― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்டிச.3: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

டிச.3: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

- Advertisement -

கட்டுரை: கமலா முரளி

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

”துளையுள்ள குழல் தனைத் தூர எறிவதண்டோ ?
குறையுள்ள கழி எனவே நகைத்தலுண்டோ ? ”
குழல் தரும் இசையில் மனம் மயங்குது. அது போலத் தான் மாற்றுத்திறனாளிகளும் !

இரு தசாப்தங்களுக்கு முன்னால், உடற்குறைகளை முன்னிறுத்தும் ”குருடு, செவிடு,நொண்டி” என்ற சொற்பதங்கள் தான் பயன்பாட்டில் இருந்தன. மனதைப் புண்படுத்தும் அச்சொற்களை விடுத்து, “ஊனமுற்றோர்” என்ற சொல் பழக்கத்தில் வந்தது. ”ஊனம்” என்ற சொல்லையும் தவிர்த்திட வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது, “மாற்றுத் திறனாளிகள்” என்று அன்புடன் அழைக்கப்படும் ”உடற்சவால்”  கொண்ட சகோதர சகோதரிகள் தம் வாழ்க்கையை ஒரு சவாலாகத் தான் ஏற்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மாற்றுத் திறனாளி நண்பர்களைக் குறிப்பிடும் விதம் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் சமுதாயத்தின் கடமை. வீட்டுக்குள் முடங்கி இருத்தல் அல்லது தன் நிலை கண்டு கருணை காட்டுமாறு இறைஞ்சுவது என்றிருந்த நிலை மாறி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் அவர்களது உரிமை என்பதை இச்சமுதாயம் உணர்ந்து வருகிறது.

இந்த எண்ண மாற்றங்களுக்கு உலக அளவில் மாற்றுத் திறனாளிகளின் நிலை பற்றிய அலசல்கள் காரணியாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு

1976 ஆம் ஆண்டு ஐ.நா சபை முன்னெடுப்புகளைத் துவக்கியது. 1981 ஆம் ஆண்டு “ஊனமுற்றோர் ஆண்டு” (International Year of Disabled Persons )என ஐ.நா சபை அறிவித்தது. வட்டார, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஊனமுற்றவர்களுக்கான சம வாய்ப்பு, புனரமைப்பு மற்றும் தொடக்க நிலையி லேயே முடிந்தவரை ஊனமுறுவதை தடுத்தல் முதலான குறிக்கோளுடன் அந்த ஆண்டு ‘ஊனமுற்றோர் ஆண்டு” ஐ.நா சபையால் பரிந்துரைக்கப்பட்டது. ( அந்தக் காலக்கட்டத்தில் ஊனமுற்றோர் என்ற பதம் உபயோகத்தில் இருந்தது )

மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான நல்வாழ்வு பற்றிய செயல் திட்டங்களை வடிவமைத்து, செயல் படுத்தும் வகையில், ஐ.நா.சபை, 1983 முதல் 1992 வரையிலான பத்தாண்டு காலத்தை “ஊனமுற்றோருக்கான தசாப்தம்”( United Nations Decade of Disabled Persons ) என அறிவித்தது.

1992 ஆம் ஆண்டு ஐ.நா பொது சபை தீர்மானம் 47/3 ன் படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மூன்றாம் நாள் ‘ஊனமுற்றோர் தினம்’ ( International Day of Disabled Persons )அனுசரிக்கப்படும் என ஐ.நா அறிவித்தது. 2007 ஆண்டில் இருந்து “ International Day of People with Disabilities “  என்று அழைக்கப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும் சந்திக்கக்கூடிய சவால்களைப் பற்றியும், அவர்களது நல்வாழ்வுக்கான நலப்பணிகளைப் பற்றியும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகள், கல்வி, வேலை வாய்ப்பு, பாதுகாப்பு போன்றவற்றை அடைவதற்கு உலக நாடுகள் சட்ட வடிவமைப்பு, நிதி ஆதாரங்கள் மற்றும் செயல் திட்டங்களைக் கொணர்ந்துள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்குச் சவாலான சூழல்கள் :

உலகில் மிக அதிக அளவில் இருக்கும் சிறுபான்மை சமூகம் மாற்றுத்திறனாளி சமூகமே என உலக சமூக நோக்கர்கள் கூறுகின்றனர். உடல் நலக் குறைபாடுகள், பொது ஆரோக்கியக் குறைபாடுகள், கல்வி பெறுவதில் சிரமங்கள்,வேலை வாய்ப்பின்மை, நிதித் தட்டுப்பாடு, தொழில்நுட்பக் கருவிகள் அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்றாற் போல் இல்லாமல் இருத்தல் என பல இன்னல்களைப் பல நூற்றாண்டுகளாகச் சந்தித்து வரும் மாற்றுத் திறனாளிகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டும், இகழப்பட்டும் சக மனிதர்களாக உரிய மரியாதையுடன் நடத்தப்படாமல், மன உளைச்சலுக்கும் உள்ளாகி ஏங்குகின்றனர்.

இத்தகைய சவாலான சூழல்கள், பன்னாட்டுக் கூட்டமைப்புகள், தேசிய அரசு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சியால் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

கௌரவமான வாழ்க்கை, கல்வி பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள், வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு,பொது இடங்களில் அவர்கள் தேவைக்கேற்ப சக்ர நாற்காலி, ராம்ப் அமைப்புகள் போன்ற வசதிகள் மட்டுமல்லாமல், கலை மட்டும் விளையாட்டுப் பயிற்சி மற்றும் போட்டிகளும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படுகின்றன. அவர்களது தனித்திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

உடல் சவால் பெற்றவர்களின் ( physically challenged )உபயோகத்துக்கென பிரத்யேக தனிக்கருவிகள் ( useful gadgets ) தற்போது புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்

மத்திய அரசின் “சமூக நீதி மற்றும் சுயதிகாரம்” ( Ministry of Social Justice and Empowerment “)அமைச்சகத்தின் கீழ், மாற்றுத்திறனாளிக்கான துறை (Department of Disability Affairs ) இயங்கி வருகிறது. எல்லா மாநிலங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிக்கான துறைகள் மற்றும் தன்னார்வல அமைப்புகளின் பணிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு, பீஜிங்கில் நடைபெற்ற “ஏசியா மற்றும் பசிபிக் நாடுகளில் மாற்றுத்திறனாளிக்கான சம வாய்ப்பு” பற்றிய தீர்மானம் மற்றும் முன்னெடுப்புகளைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

2008 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமை ( UNCRPD : United Nations Convention on the Rights of People with Disability ) பற்றிய ஐ.நா சபை பிரகடனம் கொண்டு வருவதிலும் இந்தியா பங்கு வகித்தது.

உலக அளவில் இவை இரண்டுமே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைப் புனரமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2017-ல்  நடைமுறைக்கு வந்தது.  இச்சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை அளிப்பதோடு பல சிறப்புக் கூறுகளையும் கொண்டுள்ளது.

Ø  அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு

Ø  சமூகத்தில் சம உரிமை

Ø  கல்வி பெறும் உரிமையை உறுதி செய்தல்

Ø  மாற்றுத்திறனாளிகளுக்கான உயர் ஆணையர்

Ø  குறைபாட்டின் பிரிவுகளை 7 இலிருந்து 21 ஆக வகைப்படுத்தியுள்ளது.

Ø  இட ஒதுக்கீட்டினை மூன்றிலிருந்து நான்கு விழுக்காடாக உயர்த்துதல்

Ø  பொது இடங்களை இணக்கமாக மாற்றுதல்

ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

பார்வைக் குறைபாடு, கேள்வித்திறன் குறைபாடு கை கால் குறைபாடு மற்றுமின்றி, இருபத்தி ஒன்று வகையான குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அனைவரையும் உள்ளடக்கிய,அனைவருக்குமான முன்னேற்றம் ( Sab ka Saath, Sabkaa Vikas )என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் மத்திய அரசு, கொரொனா பெருந்தொற்றுக் காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான  உதவிகளை, பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தில் சேர்த்தது. அவர்களுக்கான கோவிட் நடைமுறைகள் ப்ரெய்ல் பதிவு மற்றும் பல்வேறு மொழிகளில் குரல் பதிவுகள், சைகை முறை பதிவுகள் என பல வகையிலும் சென்றடையச் செய்தது மிகச் சிறப்பான பணியாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, இந்திய அரசின் மாற்றுத்திறனாளிக்கான துறை  ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்குகிறது.

சிறந்த பணியாளர்கள், சிறந்த சுயவேலை வாய்ப்பு அமைத்துக் கொண்டவர்கள், சிறந்த வேலை வாய்ப்பு தந்த நிறுவனங்கள், சிறந்த ஆராய்ச்சிப் பணி, மாற்றுத் திறனாளிக்கான கண்டுபிடிப்புகள் தந்தவர்கள் ,சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய 14 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விருது பெறுவதோடு மட்டுமல்லாமல் “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த புனரமைப்பு பணி செய்யும் மாவட்டம்” என்ற பிரிவின் கீழ் சேலம் மாவட்டம் விருது பெறுகிறது.

“மாற்றுத்திறனாளிகள் சுயதிகாரம் பெறுவதனை ஊக்குவித்த” சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளை சக மனிதர்களாகப் பாவித்து,அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி, அவர்களது சிறு தேவைகளை அக்கறையுடன் செய்து கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மாற்றுத்திறனாளிகள் சலுகைகளைப் பெறும் பயனர்கள் அல்ல. அவர்கள் உரிமைகளைப் பெறும் போராளிகள் என்பதையும் நாம் உணர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version