― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (19): சரியான ஆலோசனைக் குழு!

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (19): சரியான ஆலோசனைக் குழு!

- Advertisement -

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -19
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

Team Building
சரியான ஆலோசனைக் குழு

“தலைவன் தன் மூலம் தவறு நடக்காமலிருக்க தகுந்த ஆலோசனை வழங்கும் குழுவை (Governing Council) அமைத்துக் கொள்ள வேண்டும். “தவறு நிகழாமல் தேவையான போது என்னை எச்சரிக்கை செய்யுங்கள்!” என்று ஆள்பவன் ஆலோசனை கூறுபவர்களிடம் பிரார்த்திக்க வேண்டும்” என்கிறார் சாணக்கியர்.

ஸஹாய சாத்யம் ராஜத்வம் சக்ரமேகம் ந வர்ததே !
குர்வீத ஸசிவாம் ஸ்தஸ்மாத் தேஷாம் ச ஸ்ருணுயான்மதம் !!

(சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் – 73)

பொருள்:- தலைவன் ஆபத்தில் சிக்காமலும் ரகசியமாகத் தவறு செய்யாமலும் நேரத்தை வீணடிக்காமலும் இருக்க அறிவுரை கூறுபவர்கள் வழிகாட்ட வேண்டும்.

ஒற்றைச் சக்கரம் உள்ள வண்டி எவ்வாறு ஓடாதோ அதே போல் ஆள்பவன் தனியாக ஆட்சியை நடத்த இயலாது. அதற்காக ஆலோசனைக் குழுவை அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் போதாது. “தேஷாம் ச ஸ்ருணுயான்மதம்” – அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர்.

புகழ் பெற்றவர்களை ஆலோசனைக் குழுவில் சேர்த்துக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையைக் கூறும் சுதந்திரம் அளிக்காவிட்டால் என்ன லாபம்? அறிஞர் கூறும் அறிவுரையைக் கேட்டு நடப்பது தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணம். விமரிசனங்களைக் கேட்டு தாங்கிக் கொள்ளும் பொறுமையும் திறமையும் இருக்க வேண்டும். அகந்தையின்றி உனக்குப் பிடிக்காததானாலும் செவி மடுத்துக் கேட்க வேண்டும். உன் நன்மையைக் கோருபவர் மட்டுமே உனக்கு இஷ்டமில்லா விட்டலும் உண்மையை எடுத்துக் கூறுவர் என்று அர்த்த சாஸ்திரம் விவரிக்கிறது.

எந்த அறிவுரையும் கூறாமல் எஜமானரின் அபிப்பிராயத்தை மெச்சிக் கொள்வதால்தான் எங்கள் பதவிகள் பத்திரமாக இருக்கின்றன என்றார் அரசாங்க ஆலோசகராக இருக்கும் ஒரு பெரிய மனிதர். இது தற்கால சூழல்.

ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியை ஒரு நிறுவனத்திற்கு ஆலோசகராக சேரும்படி கேட்டார்களாம். “ஆட்சேபனை ஒன்றுமில்லை… ஆனால் என் ஆலோசனைப்படி நடக்காவிட்டால் நான் சும்மா விடமாட்டேன்” என்றாராம். அந்த நிறுவனத்தினர் ஓரிரு முறை யோசித்து விட்டு அவரைச் சேர்க்கும் யோசனையைக் கைவிட்டனராம்.

நல்ல அறிவுரைகளைக் கேட்பதற்கு சாதாரணமாக யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்கிறது மகாபாரதத்தில் இருக்கும் இந்த சுலோகம். இதுவே ராமாயணத்திலும் காணப்படுகிறது. மாரீசன் ராவணனிடமும் விதுரன் திருதிராஷ்டிரனிடமும் இந்த உண்மையை இவ்விதம் எடுத்துரைத்தனர்…

சுலபா: புருஷா ராஜன்! சததம் ப்ரிய வாதின: !
அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப: !!

(ராமாயணம் – ஆரண்ய காண்டம் – 37-2
மகாபாரதம் – உத்தியோக பர்வம் – 37-15)

பொருள்:- ராஜா! எப்போதும் பிரியமாகப் பேசுபவர் எளிதாகக் கிடைப்பர். பிரியமில்லாததாக இருந்தாலும் நன்மையை எடுத்துரைப்பவரும் அதைக் கேட்பவரும் கிடைபப்பதரிது.

பிரியம் என்றால் அப்போதைக்கு இஷ்டமானதாகத் தோன்றுவது. ஹிதம் என்றால் இறுதிவரை நன்மை பயப்பது.

ஒரு ஆட்சியாளனிடம் இருக்கும் ஆலோசனைக் குழுவினரும் ஒற்றர்களும் உண்மையை மறைக்கக் கூடாது. எஜமானருக்கு எது பிடிக்குமோ அதைக் கூறுவதை விட்டு எது நன்மையோ அதை மட்டுமே கூற வேண்டும். பொய்யுரைப்பதோ, அநியாயம் என்று தெரிந்தும் ஜால்ரா போடுவதோ கூடாது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1947ல் இன்டர்போர்டு கேள்வித் தாள்கள் கசிந்து விட்டன. டில்லியில் இருந்த முதலமைச்சர், கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு போன் செய்து இன்டர்போர்டு செயலரை உடனே சஸ்பென்ட் செய்யும்படி ஆணையிட்டார். “அந்த அதிகாரி அந்த பதவியில் ஆந்திரப்பிரதேசில் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்ததால் அவரைப் பொறுப்பாக்க முடியாது… அதைவிட என்னை சஸ்பென்ட் செய்யுங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்றார் அந்த கல்வித்துறை முதன்மைச் செயலர்.

அப்படிப்பட்ட அதிகாரிகளே உண்மையான ஆலோசகர்கள். ஆட்சி செய்பவரை நல்ல மார்கத்தில் நடத்த வேண்டியது அமைச்சர்களின் கடமை. தலைவனைச் சூழ்ந்த சுயநல ஜால்ராக் கும்பல் கூறியவற்றைக் கேட்டு வீழ்ச்சியடைந்தவர்கள் வரலாற்றில் பலர் உள்ளனர்.


இளவரசனைத் திருத்திய அனுமன்:-
தலைவன் இயல்பாக நல்லவனாக இருந்தாலும் புத்தி பலமும் உடல் வலிமையும் கொண்டவனாக இருந்தாலும் ஓரொரு சமயம் கடமையை மறந்து விடுவதுண்டு. யோசிக்கும் திறமையை இழப்பதுண்டு. ஏமாற்றத்தில் ஆழ்வதுண்டு. கவலை ஏற்படுவதுண்டு. தற்கொலைக்குக் கூட துணிவதுண்டு.

தலைவனின் நடத்தை, முடிவு போன்றவை அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல… அவனை அண்டி வாழ்பவர்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்தும். அவனோடு சேர்ந்து பணிபுரியும் குழுவிடம் குழப்பத்தை உண்டாக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சரியான அமைச்சர் அருகிலிருந்து ஆலோசனை கூறவேண்டும். ஒரு பெரியவர் தலையிட்டு தலைவனின் ஆவேச முடிவைத் தடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையை ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் வால்மீகி இவ்விதம் வர்ணிக்கிறார்…

சீதையைத் தேடி சுக்ரீவனின் கட்டளைபடி தென் திசைக்குச் செல்ல வேண்டிய வானரக் கூட்டத்திற்கு இளவரசன் அங்கதன் தலைவனாக நியமிக்கப்பட்டான். சீதையை அபகரித்த அசுரன் தென் திசை நோக்கிச் சென்றான் என்று குறிப்பாக அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது. அதனால் தென் திசைக்குச் செல்பவர் நிச்சயம் வெற்றியோடு திரும்புவர் என்று அனைவரும் நம்பினர். ஸ்ரீராமர் கூட தன் மோதிரத்தை அங்கதனின் குழுவிலிருந்த ஹனுமானுக்கே தந்தார்.

ஆனால்… நடந்தது என்ன? சுக்ரீவன் அளித்த கெடு முடிந்து போனது. ஆனால் சீதையைக் கண்டு பிடித்ததாக செய்தி கிடைக்கக வில்லை. கெடு முடிந்த பின் வெறுங்கையோடு வருபவர்களுக்கு மரண தண்டனை என்ற சுக்ரீவனின் ஆணை அங்கதனுக்கு நினைவுக்கு வந்தது. வெற்றி பெற்றுத் திரும்புவோம் என்று நினைத்த அந்தக் குழுவின் தலைவன் அங்கதன் ஏமாற்றத்திற்கு ஆளானான். தன் குழுவினரிடம் இவ்வாறு கூறினான்…

“சீதா தேவியைக் கண்டுபிடிக்காமல் திரும்பிச் சென்றால் சுக்ரீவன் நம்மைக் கொன்று விடுவான். ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு என் மேல் பகை. ராமர் சொன்னதால் என்னை இளவரசனாக்கினான். ஏதாவது சாக்கு வைத்து என் சித்தப்பா என்னைக் கொல்ல முயற்சிப்பார். அதனால் திரும்ப கிஷ்கிந்தாவுக்குச் செல்லாமல் ஸ்ரீராமருக்கும் சுக்ரீவனுக்கும் கண்ணில் படாமல் இங்கேயே எங்காவது மறைந்திருந்து மீதி வாழ்நாளை கழித்து விடுவது சிறந்தது” என்றுரைத்தான்.

தன் சிற்றப்பனான மகாராஜா சுக்ரீவனை பல விதத்திலும் நிந்தித்தான். தன் குழுவில் இருந்தவர்களிடமும் கூட நிராசை என்னும் விஷத்தை ஏற்றினான். இளவரசனின் யோசனைக்கு குழுவிலிருந்த இளைய வானரங்கள் ‘சரி’ என்று குரல் கொடுத்தன. அந்த மாயக் குகையில் பழங்களுக்கும் குடிநீருக்கும் குறைவில்லை. அதனால் அங்கேயே இருந்து விடலாம் என்று தீர்மானித்தன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சரியான அமைச்சர் தேவை. தலைவனின் ஆவேசத்தை நீக்கி ஆறுதலளிக்கும் ஆலோசகர் தேவை. அறிஞர் யாரேனும் தலைவனை சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அந்த வேலையை ஹனுமான் மிக சாதுர்யமாக நிர்வகித்தார். கேட்கும் இயல்பு உள்ளவன் அங்கதன். அதனால் சாம, பேத, தான, தண்ட உபாயங்களில் எந்த உபாயத்தைப் பிரயோகித்து ஆறுதல் கூறலாம் என்பதை புத்திசாலியான அனுமன் யோசித்துப் பார்த்தார். பேத உபாயத்தைப் பிரயோகித்து அங்கதனிடம் இவ்விதம் எடுத்துரைத்தார்.

“அங்கதா! சபல சுபாவம் கொண்ட இந்த வானரங்கள் உன்னோடு எப்போதுமே இருப்பார்கள் என்று எண்ணாதே. சில நாட்களிலேயே உன் தொண்டர்களுக்கு அவரவர் குடும்பம் மனைவி பிள்ளைகள் நினைவுக்கு வருவார்கள். அப்போது உன்னை விட்டு நீங்கிச் சென்று விடுவார்கள். நான், ஜாம்பவான், வானரவீரன் சுஹோத்திரன் கூட உன் பக்கத்தில் இருக்க மாட்டோம். சொல்வதைக் கேள். சுக்ரீவனிடமிருந்து எங்களை உன்னால் பிரிக்க இயலாது”

பிரஹஸ்பதி போன்ற அறிவுக் கூர்மை பெற்ற ஹனுமான், அங்கதனை மேலும் சமாதானப்படுத்துவதற்கு தண்டோபாயத்தை பிரயோகித்தார். “அங்கதா! நீ குகையில் ஒளிந்து கொண்டால் லட்சுமணனால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்காதே! அதி வேகமான லட்சுமணனின் பாணங்களை எதிர்கொள்வது உன்னால் இயலாது. அதனால் சுக்ரீவன் மீது எதிர்ப்பைக் காட்டாதே! தர்மாத்மாவான சுக்ரீவன் நம்மை எதுவும் செய்ய மாட்டான். உன் மேல் சுக்ரீவன் அதிக அன்பு கொண்டவன்” என்றார்.

ராம காரியத்தை நிறைவேற்றாமல் போனோமே என்ற குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அங்கதனை துயரத்தில ஆழ்த்தின. ஹனுமான் எடுத்துரைத்த பின்னும் கூட தற்கொலை எண்ணத்தை விடவில்லை. தர்ப்பையை விரித்து தன் கூட்டத்தோடு பிராயோபவேசம் அதாவது சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு தயாரானான்.

பட்சி ராஜா சம்பாதி மூலம் சீதையை அபகரித்த ராவணனின் நகரம் பற்றித தெரிந்த பின்தான் அங்கதனின் வருத்தம் நீங்கியது. வாழ்வா சாவா என்று தவித்த அந்த இளவரசனிடம் மாற்றம் ஏற்பட்டது. இலக்கை சாதிப்பது கண் பார்வையில்தான் உள்ளது என்றறிந்ததும் இளவரசனான அங்கதனிடம் தலைவனுக்கான குணங்கள் மீண்டும் தலையெடுத்தன. அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த தன் கூட்டத்திற்கு அறிவுரை கூறி கவலை வேண்டாம் என்று ஆறுதலளித்தான்.

ந விஷாதே மன: கார்யம் விஷாதோ தோஷவத்தர: !
விஷாதோ ஹந்தி புருஷம் பாலம் க்ருத்த இவோரக: !!

(கிஷ்கிந்தா காண்டம் -64-11)

பொருள்:- மனதில் துயரத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. துயரம் தீயது. கோபமடைந்த பாம்பு சிறு குழந்தையைக் கடிபப்து போல் துயரம் மனிதனைக் கொல்லும்.

யோ விஷாதம் பிரசஹதே விக்ரமே சமுபஸ்திதே !
தேஜஸா தஸ்ய ஹீனஸ்ய புருஷார்தோ ந சித்யதி !!

(கிஷ்கிந்தா காண்டம் -64-12)

பொருள்:- பராக்கிரமத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் கவலைக்கு இடம் அளிக்கும் பலவீனமானவர்களின் காரியம் எதுவும் நிறைவேறாது.

அங்கதனின் சொற்களைக் கேட்டபின் அந்தக் கூட்டதில் உற்சாகம் பீறிட்டது. துயாரத்தின் நிழல் நீங்கியது. அங்கதன் பெரியவர்களோடு கலந்து பேசினான். வெற்றி பெறும் மார்க்கம் தெரிந்தது. ஹனுமான் சமுத்திரத்தை தாண்டத் தயாரானார். அங்கதனிடம் மீண்டும் பழைய உற்சாகம் மீண்டது. இளவரசன் தன் குழுவினரோடு நற்செய்திக்காக காத்திருந்தான்.

அங்கதன் அதற்குப் பிறகு ராமனின் தூதனாக ராவணனின் சபைக்குச் சென்று தன் கடமையை மிகச் சிறப்பாக யாரும் செய்ய இயலாத வகையில் நிறைவேற்றி ராமனின் பாராட்டைப் பெற்றான்.

இந்த சம்பவம் அளிக்கும் செய்தி என்ன?

தலைவன் தன் குழுவில் அறிவில் சிறந்தவர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். தன் மேன்மைக்காக அறிவுரை கூறுபவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். தாற்காலிகமாக நேர்ந்த வருத்தத்திலிருந்து வெளிவருவதற்கான வழியை சிந்திக்க வேண்டும். கடமையிலும் காரிய நிறைவேற்றலிலும் மும்முரம் காட்டும் தலைவனைக் குழுவில் அனைவரும் மதிப்பர்.


அனைவரும் சேர்ந்து…
தலைவன் தன் தனிப்பட்ட முறையில் நல்லவனாக இருந்தால் போதாது. குழுவோடு சேர்ந்து வேலை புரியவும் வேலை வாங்கவும் திறன் கொண்டிருக்க வேண்டும். குழுவிலும் அலுவலகத்திலும் பலவித குணம் கொண்டவர் இருப்பர். பலவித அந்தஸ்துள்ளவர் இருப்பர்.

“இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து நான் வேலை செய்ய மாட்டேன். அவர் இருந்தால் நான் இருக்க மாட்டேன்” என்றெல்லாம் கூறுவது சிறந்த தலைவனுக்கான லட்சணம் அல்ல. குழுவில் இருக்கும் அங்கத்தினர்களுக்கு அவரவர் அபிப்பிராயம் இருக்கும். அனைவரின் கருத்தையும் மதிக்க வேண்டும். மத வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மன வேறுபாடு வராமல் கவனமாக இருக்க வேண்டும்.

பகைவரைக் கூட இணைத்துக் கொண்டு செயல்படுபவரே நல்ல தலைவராக முடியும். அனைவரோடும் சேர்ந்து பணி புரிவதோடு மட்டுமின்றி அனைவரையும் பணியில் பங்குதாரர்களாக்க வேண்டும். குறைந்த பட்சம் நம் அனைவரையும் இணைத்துக் கொண்டு செல்கிறார் என்ற எண்ணத்தையாவது அனைவரிலும் ஏற்படுத்த வேண்டும்.

சுபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,161FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe
Exit mobile version