― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்ஜனநாயகம் என்ற பிரமை!

ஜனநாயகம் என்ற பிரமை!

- Advertisement -

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

இது ஜனநாயக தேசம் என்ற விஷயம் நாட்டு மக்களுக்கும் சில தலைவர்களுக்கும் இப்போது கூட தெரியவில்லை என்றே கூற வேண்டும். தலைவர்கள் தேர்தலில் வென்ற உடனே ஏதோ அரசனாகிவிட்டது போல நடை உடை பாவனை மாறி விடுகிறது. அவனுக்கு வாழ்க வாழ்க என்று கோஷம் போடும் கூட்டம் ஒன்று அரசனுடைய மந்திரிகள் போல நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.

மக்கள் பணத்தை தம் சொந்த நலனுக்குப் பயன்படுத்துவதோடு  அதிகாரிகளையும் பாதுகாப்பு அலுவலகங்களையும் கூட தம்முடைய சொந்தப் பணிகளுக்கும் தம்முடைய உறவுகளுக்கும் இஷ்டம் வந்தாற்போல பயன்படுத்த தொடங்குகிறார்கள். அரசாங்கம் மற்றும் தேசத்தின் வடிவம் என்ன என்பது கூட தெரியாத தலைவர்கள் உள்ளார்கள்.

சாலைகளின் இருபுறமும் சின்னச் சின்ன தெருச் சந்துகளில் கூட பெரிய பெரிய விளம்பரப் பதாகைகளில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் காணப்படுகின்றன. ஒரு பெருந்தலைவன் அவனைச் சுற்றிலும் சின்னத் தலைவர்களின் வண்ணப்படங்கள் இடைவெளியின்றி பறந்து காட்சி மாசையும், காற்று மாசையும் விளைவிக்கின்றன. அந்த கொண்டாட்டங்கள் முடிந்து போனாலும் அவை நீக்கப்படாமல் கிழிந்து தொங்கிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு தலைவன் சாலையில் வந்தால் பயங்கரமான ட்ராபிக் ஜாம்களும் வாகனத் திருப்பங்களும் ஆயிரக்கணக்கான சாமானிய மக்களுக்கு தொந்தரவு அளிக்கின்றன. ஒரு அற்பத் தலைவனின் பாதுகாப்புப் படைக்காக ஆகும் செலவு பல நலத்திட்டங்களை முடிப்பதற்குப் பயன்படும். சின்னத் தலைவர்கள் கூட ஒரு சிறிய பதவி கிடைத்தாலும் அதிகாரத்தைக் காட்டி ஊழல் செய்யத் தொடங்கி சொந்த சொத்துக்களை வளர்த்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.

அவர்களே இப்படி இருக்கையில் குடும்ப வாரிசுத் தலைவர்களைப் பற்றி  என்னவென்று சொல்வது?

தந்தை மகாராஜா என்றால் மகன் இளவரசனே! அவன் உறவினர்கள் அனைவரும் முக்கியமான பதவிகளில் இருந்து தீர வேண்டும்.

இது ஜனநாயகம் தானா என்ற கேள்வி யாருக்குமே தோன்றாதது தான் வியப்பளிக்கிறது. மதம், ஜாதி என்ற வேறுபாடுகள் நிரம்பிய செய்தித்தாள்கள் கூட ஜனநாயகம் என்ற உணர்வு தமக்கும் இல்லாமல் மக்களுக்கும் ஏற்படுத்தாமல் பகட்டாளருக்கு ஜால்ரா போட்டே காலம் கழிக்கின்றன.

கிடைத்த ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மீண்டும் பதவியை பெறுவதற்கான திட்டம் தீட்டுவதிலேயே காலத்தைக் கழித்து விடுகிறார்கள். மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்கள் எதுவும் நடப்பதில்லை.

மத்திய அரசாங்கம் கொடுத்த நிதியை தம் பெயரில் போட்டுக்கொண்டு, அபய ஹஸ்தம் என்றும் ‘உங்களைக் காக்கும் கைகள்’ என்று தலைப்புகளோடு அட்டகாசம் செய்கிறார்கள். மக்களின் ஓட்டுகளால் வெற்றிபெற்று மக்கள் பணத்தைச் செலவழிக்கையில்   தனிப்பட்ட மார்தட்டல் எல்லாம் எதற்காக என்று கேட்பவர்களே இல்லாதது வியப்பளிக்கிறது.

பிற ஜனநாயக தேசங்களில் அமைச்சர்களுக்கு இத்தனை ஆடம்பரமும் முக்கியத்துவம் காணப்படவில்லை. நம் தேசத்தில் மட்டுமே இத்தகைய துரதிருஷ்டம் நிலவுகிறது.

மத்தியில் முழுமையான ஆட்சியாக முன்னேற்றப் பாதையில் ஊழலற்ற வகையில், நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வளர்ந்து வருகிறது. ஆனால் பல மாநில அரசுகள் குடும்ப ஆட்சிப் பகட்டோடும்   கபடமான உபாயங்களோடும் பதவி மோகத்தோடும் முட்டிக் கொள்கிறார்கள்.

தாம் ஏதோ அவதாரம் எடுத்த மகாராஜாக்கள் என்று தம்மை நினைத்துக் கொண்டு பிறரையும் பிரமிக்க வைக்கிறார்கள்.

ஓட்டு வங்கிகளை வளர்த்துக் கொள்வதும் அவர்களைத் தாஜா செய்வதும் அளவுக்கதிகமான அதிகாரத்தோடு, காவலர்களைத் தமக்கு அனுகூலமாக  கட்டுப்படுத்தி, நேர்மையற்ற வழியில் வெற்றி பெறும் முயற்சிகளும், பகை தீர்த்துக் கொள்வதும், நிலங்களை கப்ஜா செய்வதும், தமக்கு விருப்பப்பட்ட மதத்தவருக்கு நிலங்களை தானம் செய்வதும், ஒன்றா இரண்டா…? இந்த முறைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த பகிரங்க ரகசியங்களே!

மாநிலத்தில் குறைந்தபட்ச நலத் திட்டங்கள் கூட இல்லாமல் போனாலும் சம்பளம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்காமல் போனாலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் என்றோ அல்லது தன் குலத்தைச் சேர்ந்தவர் என்றோ, தம் ஜாதியைச் சேர்ந்தவர் என்றோ, தம் மதத்தைச் சேர்ந்தவர் என்றோ அல்லது தம் மதத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றோ தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது குடும்ப வாரிசு ஆட்சியாளர்களுக்கு அசாத்தியமான துணிச்சலை அளிக்கிறது.

தனி மனிதருக்கு ஜால்ரா போடுவதும் அரசியல் சதித் திட்டங்களும் மிக அதிக அளவில் இருந்தாலும் எந்த உணர்ச்சியும் இன்றி இருக்கும் மக்கள் ராஜபக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து தேசபக்தியையும் தேசியவாதத்தையும் மறந்து போகிறார்கள். அவற்றை விமர்சிக்கிறார்கள்.

பதவி தாகத்தோடு அதிகாரத்தை ராஜபோகமாக நினைக்கும் மத வெறியால்  நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி முதலான முக்கிய அம்சங்களுக்கு ஆபத்து விளைவிப்பதற்கும் தலைவர்கள் பின்வாங்குவதில்லை. அத்தகைய  தலைவர்களின் ஆட்சியில் பல மாநிலங்கள், தாம் தேசத்தின் ஒரு பகுதி என்பதையே மறந்து போகும் நிலையில் உள்ளன.

பல மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ள முறை கூட நம்பிக்கை ஏற்படுத்தும் விதாமாக இல்லை. குண்டர், ரவுடிக் கூட்டங்களுக்கு அளிக்கப்படும்  அதிகாரமே வெற்றிகளை நிர்ணயிக்கின்றன.

ஓட்டளிக்க வரும் வாக்காளர்களின் சதவீதம் கூட 50 அல்லது 60க்கு மேல் இல்லை. அதிலும் அக்கிரமமாக ஓட்டளித்தது எத்தனையோ? அனைத்தையும்  சேர்த்துப் பார்த்தால் ஒரு மாய ஜனநாயகம் என்ற பிரமையில் சுற்றி அலையும் நிலைமை தென்படுகிறது. எடுத்துச் சொல்பவர்களோ, சொன்னால் கேட்பவர்களோ கண்ணில் படவில்லை.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அரசாங்க சட்டத்தின்படியும் தேர்தல் நியதிகளின் படியும் நடந்து கொண்டால் டெபாசிட் கிடைப்பது கூட கேள்விக்குறியே!

ஓட்டுக்கு நோட்டு ஒவ்வொரு தேர்தலிலும் பகிர்ந்து கொண்டே வருகிறார்கள். அதோடு மது போன்றவற்றின் விநியோகமும் உள்ளது.

“நான் உண்மைக்கே அடிபணிவேன், எங்களுடையது மக்கள் கட்சி” என்ற பொய்மை வாக்குறுதிகளை வெளியிடும் செய்தி ஊடகங்களும் அந்தந்த கட்சிகளின் கைங்கரியங்களுக்கு தம்மைச் சமர்ப்பணம் செய்து கொள்கின்றன.

மிகப் பெரிய நம் ஜனநாயக தேசத்தில் பல மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் நடத்தை இவ்விதம் உள்ளது. இந்தப்  பின்னணியில் நல்ல மாற்றங்களை எதிர்பார்ப்பது எவ்விதம்?

(ருஷிபீடம் – மார்ச் 2023 – தலையங்கம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version