― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்மாவீரன் அழகுமுத்து கோன்!

மாவீரன் அழகுமுத்து கோன்!

- Advertisement -
azhagumuthukon

-யமுனா ஹர்ஷவர்த்தனா

1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாலங்குளம் சீமையின் அரசர்கள் பல தலைமுறைகளாக ‘அழகுமுத்து’ என்ற குடும்பப் பெயர் கொண்திருந்தனர். அழகு முத்துவின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாளும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டு அரசாண்டார்.

மன்னர் அழகுமுத்துவுக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு வீர அழகுமுத்து கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு அவருடைய தம்பி சின்ன அழகுமுத்து கோன் பிறந்தார். பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள “கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம்” என்ற சொற்களைக் கொண்டு இவர் கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று நாம் அறிகிறோம்.

1750-ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு வீர அழகுமுத்து கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார். மன்னர் வீர அழகுமுத்து கோனுக்கு எட்டயபுரம் மன்னர் மன்னராகிய ஜெகவீர ராமபாண்டிய எட்டப்பன் சிறந்த நண்பராக விளங்கினார்.

‘சேர்வைக்காரன்’ என்பது எட்டையபுரம் மன்னரின் படையின் முக்கிய தளபதிகளுக்கு கொடுக்கும் சிறப்பு பட்டம். மதுரையிலிருந்து அழகப்பன் சேர்வைக்காரன் என்று அழைக்கப்பட்ட அழகுமுத்து கோன், தன் உற்றார், உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதுார் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டையபுரம் சென்றார். எட்டையபுர மன்னர் அழகுமுத்து கோனை எட்டையபுரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார்.

அழகுமுத்து கோன், அவருடன் வந்த வீரர்கள் குடியேற வசதியாக கட்டாலங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 500 பொன் வருமானம் உள்ள சோழபுரம், வாலாம்பட்டி, மார்த்தாண்டம்பட்டி ஆகிய கிராமங்களும் கொடுக்கப்பட்டன. அழகுமுத்து கோன் சிறந்த போர் திறமையுள்ள வீரனாகவும் எட்டப்ப மன்னருக்கு நேர்மையுடன் கூடிய சேர்வைக்காரனாகவும் பணியாற்றினார்.

இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 ல் நடை பெற்றது  என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிரே போர் நடத்தியுள்ளனர். அதில் 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டான் சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாலங்குளம் அழகுமுத்து கோன். முதன் முதலாக பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். வீரத் தமிழராக திகழ்ந்த இவரது வரலாறு மற்றும் விடுதலைக்கு போராட்டம் பற்றி தமிழர்களுக்கே கூட சரிவர தெரியாமாலிருப்பது வருந்தக்கூடிய விஷயம்.

12 July10 Alagu muthu kone

வேளாளர் குடும்பத்தில் பிறந்த மருதநாயகம் பிள்ளை இளம் வயதில் பெற்றோரை இழந்த காரணத்தால் ஒரு இஸ்லாமியரால் எடுத்து மதம் மாற்றப்பட்டு முகமது யூசுப் கான் என்கிற பெயரால் அழைக்கப்பட்டார். இவர் பிற்காலத்தில் ஃபிரெஞ்சிடம் வேலை செய்து பின்பு அங்கிருந்து நீக்கப்பட்டு ஆங்கிலேயரின் கைக்கூலியாக நம் நாட்டிற்கு எதிரே பணிபுரிந்தார்.

எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் கான்சாகிப் வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் இளவரசர் குமார எட்டு, அமைச்சர் ராமநாதபிள்ளை, அழகுமுத்து கோன், குமார அழகுமுத்து போன்றோர் இருந்தனர். ‘ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கம்பனியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?’ என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.

இப்படி ஒரு கடிதத்தை எதிர்பார்க்காத ஆங்கிலேய அரசு கோபமுற்றது. தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் முகம்மது யூசுப் கானை அனுப்பி வைத்தது. போர் முரசு ஒலித்தது. கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான். வீரன் அழகுமுத்து கோன், எட்டையபுர மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து மன்னர் எட்டப்பர் படைக்கு ஆள் சேர்த்தார். மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்க வைத்தார். மறுநாள் மாவேலியோடை என்ற இடத்திற்கு அழைத்து செல்ல நினைத்து இரவு தங்கினர்.

அது நடக்கும்முன் தனது பலமிக்க பெரும் படையை ஏவி பெத்தநாயக்கனுார் கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான் கான்சாகிப். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார்.  இதை ‘சேர்வைக்காரர் சண்டை கும்மி’ என்ற பாடல் சொல்கிறது.

வீர அழகுமுத்துக்கோனுக்கும், கான்சாகிப்புக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. இதில் வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களையும் கயிற்றால் கட்டி கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்து இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

கம்பனி படைக்கு எதிராக மக்கள் செயல்பட முக்கிய காரண கர்த்தாக்களான அழகுமுத்து கோன் உட்பட நால்வரை பீரங்கியின் வாயில் கட்டி வைத்து பீரங்கியால் சுட்டபோது, இவர்களின் உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ் சேர்வை யாதவ், ‘முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்’ என்ற புத்தகத்தில் கூறுகிறார். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் ‘தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன், வெளிநாட்டு அரசுக்கு கப்பம் கட்ட மாட்டேன்,’ என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதை எட்டையபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட “வம்சமணி தீபிகை” குறிக்கிறது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, ‘சுதந்திர வீரன் அழகுமுத்து யாதவ்’ என்ற புத்தகத்தை இயற்றியுள்ளார். இன்றும் கட்டாலங்குளத்தில் வாழ்ந்து வரும் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் அனைவரும் யாதவர்களே ஆவர்.

அன்று அழகுமுத்துக்கோனிடம் பீரங்கியும் துப்பாக்கியும் இருந்திருந்தால் சரித்திரமே மாறியிருக்கும். எதிரியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தன் மக்களுக்கே துரோகம் செய்த அதி க்ரூரனான கான்சாகிப் கடைசியில் ஆற்காடு நவபால் தூக்கிலிடப்பட்டு, திரும்பி உயிரெழுந்து வந்துவிடுவானோ என்ற அச்சத்தினால் நவாப் அவன் சடலத்தை கண்டந்துண்டமாக வெட்டி  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புதைக்க உத்தரவிட்டான்.

தமிழக அரசு, வீரன் அழகுமுத்து கோனுக்கு கட்டாலங்குளத்தில் அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜீலை 11ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2012ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.

2015ஆம் ஆண்டு திசம்பர் 26ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.

நம் சுதந்திரத்திற்காக எதிரிகளை எதிர்த்து நின்று தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக் கோனின் சரித்திரத்தை நாம் மேலும் பிரபலப்படுத்த வேண்டும்.


Mrs.Yamuna Harshavardhana – Chennai based educator, independent researcher and author. She writes on several subjects including Bharatiya culture, itihasas, education and nationalism.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version