
தெலுங்கில் – சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
புனிதமான கங்கை நதிக்கு இந்தப் புத்தாண்டில் புஷ்கரம் வருகிறது. புஷ்கரம் என்றவுடனே அனைவருக்கும் சிறப்பான உற்சாகம் பிறக்கிறது.
இயல்பாகவே நதிகள் புனிதமானவை. அதிலும் புஷ்கர காலத்தில் அவற்றுக்கு மேலும் புனிதம் ஏற்படுகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதனால் அந்த நேரத்தில் தம்மைப் புனிதப்படுத்திக் கொள்வதற்குத் தகுந்த சிரத்தை ஆத்திகர்களிடம் மலர்கிறது.
கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா போன்ற நதிகளின் புஷ்கரங்களில் சென்று நீராடிப் பழக்கமானவர்களுக்கு, கங்கை புஷ்கரத்திற்காக பிரயாகை, காசி, ஹரித்துவார் போன்ற புண்ணிய க்ஷேத்திரங்களைக் காணவும் பிரயாணம் மேற்கொள்ளவும் இயல்பாக உற்சாகம் ஏற்படுகிறது.
மாநிலங்களும் மொழிகளும் வேறானாலும், கலாச்சாரம் மாறுபட்டிருந்தாலும், தேசம் முழுமையும் ஒன்றே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நல்ல சம்பிரதாயம் இது போன்ற புஷ்கரங்கள் மூலம் கிடைக்கிறது.
உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கம் தத்தம் எல்லையில் தீர்த்த யாத்திரை நிமித்தம் வருபவர்களுக்கு சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சி செய்கின்றன. பல்வேறு வியாபாரங்கள் இந்நேரத்தில் பொருளாதார முன்னேற்றத்தைச் சாதிக்கின்றன. ஹிந்துக்களின் பவித்ர எண்ணம் வியப்பான முறையில் வெளிப்படும் நல்ல காலம் இது.
நாத்திகர்கள், ஹிந்து மத வெறுப்பாளர்கள், தேசிய கண்ணோட்டத்தை மறுப்பவர்கள் கூட இந்த நேரத்தில் பல்வேறு மீடியாக்களில் இதில் சிரத்தையோடு ஈடுபடுபவர்களை ஏளனம் செய்து பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் பயனற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டு உளறும் நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். அவர்களும் பொழுது போக்குவதற்காக விவாதம் செய்யும் பண்டிகையாக இது அமைகிறது.
எது எப்படி ஆனாலும் மிகச் சிறப்பான கோலாகலமான நேரம் இது. புஷ்கர ஸ்நானங்களையும், தேவ, பித்ரு காரியங்களையும் மேற்கொள்ளும் இந்த நற்காலம் சிரத்தையையும் பக்தியையும் வளர்த்துக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பு.
தீர்த்த ஸ்நான நியமங்கள், விதிகள்-
அதே சமயத்தில் ஆத்திகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திர நியமங்கள் சில உள்ளன. தனி மனிதனின் புண்ணியம் தேடிக்கொள்ளும் ஆசை சமுதாயத்திற்கு கேடு விளைப்பதாக இருக்கக் கூடாது. புண்ணிய தீர்த்தங்களில் நடந்து கொள்ளும் முறையை வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் விஸ்தாரமாக தெரிவித்துள்ளன.
நதி தீரங்களில் மற்றும் நதிகளில் பல் துலக்குவது, செருப்புக் காலோடு குளிப்பது கூடாது. உறங்கும் போது உடுத்திக்கொண்ட உடையோடு புனித நதிகளில் ஸ்நானம் செய்யக் கூடாது. வீட்டிலோ தங்குமிடத்திலோ சாதாரண ஸ்நானம் செய்து மாற்றிக் கொண்ட சுத்தமான உடையோடு நதிகளில் சென்று குளிக்க வேண்டும். ஷாம்பு குளியல், சோப்பு, டிடர்ஜென்ட் உபயோகித்து துணி துவைப்பது போன்றவை செய்யக்கூடாது.
புனித நீர் நிலைகளில் எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பதற்கு சாஸ்திரங்கள் தடை விதித்துள்ளன. சங்கல்பத்தோடு கூட முழுகி எழுந்திருப்பதுதான் முக்கியம். அதன் பிறகு தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணங்களையும் தானங்களையும் செய்ய வேண்டும் என்று விதி உள்ளது.
நீரிலும், நீர் நிலைகளின் அருகிலும் எச்சில் துப்புவது, மல, மூத்திரங்களைக் கழிப்பது கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. “ந நிஷ்டீவ, ந மூத்ர புரீஷம் குர்யாத்” என்று எடுத்துரைக்கிறது.
நெரிசல் ஏற்படும்படி ஒருவருக்கொருவர் தள்ளிக் கொள்வது போன்ற கட்டுப்பாட்டடற்ற செயல்கள் நடக்காமல் அவரவரே ஒழுக்கத்தோடும் நியமத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் உள்ளூர் ஆட்சி நிர்வாகமும், தன்னார்வல அமைப்புகளும் பொறுப்போடும் சேவை உணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன சாஸ்திர விதிகளைக் கடைபிடித்தால் ஜனத் திரளில் துப்புரவு, மாசு நிவாரணம் போன்றவற்றை ஓரளவுக்கு சாதிக்க முடியும்.
இவ்விதம் பெருமளவில் மக்கள் கூடும் உற்சவத்தை வியாபாரம் செய்து கொள்ளும் பிரச்சாரகர்கள், வஞ்சகர்கள் போன்றவர்களின் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தீர்த்த ஸ்நானத்தால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை எத்தனை தேவையோ, நல்ல பழக்க வழக்கங்கள், நியாயமான நடத்தை, ஒழுக்கம், சுத்தம், தார்மீக நிஷ்டை போன்றவற்றைக் கடைப்பிடித்தால்தான் தீர்த்த யாத்திரைகள் பலனளிக்கும் என்று ரிஷிகளின் சொற்களை நம்பிக் கடைப்பிடிப்பதும் அத்தனை தேவையே.
மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் கடைபிடிக்க வேண்டிய நியமங்களைக் கடைபிடிக்க இயலாதவர்களுக்கு வெளியில் உள்ள தீர்த்தங்களாலும் பலன் இருக்காது. கள் நிறைந்த பானையை மூடி வைத்து கங்கை நீரால் அபிஷேகம் செய்தாலும் அதற்குப் புனிதம் உண்டாகாது என்ற உபமானத்தை வியாசரே தெரிவித்துள்ளார்.
மகிமைகளைக் கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து குளிப்பவர்கள், அதற்கான மரியாதையையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். புஷ்கரங்களின் உயர்வையும் தீர்த்தங்களின் சிறப்பையும் எடுத்துரைக்கும் சாஸ்திரங்களே இந்த நியமங்களையும் கூறியுள்ளன. அதை மறக்கக்கூடாது.
இவற்றைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு பெரியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் உள்ளது.
புஷ்கர கங்காதேவிக்கு வந்தனங்கள்!
—‘ருஷிபீடம்’ ஏப்ரல் 2023 தலையங்கம்