~ கே.ஜி. ராமலிங்கம் ~
இன்று மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நன்னாள் மட்டுமல்ல, ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற தாரக மந்திரத்தை ஒலிக்கச் செய்த முன்னாள் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள். கறுப்பு காந்தி அவர்களின் நினைவு நாள்.
திரும்ப வராத பணம்; வராக் கடன் loan that will not be paid back காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட நாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று விசாரித்தபோது… மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.
காந்தியிடம் கணக்கு கேட்ட தமிழனும்
காந்தி கணக்கும்!
கணக்கு கேட்பது என்பது காலங்காலமாக நடந்து வருகிற நிகழ்வு. அந்த வகையில் நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
காந்தியிடம் கணக்கு கேட்ட தமிழன் ஜெ.சி.குமரப்பாவை அறிவோமா? காந்தியிடமே கணக்குக் கேட்ட குமரப்பா யார்?
1934-ஆம் ஆண்டில், பிகார் மாநிலம் நில நடுக்கத்தால் சிதைந்து போனது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக காந்தி களத்தில் இறங்கினார். ராஜேந்திர பிரசாத் இந்த நிவாரணப் பணிகளைக் கவனித்துக் கொண்டார்.
ஆனால், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக இருந்ததால், ராஜேந்திர பிரசாத்தால் மட்டும் தனியாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. ஜமன்லால் பஜாஜை ராஜேந்திர பிரசாத்துக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார் காந்தி. பஜாஜ் குமரப்பாவின் உதவியை நாடினார். நிவாரண பணிகளுக்கான நிதி நிர்வாகத்திற்கான ஆலோசகராக குமரப்பா நியமிக்கப்பட்டார்.
காந்தி கணக்கு: குமரப்பா பண விஷயத்தில் கறாரானவர் . ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருப்பார், கணக்கும் கேட்பார்.
பிகார் நிவாரணப் பணி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் செலவுக்கு தலா மூன்று அணாக்களை குமரப்பா ஒதுக்கினார்.
அந்த சமயத்தில் நிவாரணப் பணிகள் தொடர்பான ஒரு கூட்டத்திற்காக காந்தி பாட்னா சென்றார். காந்தியுடன் அவரது அலுவலர்களும் சென்றார்கள். இந்த சூழலில் காந்திக்கான செலவு கணக்கு மூன்று அணாக்களை எட்டியது. இந்த விஷயம் குமரப்பாவில் காதுகளை எட்டியது.
குமரப்பா காந்தியின் தனி செயலாளரான மகாதேவ் தேசாயை அழைத்து, ”நிவாரண நிதியிலிருந்து காந்திக்காக, அவரது அலுவலர்களுக்காக செலவு செய்ய முடியாது. “ஒரு நபருக்கு மூன்று அணாக்கள்தான் ஒதுக்கி இருக்கிறோம். ஆனால், காந்திக்கான செலவு மூன்று அணாக்களுக்கு மேல் போகிறது. அதனால், பணம் தருவது சிரமம். அதுமட்டுமல்ல, காந்தியின் வாகனத்திற்கான எரிபொருள் செலவுக்கு நீங்கள் மாற்று வழியைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கறாராகச் சொல்லி விடுகிறார்.
இந்த விஷயம் காந்திக்கு சொல்லப்படுகிறது. காந்தி குமரப்பாவை அழைத்து விசாரிக்கிறார். ஆனால், அப்போதும் குமரப்பா தனது முடிவில் தீர்க்கமாக இருந்து நிதி சுமை குறித்து விவரிக்கிறார்.
“இந்த நிதி மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி அதனைச் சிக்கனமாகச் செலவு செய்ய சில விதிகளை வகுத்திருக்கிறோம். அந்த விதி எல்லாருக்கும் பொருந்தும்.” என்கிறார்.
காந்தியும் இதனை ஒப்புக் கொள்கிறார்.
கீழ் தஞ்சையிலிருந்து அமெரிக்காவுக்கு
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில்1892 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோசப் கொர்னிலியஸ் குமரப்பா. இவது தந்தை எஸ்.டி.கொர்னிலியஸ் சென்னை மாகாணத்தில் பொதுப் பணித் துறையில் பணியாற்றியவர்.
லண்டன், அமெரிக்கா என பல்வேறு இடங்களில் பயின்று, தணிக்கையாளராக பணியாற்றியவர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருக்கும் போது, அவர் ஆற்றிய, “ஏன் இந்தியா ஏழ்மையில் உழல்கிறது?” என்ற உரைதான் அவர் வாழ்க்கையை மாற்றுகிறது. இந்த உரை அமெரிக்காவில் ஒரு நாளிதழில் பிரசுரமாகிறது. அந்த உரையைப் படித்த அவரது ஆசிரியர், இந்த தலைப்பிலேயே அவரது முதுகலை படிப்பிற்கான ஆய்வை மேற்கொள்ளச் சொல்கிறார். இந்த ஆய்வுதான் அவர் வாழ்க்கையையே மாற்றுகிறது. பிரிட்டன் இந்தியாவைச் சுரண்டுகிறது என்ற முடிவுக்கு வந்த அவர், அதுவரை தான் நம்பிய பொருள்வயமான சித்தாந்தத்தை மாற்றிக் கொள்கிறார். அதனுடன் தம் வாழ்க்கை முறையையும்.
காந்தி – குமரப்பா சந்திப்பு
“நீங்கள்தான் காந்தியோ?” “நீங்கள்தான் குமரப்பாவோ?”
ஏதோ கட்டபொம்மன் பட வசனம் போல உள்ளதா? உண்மையில் இருவருக்குமான உரையாடல் இப்படியாகத் தான் இருந்ததாக விவரிக்கிறது காந்திய ஆய்வு அறக்கட்டளையின் இணையதளம்.
காந்தி முதல்முறையாக குமரப்பாவை சந்திக்கும் போது காந்தி குமரப்பாவை அறிந்திருக்கவில்லை. இது முக்கியமல்ல. குமரப்பாவுக்கும் காந்தியை தெரியவில்லை.
இவர்களது முதல் சந்திப்பானது சபர்மதி ஆசிரமத்தில் நடந்ததாகக் கூறுகிறது காந்திய ஆய்வு அறக்கட்டளையின் இணையதளம்.
சபர்மதி ஆசிரமத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து காந்தி ராட்டை சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் குமரப்பாவுக்கு அதுதான் காந்தி என தெரியவில்லை. ஏறத்தாழ ஐந்து நிமிடங்கள் அங்கேயே நிற்கும் குமரப்பாவை பார்த்து காந்தி நீங்கள்தான் குமரப்பாவா என்கிறார். “குமரப்பாவும் நீங்கள்தான் காந்தியா?” என்கிறார்.
காந்தி குமரப்பா இடையேயான ஆழமான நேசம் இப்படிதான் தொடங்கியது.
ஒரு நாள் பண்டிட் மதன் மோகன் மாளவியா காந்தியிடம் குமரப்பாவுக்கு சிறப்பான பயிற்சியை வழங்கி இருப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காந்தி, “நான் குமரப்பாவுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பே எல்லாம் கற்று முழுமையாக வந்தார்” என்கிறார்.
இரு உடல் ஒரு சிந்தனை காந்தி, குமரப்பா என சரீரம் வேறாக இருந்தாலும், இருவரும் ஒரே மாதிரியாக தான் சிந்தித்து இருக்கிறார்கள். இருவரது பொருளாதார கொள்கையும் ஒன்றாகதான் இருந்திருக்கிறது. இருவரும் மையப்படுத்துதலை எதிர்த்து இருக்கிறார்கள்.
“மையப்படுத்துதல் என்பது அனைவரையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அடக்குமுறையின் ஒரு வடிவமே. பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வைத் தன் கைக்குள் வைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் வேண்டுமானால் பொருளாதாரத்திலும் ஜனநாயகத் தன்மை வேண்டும்” – இது குமரப்பா கூறியது.
“அதிகார மையம் என்பது இப்போது புது டெல்லியில் இருக்கிறது. கல்காத்தாவில் இருக்கிறது. பம்பாயில் இருக்கிறது. பெரு நகரங்களில் இருக்கிறது. நான் அந்த அதிகாரத்தை 7 லட்சம் கிராமங்களுக்கும் பிரித்துத் தர விரும்புகிறேன்” – இது காந்தி கூறியது.
இப்படியாக பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
அனைத்திந்திய கிராம தொழில் சங்கத்தின் அமைப்பாளராக குமரப்பா இருந்தபோது, தொழில் பரவலாக்கலுக்கான ஏராளமான முயற்சிகளைக் காந்தியுடன் இணைந்து எடுத்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக குமரப்பாவை நியமிக்க காந்தி விரும்பியதாகவும் கூறப்படுவதுண்டு.
காந்தி மீது பெருமதிப்பு கொண்ட குமரப்பா, காந்தி மரணித்த அதே நாளில் 1960ஆம் ஆண்டு இறந்தார்.