― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்ராஜாஜி என்ற மாமேதை!

ராஜாஜி என்ற மாமேதை!

- Advertisement -

மாமனிதர் இராஜாஜி
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்-

நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டில் இருப்பவர்கள் முருக பக்தர்கள்; ஆஞ்சநேய பக்தர்கள். ஆஞ்சநேயரின் வரலாற்றைப் படிப்பதற்காக, பூஜையில் வைத்திருக்கும் “ஸகல காரியசித்தியும் ஸ்ரீமத் ராமாயணமும்” என்ற நூலை நான் அடிக்கடி எடுத்துப் படிப்பேன். என் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ‘இராவணன் டீ ஸ்டால்’ என்ற ஒரு கடை இருந்தது. எனக்கு மனதில் ஒரு குழப்பம்; இராவணன் தீயவன்; அவன் பெயரில் எதற்காக ஒரு கடை? இதனைப் பள்ளியில் கேட்டால் என் ஆசிரியர்கள் ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என ஆரம்பிப்பார்கள். தீவிர கடவுள் நம்பிக்கை உள்ள என்னால் அதனைக் கேட்க முடியாது.

அதனால் ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் தந்தையாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். இராவணனை ஏன் கொண்டாடுகிறார்கள்? அதற்கு என்னுடைய தந்தையார் எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ‘இராஜாஜி கட்டுரைகள்’ என்ற அந்த நூல் எனக்குப் பல விஷயங்களைப் புரியவைத்தது.

அப்போது பத்திரிக்கைகள் ‘இராஜாஜி’ என்ற பெயரை ‘இராசாசி’ என எழுதி வந்தன. ஆனால் நேரு ‘ரோஜாவின் ராஜா’ என்றே அழைக்கப்பட்டார். இதற்கும் விடை அந்த நூலில் இருந்தது.
அப்போது மதுக்கடைகளை அரசு திறக்க முடிவு செய்த நேரம். இராஜாஜி அரசியல் தலைவர்களைச் சந்தித்து மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.

அந்த சமயத்தில் இராஜாஜி அவர்கள் எழுதிய ‘திக்கற்ற பார்வதி’ என்ற புதினத்தைப் படிக்க நேர்ந்தது. அட! இவர் இப்படிப்பட்ட மகானா? தமிழகம் ஏன் இவரை மறந்தது? இவரை ஏன் ‘குல்லூக பட்டர்’ என அழைத்தார்கள்? என பல கேள்விகள் என் மனதில் தோன்றின.

இதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய ஒரே மனிதர் என் தந்தை ஸ்ரீமான் வைத்தீஸ்வரன் அவர்களே என முடிவு செய்து, அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். இராஜாஜியை ஏன் குல்லூக பட்டர் என அழைக்கிறார்கள்? குல்லூக பட்டர் யார்?

எனது தந்தை சொன்னார் – குல்லூக பட்டர் என்பவர் மனுஸ்ம்ருதிக்கு உரை எழுதியவர். இவரது உரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டில் அந்நாட்டின் ஜனாதிபதி இறந்து போனால் உடனே அந்நாட்டின் துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாகப் பதவி ஏற்பார்.

ஒருவேளை அவரும் இல்லை என வைத்துக்கொள்வோம். அவருக்கு அடுத்து யார் பதவிக்கு வரவேண்டும் என விதியிருக்கிறது. அது போல ஒரு இந்துக் குடும்பத்தில் வாரிசு இல்லை என்றால் அந்த சொத்துக்கள் யாருக்குப் போகவேண்டும்? இதற்கான விடையை ஆங்கில சட்ட வல்லுநர்கள் மனுஸ்ம்ருதியில் தேடினார்கள்.

அதற்கு அவர்களுக்குக் கிடைத்தது குல்லூக பட்டர் எழுதிய மனுஸ்ம்ருதிக்கான உரை. எனவே சுதந்திரத்திற்கு முன்னர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியினர் பிராமணர்களையும் அவர்களால் உருவாக்கப்பட்டது எனக் கருதப்பட்ட மனுஸ்ம்ருதியையும் எதிர்த்தனர். எனவே குல்லூக பட்டர் அவர்களைப் பொறுத்த வரையில் ஒரு மனித இன விரோதி எனச் சித்திரிக்கப்பட்டார்.

அந்த வகையில் இராஜாஜியை அவர்கள் குல்லூக பட்டர் என அழைத்தனர்.- இந்தப் பதிலைக் கேட்டு எனக்கு இராஜாஜியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை வந்தது. அதற்கு என் தந்தையார் அப்படியானால் நீ முதலில் ‘சக்கரவர்த்தித் திருமகன்’, ‘வியாசர் விருந்து’ ஆகிய இரண்டு நூல்களையும் படிக்க வேண்டும் எனச் சொல்லி அவை இரண்டையும் வாங்கித்தந்தார்.

அந்த இரண்டு நூல்களையும் நான் படித்தேன். நவம்பர் 19, 2022இல் காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் சொன்னது இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் – என்னுடைய ஆசிரியர் என்னிடத்தில் சொன்னார், “நீ பல இராமாயணங்களைப் படித்திருக்கலாம்; பல மகாபாரதக் கதைகளைப் படித்திருக்கலாம்; ஆனால் இராஜாஜி அவர்கள் எழுதிய இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்கவில்லை என்றால், நீ இந்த இரண்டு இதிகாசங்களையும் கற்றுணர்ந்தவனாக ஆக முடியாது.- எத்தனை பெரிய உண்மை.
இராஜாஜி அவர்களின் முழுப் பெயர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.

‘சக்கர வர்த்தி’ என்பது அவருடைய குடும்பப் பெயர். அவர் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் அன்றைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தையார் நல்லான் சக்கரவர்த்தி ஐயங்கார், தாயார் சிங்காரம்மாள் ஆவர். ஆங்கில விக்கிபீடியா இவரது தந்தியார் பெயர் சக்ரவர்த்தி வெங்கடராய ஐயங்கார் எனச் சொல்லுகிறது.

இராஜாஜி தனது பள்ளிக் கல்வியை ஹோசூரில் உள்ள ஆர்.வி அரசுப்பள்ளியில் முடித்தார். பிறகு பெங்களூருவில் உள்ள செண்ட்ரல் காலேஜில் படித்து 1894இல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயின்று 1897இல் வழக்கறிஞரானார். பெற்று, தம்முடைய இருபத்தோராவது வயதில் அலமேலு மங்கம்மாள் என்பவரை மணந்து கொண்டார்.

இராஜாஜிக்குப் படிப்பதில் ஆர்வம் அதிகம். ஆங்கில அறிஞர்கள் பலரின் நூல்களைப் படித்ததோடு மகாபாரதம், கீதை, பைபிள் என ஆன்மிக விஷயங்களையும் கற்று உணர்ந்தார்.

இராஜாஜி-அலமேலு மங்கம்மாள் தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மூவர் ஆண்கள்; அவர்கள் சி.ஆர். நரசிம்மன், சி.ஆர். கிருஷ்னஸ்வாமி, சி.ஆர். ராமஸ்வாமி. இரண்டு மகள்கள் – லக்ஷ்மி காந்தி, நாமகிரி. 19 ஆண்டு கால மண வாழ்க்கைக்குப் பின்னர் அலமேலு மங்கம்மாள் 1916இல் இறந்துபோனார். அப்போது இராஜாஜி அவர்களுக்கு வயது 38. ஆனால் அவர் மறுமணம் செய்துகொள்வது பற்றி நினைக்கவில்லை. தன்னுடைய ஐந்து குழந்தைகளை தானே வளர்த்து ஆளாக்கினார்.

அரசியல் வாழ்க்கை

பொது வாழ்க்கையில் வ.உ.சி, சுப்ரமணிய பாரதி, அன்னிபெசன்ட் அம்மையார், திலகர் இவர் களிடம் ஈடுபாடு ஏற்பட்டது. சேலம் விஜய ராகவாச்சாரியார் மூலம் இவர் அரசியல் அறிமுகம் பெற்றார். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், சரோஜினி நாயுடு ஆகியோரின் பேச்சு அவரை வெகுவாய் ஈர்த்தது.

1919இல் ஆங்கிலேய அரசு கொண்டுவந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி நடந்தது. இச்சட்டத்தின்படி ஊர்வலம், போராட்டம் நடத்துகிறவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்தப் போராட்டத்தில் இராஜாஜி கலந்துகொண்டார். அது முதல் சுதந்திரம் பெறுகிறவரை நடந்த அத்தனை போராட்டங்களிலும் இராஜாஜி கலந்து கொண்டிருந்தார்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட சென்னை வந்தபோதுதான் முதல் முதலாக இராஜாஜி அவரைச் சந்தித்தார். அதுவரை வழக்குரைஞர் தொழிலில் கவனம் செலுத்தி வந்தவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சுதந்திரப் போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபடலானார்.

அதுவரை செய்து வந்த வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டார். இராஜாஜி முதல் முறையாய் சிறை சென்றது ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தின் போது தான். விடுதலையானபின் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் தொடங்கினார். அத்துடன் மதுவிலக்குப் பிரச்சாரம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ‘விமோசனம் என்ற பத்திரிக்கை நடத்தினார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்குப் பாடுபட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version