நம் பீடாதிபதிகள் என்ன செய்கின்றனர்?
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
சாதாரணமாக நம் சனாதன தர்மத்தில் எந்த ஒரு எதிர்மறை சம்பவம் நேர்ந்தாலும் நம் பீடாதிபதிகள் என்ன செய்கிறார்கள்? என்று உடனே கேள்வி கேட்போம்.
ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் முயற்சியை எத்தனை பேர் செய்கிறோம்?
முதலாவதாக பீடாதிபதிகளின் கடமை பாரம்பரியமான மடத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பது, சம்பிரதாயத்தை கடைபிடிப்பது, அவற்றின் எல்லைகளை மீறாமல் இருப்பது போன்றவை. இதற்குக்காரணம் இவை சாஸ்திரம் விதித்தவை. அவற்றை இன்றளவும் கடைபிடிக்கிறார்கள். அதுவே முக்கியம்.
தம் அனுக்ரக உரைகள் மூலம் தர்மத்தையும் ஞானத்தையும் போதிப்பது அவர்களின் மற்றுமொரு முக்கிய கடமை. அதனை நிறைவாக செய்துகொண்டு வருகிறார்கள். பலரும் அவர்களிடமிருந்து கற்று வருகிறார்கள்.
மடங்களில் செய்ய வேண்டிய பூஜைகள், அனுஷ்டானங்கள் போன்றவற்றை சரியாக நிர்வகித்து, அதன் மூலம் தெய்வ சக்தியை பரப்புகிறார்கள். ஹிந்துவாக இருப்பவர் முதலில் இந்த ஹிந்துத்துவ முறைகளின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவற்றின் பலன்களை உணர வேண்டும்.
தர்மத்தையும் ஞானத்தையும் போதிக்கும் சாஸ்திரங்களிள் நிபுணர்களாக உள்ளவர்களை சன்மானம் செய்து உற்சாகப்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் அவை தழைக்கும்படி பீடாதீஸ்வரர்கள் அனுக்ரஹம் செய்வார்கள்.
தியாகத்தோடு சுயநலமின்றி யதி தர்மத்தை கடைப்பிடித்து, உலக நன்மைக்காக மட்டுமே தம் தவச்சக்தியை மெளனமாக தாரை வார்க்கிறார்கள் பீடாதிபதிகள்.
மடங்களின்நிர்வாகத்தின் கீழ் பல கல்வி அமைப்புகள், மருத்துவ அமைப்புகள் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்தி பலருக்கும் கல்வியும் ஆரோகியமும் அளித்து வருகிறார்கள். அந்த சேவைகளை மதத்தோடு தொடர்பின்றி மதமாற்றங்கள் செய்யாமல் அனைவருக்கும் அளிப்பது ஹிந்து மத பீடங்களின் தனிச்சிறப்பு.
பரிவ்ராஜக தர்மத்தை அனுசரித்து திக்விஜய யாத்திரைகள் செய்து, பலருக்கும்ஊக்கமளித்து தர்ம போதனை செய்துவரும் அவர்களின் ஞானச் சேவை அபாரமானது. அவை நூல்களாகக் கூட வெளிவந்து உள்நாட்டு, வெளிநாட்டு மேதைகளால் படித்து பயிற்சி செய்யப்படுகின்றன.
சில பீடங்களின் சம்பிரதாயத்தில் அரசியல், சமூகத் தலையீடுகளைஅனுமதிப்பதுண்டு.அதனை அனுசரித்து நடந்து வரும் மகாத்மாக்களான பீடாதிபதிகள் பலர் உள்ளனர். நல்ல ஆட்சி, நீதிநெறி, வெறுப்பு இல்லாமல் அனைவரின் நலனையும் நாடும் யோகிகளின் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள்.
இன்னும் சில சம்பிரதாயங்களில் அரசியல், சமுதாயப் புரட்சிகளின் பக்கம் போகாமல், ஆர்பாட்டம் இல்லாமல், பிராசாரம் கூடசெய்யாமல் பல தார்மீக சேவைகள் மட்டும் செய்துவரும் பீடங்கள் கூட உள்ளன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தடையின்று தொடர்ந்துவரும் பரம்பரை கொண்ட பல சம்பிரதாய பீடங்கள் பல தாக்குதல்களையும், அழிவுகளையும் எதிர்கொண்டும்கூட கலங்காமல்நின்றுள்ளன.அவற்றின் மூலம் பல மகான்கள் தம் திவ்ய சரித்திரங்களையும் வெற்றிகளையும் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமூட்டும் விதமாக அளித்துச் சென்றுள்ளனர்.
சம்பிரதாயங்கள் பற்றிய புரிதல் இல்லாதவர்கள், சாஸ்திரங்களை அத்யயனம் செய்யாதவர்கள், அரைகுறை அறிவோடு சீர்திருத்தம் என்ற பெயரில் தர்மத்தின் சொரூபத்தை உணராமல் பீடங்களின் மிகப் பெரும் செயல்களையும் அவர்களின் மௌன தவத்தின் பலன்களையும் பார்க்க இயலாதவர்களாக உள்ளனர்.
மறுபுறம்… பிற மத அமைப்புகளின் வழிக்குச் செல்லாத அரசியல் தலைவர்கள் ஹிந்து கோவில்களின் அமைப்புகளை தாறுமாறு செய்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்பில்லாததும் புரிதல் இல்லாததுமானகோவில்களின் சாஸ்திர விஷயங்களில் பீடாதிபதிகளை கலந்தாலோசிக்க வேண்டும் என்றோ அவர்கள் கூறியபடி நடந்துகொள்ள வேண்டும் என்றோ அடிபப்படை அறிவு கூட இல்லாத தலைவர்கள் சுயநல அரசியல் பயன்களுக்காக இஷ்டம் வந்தாற்போல் நடந்துகொள்கிறார்கள். நாத்திக மேதாவிகளும் நாத்திக அரசாளுபவர்களும் ஆத்திக வழிமுறையான கோவில்களின் விஷயத்தைப் பற்றி பேசுவது தகாது என்ற இங்கித ஞானம் அவர்களுக்கோ பொது மக்களுக்கோ கூட இல்லாதது வியப்பை அளிக்கிறது.
நம் பீடங்களின் மதிப்பை நாம் தெரிந்து கொண்டு, அவைகளின் கட்டுப்பாட்டிலேயேஹிந்து மதத்தின் அனைத்து செயல்முறைகளும்மையம் கொண்டிருக்கும் விதமாக நாம்செயல்பட்டு இயங்க வேண்டும். எந்த கோவில்எந்த பீடத்தின் சம்பிரதாயத்தின் கீழ் உள்ளதோ, அந்த பீடாதிபதிகளின் மேற்பார்வையில் அந்த ஆலயம் இருக்கவேண்டும். பண்டைய பாரம்பரியம் கொண்ட பீடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதில் அனைத்து பீடங்களின் இடையிலும் பரஸ்பர சமரசம், ஒருங்கிணைப்பு, கௌரவம்போன்றவை இருக்கவேண்டும்.
முதலில் ஹிந்துக்களைவரும் மடங்களின் அமைப்பில் உள்ள வரலாற்றையும் சிறப்பையும் உணர்ந்தால்தான் இவை சாத்தியமாகும். தர்மத்தைக் காக்கும் நிலையங்களான பீடங்களை கலந்தாலோசிக்காமல் ஹிந்து மத அமைப்புகளைப் பற்றி முடிவு எடுக்கக் கூடாதென்பதை மக்களே ஓட்டு பலத்தோடும் போராட்டத்தோடும் அரசாங்கத்திற்குப் புலப்படுத்த வேண்டும்.
பலப் பல எதிர்ப்புகள், தடைகளுக்கு இடையிலும் தவ சக்தியோடும் தர்மத்தின் பலத்தோடும் ஞானஒளியோடு பிரகாசிக்கும் பீடங்களுக்கும் பீடாதீஸ்வரர்களுக்கும் பிரணாமங்களை சமர்பிப்போம்.
(ருஷிபீடம் தலையங்கம் செப்.2021)