― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (22): பர்ஜன்ய நியாய:

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (22): பர்ஜன்ய நியாய:

- Advertisement -

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி – 22 
தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

பர்ஜன்ய நியாய: (பர்ஜன்ய: – பொழியும் மேகம்)

மேகங்கள் பொழியும்போது எந்தவிதமான வேறுபாடும் பார்க்காமல் எல்லாவற்றின் மீதும், அனைவரின் மீதும் சமமாகவே பொழியும். இதுதான் பர்ஜன்ய நியாயம்.

சமுத்திரம், மலைகள், வயல்கள், குடிசைகள், மாளிகைகள் போன்ற அனைத்தின் மீதும் பெரிய மழையானாலும் சிறிய தூறலானாலும் சமமாகத்தான் பொழியும். வருண பகவானுக்கு வேறுபாடு கிடையாது என்று கூறும் உண்மையே இந்த பர்ஜன்ய நியாயம்.

உயர் பதவியிலும் உயர்ந்த நிலையிலும் இருப்பவர்களுக்கு மக்கள் அனைவரின் மீதும் சமமான கரிசனம் இருக்க வேண்டும் என்ற செய்தியினைக் கூறும் நியாயம் இது. பொதுமக்கள் அனைவரையும் பெற்ற தந்தை போல் அரசாண்டார் என்று உயர்ந்த அரசர்களைப் பற்றி கூறுவோம். சமதிருஷ்டியோடு ஒரே கண்ணோட்டத்தோடு பார்ப்பது பற்றி ‘பஜன்யவத்’ (வேறுபாடு கருதாமல் வர்ஷிக்கும் மேகம்) என்ற சொல்லால் பண்டைய இலக்கியங்கள் கூறும் வர்ணனைகளை பல இடங்களில் காண முடிகிறது. 

பர்ஜன்ய நியாயம் என்ற சொல்லில் மற்றொரு ஆழமான பொருள் உள்ளது. மழை அனைத்து வயல்களிலும் நிலங்களிலும் சமமாகவே பொழிந்தாலும் சாரம் நிறைந்த வயல்களில் உள்ள விதைகள் முளைக்கின்றன. தரிசு நிலங்களில் அல்லது பாறைகளின் மீதும் கிடக்கும் விதை மழை பெய்தாலும் முளை விடாது. தவறு மழையுடையதல்ல. அந்த நிலத்துடையது. இதுவே பர்ஜன்யவத் என்ற சொல்லில் உள்ள அர்த்தம்.

வகுப்பறையில் ஆசிரியர் புகட்டும் கல்வியறிவு அனைவருக்கும் சமமாகவே இருந்தாலும் அதன் பலன் அதனை ஏற்றுக் கொள்ளும் மாணவனின் மனநிலையை பொறுத்து உள்ளது. ஏற்றுக்கொள்ளும் நிலம் முக்கியம் என்ற கருத்தும் இந்த பர்ஜன்ய நியாயத்தில் மறைந்துள்ளது.

இறைவன், சாஸ்திரம், மேகம் இந்த மூன்றிற்கும் பாரபட்சம் கிடையாது. ஏற்பவர்களைப் பொறுத்துதான் பலன் இருக்கும். பெறுபவர்களை பொருத்தே பலன்.  

ஒரு அறிவியல் உதாரணத்தைப் பார்ப்போம். ரேடியோ, டிவி போன்றவற்றிற்கு ஸ்டூடியோக்களில் இருந்து வெளிவரும் சிக்னல்கள் சமமாகவே இருந்தாலும்  அவற்றை ஏற்கும் கருவிகளைப் பொறுத்தே பலன் இருக்கும்.

இறைவன் எனக்கு அநியாயம் செய்து விட்டான். கடவுள் என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனை மட்டும் பணக்காரனாக படைத்துவிட்டான் என்று நினைப்பது தவறு. கடவுள் அருள் அனைவருக்கும் சமமாகவே அளிக்கப்படுகிறது. இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது. அனைவர் மேலும் சமமாகவே கடாக்ஷத்தைப் பொழிகிறார். ஆனால் அவரவர் வினைப் பயனை அனுசரித்து  பலன் கிடைக்கிறது. இதுவும் பர்ஜன்ய நியாயம் கூறும் கருத்தே.

ஆதி சங்கரர் தன் பாஷ்யத்தில் ஓரிடத்தில் பகவத் கிருபையை அக்னியோடு ஒப்பிடுகிறார். அக்னிக்கும் வேறுபாடு கிடையாது. இதற்கு உதாரணமாக அவர்   குளிர்காயும் நெருப்பை உதாரணமாக கூறியுள்ளார். சுற்றிலும் அமர்ந்திருப்பவர்கள் யாரானாலும் வயது, ஆண், பெண், குலம், ஏழை, பணக்காரன் என்ற   வேறுபாடுகளுக்கு அதீதமாக அந்த அக்னி இருக்கிறது. ஆனால் அந்த அக்னியை விட்டு தூரமாக இருப்பவர்களுக்கு அக்னியின் வெப்பம் அண்டாது. அதே விதமாக  இறைவனின் அருள் மழை அதற்காக ஏங்குபவருக்கு மட்டுமே ப்ரத்யக்ஷமாக கிடைக்கிறது. இறைவனை பக்தியோடு நெருங்குபவருக்கு மட்டுமே வரம் கிடைக்கிறது. இது பர்ஜன்ய நியாயத்தின் மற்றொரு கோணம்.

அதே விதமாக இன்னொரு உட்பொருளைப் பார்ப்போம். அரசர்கள், குருமார்கள், பெற்றோர் ஆகியோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தும்  இதில் உள்ளது. தம் குடிமக்கள் மீதும், சீடர்கள் மீதும், தம் பிள்ளைகள் மீதும் சமமான எண்ணமே கொண்டிருக்க வேண்டும் என்ற நீதியையும் வழிமுறையையும் இந்த பர்ஜன்ய நியாயம் அளிக்கிறது.

ஸ்ரீராமன் பரதனிடம் அரசாள்பவனுக்கு இருக்க வேண்டிய தர்மங்களைக் குறித்து விவரிக்கும் போது பல இடங்களில் ‘சர்வே’ (அனைரையும் சமமாக) என்ற சொல்லை உபயோகிக்கிறான். ஸ்ரீராமன் பரதரிடம் கேள்வி கேட்கிறான் –

சுலோகம்:

தேஷாம் புக்தி பரீஹாரை: கச்சித்தே பரணம் க்ருதம் !
ரக்ஷ்யா ஹி ராஜ்ஞா தர்மேண சர்வே விஷயவாசின”
(அயோத்தியா காண்டம் 100 /48)

பொருள்: நீ மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்து அவர்களின் ஆபத்தை நீக்கி அவர்களை போஷிக்கிறாய் அல்லவா? ஏனென்றால் அரசன் என்பவன் தன் தேசத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தர்மத்தோடு பாதுகாக்க வேண்டும்.

இங்கு புரிந்து கொள்ள வேண்டியது ‘சர்வே’ என்று கூறுவது. அதுவே ராம ராஜ்ஜியம். அதுவே பர்ஜன்ய நியாயம்.

அதுமட்டுமல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தன் தம்பியிடம் அரசாட்சி தர்மங்களை விவரிக்கும் போது,

சுலோகம்:

வ்யஸனே கச்சிதாடஸ்ய துர்கதஸ்ய ச ராகவ !
அர்தம் விராகா: பஸ்யந்தி தவாமாத்ய பஹுஸ்ருதி: !
(அயோத்தியா காண்டம் 100/58)

பொருள்: இவன் பணக்காரன், அவன் ஏழை என்ற பாரபட்ச புத்தி இல்லாமல் விவகாரங்களை தீர்மானிக்கிறாய் அல்லவா? அரசனுக்கு இருக்க வேண்டிய பிரதான குணம் ‘விராகா:’ அதாவது பாரபட்சம் இல்லாமல் இருப்பது என்று கூறுகிறான்.

பர்ஜன்ய நியாயத்திற்கு விளக்கமளித்த ஒரு அறிஞர், கடல் நீரை சூரியன் உறிஞ்சி மேகமாக மாற்றி நல்ல தண்ணீராகப் பொழிவது போலவே அரசாளுபவர் மக்களிடம் இருந்து திரட்டும் வரியை மக்களுக்கு சேவை வடிவத்தில் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதுவும் ஒரு பார்வை. சமுத்திரத்தில் நீர் இருக்கிறது என்பதால் மேகம் அதன் மீது பொழியாமல் போகாதல்லவா?

இவ்விதமாக பர்ஜன்ய நியாயம் என்பது ஒரு அரசாட்சி தர்மம், தலைவனுக்கு இருக்கவேண்டிய குணம் என்று அறிய முடிகிறது.

ஆளுபவர், ‘நான் ஒரு வர்க்கத்திற்கே நன்மை செய்வேன்’ என்று கூறுவது அரசாட்சிக்கு எதிரானது. அவர்கள் அமர்ந்திருக்கும் பதவிக்கும் கூட களங்கம். பாரபட்சம் இல்லாமல் உலக நன்மைக்கே முக்கியத்துவம் கொடுத்து ஆள வேண்டும்.

‘சம்யக் விகாசம், சம விகாசம்’ இருக்க வேண்டும் என்ற விஷயத்தை மறக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். ‘சம திருஷ்டி – பர்ஜன்யவத்’ என்ற சொற்களை பல சாஸ்திரங்களில் காண முடிகிறது.

சுலோகம்:

க்ருதகானி கல்வபி சாஸ்த்ரம் பர்ஜன்யவத்
தத்யதா பர்ஜன்யோ யாவதூனம் ச
பூர்ணம் ச சர்வத்ர அபிவர்ஷதி
(பதஞ்சலி மகாபாஷ்யம் 1-2-9, 6-1-189)

பொருள்: சாஸ்திரம் எவ்விதமாக அனைவருக்கும் சமமான உபதேசம் அளிக்கிறதோ, மேகம் கூட அனைவருக்கும் சமமாகவே பொழிகிறது.

இதற்கு எதிராக சிலர் நடந்து கொள்கிறார்கள். ஆக்சிடென்டல் பிஎம் ஆக பெயர் பெற்றவர் நம்மை ஆண்ட காலத்தில் ஓட்டுக்காக இந்த தேசத்தின் வளங்களின்  முதல் பங்கு முஸ்லிம்களுக்கே உரியது என்று கூறினார். பாரபட்ச புத்திக்கு எடுத்துக்காட்டு அந்த சொற்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமான நியாயம் அளிப்பேன் என்று அரசாங்க சட்டத்தின்படி பிரதிக்ஞை செய்த ஒரு தலைமை நீதிபதி, “குறிப்பிட்ட வர்க்கத்தாருக்கே நியாயம் செய்வேன். அவர்களுக்கே நான் முக்கியத்துவம் அளிப்பேன்” என்று கூறுவது பர்ஜன்ய நியாயம் அல்ல. ஒரு குறிப்பிட்ட குலத்தவர்களே எனக்கு உறவினர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே அரசாங்க நிதியை ஒதுக்குவது பாரபட்ச புத்திக்கு எடுத்துக்காட்டு.

“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்பதே உண்மையான பர்ஜன்ய நியாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version