― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (18): பணிவு… வெற்றியின் ரகசியம்!

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (18): பணிவு… வெற்றியின் ரகசியம்!

- Advertisement -

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -18
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

Strategy
பணிவு… வெற்றியின் ரகசியம்!

மகாபாரத யுத்தம் தொடங்கும் நேரம் நெருங்கியது. இரு படைகளும் எதிரெதிராக நின்றிருந்தன. தொடக்க சங்கொலிக்காக காத்திருந்தன. அப்போது கீதோபதேசத்தைப் பெற்ற அர்ஜுனன் யுத்தத்துக்குத் தயாரானான். தர்மபுத்திரனின் மேல் அனைவரின் பார்வையும் விழுந்தது. அவன், தான் அணிந்திருந்த கவசத்தை அகற்றினான். ஆயுதங்களை ரதத்தில் ஒரு புறமாக வைத்தான். வேகமாக ரதத்திலிருந்து கீழே குதித்தான். எதிரிப்படையை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான். அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். ஏன்? என்ன ஆயிற்று? என்று வியந்தனர். எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் நடந்தான். துரியோதனனின் புறமிருந்தவர்கள் தமக்குள்ள கிசுகிசுத்துக் கொண்டனர். போருக்கு பயந்து சரணடைய வருகிறான் என்று எண்ணினர் சிலர்.

கிருஷ்ணன் ஒருவனுக்குத்தான் புரிந்தது தர்மபுத்திரன் செய்யப் போகும் உயர்ந்த செயல் என்ன என்பது. தர்மபுத்திரன் தாத்தாவான பீஷ்மரை நோக்கி நடந்தான். பீஷ்மரை இரு கரம் கூப்பி வணங்கினான். அவர் பாதங்களைப் பணிந்து ஆசி வேண்டினான். பீஷ்மரின் மனம் கசிந்தது. ஆனந்தக் கண்ணீர் விட்டார். “வெற்றி பெறுவாய்!” என்று வாழ்த்தினார்.

“தர்மராஜா! நான் உன் பக்கம் வந்து போர் புரிய வேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர வேறு ஏதாவது கேள்” என்றார். பீஷ்மரை யாரால் வெல்ல முடியும்? தர்மபுத்திரன் சங்கோஜமின்றி வரம் கேட்டான். “உங்களைப் போரில் எவ்வாறு வெல்வது?” என்று வினவினான். பீஷ்மர் சிரித்து, சில நாட்கள் கழித்து வருமாறு கூறினார். விடைபெற்றுச் செல்லும் தர்மபுத்திரனிடம் பீஷ்மர் இவ்வாறு கூறனார்…

யத்யேவம் நாபிகச்சேதா: யுதி மாம் ப்ருதிவீபதே !
ஸபேயம் த்வாம் மஹாராஜ பராபாவாய பாரத !!
(பீஷ்மபர்வம் – 43-38)

பொருள்:- ஓ! தர்மராஜா! நீ இவ்விதம் என்னிடம் வந்திருக்காவிட்டால் உனக்கு தோல்வி விளைய வேண்டுமென்று சபித்திருப்பேன்.

தர்மராஜன் பீஷ்மரை சந்தித்த பின் துரோணாச்சாரியரை நோக்கி நடந்தான். குருவின் பாதங்களை வணங்கினான். “போரில் விஜயம் பெறுவாயாக!” என்று துரோணர் ஆசி கூறினார். அன்போடு தர்மபுத்திரனை அணைத்துக் கொண்டார்.

“ஏதாவது வரம் கேள்!” என்றார்.

தர்மபுத்திரர் எந்த தயக்கமுமின்றி, “என் நலனைப் பற்றி சிந்தித்து உங்களை எவ்வாறு வெல்வது என்று தெரிவியுங்கள்” என்று கேட்டான்.

துரோணர் புன்னகை புரிந்தார். “நான் ஆயுதத்தைத் துறக்காமல் யாரும் என்னை வெல்ல முடியாது. ஆனால் எனக்கு விருப்பமில்லாத செய்தி ஏதாவது கேட்டால் நான் ஆயுதத்தைத் துறப்பேன். எனக்கு விரைவில் மரணம் நிகழும்படி உன் தம்பிகளோடு சேர்ந்து முயற்சி செய்” என்றார்.

பீஷ்மர் கூறியது போலவே துரோணரும் தர்மபுத்திரனிடம் இவ்வாறு கூறினார்…

யதிமாம் நாபிகச்சேதா: யுத்தாய க்ருத நிஸ்சய: !
ஸபேயம் த்வாம் மஹாராஜ பராபாவாய சர்வஸ: !!
(பீஷ்ம பர்வம் – 43-53)

பொருள்:- ஓ! மகாராஜா! யுத்தம் நடப்பதற்கு முன் நீ என்னிடம் இவ்வாறு வந்திருக்காவிட்டால் நீ எல்லாவிதத்திலும் தோல்வியுற வேண்டும் என்று சபித்திருப்பேன்.

துரோணரை தரிசித்த பின் தர்மராஜன் கிருபாசாரியாரின் ஆசிகளைப் பெற்றான். “போர் புரி! வெற்றி பெறுவாய்!” என்று ஆசியளித்து, “நீ வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் கிருபாசாரியார். பீஷ்மர், துரோணரைப் போலவே கிருபரும் இவ்வாறு கூறனார்….

யதி மாம் நாபி கச்ச்சேதா: யுத்தாய க்ருதநிஸ்சய: !
ஸபேயம் த்வாம் மஹாராஜா பராபாவாய பாரத !!
(பீஷ்ம பர்வம் – 43-79)

பொருள்:- மகாராஜா! போருக்குமுன் நீ என்னிடம் வராமல் இருந்திருந்தால் உனக்கு தோல்வி நேர வேண்டுமென்று சாபமளித்திருப்பேன்.

“போர் புரி! வெற்றி பெறுவாய்!” என்று சல்லியன் தர்மனுக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

தர்மபுத்திரனின் சாமர்த்தியம்:-

தர்மபுத்திரனுக்கு பெரியவர்களிடம் உள்ள பக்தி, இயல்பான குணமான பணிவு, பேச்சில் சாமர்த்தியம் போன்றவை போரில் வெற்றி பெறுவதற்கு உதவின. அதனால்தான் அவனை ‘சாதுப் புலி’ என்றார் ஆந்திர மகாபாரதத்தில் கவி திக்கனா. சாதுவானவன் தர்மராஜன். கோபம் வந்தால் புலியை விட பயங்கரமானவன்.

பீஷ்மர், துரோணர் இருவரும் வெல்ல முடியாதவர்கள். அவர்களின் ஆசிகள் பாண்டவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தன. தர்மராஜன் முதல் நாளே தீட்டிய இந்த திட்டம் சாமானியமானதல்ல. அனைவரிடமும் அனுமதி பெற்று போரைத் தொடங்குவது என்பது தர்மத்தோடு கூடிய செயல் அதோடு கூட அது ஒரு சாமர்த்தியமான வியூஹம். தர்மராஜனின் இந்த ராஜ நீதி சாதாரண அறிவுக்கு எட்டாதது. இது ஒன்றும் ஒளிவு மறைவாக நடக்கவில்லை.

இந்த சம்பவம் வெறும் ராஜ நீதி மட்டுமேயல்ல. கொஞ்சம் உதாரம்… கொஞ்சம் தந்திரம்… கொஞ்சம் சுயநலம் ஆகியவற்றோடு கூடியது. தர்மம் என்ற குடையின் நிழலின் கீழே நடக்கும் அனைத்தும் தர்மமே! தர்மம் இருக்குமிடத்தில் கிருஷ்ணன் இருப்பான்.

கிருஷ்ணன் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம். பீஷ்மர், துரோணர் இருவருக்கும் இது நன்றாகத் தெரியும். தர்மத்திற்குத் தலை வணங்கினர். பீஷ்மர் பத்து நாட்கள் போர் புரிந்தார். அசாதாரணமான பராக்கிரமத்தைக் காட்டினார். ஸ்ரீகிருஷ்ணனுக்கே கோபம் ஏற்படுத்தினார். கடைசியில் கிருஷ்ணர் என்ற தர்ம பலத்தின் முன் தலை குனிந்தார். இறுதியில் தன் மரண ரகசியத்தை தன் வாயாலேயே யுதிஷ்டிரனிடம் தெரிவித்தார்.

இன்னும் சில நிமிடங்களில் போர் தொடங்க இருக்கையில் தர்மபுத்திரன் மற்றொரு திட்டம் தீட்டினான். கௌரவ சேனையில் உள்ளவர்களில் யாராவது தன் பக்கம் வர விரும்பினால் வரலாம் என்றான். அதை ஏற்று யுயுத்ஸன் மட்டும் பாண்டவர் பக்கம் வந்தான்.

வெற்றிக்காக அனைத்து முயற்சிகளும் புரிவது யுத்த நீதி. தலைவனுக்கு இருக்க வேண்டிய குணம் வெற்றி பெற வேண்டுமென்ற விருப்பம். போர் புரிவது வெற்றிக்காகவே! இது தர்மபுத்திரனிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.


யத: க்ருஷ்ண: ததோ ஜய:

கௌரவ சேனையில் இருந்த வீரர்களையும் அவர்களின் எண்ணிக்கையையும் பார்த்து தரம்ராஜனுக்கு போர் நிச்சயமானதிலிருந்து கவலை. அர்ஜுனன் தன் அண்ணனை சமாதனப்படுத்தினான்.

ஏவம் ராஜன் விஜாநீஹி த்ருவோஸ்மாகம் ரணே ஜய: !
யதா து நாரத: ப்ராஹ யத: க்ருஷ்ணஸ் ததோ ஜய: !!

பொருள்:- ஓ! ராஜா! நமக்குப் போரில் வெற்றி நிச்சயம். நாரதர் கூறியது போல் எங்கு கிருஷ்ணன் இருப்பரோ அங்கு வெற்றி நிகழும்.

குணபூதோ ஜய: கிருஷ்ணே ப்ருஷ்டதோ ப்யேதி மாதவம் !
தத் யதா விஜயஸ்சாஸ்ய சன்னதிஸ்சா பரோ குண: !!

பொருள்:- வெற்றி என்பது கிருஷ்ணனின் இயல்பு. அது கிருஷ்ணனோடு இருப்பது. வெற்றியைப் போலவே பணிவு கூட இரண்டாவது குணம். அதனால் நீ கவலைப்பட வேண்டிய தேவையில்லை.


யுத்த வியூகம்:-
“தகுதி வாய்ந்த தலைவன் தவறு செய்யாமல் இருப்பதால் வெற்றியை கைவசப்படுத்துகிறான். வேறு விதமாகக் கூற வேண்டுமென்றால் அவன் தவறின்றி புரியும் பணியே அவனுக்கு வெற்றியை அளிக்கிறது.

நூறு போர்களை வெல்வது சாமர்த்தியத்திற்கு அடையாளம் அல்ல. போர் புரியாமலே எதிரியை வழிக்குக் கொண்டு வருவதே உண்மையான சாமர்த்தியம். பகைவனின் திட்டத்தை நேரடியாக நொறுக்குவதே அனைத்தையும் விட முக்கியம். போர்க்கலையில் தேர்ந்த தலைவன் போர் புரியாமலே பகைவனைத் தோற்கடிப்பான். நிபுணனாக இருப்பதால் போரில் வெற்றி பெறுவதற்கும், உலகப் புகழ் பெறுவதற்கும் தேவையான திறமை இருப்பதாக எண்ண முடியாது.”

(சைனா போர்த்திட்டம் தீட்டியவர், சேனைத் தலைவர் சுன் ஜு எழுதிய The Art of War என்ற நூலிலிருந்து)

சுபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,895FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version