டவர், வெளி மாநிலத்திற்கு சென்று வந்தவரானால், கண்டிப்பாக தனி அறையில் வைக்கப்பட வேண்டும். இது ஒன்றும் இந்தியர்களுக்கு புதிதல்ல. இந்த வழக்கம், அம்மை நோய் வந்தபோது, நாம் அனைவரும் கடைபிடித்து வந்தோமே! அதே போன்று தான் இன்றும்.

training in corona time

ஒன்று சுத்தம், இதை இறுதி வரை கடைபிடிக்க வேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும், அறையையும் சுத்தமாக வைத்தால், நோயாளியின் தொற்றும், எந்தவித யுத்தம் செய்யாமல் போய்விடும்.

நமக்குள் பகை ஏற்பட்டால், அதாவது பாதிக்கப்பட்டவரின் மனதில், நாம் இனி தேற மாட்டோம் என்ற நினைவு வந்தாலே அது நமக்கு பகையாகத்தான் முடியும். முதலில் அதை விரட்ட வேண்டும். நோயாளி மனதளவில் சோர்ந்த போது, வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் காட்டும் கனிவான நடத்தைகள்தான் நோயாளியை விரைவில் குணப்படுத்தும்.

மனைவிக்கு தொற்று கண்டால், கணவன் சமைக்கலாம். பிள்ளைகளை கவனித்துக் கொண்டு மனைவியையும் கவனிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு, சூடான உணவு, பானங்களை மட்டுமே அளித்து உதவலாம். காரணம் குளிர்ந்த உணவு பானங்கள் மூலம் கிருமியின் வளர்ச்சி ஒருவேளை அதிகரிக்கலாம். சில நேரம் ஏற்கெனவே, இருமல், சளி, சைனஸ், நீர்க்கோர்வை, ஆஸ்த்மா, அலர்ஜி, டி.பி, நாள்பட்ட சுவாசக் குழாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு, எப்போதுமே கூடான உணவுப் பொருட்கள்தான் கொடுக்கப்பட வேண்டும்.

ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தக் கூடாது. ‘‘நான் அப்பவே சொன்னேன் போகக் கூடாதுன்னு… உன்னாலதான் வந்தது…’’ என்று ‘‘எவ்வளவு  சொல்லியும் நீ கேட்க வில்லை… இப்ப படு…’’ என்ற சொற்களை தவிர்க்கலாம்.

எப்போதும் ஒருவரை மறக்காமல் இருப்பது மட்டும் அன்பு அல்ல; என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு. தனி ஆளாய் நின்று, குடும்ப பாரத்தை சுமப்பவர்க்குத்தான் தெரியும், அந்த அழுத்தம் நாம் நினைப்பது போல அவன்(ள்) முதுகில் இல்லை. அது அவன்(ள்) இதயத்தில் இருக்கிறது என்பது.

எனவே இதயத்தை கொரோனா தாக்கினால் தாங்கிக் கொள்ளலாம். கொல்லும் மனித உறவுகளின் வார்த்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது.

corona art

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் இருந்தாலும், தொடர்புக்கு, கைப்பேசி இப்போது அனைவரிடத்திலும் உள்ளது. அதை வெகுவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்; வீட்டில் உள்ளவர்கள் நோய் வாய்ப்பட்டவர்க்கு, சலுகைகள் சில கொடுத்து உதவலாம்; படிக்க நிறைய புத்தகங்கள் தரலாம்; திட்டாமல் இருக்கலாம்; கனிவாகப் பேசலாம்; சீக்கிரம் சரியாகிவிடும் என தேற்றலாம்; பலர் விரைவில் குணமடைந்த நல்ல சேதியை கைப்பேசியின் மூலம் தெரிவிக்கலாம்!

இப்போது உங்களை பார்க்கும்போது, குணமடைந்து வருகிறீர்கள் என்ற நேர்மறை சிந்தனையை தூண்டலாம்; வீட்டில் தனி கழிப்பிடம், குளியலறை தனியாக கொடுக்க வசதி இல்லை என்றால், மற்றவர்கள் வேகமாக முதலில் குளித்து விட்டு, தொற்று கண்டவரை குளிக்கச் செய்யலாம்.

சற்று நேரம் ஜன்னல் ஓரம் வெயில்படும்படி உட்காரலாம். வீட்டில் உள்ளவர்கள், மாடியில் (அ) கீழே உள்ள இடங்களில் காலை 9 மணிக்கு முன் வெய்யிலில் நடந்து வைட்டமின் ‘டி’யை பெறலாம். ஸின்க் சத்து நிறைந்த பூசணி விதை, ஆளிவிதை, சோயா, எள் போன்றவற்றையும், முளை கட்டின பயறு அதிகம் உட்கொள்ளலாம். நீராவி பிடித்தல் நல்லது. கை குட்டை தவிர்த்தல், திசு காகிதம் பயன்படுத்தி பின்பு எரிந்து விடுதல் நல்லது.

பாதுகாப்பான குறைந்த செலவில் பயன் தரக்கூடிய ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பம் மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்தலாம். மிளகு, துளசி, மஞ்சள் போன்றவற்றை தேவைக்கு பயன்படுத்தலாம்.

ஒருவன் மலையின் உச்சியை தொடவேண்டுமென ஏறினால், உச்சியைத் தொட்டபின், இயல்பாகவே கீழே இறங்கத்தான் வேண்டும். அதே போன்று கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை தொட்டபின், இனி இயல்பாகவே இறங்கத்தான் வேண்டும். இறங்கி விடும் என்பதும் அறிஞர்களின் எண்ணம்.

சுனாமி போன்ற பேரிடர்களை எதிர்கொண்ட நாம், கொரோனா போன்ற எதிரியின் தாக்கத்தை வெல்ல, பயத்திற்கு இடம் கொடாமல், நேர்மறை சிந்தனையுடன் விழிப்புடன் இருந்தால் போதும்.

உடைந்து போக ஆயிரம் காரணம் உண்டு. உயிர்ப்பிக்க தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையும்தான் ஒரே வழி.

கட்டுரையாளர்: முன்னாள் மருத்துவ அதிகாரி – சென்னை மாநகராட்சி & ஓய்வு தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் ரெஜிஸ்ட்ரார் (பொறுப்பு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version