அண்ணா என் உடைமைப் பொருள் – 40
– வேதா டி. ஸ்ரீதரன் –
பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள் – 2
ஆதி சங்கரர், கங்கைக் கரையில் எதிர்ப்பட்ட புலையனை விலகிப் போகச் சொன்னதும், அந்தப் புலையன், ‘‘ஆசார்யரே, யாரை விலகிப் போகச் சொல்கிறீர்கள் – உடலையா ஆத்மாவையா?’’ என்று எதிர்க் கேள்வி கேட்டதும் பிரபலமான சம்பவம். இதைத் தொடர்ந்து ஆசார்யாள் அந்தப் புலையனை நமஸ்கரித்தார். மேலும், மனீஷா பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களின் வாயிலாக, அவர், ‘‘ஆத்மாவை உணர்ந்தவர்கள் ஜாதிக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை நாம் நமஸ்கரிக்க வேண்டும்’’ என்பதை வலியுறுத்தி உள்ளார்.
பெரியவா அடிக்கடி சுட்டிக் காட்டும் சம்பவம் இது.
அதுபோலவே, ஊர் கூடித் தேர் இழுப்பது பற்றியும் பெரியவா அடிக்கடி குறிப்பிடுவது உண்டு.
ஊரில் உள்ள அனைத்து ஜாதியினரும் இணைந்து, தோளோடு தோள் நின்று, ஒட்டி உரசியபடியே தேர் இழுக்க வேண்டும் என்பது நியமம். அதுமட்டுமல்ல, தேர் இழுப்பதால் நமது உடல் எவ்வளவு வியர்த்துக் கொட்டினாலும், வீடு திரும்பியதும் குளிக்காமலேயே தான் உணவருந்த வேண்டும் என்பதையும் பெரியவா வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார்.
பெரியவா வலியுறுத்திய ஆசாரங்களில் உணவுத் தூய்மைக்கு முக்கிய இடம் உண்டு.
விவேகானந்தர் சொன்னதைக் குறிப்பிட்டு, நேரு, ஹிந்து மதத்தை ‘‘அடுப்பங்கரை மதம்’’ என்று கேலி பண்ணுவதுண்டு. இதைப் பற்றிக் குறிப்பிட்ட பெரியவா, ‘‘நேரு ஏதோ ஹிந்து மதத்தை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு அப்படிப் பேசுகிறார். (நேரு நாஸ்திகக் கொள்கை உடையவர். அவருக்கு ஹிந்து மதம் பிடிக்காது.) ஆனால் உண்மையில், அடுப்பங்கரை தான் ஹிந்து தர்மத்தின் மையப் புள்ளி’’ என்று சொல்லி இருக்கிறார்.
நாரதருக்கு சனத்குமாரர் செய்த உபதேசம் சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ளது. அதில் சனத்குமாரர், ‘‘ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்தி:’’ என்றே தமது உபதேசத்தைத் தொடங்குகிறார். ‘‘தூய உணவின் மூலமே மனதின் குணங்கள் தூய்மை அடையும். இதைத் தொடர்ந்து, படிப்படியாக ஈசுவர ஸ்மரணம் சித்திக்கும். அடுத்ததாக, கட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுபடும் மோக்ஷ நிலை சித்திக்கும்’’ என்பது இதற்குப் பெரியவா தரும் விளக்கம்.
அண்ணா இதை மகா பெரியவாள் விருந்து என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
பெரியவா பொது ஸ்தாபனங்களைப் பெரிதும் மதித்தவர். சமுதாய சேவைகளைப் பெரிதும் ஊக்குவித்தவர். சாஸ்திர ரீதியான வாழ்க்கை என்பதே சமுதாயத்துக்குப் பிரயோஜனப்படும் விதத்தில் வாழ்வது தான் என்று அவர் அடிக்கடி சொல்லுவதுண்டு.
ஆனாலும், அவர், பெரிய பெரிய ஸ்தாபனங்கள் மூலம் சேவைப் பணிகள் செய்வதை முழுமையாகத் தவிர்த்து வந்தார். ஸ்தாபனங்களில் தலைமைப் பொறுப்பு குறித்த போட்டி பொறாமை ஏற்படும் என்பது ஒரு காரணம். அமைப்புகளுக்கு சொத்து சேர்வதால் ஏற்படும் பாதிப்புகளும் ஒரு காரணம்.
எனவே, பெரியவா முன்னெடுத்துச் சென்ற சமுதாய வேலைகள் பெரும்பாலும் ஆங்காங்கே அன்பர்கள் தத்தமது ஆர்வத்துக்கு ஏற்ற விதத்தில் ஏதாவது சேவைப் பணி செய்வதாகவே அமைந்திருக்கும். பிடியரிசித் திட்டமும், அனாதரவாக விடப்படும் பசுக்களைப் பராமரிக்கும் சேவைப் பணிகளும் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.
1950களில் பெரியவா ஊர் கூடி சேவைப் பணிகளில் ஈடுபட ஊக்குவித்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு கிராமங்களில் அனைத்து ஜாதியினரும் தோளோடு தோள் இணைந்து குளம் வெட்டுவது, உழவாரப் பணிகள் முதலானவற்றில் ஈடுபட்டனர்.
அனைவரும் சேர்ந்து பணிபுரியும் அதே நேரத்தில் அவரவருக்கான உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்றே அப்போதும் பெரியவா வலியுறுத்தினார்.
பெரியவா வலியுறுத்திய ஆசாரங்களைக் கடைப்பிடித்து வருபவர்கள் ஏராளம் பேர் இன்றும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதிலும், வைதிகர்களுக்கு (வேதத்துக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர்கள்) அவர் விதித்த சாஸ்திரக் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானவை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் கும்பகோணம் மடத்துப் பாடசாலை வாத்தியாரான ரங்கராஜன் (தற்போதைய அஹோபில மடத்து ஜீயர்). இவரது குடும்ப ஆசாரப்படி, இவர் காஞ்சி மடத்தில் உணவருந்த முடியாது. இதைப் பெரியவா முழுமையாக அங்கீகரித்திருக்கிறார்.
அப்படியானால், காஞ்சி மடம் இழிவானதா? தீண்டத் தகாததா? இதை எப்படி பெரியவா ஏற்றுக் கொண்டார் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் அல்லவா?
மடத்துடன் நெருங்கிய குடும்பம் ஒன்றில் பிறந்த சிறுவனுக்குப் பூணூல் போடாமல் இருந்தார்கள். அதற்கான காரணம் என்ன பெரியவா விசாரித்த போது, அந்தப் பையனின் தந்தை, உபநயனச் சடங்குக்கான செலவுகளுக்காகப் பணம் சேகரித்து வருவதாகவும், இரண்டு மூன்று வருடங்களில் உபநயனம் நடத்துவதாகவும் வாக்களித்தாராம்.
உடனே, பெரியவா, ‘‘எதுககுப் பணம்? பூணூல் போடறதுக்கு என்ன செலவாகும்? குழந்தைக்குத் துணி, வாத்தியார் தக்ஷிணை – இந்த ரெண்டு தான் செலவு’’ என்று சொல்லி, அடுத்த முகூர்த்த நாளிலேயே அந்தப் பையனுக்குப் பூணூல் போடுமாறு ஏற்பாடு செய்தாராம்.
பெரியவா வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு. அவர் வலியுறுத்தியது சாஸ்திரப்படியான வாழ்க்கையை மட்டுமே தானே தவிர, அதற்காகச் செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளை அல்ல.
சாஸ்திரப்படி வாழ்வது என்பதே எளிமையாக வாழ்வது தான் என்பதை அவர் பெரிதும் வலியுறுத்தினார்.
பெரியவாளின் ஒட்டுமொத்த வாழ்வும் நமக்குத் தரும் செய்தியை ‘‘எளிமை’’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி விடலாம். அவர் அவ்வளவு தூரம் எளிமையாக வாழ்ந்தவர், பிறரும் அவ்வாறே வாழ்வதற்கு ஊக்கம் தந்தவர்.
பெரியவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைதிகர்களுக்கு தக்ஷிணை, சம்பாவனை முதலியவை முறையாகத் தரப்படுகின்றனவா என்பதை அடிக்கடி விசாரித்துத் தெரிந்து கொள்வார். அவரைப் பொறுத்த வரை வைதிகர்களின் ஜீவாதாரம் மிக முக்கியமானது. வைதிகர்கள் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த பெரியவாளின் கண்ணோட்டம் இந்த இடத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
மடத்துடன் தொடர்புடைய வைதிகர் யாருக்காவது பெண் குழந்தை பிறந்து விட்டால், உடனேயே பெரியவாளுக்கு அந்தக் குழந்தையின் திருமணத்துக்கான பணத் தேவை குறித்த பொறுப்பு தொற்றிக் கொள்ளுமாம். குழந்தை பிறந்த செய்தி பெரியவாளுக்குத் தெரிந்த பின்னர் மடத்துக்கு வரும் செல்வந்தர் கொடுத்து வைத்தவர். அவரிடம் பெரியவா தாமாகவே முன்வந்து தானம் கேட்பார். ‘‘அவனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு. கிடைக்கிற தக்ஷிணையில ஏதோ காலட்சேபம் பண்ணிண்டு இருக்கான். பெண் குழந்தைக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா? அதுக்கு ரொம்பச் செலவாகுமே! பணத்துக்கு எங்கே போவான் அவன்? நீ ஒண்ணு பண்ணு, அந்தக் குழந்தை பெயர்ல ஒரு ரெண்டாயிரம் ரூபா பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட் போட்டுடு. அதை வச்சு கல்யாணச் செலவை அவன் சமாளிச்சுப்பான். உனக்கும் ரொம்பப் புண்ணியம் கிடைக்கும்’’ என்று சொல்லுவார்.
இரண்டாயிரம் ரூபாய் என்பது காலப்போக்கில் – விலைவாசி ஏற்றத்தின் காரணமாகவும், வட்டி விகிதம் குறைய ஆரம்பித்தது காரணமாகவும் – வளர்ந்து, அதிகபட்சமாக, பத்தாயிரம் ரூபாய் ஆனது.
அந்தப் பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும்போது இந்தப் பணம் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு ரூபாயாகக் கைக்குக் கிடைக்குமோ, அந்தத் தொகைக்குள் திருமணச் செலவு இருந்தால் போதுமானது என்பதே பெரியவாளின் அபிப்பிராயம். இதை எத்தனையோ அன்பர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். இப்போதும் அதேபோல ஏராளம் பேர் இருக்கத் தான் செய்கிறார்கள்.
வேதத்தின் அடி வேருக்கு நீர் ஊற்றியவர் பெரியவா என்று பெரியவாளைக் கொண்டாடுகிறோம். அப்பேர்ப்பட்ட பெரியவா வேதம் சொல்பவர்களின் குடும்பப் பொருளாதாரம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கருதினார். அவர்கள் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது என்பதைப் பெரியவா ரொம்பவே வலியுறுத்தி வந்தார்.
ஆசாரம் என்ற பெயரில் உணவுத் தூய்மையை வலியுறுத்தியவர் பெரியவா என்று சொல்லும் போது, பெரியவா வலியுறுத்திய உணவுப் பழக்கம் மிகவும் எளிமையானது என்பதையும் சேர்த்தே நினைக்க வேண்டும். உணவுப் பழக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கையும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதே அவர் வலியுறுத்திச் சொன்ன கருத்து.
உணவுக் கட்டுப்பாடுகள் பிராமணனை மற்ற ஜாதியினரிடம் இருந்து பிரித்து விடும், பிராமணன் தனியாக உணவு சாப்பிடுவதை மற்றவர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் என்று யாராவது பெரியவாளிடம் முறையிட்டால், ‘‘உனது உணவு எளிமையாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வித்தியாசமான எண்ணம் தோன்றாது. உனது உணவுக் கட்டுப்பாட்டையும் ஆசாரத்தையும் அவர்கள் மதிக்கவே செய்வார்கள்’’ என்பதே அவர்களுக்குப் பெரியவா தரும் பதில்.
பெரியவா வலியுறுத்திய சாஸ்திரம் என்பது மற்றவர்களிடம் இருந்து பிரிந்து போவது அல்ல, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய எளிமை, ஒழுக்கம், நாவடக்கம், புலன் கட்டுப்பாடு, சுயநலமின்மை முதலியவையே.
ஒருமுறை தரிசனத்துக்காக வந்திருந்த ஓர் இளம் பெண், பெரியவாளை நமஸ்கரிக்கும் போது, தனது துக்கத்தின் பாரம் தாங்காமல், குலுங்கிக் குலுங்கி அழுதாராம். குடும்ப வறுமையின் காரணமாக வரதக்ஷிணை கொடுக்க முடியாததால் அந்தப் பெண்ணுக்கு வரன் எதுவும் அமையவில்லை என்பதே அவளது மன வேதனைக்குக் காரணம்.
அன்று மாலை உபன்னியாசம் பண்ணும் போது, பெரியவா, அந்தக் காலத்தில் நிலவி வந்த வரதக்ஷிணைக் கொடுமையைப் பற்றி விளக்கினார். அதனால் பல்வேறு குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கிய பெரியவா, வரதக்ஷிணைக்கு சாஸ்திர அனுமதி கிடையாது, காஞ்சி மடத்தின் அனுமதியும் கிடையாது, வரதக்ஷிணை வாங்கித் திருமணம் செய்பவர்கள் ‘‘காஞ்சிப் பெரியவா ஆசியுடன்’’ என்று திருமணப் பத்திரிகையில் அச்சிட வேண்டாம், அவர்களுக்கு என்னுடைய ஆசிகள் கிடையாது என்று தெரிவித்தாராம்.
அனேகமாக, தமது வாழ்க்கையில் பெரியவா பயன்படுத்திய மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகம் இதுவாகத் தான் இருக்கும். ஜகத்குருவான அவர் ‘‘ஒருசிலரை ஆசீர்வதிக்க மாட்டேன்’’ என்று சொல்வது எவ்வளவு கொடூரமான வார்த்தை!
சாஸ்திரம் என்ற பெயரால் மனிதர்கள் செய்து வந்த கொடுமைகளைத் தான் பெரியவா இவ்வளவு கடுமையான விதத்தில் கண்டித்திருக்கிறார்.