October 20, 2021, 11:50 am
More

  ARTICLE - SECTIONS

  பாரதி-100: பதினொன்றாம் எண்ணும் பாரதியாரும்!

  "நாம் எப்படி வாழலாகாது தெரியுமா…? வேடிக்கை மனிதனாக வாழலாகாது - வாழ மாட்டேன்!" என்கிறார் பாரதி ..

  bharathi-neelakanda-brahmachari
  bharathi-neelakanda-brahmachari

  பதினொன்றாம் எண்ணும் பாரதியாரும்
  – கே.ஜி. ராமலிங்கம் –

  ஏகாதச ருத்ர சக்தி சிவனுக்குரிய ஒன்றாகும், அதாவது பதினோறு பேர் பதினோறு முறை உச்சாடணனம் செய்வார்கள். அதன் எண்ணிக்கை பதினொன்று, பதினொன்றாம் எண்ணை சஹன் (11,21,51,101,1001…) என்று வடநாட்டில் செல்வார்கள், ஏகம், த்ரயம், பஞ்சமம், சப்தமம், நவமம், ஏகாதசம், ஆம் எதிலும் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் என்ற நியதி காலங்காலமாக நாம் பின்பற்றிக் கொண்டு வருகிறோம்.

  ஆம்… மகாகவி பாரதியாரும் ஒரு விதத்தில் ஏகாதச ருத்திரரே…. அவருடைய கவிதைகள் ஆம்… அதை ஏற்ற இறக்கத்தோடு ராக தாள பாவத்தோடு உச்சரிப்பவர்கள் நாவில் ருத்ர (ரெளத்ரம்)தாண்டவம் ஆடுவதைப் பார்க்க முடியும்.

  இவையெல்லாம் கைவர வேண்டுமா …?
  ரௌத்திரம் பழகு !! ” என்கிறான் பாரதி.

  பாரதி ஒரு அம்பாள் உபாசகர், ஆம்….
  பாரதி கடையம் வந்தால் அங்கு அருள்புரியும் நித்யகல்யாணி அம்பாளிடம் சென்று தனிமையில் அளவுளாவார், ஆம் அபிராமி பட்டரைப் போல….

  “ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
  மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.”
  – அபிராமி அந்தாதி

  “நாம் எப்படி வாழலாகாது தெரியுமா…? வேடிக்கை மனிதனாக வாழலாகாது – வாழ மாட்டேன்!” என்கிறார் பாரதி ..

  வேடிக்கை மனிதன் என்றால் என்ன அர்த்தம்? யார் வேடிக்கை மனிதன்?

  தேடிச் சோறுநிதந் தின்று சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து – நரைகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

  ‘தேடிச் சோறுநிதந் தின்று’ என்றார்! பாரதி மாதிரி, சில வார்த்தைகளை – சாதாரண வார்த்தைகளை வலிமையோடு தூக்கிப் போட்டவர்கள் கிடையாது. காரணம் என்னவென்றால், அம்பாள் உபாஸ்கராக இருக்கக் கூடியவர்களிடத்தில் மிகச் சாதாரண வார்த்தைகள்கூட பெரிய சக்தியோடு, வலிமையோடு வரும். அந்த மாதிரி வந்து விழுந்தது அந்த வார்த்தை!

  சோறு ‘உண்டு’ என்று சொன்னால் அது நாகரிகமாக இருக்கும். ‘தின்று’ என்று குறிப்பிடுகிறபோது, அது எப்படி இருக்கிறது..? அந்த வார்த்தையைச் சொல்லும்போதே அது மனிதர்களுக்கான சொல் அல்ல என்று தெரிகிறது. மனிதர்களைப் பற்றிப் பேசும்போது, ‘தின்பார்கள்’ என்று நாம் சொல்வதில்லை. தின்னுகிற செயலுக்குரியது எது என்பது நமக்குத் தெரியும்!

  தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி.! பெரிய கதையாகப் பேசுவதற்குக்கூட பொறுமை கிடையாது! குட்டிக் குட்டிக் கதையாகப் பேசி, நடுவிலே கொஞ்சம் நேரம் தூக்கம் போட்டு, திரும்பவும் எழுந்து… மனம் வாடப் பல செயல்கள் செய்து – தன்னுடைய மனசும் வருத்தப்பட்டு,
  பிறர் மனசும் வருத்தப்பட்டு வாடுகிற மாதிரி பல செயல்கள் செய்யாமல்

  நரைகூடிக் கிழப் பருவம் எய்தி – நரை கூடுவதும் கிழப்பருவம் எய்துவதும் நாம் பிரயத்தனப்படுவதால் நடப்பவை அல்ல; தாமாகவே நடக்கிற விஷயங்கள் ..

  கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதர்…

  ஒரு வேடிக்கை மனிதனாக நான் வாழ்ந்துவிடுவேன் என்று நினைத்தாயோ பராசக்தி? அப்படி நான் வாழக்கூடாது! என்று கேட்டவர், அந்த பராசக்தி எப்படி இருப்பாள் என்பதற்கும் ஒன்று சொன்னார்:

  எனக்கு ஒருவேளை துன்பம் நேர்ந்தால் அதைத் துடைக்கவே – இப்படி..?

  “பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ ” பாரதியை மாதிரி வேறு யாரும், துன்பங்களைப் ‘பஞ்சு’ என்று பாடியது இல்லை .., ‘மலை போல் துன்பம் ” என்றே சொல்வார்கள்.

  பாரதிதான் பஞ்சுக்கு நேர்’ என்றார். காரணம் என்ன தெரியுமா…? ‘இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ பராசக்தியினுடைய பார்வை பெருந்தீயாக இருக்கிறபோது, நெருப்புக்கு முன் பஞ்சாகி விடுகின்றன துன்பங்கள். அவ்வாறு அவை அழிந்து போக என்ன செய்ய வேண்டும்…? ‘தஞ்சம் என்றே உரைப்பீர்!’ பராசக்தியிடம் தஞ்சமடைய வேண்டும். எவ்வாறு…? வஞ்சயனையின்றி பகையின்றிச் சூதின்றி அவள் பாதங்களில் சரணடைய வேண்டும் ..

  bharathiar-1
  bharathiar-1

  நெஞ்சில் வஞ்சமில்லாமல் செய்கிறபோது, அந்த சக்தியாக இருக்கக்கூடியவன் லோக ஜனனியாக இருக்கக்கூடியவள் எல்லாவிதமான நன்மைகளை நமக்குத் தருவாள்.

  இதுதான் அம்பாளை ஆராதிப்பவர்கள் அனுபவபூர்வ ரீதியாகச் சொல்லியிருக்கிற உண்மை. அபிராமி பட்டர், பாரதி எல்லாருமே அதே தான் பராசக்தியின் உபாஸகர்கள்தான்.

  பாரதி பிரேமையுடன் உறுதியாகவும், தெளிவாகவும் நானும் கேட்கிறேன் என்று எழுதிய வரிகள் தான்

  “நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
  முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
  மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
  என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
  கேதுங் கவலையறச் செய்து – மதி
  தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்…
  என்று சொன்ன பாரதியார்

  “எண்ணிய முடிதல் வேண்டும்
  நல்லவை யெண்ணல் வேண்டும்
  திண்ணிய நெஞ்சம் வேண்டும்
  தெளிந்தநல் லறிவு வேண்டும்
  பண்ணிய பாவமெல்லாம்
  பரிதிமுன் பனியே போல
  நண்ணிய நின்மு னிங்கு
  நசித்திடல் வேண்டு அன்னாய்..!!”
  என்று மகாசக்திக்கு ஒரு விண்ணப்பமும் வைக்கிறார்…

  புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின.

  புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என செல்லம்மாள் பாரதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
  ரௌத்திரம் என்பது என்ன ?

  தனக்கும், கண் முன்னே பிறர்க்கும் இழைக்கப்படும் கொடுமையக்
  கண்டும் எழாதிருப்பவன் பேடி.
  எதிர்க்கும் துணிவின்றி தன்னுள்ளே உழன்று தன்னைத்தானே அழித்துக் கொள்ளச் செய்வது ஆத்திரம்…சினம்.

  அநீதியைக் காணும்பால் பொங்கியெழுந்து தட்டிக் கேட்பதே ரௌத்திரம்!!

  ஆத்திரம் அறிவற்றது, விவேகத்துடன் கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம் !!

  ரௌத்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரணுவிலும் இருக்கவேண்டும்

  “சிதையா நெஞ்சுகொள்
  செய்வது துணிந்து செய்
  தீயோர்க் கஞ்சேல்
  தொன்மைக் கஞ்சேல்
  நேர்படப் பேசு
  கொடுமையை எதிர்த்து நில்
  சாவதற்க் கஞ்சேல்
  நையப் புடை
  நொந்தது சாகும்
  பேய்களுக் கஞ்சேல்
  போர்த்தொழில் பழகு.”

  தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு அய்யர் வழியில் பாரதியின் நிலைமையறிந்து, போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்து உட்கொள்ள மறுப்பதைச் சொல்லவும். “பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.”

  ” பகைவனுக்கும் அருள் செய்” என்று சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!

  கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம், ”யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் அதுக்கு இரக்கம் அதிகம் தான். இல்லை என்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா…!!!”

  ஆதனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.

  பாரதியாருக்குப் பிடித்த எண் பதினொன்றோ என்றால் அது வியப்புக்குரியது, காரணம் கவிஞரின் பிறப்போ டிசம்பர் 11, கடைசியில் அவரை காலன் அழைத்துக் கொண்ட தினமும் செப்டம்பர் 11, ஆம் அந்த பதினொன்றாம் தேதியிலும் பதினோறு பேர்கள் தான் ஆம்…. பாரதியின் கடைசி யாத்திரையில் – மாதம் தேதி கணித்தே கவிஞரை காலன் அழைத்துள்ளான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

  குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தனர். இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.

  மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?

  உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை ஏது?

  வாழ்க நீர்….. எம்மான்….!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,567FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-