Home அடடே... அப்படியா? இரும்பு மனிதர் … நாம் விரும்பும் மனிதர்!

இரும்பு மனிதர் … நாம் விரும்பும் மனிதர்!

sardar vallabhabai patel
sardar vallabhabai patel

~ கட்டுரை: கமலா முரளி ~

சரித்திர பாடக் கேள்வித்தாட்களிலும், பொதுவினாடி வினா நிகழ்ச்சிகளிலும் அநேக பொதுத் தேர்வுகளிலும், ஒரு கேள்வி அடிக்கடி வந்து கொண்டே இருக்கும் : “இந்தியாவின் இரும்பு மனிதர்” என அழைக்கப்படுபவர் யார் ?

சர்தார் வல்லபபாய் படேல் !

அக்கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளவோ அல்லது அதில் ஒரு மதிப்பெண் பெறுவதற்காகவோ அறிந்து கொள்ளப்பட வேண்டிய தகவல் அல்ல !

“இன்று இந்தியா என ஒரு தேசமிருக்கிறது என நாம் சிந்திக்கவும், பெருமை பேசவும் இயலுகிறது என்றால், அது இவரால் மட்டும் தான்” என சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராஜேந்திர பிரசாத் பெருமையுடன் புகழ்ந்த “இரும்பு மனிதர்” சர்தார் வல்லபபாய் படேல் !

ஆம் ! ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து, நமது நாடு சுதந்திரம் பெற்ற போது, கிட்டத்தட்ட ஐந்நூற்று அறுபத்தாறு சமஸ்தானங்களாக இருந்த இத்துணைக்கண்டத்தை, சர்தார் வல்லபபாய் படேல் அவர்கள் தன்னுடைய உறுதியான ராஜதந்திர கொள்கை மற்றும் செயல்பாடுகளால் ஒன்றிணைத்தார்.

patelstatue2

பிரிவினைவாத சக்திகளின் வஞ்சகமும் வன்மமும் இன்றும் நம் சமூகத்தைக் கூறு போடக் காத்திருக்கும் நிலையில், இந்தியாவின் முதல் துணைப் பிரதமாரகவும், முதல் உள்துறை அமைச்சராகவும் இருந்த படேல் அவர்கள், “left hand play” என்பது போல, இரண்டே ஆண்டுகளில், அனைத்து பகுதிகளையும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்தார் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமே !

சர்தார் வல்லபபாய் படேல் 1875 ஆம் ஆண்டு, அக்டோபர் 31ம் நாள் , குஜராத்தில் நாடியாத் என்ற இடத்தில் பிறந்தார். பள்ளி இறுதித் தேர்வைச் சற்று தாமதமாகத் தான் நிறைவு ( 22 வயதில் )செய்துள்ளார். அதன் பின், வழக்குரைஞர் பணிக்கான தகுதி பெற்று, கோத்ரா மற்றும் போர்சாத் நீதிமன்றங்களில் வழக்காடி வந்தார். 1910 ம் ஆண்டு, லண்டனில் வழக்குரைஞர் மேற்படிப்பில் (பார்-அட்-லா), மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

நாடு திரும்பிய படேல், அகமதாபாத் நீதி மன்றத்தில்,குற்றவியல் வழக்குகளில் வாதிட்டு வந்தார். நாசூக்கான மேற்கத்திய உடைகள், மிடுக்கான நடை, உடை பாவனை, சாதுர்யமான, திறமையான வழக்காடும் முறை, ‘குஜராத் கிளப்’ எனும் மேல்தட்டு மக்களின் மன்றத்தில் ‘பிரிட்ஜ்’ விளையாட்டில் திறமை என, அவரது வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டம் அல்லது அரசியல் நிகழ்வுகளைச் சாராமல் தான் இருந்தது.

முதலில் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்படாமல் இருந்த, படேல் அவர்கள் மெல்ல மெல்ல சுதந்திர போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். 1917 ஆம் ஆண்டு, போர்சத் எனுமிடத்தில் சொற்பொழிவாற்றிய படேல் அவர்கள், காந்திஜியின் ஸ்வராஜ் இயக்கத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தினார். காந்தியடிகளை கோத்ரா அரசியல் மாநாட்டில் முதன்முதலாகச் சந்தித்தார். பராம்பரிய உடைகள் அணிந்து தேச சேவையில் முழுமூச்சுடன் இறங்கினார் படேல்.

அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் பொறுப்புகள் தரப்பட்டன. கேதா எனும் இடத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தைச் செம்மையாக வழி நடத்தினார் படேல். காங்கிரஸ் நடத்தும் இயக்கங்களை, போராட்டங்களை குஜராத்தில் முன்னின்று நடத்தினார்.

பெண்களுக்கான உரிமைகள், மதுவுண்ணாமை,தீண்டாமை, சாதிக் கொடுமை போன்ற சமூக பிரச்சனைகளுக்காகவும் போராடினார். அகமதாபாத் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, படேல், தனது பதவிக் காலத்தில் அகமதாபாத் நகரத்தின் முன்னேறத்துக்காக பாடுபட்டார்.

1928 ஆம் ஆண்டு, பெரும்பஞ்சத்தைக் கருத்தில் கொள்ளாமல் விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிராக,பர்தோலியில், படேல் அவர்கள் நடத்திய போராட்டமும் இயக்கமும், ஒட்டு மொத்த இந்தியாவையும் ஈர்த்தது. படேல் அவர்களின் உறுதியான செயல்பாடுகளும், போராட்டத்தை தலைமை ஏற்று, சிறப்பாக நிர்வகித்ததும் அவருக்கு “சர்தார்” என்ற பட்டப்பெயரை ஈட்டித் தந்தது.

உப்பு சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் என எல்லா போராட்டங்களையும் முன்னின்று நடத்திய சர்தார், காந்திஜியின் நம்பிக்கை பெற்ற தலைவராவார்.

patel statue modi amitsha vijayrupani

தலைமைப்பண்பும்,எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியான குணமும் அவரை செல்வாக்கு மிக்க தலைவராக உருவாக்கியது. மும்பையில் அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரை பல்லாயிரக் கணக்கானோரை, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட வைத்தது.

விடுதலைக்குப் பின் துண்டு துண்டுகளாக ஆகாத, “சேதமில்லா” இந்தியாவை உருவாக்கியதே, சர்தார் படேலின் மகத்தான பணியாகும்.

இந்தியக் குடியுரிமைப் பணிகள் துறையை முறைப்படுத்திய பெருமை சர்தார் படேல் அவர்களையே சாரும்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ம் நாள் விண்ணுலகப் பதவி அடைந்த சர்தார் அவர்களின் உயிரிழப்பு அனைவரையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது.

1991 ஆம் ஆண்டு, இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” சர்தார் படேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நாட்டுக்காகப் பாடுபட்ட, தேர்ந்த அரசியல் ஞானி, சர்தார் படேல் அவர்களைப் போற்றும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 31 ம் நாள் , “ தேசிய ஒற்றுமை தினமாக” 2014 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், சுதந்திர இந்தியாவை நிர்மாணித்தவரும், ’இந்தியாவின் பிஸ்மார்க்’ எனப் போற்றப்படுபவருமான சர்தார் படேல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,அவரது மாபெரும் உருவச்சிலை, குஜராத் மாநிலம்,நர்மதா மாவட்டம்,சர்தார் சரோவர் அணைக்கெதிரே, சாதுபெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது.

182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகிலேயே அதிக உயரமான சிலையாகும்.

”இந்தியா ஒருங்கிணைந்து இருந்தால் தான், தேசப்பற்றும் உறுதியுறும். தேசம் ஒற்றுமையுடன் இருந்தால் தான், நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்’ என சர்தார் படேல் கூறியதை நமது பாரதப் பிரதமர் மோதி அவர்கள் அவரது சமீபத்திய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கூறினார்.

பிரிவினைவாதிகளின் சதி வேலைகளால், நாடு பலவீனமடையாமல் இருக்க தற்போதும் தேச ஒற்றுமை தேவை அல்லவா !

தேசிய ஒற்றுமை தினத்தன்று,ஒற்றுமையைக் காப்போம் எனச் சூளுரைப்போம் !

கமலா முரளி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version