― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (20): அன்னம் பாலை பிரித்தெடுப்பது போல!

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (20): அன்னம் பாலை பிரித்தெடுப்பது போல!

- Advertisement -

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ஹம்ச க்ஷீர நியாய: – அன்னப்பறவை பாலை பிரித்தெடுப்பது போல.

ஹம்ச: – அன்னப்பறவை, க்ஷீரம் – பால்.

ஹம்ச ஸ்வேத: பக ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ: |
க்ஷீர நீர விபாகேஷு ஹம்ச ஹம்ச: பகோ பக: ||

வெண்மையாக இருப்பவை, நீரில் அலைபவை எல்லாம் அன்னப் பறவை அல்ல என்று கூறுகிறது இந்த சுலோகம்.

அன்னப் பறவை, கொக்கு இரண்டுமே வெண்மையாக இருக்கும். அவற்றின் இடையில் என்ன வேறுபாடு? பாலையும் நீரையும் பிரித்து பாலை மட்டுமே அருந்தும் திறமை அன்னப் பறவைக்கு மட்டுமே உண்டு.

இவ்விதமாக உத்தம மனிதன் குற்றங்களை விலக்கிவிட்டு குணங்களையே ஏற்பான் என்ற கருத்து வரும் இடங்களில் ஹம்ஸ க்ஷீர நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள்.

பாம்புக்கு பக்தியோடு புற்றில் பால் ஊற்றுபவர் இருப்பாரே தவிர அன்னப் பறவைக்கு பால் ஊற்றுபவர் யாரிருப்பார்கள்? அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு கவிஞர் இவ்விதமாகக் கூறுகிறார் –

“மலர்களில் இனிப்பான மகரந்தம் இருப்பது போலவே சிறப்பான குளங்களில் வளரும் ஒரு வித தாமரைக் கொடிகளின் தண்டில் பால் இருக்குமாம். அதுவே அன்னப் பறவைகளின் உணவு. அந்தத் தண்டுகளை கவனமாகக் கிழித்து அவற்றிலிருந்து அன்னப் பறவை பாலை அருந்துமாம். அந்தப் பால் நீரில் கலந்து போனாலும் பாலை மட்டும் பிரித்தெடுத்து அருந்தும் அற்புதமான திறமை அன்னப் பறவைக்கு உண்டு. கல்விக்கரசி சரஸ்வதியின் வாகனமாக ஹம்சப் பறவையைக் கூறுவதன் பின் உள்ள தத்துவம் இதுவாகவே இருக்கலாம்”.

கல்வியறிவின் மூலம் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் திறன் வளரும் என்பதையே இது தெரிவிக்கிறது.

ஹம்ச க்ஷீர நியாயம் மிகவும் புகழ் பெற்ற சமஸ்கிருத நியாயம் மட்டுமல்ல. பல செய்திகளையும் கருத்துகளையும் அளித்திடும் உயர்ந்த நியாயமும் கூட.

உத்தமர்கள் பிறரிடம் உள்ள குறைகளை விட்டு விட்டு நல்ல குணங்களையே ஏற்பார்கள் என்ற கருத்து இதில் உள்ளது. அது மட்டுமல்ல. உன் பணியில் ஏற்படும் தடைகளைத் தாண்டி உன் வெற்றிக்கு வழியைத் தேடு என்ற செய்தியையும் இந்த நியாயம் அளிக்கிறது.

மனிதன் நல்லவற்றை மட்டுமே ஏற்கவேண்டும். தேவையில்லாத விஷயங்களை விட்டு விலக வேண்டும் என்ற கருத்தையும் இந்த வாக்கியம் போதிக்கிறது. நாம் விலை கொடுத்து வாங்கும் சாக்லெட்டின் மேலுள்ள உரையை நீக்கி விட்டு இனிப்பை மட்டும் உண்ணும் அனுபவத்தை இதற்கு எடுத்துக் காட்டாகக்  கூறுவார் ஸ்ரீசத்திய சாயிபாபா. 

நம் தோல்விக்குக் காரணமாக வேறொருவரைச் சுட்டிக் காட்டக் கூடாது என்று கூட நினைவுபடுத்துகிறது இந்த நியாயம். நேர்மறை எண்ணங்களுக்கு இந்த நியாயம் எடுத்துக்காட்டாக நிற்கிறது. ஆங்கிலத்தில் உள்ள இந்த சொற்றொடர்கள்  இதே கருத்தைத் தெரிவிக்கின்றன.

It is very difficult. But it’s a big opportunity. I will do it என்று ஒருவன் சொல்கிறான். Great opportunity. You may be right. But it’s very difficult. I cannot do  என்கிறான் மற்றொருவன். இந்த இரண்டு வாக்கியங்களில் மனிதனின் மனநிலை வெளிபடுகிறது. நேர்மறைச் சிந்தனை நீரை விலக்கிப் பாலை அருந்தும் திறனுக்கு எடுத்துக்காட்டு.

***  

ஆடத் தெரியாதவர் முற்றம் கோணல் என்றாராம் என்று ஒரு பழமொழி உண்டு. தன்  தவறை மூடி மறைக்கும் முயற்சியில் பிறர் மேல் குற்றம் சுமத்தக் கூடாதென்ற அறிவுரையும் இந்த நியாயத்தில் மறைந்துள்ளது.

வெற்றி வாகை சூடிய பலரும் சாமானிய குடும்பத்தில் பிறந்து வீட்டில் விளக்கு வசதி  இல்லாமல் வீதி விளக்கில் படித்து தேர்வில் வெற்றி பெற்றார்கள். அதோடு நில்லாமல் தங்கப் பதக்கமும் சாதித்த பலரை வரலாறு காட்டுகிறது. நீரை விலக்கிப் பாலை அருந்திய ஹம்சம் போன்றவர்கள் அவர்கள். வீட்டில் குழப்பமான சூழ்நிலை இருந்தாலும் மன ஒருமைப்பாட்டோடு படிக்க வேண்டும் என்பது ஹம்ச-க்ஷீர நியாயத்தின் மற்றொரு உட்பொருள்.

NO COMPLAINTS – CONCENTRATE ON YOUR WORK. SHOW YOUR SKILLS என்ற அறிவுரை இதில் உள்ளது. உன் இயல்பை மாற்றி கொள் என்று கூட எச்சரிக்கிறது.

இதனை விரிவாகக் கூறும் ஒரு நீதிக் கதையை சாயிபாபா கூறுவதுண்டு. ஒரு யாத்ரீகன் குதிரை மேல் பயணித்தான். ஒரு வயலின் அருகில் வந்த போது அங்கிருந்த தண்ணீர் வசதியை கவனித்து விட்டு விவசாயிடம், “மோட்டார் போட்டு நீர் பாய்ச்சினால் என் குதிரைக்குத் தண்ணீர் காட்டுவேன்” என்றான். விவசாயி மோட்டாரை இயக்கினான். அந்த சத்தத்தில் பயந்து குதிரை பின்னால் திரும்பி ஓட்டமெடுத்தது. என்ன செய்வது? மோட்டார் போடாவிட்டால் தண்ணீர் கிடைக்காது. இந்த கதையைக் கூறிவிட்டு பாபா சொன்னார், “ஒலியைக் கண்டு அஞ்சாமல் நீர் குடிக்கக் கற்றுக் கொள்” என்று.

இந்தச் சிறிய கதை கூறும் செய்தி என்ன? NEGLECT THE UNIMPORTANT. முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாத பார்வை வேண்டும். இது ஹம்ச க்ஷீர நியாயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அரிசியிலிருந்து தவிட்டைப் புடைத்து நீக்க வேண்டும் என்பது இதன் நீதி. உண்மையான பொருளைப் பிடித்துக் கொண்டு தேவையற்றவற்றை விட்டு விட வேண்டும் என்பதே ஹம்ச-க்ஷீர நியாயம் கூறும் போதனை.

ஒரு பள்ளியில் தாய் மொழி கற்பிக்கும் ஆசிரியர் மிகவும் கோபக்காரர். தேவையில்லாமல் திட்டுவார். சிலர் மேல் காரணமில்லாமல் பகை காட்டுவார். ஆனால் பாடம் கற்றுத் தரும் முறையிலும், செய்யுட்களை இனிமையாகப் பாடி விளக்குவதிலும் நிகரற்றவராக விளங்கினார். மூக்கின் மேல் கோபம் கொண்டவராக இருந்தாலும் அவருடைய கற்பிக்கும் திறன் மீது விருப்பம் கொண்ட மாணவர்கள் மட்டுமே அவருடைய வகுப்பிற்கு வந்தனர். இவ்விதம் தனிப்பட்ட குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பிறரிடம் உள்ள திறமையை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் நமக்கு வேண்டும் என்று இந்த ஹம்ச க்ஷீர நியாயம் பாடம் புகட்டுகிறது. எதிர்மறை குணங்களை அலட்சியம் செய்து விட்டு சிறப்பு குணங்களையே கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகழ்பெற்ற கபீரின் தோஹா இங்கு நினைவுகூரத் தக்கது.

ஜாதி ந பூச்சோ சாதுகீ – பூச்லீஜியே ஞான்
மோல் கரோ தலவார் கா படீரஹன் தோ மான்

பொருள்:- சாதுவிடமிருந்து ஞானத்தைப் பெற வேண்டுமே தவிர அவருடைய பூர்வாசிரமம் பற்றிய செய்திகள் நமக்கு எதற்கு? கத்தி கூர்மையாக உள்ளதா இல்லையா என்று பார்க்க வேண்டுமே தவிர கத்தியை வைக்கும் உறை எப்படி இருந்தால் நமக்கென்ன?

நல்லவற்றை மட்டுமே நாடு. பாலுக்கும் நீருக்கும் உள்ள வேறுபாட்டை கவனித்து நடந்து கொள். நமக்கென்று சிறப்புத் திறமை இருந்தால் பாராட்டப்படுவோம் எனபது ஹம்ச க்ஷீர நியாயம் கூறும் மற்றொரு செய்தி.

தைத்ரீய உபநிஷத்தில் உள்ள சிறப்பான மந்திரம் இது. குருநாதர் சீடர்களுக்கு எச்சரிக்கை செய்யும் மந்திரம்.

“யாஸ்யஸ்மாகம் ஸுசரிதானி தானி த்வயோபாஸ்யானி நோ இதராணி…”

பொருள்:- எப்படிபட்டவரானாலும் எப்போதாவது தவறு நேர்வது இயல்பு. நாங்கள் செய்யும் நல்ல செயல்களை மட்டுமே நீங்கள் அனுசரிக்க வேண்டும். நாங்கள் எப்போதாவது சாஸ்த்திர விரோதமாக ஏதாவது செய்ய நேர்ந்தால் அதை நீங்கள் பின்பற்றக் கூடாது.

பிராணாயாமத்தில் உயர்ந்த பயிற்சி “ஸோ… ஹம்” (ஸ: அஹம்) இதுவே தத்வமசி என்பது. ‘ஸோ’ என்று பிராணவாயுவை உள்ளே இழுத்து ‘ஹம்’ என்று கார்பன்டை ஆக்சைடை வெளியே விட வேண்டும். ஸோஹம் என்பதை திருபிப் போட்டால் ‘ஹம்ச’ என்றாகும். இதுவே ‘பரம ஹம்ச’. வேதாந்த பரிபாஷையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சொல் ஹம்ச.

“பிரம்மதேவர் தன் வாகனமான ஹம்சத்தின் மீது கோபம் கொண்டால் தாமரைக் குளத்தில் நீந்தாமல் செய்ய இயலுமே தவிர, பாலையும் நீரையும் பிரிக்கும் அதன் புகழை அதனிடமிருந்து பிரிக்க இயலாது அல்லவா?” என்கிறார் ஒரு கவி.

சுபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version