― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (24)- பத்ர கட நியாய:

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (24)- பத்ர கட நியாய:

- Advertisement -

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் பகுதி – 24
தெலுங்கில்: பி.எஸ்  சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

பத்ர கட நியாய: – பத்ரம் – மங்களகரமான, கடம் – மண்பானை

மனிதனுக்கு அவனுடைய பொறுப்பை நினைவூடுட்டும் அற்புதமான நியாயம் ‘பத்ரகட’ நியாயம்.

நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த பொருளை காப்பாற்றிக் கொள்ளும் கடமை நம்முடையது. ‘டேக் இட் ஃபர் க்ரான்டெட்’ என்ற மனநிலை கூடாது என்ற கருத்தைத்  தெரிவிக்கும் நியாயம் இந்த ‘பத்ர கட நியாயம்’.

ஜாக்கிரதையாக காப்பாற்றி கொள்ள வேண்டிய பொருள் மண் பானை. கவனக்குறைவாக இருந்தால் உடைந்து போகும். மீண்டும் அதை ஒட்ட வைக்க முடியாது. இந்த நியாயத்தைக் கூறும் சுபதத்தன் என்பவனுடைய நீதிக் கதை ஒன்று உள்ளது.

இந்த கதையை கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல ஹிந்துஸ்தானி சங்கீதக் கலைஞர்   மல்லிகார்ஜுன் மன்சூர் (1910- 92) உதாரணமாக கூறுவார். திரு மன்சூர் பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர். இவர் எங்கு சென்றாலும் தன்னோடு கூட குடிதண்ணீரும்  உணவும் எடுத்துச் செல்வார். போகும் இடங்களில் கிடைப்பவற்றையெல்லாம் சாப்பிட மாட்டார். மிகவும் நியம, நிஷ்டையோடு இருப்பார். எந்த பெரிய டம்பத்திற்கும் தலை வணங்க மாட்டார்.

ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள் என்று ஒரு முறை ஒருவர் கேட்டார். அதற்கு பதிலாக திரு மன்சூர் இவ்வாறு கூறினார், “இது என்னுடைய குரல், ஐயா! மிகவும் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு எடுத்து வந்துள்ளேன். தவம் செய்து இந்த குரல் வளத்தைப் பெற்றுள்ளேன். அதனால் கவனக் குறைவாக இருக்க முடியாது” என்று பதில் சொன்னார். “என் குரலை காப்பாற்றிக் கொள்வது என் பொறுப்பு” என்றார்.

“இதர புகழ்பெற்ற பாடகர்கள் உங்களைப் போல அவ்வளவு கடினமான நியமத்தை கடைபிடிக்கவில்லையே?” என்று கேட்டபோது, “அவர்களுக்கு தங்கக் குரல். அவர்களுடையது வெண்கலப் பானை. என்னுடையது மண் பானை. பத்ரகடம். நான் சுபதத்தனாக மாட்டேன்” என்று கூறுவார்.

அவர் உதாரணத்தில் கூறும் ‘பத்ரகட’ நியாயத்தின் கதாநாயகன் சுபதத்தன் என்பவன் யார்? அந்தக் கதையை இப்பொழுது பார்ப்போம்.

ஒரு ஊரில் சுபதத்தன் என்ற மிருதுவான குணம் படைத்த இல்லறத்தான் இருந்தான். அவன் பரோபக்காரி. அனைவருக்கும் இளகிய மனதோடு உதவக் கூடியவன். வேனிற்காலத்தில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்து வழிப்போக்கர்களின் தாகத்தைத் தீர்ப்பான். ஒருமுறை ஒரு சாது அந்தப் பக்கம் பயணம் செய்து சுபதத்தனின் வீட்டில் அதிதியாக வந்தார். அவன் செய்து வரும் சேவைகளுக்கு மிகவும் சந்தோஷப்பட்டு அங்கிருந்த ஒரு பானையை மந்திரித்துக் கொடுத்தார். அதுவே ‘பத்திர கடம்’. விரும்பிய உணவுப் பதார்த்தங்களை அளிக்கும் மிகச் சிறந்த மண் பானை. அந்த சிறப்பு பொருந்திய பானையின் உதவியோடு சுபதத்தன் உணவு வகைகளை சிருஷ்டி செய்து பசியோடிருப்பவர்களுக்கு தானம் செய்தான். சிறந்த கொடை வள்ளலாக பேரும் புகழும் பெற்றான். அனைவரும் சுபதத்தினை கொடை வள்ளலாகப் புகழ்ந்த போது அவனுக்கு சற்று கர்வம் வந்தது. குடிப்பழக்கத்திற்கு ஆளானான்.

ஒரு நாள் நண்பர்கள் அவனிடம், “உனக்கு இத்தனை தான தர்மங்கள் செய்யும் சக்தி எவ்வாறு வந்தது?” என்று கேட்டார்கள். மதுவின் மயக்கத்தில் இருந்த சுபதத்தன் வீட்டின் உள்ளிருந்து தனது பத்திர கடத்தை எடுத்து வந்து, அதனைத் தலை மேல் வைத்துக் கொண்டு ஆடத் தொடங்கினான். கால் தவறி கீழே விழுந்தான். பத்ரகடமும் கீழே விழுந்து துண்டு துண்டாக உடைந்தது. கவனமின்மையால் விலைமதிப்பில்லாத பொருளை இழந்தான்.

கிடைத்த ஐஸ்வர்யத்தை காப்பாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த பத்ரகட நியாயம் கூறுகிறது. புகழ்பெற்ற இசைக்கலைஞரான மன்சூர் “இந்த உதாரணத்திலிருந்து நான் தெளிவு பெற்றேன்” என்று கூறுவார்.

கிடைத்த ஐஸ்வர்யத்தை அதிர்ஷ்டம் இல்லாதவன் நிலை நிறுத்திக்கொள்ள இயலாமல் போவான் என்பதே இந்த நியாயம் கூறும் நீதி. பொருளின் முக்கியத்துவத்தை அடையாளம் காணாமல் தன் கையாலேயே அதனை இழந்தான் சுபதத்தன்.

முன்வினை புண்ணிய பலத்தினால் கிடைத்த இசைக் கலை, சங்கீதம், கவித்துவம், ஓவியம் போன்றவற்றில் புகழ்பெற்றவர்களில் சிலர் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி தம்தம் பத்ரகடங்களை உடைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களைப் பற்றி  மல்லிகார்ஜுன் அவர்கள் தன் வருத்தத்தை வெளியிட்டு இந்த பத்ர கடம் கதையைக்  கூறுவது வழக்கம்.

பத்ரகடத்தில் பல ரகங்கள் உள்ளன. நம் உடம்பும் அது போன்றதே. “சரீர மாத்யம் கலு தர்ம சாதனம்”. உடம்பு இருந்தால்தான் தர்ம காரியங்களைச் செய்ய முடியும். சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழி உள்ளது. அதற்கு மாறாக நம்முடைய உணவு விஷயங்களிலும் பழக்க வழக்கங்களிலும் நடந்து கொண்டால், உடலை நலமாக பாதுகாத்துக் கொள்ள இயலாது என்ற கருத்தும் இந்த பத்ரகட நியாயத்தில் உள்ளது.

பாக்கிய நகரத்தில் ஒரு மத்திய அரசாங்க மருத்துவமனையில் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் இருந்தார். மந்திரிகள் எம்எல்ஏக்கள் அரசாங்க உயர் அதிகாரிகள் அனைவரும் அவருடைய மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார்கள். தம் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளும் கவனமற்றவர்களின் நடத்தையை அவர் விமர்சனம் செய்வார். அவர்களை நேர் வழியில் நடக்கும்படி எச்சரிப்பார்.

“எங்களுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது” என்பார்வர்கள் அந்த விஐபிக்கள்..      உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் போவது, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் போவது, மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் போவது, மருத்துவர் சொன்ன சமயத்திற்கு செக்கப்புக்கு வராமல் போவது போன்றவை இந்த உயர் அதிகாரிகளுக்கு சர்வசாதாரணமான பழக்கம். அவர்களைக் குறித்து இந்த டாக்டர், ‘டோன்ட் டேகிட் ஃபார் க்ரான்டட்’. நீங்கள் அனைவரும் உண்மையாகவே விஐபிகள். அதாவது ‘வெரி இர்ரெஸ்பான்ஸ்பிபில் பேஷட்ன்ஸ்’ என்று அந்த தலைவர்களிடம் நேரடியாக ‘பத்ரகட’ நியாயத்தைக் குறித்து விரித்துக் கூறுவார்.

அதே போல் உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் இருப்பவர்கள் சம்பாதிக்கும் வேலையில் ஈடுபட்டு உடல்நலத்தை காப்பாற்றிக் கொள்ளாமல் போவதையும் இந்த நியாயம் எச்சரிக்கிறது.

“நம் தேசத்தில் யுக யுகங்களாக கோமாதா என்று போற்றிவரும் பசுமாடுகளை கவனமாக காப்பாற்றிக் கொள்ளாமல் மதிப்பு மிகுந்த தேசிய பசுக்களை கைநழுவவிட்டு நாசம் செய்து கொண்டோம். எத்தகைய. துரதிர்ஷ்டம் பிடித்தவர்கள் நாம்” என்று தம் வேதனையை வெளிப்படுத்துவார் பூஜ்ய பெஜாவர் பீடாதிபதி. கால்நடைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டால்தான் தேசம் பசுமையாக இருக்கும். ரசாயன எருக்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள். பசுக்கள் பால் கொடுக்க வேண்டும் என்றால் அவற்றை கவனமாக  பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதுதான் பத்ரகட நியாயம் கூறுவது.

மறைந்த ஆச்சரிய கிருபாளானி நாட்டு விடுதலை குறித்து எச்சரித்து “Eternal vigillence is the price of freedom “ – எந்நேரமும் விழிப்புடன் கவனமாக இருப்பது மட்டுமே நம் தேச சுதந்திரத்திற்கு நாம் செலுத்த வேண்டிய விலை என்று கூறுவார். .Take it for granted  என்ற மனநிலையே ஆயிரம் ஆண்டு அடிமை வாழ்வுக்குக் காரணம் என்று கூறுவார் இந்த பெரியவர்.

இப்போதும் கூட சிலர் சனாதன தர்மத்தை பற்றி, ‘இதற்கு எதுவும் நஷ்டம் வந்து விடாது’ என்று கூறும் பிரமையிலே இருக்கிறார்கள். குறைந்து வரும் ஹிந்து மக்கள் தொகை காரணமாக இந்த பத்ரகடத்திற்கு ஆபத்து நேர்கிறது. கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த நியாயம்.

வந்தேறி ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் காரணமாக வெளிநாட்டு பாஷையும் மோகமும் ஏற்படுத்தும் மயக்கத்தில் நம்முடைய சிறந்த மொழிகளையும் கலாசாரத்தையும்  போட்டுடைத்து வருகிறோம். இந்த எச்சரிக்கையையும் செய்கிறது பத்ரகட நியாயம்.

திருமண உறவை நிலை நிறுத்திக் கொள்வதற்கு கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்போடும் சினேகத்தோடும் இருக்க வேண்டும். டேக் இட் ஃபார் க்ரான்டெட் என்ற மனநிலையால் திருமணம் என்ற பத்ரகடத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. உறவுகள் ‘ஒன் வே டிராபிக்காக’ இருக்கக் கூடாது என்பது கூறுகிறது கீழ்கண்ட இந்த ஸ்லோகம்.

ததாதி ப்ரதிக்ருஹ்ணாதி குஹ்யமாக்யாதி ப்ருச்சதி |
புஞ்சதே போஜ்யதே சைவ ஷட்வீதம் ப்ரீதி லக்ஷணம்||

பொருள்: அன்பை ஏற்படுத்தும் வழிகள் மூன்றும் இரட்டைகளாகவே உள்ளன. கொடுப்பது, எடுத்துக் கொள்வது, ரகசியங்களை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வது, உணவை ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது – நண்பர்களை உணவுக்கு அழைப்பது, நண்பனின் வீட்டுக்குச் சென்று உணவுண்பது.

உறவு என்ற பானை உடையாமல் நம் நடத்தை கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நியாயம்.

மாணவர்கள் முக்கியமாக இந்த நியாயத்தை தவறாமல் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ஒருமனப்பட்ட மனதோடு படித்து பயிற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டிய நேரத்தை வீணடித்துக் கொள்வதை இந்த பத்ரகட நியாயம் தீவிரமாக எச்சரிக்கிறது.

ஒழுக்க சீலமுடையவர்கள், புத்திசாலிகள் என்று பெயர் பெற்ற எத்தனையோ பேர் சமுதாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பெற்ற பத்ரகடங்கள் போன்ற கௌரவ, மரியாதைகளைப் பற்றி சற்றும் கவனமில்லாமல் இருந்தால் அந்தப் பானை கைநழுவி உடைந்து போகும் அபாயம் உள்ளது. டேக் இட் ஃபார் க்ரான்ட்டெடாக எடுத்துக்கொள்ள கூடாது. எப்போதும் எந்த நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

மக்களின் ஆதரவை பெற்ற புகழ்பெற்ற மனிதர்கள் பலர் கவனக்குறைவால் கீழான பழக்கங்களுக்கு ஆளாகி அவமதிப்பு அடைந்த கதைகளை கேள்விப்படுகிறோம். இந்த புகழ்பெற்றவர்களின் சிறப்புகள் எல்லாம் உடைந்து துண்டுகளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அந்தந்த மனிதர்களுடையதே. Higher the rise, greater the fall  என்று ஆங்கிலப் பழமொழி உள்ளது. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், சன்மானங்களுக்கும் விருதுகளுக்கும் மயங்காமல், “இது என் பொறுப்பை அதிகரித்துள்ளது” என்று கூறுவது அதனால்தான். பெயரும் புகழும் உள்ளவர்கள் தம் பத்ரகடத்தை ஜாக்ரதையாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கவனத்தை நினைவுபடுத்டுகிறது இந்த ஸ்லோகம்.

யத்யதாசரதி ஸ்ரேஷ்ட: தத்த தேவேதரோ ஜன:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனு வர்ததே ||

(பகவத்கீதை)

பொருள்: உத்தமமான மனிதர் எந்தெந்த வேலைகளைச் செய்வாரோ பிற மக்களும் அதைப் பார்த்து தாமும் கடைப்பிடிப்பார்கள். அவர் எதை ஆதாரமாக ஏற்பாரோ அதையே உலகமும் அனுசரிக்கும் என்கிறார் கீதாச்சாரியார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version