― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்பாரதி-100: பாரதியாரின் பரசிவ வெள்ளம் (2)

பாரதி-100: பாரதியாரின் பரசிவ வெள்ளம் (2)

- Advertisement -
subramania bharati 100 1

பாரதியாரின் “பரசிவ வெள்ளம்” – 2
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாரதியாரின் பாடலுக்கு விளக்கம் தரவேண்டிய அவசியமே இல்லை. அவர் அவ்வளவு எளிமையாகக் கவிதைகள் புனைந்தவர். பாரதியாரின் சீட்டுக்கவிகளுள் ஒன்றில்

கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!
சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ?

என்று எழுதியுள்ளார். முதல் மூன்று வரிகளில் எந்தக் குழப்பமும் இல்லை. நான்காவது வரிக்கு மட்டும் ஒரு சிறிய விளக்கம் தேவைப்படுகிறது. ‘எல்லினைக் காணப் பாயும் இடபம்போல்’ என்பதற்கு ‘சூரியன் உதித்ததும் உழவுத்தொழில் செய்ய எழுந்து ஓடும் காளைபோல’ எனப் பொருள் கொள்ளவேண்டும். இதைப் போலவே ‘பரசிவ வெள்ளம்’ என்ற இந்தக் கவிதையின் தலைப்பின் பொருளைப் புரிந்துகொண்டால் கவிதை பாதி புரிந்தது போலத்தான்.

‘பரசிவ’ என்றால் ‘வெளியில் இருக்கும் கடவுள்’ எனப் பொருள். வெள்ளம் என்றால் ‘நீரின் மிகுதி’ என்றும் ‘உண்மை, என்றும் பொருள்கொள்ளலாம். இங்கே நாம் இப்பாடல் தலைப்பின் பொருளாக ‘நமக்கு வெளியே இருக்கும் உண்மை வடிவமான கடவுள்’ எனப் பொருள் கொள்ள வேண்டும். இனி கவிதையின் விளக்கத்தைக் காண்போம்.

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே (1)

விளக்கம் – உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற அனைத்திலும் உண்மையான பொருள் உண்டு. அதனை மறைநூல் ஓதிய நல்லோர் தெய்வம் என அழைப்பர்.

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே (2)

விளக்கம் – நாம் காணும் பொருட்களின் அனைத்திலும், மனதில் நினைக்கின்ற எல்லாவற்றிலும், நாம் நமக்கென சேர்த்து வைப்பது அனைத்தும் அந்த உண்மை எனப்படும் தெய்வத்திலேதான் பிறக்கிறது.

எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய். (3)

விளக்கம் – இந்தத் தெய்வத்திற்கு எல்லை என்பது இல்லை. (எல்லையொன்று இன்மை என்பதை தமது பாடல்களில் கம்பர் காட்டினார் என்று வேறு ஒரு இடத்தில் பாரதியார் பாடுவார்). தெய்வத்திற்கு எதன்மீதும் பற்று இல்லை. அறிஞர்கள் இறைவன் இருக்கின்றானா? இல்லையா? என்று சந்தேகம் கொள்ளக்கூடிய வகையில் இந்த இறைவன் இருக்கிறான்.

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். (4)

விளக்கம் – இறைவன் வெட்டவெளியாக இருக்கிறார். வேறு பல சக்திகளைக் கொட்டுகிற மழைமுகிலாய் இருக்கிறார். மழை முகில் நீரைத் தருகிறது; நீர் ஆறாய் பெருகுகிறது; ஆற்று நீரிலிருந்து உழவுத்தொழில் நடைபெறுகிறது; அதன் மூலம் பெறும் விளைபொருட்களை உண்ணும் உயிர்கள் சக்தி பெறுகின்றன. ஆற்றுநீர் மின்சக்தியைத் தருகிறது. இதை அனைத்தயும் வேறு பல சக்திகளைக் கொட்டும் முகில் எனச் சொன்னதில் வியப்பில்லை. அடுத்த வரியில் ‘அணுக்கள் கூடிப் பிரிப்பதாய்’ என அணு சக்தி பற்றியும் பேசுகிறார்.

தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி (5)

subramanya bharathi

விளக்கம் – கண்ணுக்குத் தெரிகின்ற பொருளாய் அதாவது உருவமாய், கண்ணுக்குத்தெரியாத அருவமாய், அந்தக் கண்ணுக்குத் தெரியாத சூட்சமத்திற்கு மிகவும் பொருந்தியதாய், அதன் தன்மை எல்லாம் பொருந்தியதாய் உள்ளவன் இறைவன்.

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. (6)

விளக்கம் – தனக்கென ஒரு நிரந்தரமான தன்மை ஒன்றினைக் கொள்ளாதவன். தானே ஒரு பொருளாய் இருப்பவன் அவன். பல குணங்களை உடையவனாய் இருப்பவன். பல பொருட்களாய் இருப்பவன் இறைவன்.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே (7)

விளக்கம் – எல்லா இடத்திலும் இருப்பவன். எந்த ஒரு செயலையும் செய்ய வல்லவன். எல்லாவற்றையும் அறிந்துள்ளவன். இந்த உலகத்தில் உள்ள பல மதங்களும் இதனையே சொல்லுகின்றன.

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே. (8)

விளக்கம் – அவனை வேண்டுபவர்கள் வேண்டுகின்ற பொருளாக விளங்குபவன். விரும்புகின்றவர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற பொருளாய் இருப்பவன். அதனை ஈட்டுவதற்கு உள்ள சக்தியாயும் இருப்பவன் இறைவனே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. (9)

விளக்கம் – காண்பவர்கள் காண்கின்ற காட்சியாய், காண்கின்றவர்களாய், அவர்கள் காணுகின்ற பொருளாய் சிறப்புடையவனாய் இருக்கின்ற அந்த இறைவனை எப்படி வகுத்துச் சொல்வது?

எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. (10)

விளக்கம் – எல்லாப் பொருளும் அவனாகி இருந்தபோதிலும் அவனை அறிய வல்லவர்கள் சிலரே. அவனை அறிபவர்கள் உண்மை எல்லாம் அறிந்தவர்கள்.

மற்ற பாடல்களை நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version