விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -21
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
Leadership
காரிய சாதனைக்கு உதாரணம் ஏக்நாத் ரானடே!
உன்னதமான இலக்கு கொண்டிருப்பது சிறந்த தலைவனின் இயல்பு. காரிய சாதனைக்கு இலக்கை நோக்கி முன்னோக்கிச் செல்வது முக்கியம். அது குறித்து ஆழ்ந்த பயிற்சி வேண்டும். கண்ணை மூடினால் அந்த இலக்குக்கான திட்டம் கண் முன் வரவேண்டும். யார் நமக்கு உதவுவார்கள்? திறமையானவர் யார்? எதிர்ப்பவர் யார்? என்பதை சிந்திக்க வேண்டும். எதிர்ப்பவரை உதவுபவராக எவ்வாறு மாற்றிக் கொள்வது? யாரிடமிருந்து தொடங்குவது? ஒரே நேரத்தில் அனைவரையும் சம்மதிக்கச் செய்வது சாத்தியமல்ல. எதிர்ப்போரின் மனதை வெல்ல வேண்டும். பகைவரைக் கூட நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். இவ்விதம் லட்சியத்தை சாதித்தவர்கள் சமுதாயத்தில் அரிதாகவே தென்படுவர். அவர்களே சமுதாயத்திற்கு ஆதரிசமானவர்கள். அவர்களே எடுத்துக்காட்டுகள்.
இதிகாச நாயகர்களில் அப்படிபட்டவன் பகீரதன். தற்காலத்தில் அப்படிப்பட்ட பகீரதனாக கூறக் கூடியவர் ஏக்நாத் ரானடே! கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலையை நிர்மாணிக்க வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்றிய பகீரதன். இலட்சியமே ஒரு உருவெடுத்தவர். சிரத்தைக்கும் விடாமுயற்சிக்கும் மறுபெயர் ரானடே.
விவேகானந்தர் மேல் ரானடேவுக்கு உள்ள அபரிமிதமான மதிப்பிற்குச் சின்னமாக பாரத பூமியின் தென் கோடியில் அமைந்த ஐம்பது அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் சிலை உலக அளவில் யாத்ரீகர்களுக்கு ஆதரிச நிலையமாக உள்ளது.
விவேகனந்தர் சிலையை ஸ்தாபிப்பது என்ற மகா வேள்விக்கு ஏற்பட்ட தடைகளை ரானடே எவ்விதம் கடந்தார் என்பதை அறிவது பலருக்கும் எழுச்சியூட்டுவதாக இருக்கும்.
மகாபாரதத்தில் வியாச முனிவர் அளிக்கும் இந்த சுலோகம் காரிய சாதனையின் இயல்புகளை விவரிக்கிறது…
கச்சிச்சாரா க்ருதப்ரஜ்ஞா பஞ்ச பஞ்சஸ்வனுஷ்டிதா: !
க்ஷேமம் குர்வந்தி சம்ஹத்ய ராஜன் ஜனபதே தவ !!
(சபாபர்வம் 5-81)
பொருள்:- ராஜா! உன் ராஜ்யத்தில் பல்வேறு பிரதேசங்களில் சூரங்கள், வீரர்கள் அறிவுடையோர், காரிய சாதனையாளர்கள் உள்ளனரா? அவர்கள் இந்த ஐந்து குணங்கள் பெற்று ராஜ்ஜியத்திற்கு நன்மை செய்கிறார்களா? என்று நாரதர் தர்மபுத்திரனிடம் வினவுகிறார்.
அந்த ஐந்து குணங்கள்:-
வேலையைத் தொடங்கும் முன்பு அது குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த வேலையில் வெற்றி பெறுவதற்கு திட்டம் தீட்டி சிறந்தவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். வேலைக்குத் தேவையான தனம் சேகரிக்க வேண்டும்.
எந்த வேலையை எத்தனை நாளில் முடிப்பது? எதை முன்னால் செய்வது? எதை பின்னால் செய்வது… என்பதைத் தெளிவாக சிந்திக்க வேண்டும்.
ஏதாவது சிறிய பிரச்சினை, ஆபத்து ஏற்பட்டால் அது குறித்து பெரிதாக பிரச்சாரம் செய்யாமல் தீர்வு கண்டு முன்னேற வேண்டும்.
காரிய வெற்றிக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
மகாபாரதம் கூறிய இந்த் குணங்களை அப்படியே தன்னிடம் கொண்டவர் ஏக்நாத் ரானடே என்ற ஆர்எஸ்எஸ் பிரசாரகர்.
1963 ல் இவருக்கு விவேகானந்தர் நினைவுச் சின்னம் அமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த தவச்சீலர் களத்தில் இறங்கி பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்த விவரம் வெற்றியை விரும்பும் தலைவர்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ரானடே பணியில் இறங்கும் முன் அதற்கு முன் நடந்தவற்றை கூர்ந்து ஆராய்ந்தார். பிரச்னைகள், சிக்கல்கள் என்னென்ன? நண்பர் யார்? பகைவர் யார்? என்பதை உடனடியாக கிரகித்தறிந்தார். கண் முன் லட்சியம் நின்றது. மக்களின் கனவு நனவாக அவருக்கு தரிசனமளித்தது. வரைபடம் உருவானது. 1963 ஜூலை 22 பேலூர் மடத்திற்குச் சென்று அங்கிருந்து வேலையைத் தொடங்கினர். மாவட்டக் கமிட்டி தேசிய அளவுக்கு வளர்ந்தது. அதுவரை இருந்த கமிட்டி அங்கத்தினர் யாரையும் நீக்கவில்லை. கமிட்டியில் புதுப் பணியிடங்களை ஏற்படுத்தினார். நிர்வாகச் செயலராக ரானடே பொறுப்பேற்றார். 1963 ஆகஸ்ட் 11 முதன்முறையாக கன்யாகுமரி சென்று மேலும் பல விஷயங்களைப் புரிந்து கொண்டார். அரசியல் காரணங்களால் ஏற்பட்ட இரு முக்கிய பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சாமர்த்தியமாகத் தீர்த்தார். எப்படி?
சிக்கல்களை விடுவிக்கும் உபாயம்:-
ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டு அதற்கு ரானடே எவ்வாறு தீர்வு கண்டார் என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் தலைவர்கள் பலவற்றைக் கற்கலாம். சாம, தான, பேத, தண்டோபாயங்களை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை வெற்றிகரமான இந்தத் திட்டம் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த மிகப் பெரும் காரியத்தில் முன்னேற்றத்திற்கு எதிர்பட்ட முக்கிய தடை மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீரின் அறிவிப்பால் ஏற்பட்டது. சுற்றுச் சூழல் தொடர்பான மறுப்பை எழுப்பினார் இவர். சிலையால் இயற்கை அழகு குறைந்து விடும் என்று அதற்கு மதராஸ் முதலமைச்சர் ஒத்து ஊதினார். அந்த மறுப்பை முறியடித்தால்தான் மார்க்கம் எளிதாகும்.
ரானடே மத்திய அமர்ச்ச்சரை சந்திக்க முயற்சித்தார். இன்டர்வியூ கிடைக்க வில்லை. காரிய சாதனையில் சிறந்தவரான ஏக்நாத் புது திட்டத்தோடு கல்கத்தா சென்றார். அது அமைச்சர் ஹுமாயூனின் பார்லிமென்ட் தொகுதி. ஸ்ரீராமகிருஷ்ண மிஷின் மூலம் அங்கிருந்த உள்ளூர் முக்கியஸ்தர்களையும் பத்திரிக்கை ஆசிரியர்களையும் ரானடே தனிப்பட்ட முறையில் சந்தித்தார். களத்தை தயார் செயதார். கல்கத்தா பத்திரிகை நிருபர் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடந்தவற்றை விவரித்தார். சாம தான் பேத தண்ட உபாயங்களில் இங்கே ‘பேத’ உபாயத்தைப் பயன்படுத்தினார். அப்புறம் என்ன? மறுநாள் பத்திரிகைகள் அனைத்தும் விவேகானந்தர் சிலை குறித்து தலையங்கம் எழுதின. கன்னியாகுமரியில் வைக்கப் போகும் அந்த சிலையின் முக்கியத்துவம், அந்த இடம் சுவாமி விவேகானந்தரை தேசிய மகா புருஷராக எவ்விதம் மாற்றியது என்று விவரித்து நாம் தேர்ந்தெடுத்த அமைச்சர் ஹுமயூன் ‘நம்’ விவேகனந்தரின் விஷயத்தில் தடை விதிப்பது தவறு என்று ஒரு மனதாக முழங்கின. கதையில் தேவையான திருப்பம் நிகழ்ந்தது.
“விவேகானந்தரையோ அவருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதையோ நான் எதிர்ப்பவன் அல்ல” என்று ஹுமாயூன் கபீர் தானாகவே அறிக்கை விட்டார். எக்நாத்தை அழைத்துப் பேசினார். ஒரு பெரிய தடை விலகியது.
அடுத்த இலக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பக்தவத்சலம். அவரையும் வழிக்குக் கொண்டுவர வேண்டும். லால்பகதூர் சாஸ்திரியை கலந்து பேசி அவருடைய அறிவுரைப்படி ரானடே பார்லிமென்ட் மெம்பர்களைச் சந்தித்தார். கட்சி, கொள்கை இவற்றுக்கு அப்பாற்பட்டு அனைவரின் உள்ளங்களையும் வென்றார் ரானடே. பார்லிமென்ட் அங்கத்தினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். இரண்டு நாட்களிலேயே 323 பேரின் கையொப்பங்களோடு பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் அளிக்க மெமோரண்டம் தயாரானது.
அதில் அனைத்துக் கட்சியினரின் கையொப்பங்களும் இருந்தன. லால்பகதூர் சாஸ்திரி மகிழ்ந்து, “ரானடே! நாடே இந்த மாபெரும் பணியை விரும்புகிறது. இனி இதனை யாரும் தடுக்க முடியாது” என்று கூறினர். ஏக்நாத் ரானடேயின் சாமர்த்தியத்தை மனதார பாராட்டினார். ஒரு சீனியர் பார்லிமென்ட் உறுப்பினர் மூலம் அந்த வேண்டுகோள் பத்திரம் பிரதமர் நேருவைச் சென்றடைந்தது. ஏக்நாத் ரானடேயின் திட்டத்தின்படி பத்திரிக்கை நிருபர்கள் பிரதமர் நேருவை விவேகானந்தர் நினைவுச் சின்னம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
“பக்தவத்சலம் அவர்களை விரைவில் சந்தித்து அவருடன் பேசுகிறேன்” என்றார் நேரு. நேருவின் இந்த அறிவிப்பு வரும்வரை விவேகானந்தரின் நினைவுச் சின்னதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பக்தவத்சலம், “விவேகானந்தர் பாறை மீது சிறிய சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கிறேன்” என்று அறிவித்தார். முதல்வர் பக்தவத்சலத்தோடு ரானடே நட்பை வளர்த்துக் கொண்டார். பின்னர் நினைவுச் சின்னம் அளவு விஷயத்தில் தடைகளை வெல்லும் பணியில் இறங்கினார்.
“ஒரு ஏழுபேர் நினைவுச் சின்னம் குறித்த முதல் தீர்மானம் எடுப்பர்” என்று பக்தவத்சலத்திடம் கூறினார். அந்த எழுவரின் பெயர்களைக் கேட்டபின் மதராஸ் முதலமைச்சர் மறுவார்த்தை பேச இயலாதவரானார். அவர்களில் காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஜனாதிபதி சர்வேபல்லி ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ண மிஷின் தலைவர் ஸ்ரீமாதவானந்த மகாராஜ், பிரதமர் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, மத்திய அமைச்சர் எம்சி சாக்லா, மத்திய கலைத்துறை அமைச்சர் ஹுமாயூன் கபீர் இருந்தனர்.
பரமாச்சாரியாரின் வாக்கு பக்தவத்சலத்திற்கு வேதமே. இனி சிலையின் அளவு குறித்து அவர் வாய் திறப்பாரா? அப்போதிலிருந்து சமிதியின் கோரிக்கைகளை பக்தவத்சலம் உடனுக்குடன் தீர்த்து வைத்தார். மதராஸ் அரசாங்கத்தின் உதவி முழுமையாகக் கிடைத்தது. அந்தப் பணிக்கு இணையாக நிதி சேகரிக்கும் பணிகளையும் ஊக்கத்தோடு நடத்தி வந்தார் ரானடே. அதற்காக டில்லியில் 1966 ஆகஸ்டில் நடந்த முதலமைச்சர்கள் கூட்டத்திற்குச் சென்று அனைவரையும் சந்ந்தித்தர் ரானடே. மாநில அரசுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. நினைவுச் சின்னப் பணிகளை தினமும் ஆராய்ந்து மேற்பார்வையிடுவது, தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, வேலைகள் சரியான நேரத்தில் நடந்தேறுகின்றனவா… போன்றவற்றை தானே அருகில் இருந்து ரண்டே கவனித்து வந்தார்.
“ஒரு நாள் தாமதமானாலும் பொறுக்க முடியாது” என்பார் ரானடே. பணிபுரிவோரை அன்போடு நலம் விசாரிப்பார். அதில் பணிபுரியும் தொழிலாளர் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு செய்வித்தார். அவர்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
நினைவுச் சின்னம் தொடக்க விழாவுக்கான திட்டம் சிறப்பாகத் தீட்டினார். நினைவுச் சின்னத்தை தரிசிப்பதற்கு ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் தனிதனி தேதிகளை ஒதுக்கினார். ஏக்நாத் ரானடேயின் தொலைநோக்குப் பார்வை, நிர்வாகத் திறன், திட்டல் தீட்டல், பணியை நடத்துவிக்கும் பாங்கு, அவருடைய அழகியல் பார்வை… போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாக விவேகானந்தர் நினைவுச் சின்னம் விளங்குகிறது.
தன்னிடம் ஒப்படைத்த பணியில் வெற்றியை சாதித்த காரிய சீலராக ஏக்நாத் ரானடேயின் பெயர் நிலைத்து விட்டது. 1982 ஆகஸ்ட் 22ல் அவர் காலமாகும் வரை ஒரு ஆதரிசமான செயல் வீரராக நடந்து கொண்டார். ‘சேவை-சாதனை’ என்ற நூலில் உள்ள அவருடைய சொற்பொழிவுகள் வாசிப்போருக்கு இன்னமும் எழுச்சியூட்டி வருகின்றன.
கர்ம யோகி ஏக்நாத் ரானடேயின் வாழ்க்கை சரிதத்தை ஆராய்ந்தால் மற்றுமொரு பகீரதனாகத் தென்படுகிறார். தலைவர்கள், ஆதரவாளர்கள் கற்க வேண்டிய பல பாடங்களை இவருடைய வாழ்க்கை நமக்களிக்கிறது.
சுபம்!
மிகச் சிறப்பு. முதலில் இத்தகைய கட்டுரைகள் நம் இளைஞ்களைச் சென்றடைய வேண்டும்.