― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (28): சிம்ஹாவலோகன நியாய:

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (28): சிம்ஹாவலோகன நியாய:

- Advertisement -

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 28

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

சிம்ஹாவலோகன நியாய: – சிம்ஹம் – சிங்கம், அவலோகனம் – பார்ப்பது.

ஸ்லோகம் :

நாபிஷேகோ ந சம்ஸ்கார: சிம்ஹஸ்ய க்ரியதே ம்ருகை: !விக்ரமார்ஜித ராஜ்யஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா !!

சிங்கத்தின் உயர்வைக் குறித்த இந்த ஸ்லோகம் நினைத்துப் பார்க்க உகந்தது. சிங்கம் காட்டுக்கு ராஜாவாக எவ்வாறு ஆனது? காட்டில் உள்ள பிற மிருகங்கள் எல்லாம் சேர்ந்து சிங்கத்துக்கு பட்டாபிஷேகம் செய்தனவா? அல்ல. எந்தவிதமான சமஸ்காரத்தாலோ/ பண்படுத்தியோ அல்லது தேர்தல் நடத்தியோ சிங்கத்தை ராஜாவாக மீதியுள்ள விலங்குகள் தேர்ந்தெடுத்தனவா? அல்ல. தனக்கிருக்கும் பராக்கிரமத்தின் காரணமாக சிங்கம் தனக்குத்தானே வன ராஜாவாக வெளிப்பட்டது.

காட்டு விலங்குகள் அனைத்திலும் சிங்கத்திற்கு ஒரு தனித்துவம் உள்ளது. சிங்கம் கம்பீரமாக சற்று தூரம் பிரயாணம் செய்து, பின் நிதானமாக தலையைத் திருப்பி ஒருமுறை தான் நடந்து வந்த பாதையைப் பார்த்துக் கொள்ளும். இதுதான் சிம்ஹாவலோகனம்.

அவ்வாறு எதற்காகப் பார்க்கிறது என்று நமக்கு நிச்சயமான காரணம் தெரியாது. சரியான மார்க்கத்தில் பயணம் செய்கிறோமா அல்லது யாராவது எதிரிகள் பின்னால் தொடர்ந்து வருகிறார்களா என்ற பரிசீலனைக்காகவா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என்று நம்மால் அறிய முடியாது.

எது எப்படி ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் சிறிதுகாலம் பயணித்த பின் பின்னால் திரும்பி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இந்த சிம்ஹாவலோகனம் நியாயத்தில் உள்ளது.

“ஒரு முறை பின்னால் திரும்பி பார்த்துக் கொள். வாழ்க்கை, அறிமுகமான மனிதர்கள்,  அனுபவங்கள் போன்றவற்றை கடந்து வந்த காலம் நினைவுபடுத்தும்” என்று ஒரு கவிஞர் கூறுகிறார். அவ்வாறு பின்னால் திரும்பி பார்த்துக் கொள்வதே இந்த நியாயம் – சிம்ஹாவலோகனம்.

ஒவ்வொரு மனிதனும் மட்டுமல்லாமல்,  சமுதாயமும், தேசமும் தம்மைத்தாமே மதிப்பாய்வு செய்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். மனித இனத்திற்குச் சிறந்த வழிகாட்டலும் உயர்ந்த உற்சாகமும் ஏற்படும் வகையில் சக்தியளிப்பது இந்த சிம்ஹாவலோகனம். இது முன்னேற்றத்திற்கான சாதனம். ‘Continuous Corrections’  தேவை என்று கூறுகிறது இந்த நியாயம். வழியைத் தவறவிடாமல் காப்பாற்றுவது இந்த சிம்ஹாவலோகனத்தின் பயன்.

இது தொடர்பான ஒரு கதை-

ஒரு கிராமத்திலிருந்து ஒரு மனிதன் கிளம்பி வேறொரு கிராமத்திற்குப் பயணம் செய்து நடுவில் இருந்த ஒரு காட்டை அடைந்தான். அவனுக்கு சுருட்டு புகைக்க வேண்டும் என்று தோன்றியது. சுருட்டை வாயில் வைத்துக் கொண்டு நெருப்புக் குச்சியை ஏற்றினான். அது காற்றில் அணைந்து போனது. அவ்வாறு பல முறை முயன்ற பின், பின்னால் திரும்பிப் பார்த்து காற்று குறைந்து இருந்ததால் நெருப்புக் குச்சியை ஏற்றினான். சுருட்டை இழுத்து பின்னால் திரும்பியதை மறந்து போய் நடந்து சென்று  மீண்டும் கிளம்பிய கிராமத்திற்கே வந்து சேர்ந்தான். அவ்வாறு ஆபத்துகள் நடக்காமல் சரியான மார்க்கத்தில் நாம் செல்கிறோமா என்று சோதித்துக் கொள்வதற்காகவே இந்த சிம்ஹாவலோகனம்.

காலத்திற்கு ஏற்றார் போல்-

வேத மாதாவின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு ரிஷிகள் தயாரித்த ஸ்மிருதிகள் – மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, கெளதம ஸ்மிருதி, கௌண்டில்ய ஸ்மிருதி போன்றவை. இந்த தர்ம நூல்கள் எவ்வாறு தோன்றின?

பண்டைக் காலத்திலிருந்தே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவில் தர்ம சூத்திரங்களையும் தர்ம சூட்சுமங்களையும் பரிசோதனை செய்து காலத்திற்கு ஏற்றார் போல் ஸ்மிருதிகளை அமைப்பார்கள். இது பவித்ரமான நம் சனாதன தர்மத்தின் சிறப்பு.

செமிட்டிக் மதங்களில் இப்படிப்பட்ட சிம்ஹாவலோகனம் இல்லை. அதனால்தான்  செமெட்டிக் மதங்கள் புதிய தலைமுறைக்கு முக்கியமற்றவையாக மாறிவிட்டன.  விஞ்ஞானத்திற்கு விரோதமானதாக நிரூபிக்கப்படுகின்றன. உலகை ரத்தக்களரியாகச் செய்கின்றன. உலகத்தை ரத்தம் சிந்தச் செய்த பாவத்தை மூட்டை கட்டிக் கொள்கின்றன.

“ஆ நோ பத்ரா: க்ரதவோ யாந்து விஸ்வத:” – 

பொருள் – “நல்ல ஆலோசனைகள் உலகின் நான்கு மூலைகளில் இருந்தும் வரட்டும்”. இது நம் பாரதிய கொள்கை.

விசாலமான இதயத்தோடு தற்போதைய சூழ்நிலைகளை ஆராய்ந்து சமுதாயத்தில்   நவீன சைதன்யத்தை நிரப்புவதற்கு பல மகான்கள் முயற்சி செய்தார்கள். வனவாசிகளை அரவணைத்து அவர்களுக்கு தர்ம வழிகளைக் கற்றுத் தந்த டக்கர் பாபா, பெண் கல்வியின் முக்கியத்துவத்துக்காக பிரச்சாரமும் ஒலிபரப்பும் செய்த பூலே தம்பதிகள், தீண்டாமையை விலக்கி அவர்களில் தன்னம்பிக்கையை நிரப்பும் முயற்சியைச் செய்த டாக்டர் அம்பேத்கார், நாராயண குருதேவ் போன்றோர், தீய பழக்க வழக்கங்களை ஆணி வேரோடு பிடுங்கியெறியும்படி ஊக்கமளித்த சமுதாய நலன் விரும்பியான திரு பாலா சாஹேப் தேவரஸ்… இவர்கள் அனைவருக்கும் ஸ்பூர்த்தி அளித்தது இந்த சிம்ஹாவலோகன நியாயமே.

யூதர்களின் சாகசம் –

தேவைக்குத் தகுந்தாற்போல் மாற்றங்களைச் செய்து கொள்வது வெற்றியாளர்களின் குணம். பல்வேறு தேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே வாழ்ந்து வந்த யூதர்கள் தமக்கென்று ஒரு தேசத்தை ஏற்பாடு செய்து கொண்டார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையை சிம்ஹாவலோகனம் செய்து கொண்டார்கள். பல புதிய பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதுவரை சாத்விகமாக வாழ்ந்துவந்தவர்கள் ஆயுதங்களை கைக் கொண்டார்கள். படைப்பயிற்சி மேற்கொண்டார்கள். சுற்றியிருக்கும் எதிரிகளை எதிர்த்து நிற்கிறார்கள். தம் மொழியையும் தனித்தன்மையையும் காப்பாற்றிக் கொள்கிறார்கள். அதனால்தான் இஸ்ரேலுக்கு உலகிலேயே பிரத்தியேகமான இடம் உள்ளது.

சரியான விளக்கம் –

சத்ரபதி சிவாஜி வீரத்திற்குப் புதிய விளக்கம் அளித்தார். அது ‘தர்மத்தைக் காப்பவர்களே வீரர்கள்’ என்பது. அதற்கு முன்பு வரை முகலாயர்களின் புகழ்ச்சிக்கும் விருதுகளுக்கும்   மகிழ்ந்து அவர்களுக்கு ஊழியம் செய்தவர்களே வீரர்களாக கருதப்பட்டார்கள். அப்போதிருந்த சூழலை சிம்ஹாவலோகனம் செய்த பின், அவர்கள் அளிக்கும் வெகுமதிகளுக்கு அடங்கி ஹிந்து சமுதாயத்திற்கு அநியாயம் செய்து வருகிறார்கள் என்று வீர சிவாஜி உணர்ந்தார். நிலைமை மாறியது.

அரசியல் சாசனத்தின் மதிப்பாய்வு –

சிம்ஹாவலோகனத்திற்கு மற்றும் ஒரு உதாரணம் – பிரிட்டிஷார் நம் தேசத்தை விட்டுச் செல்வதற்கு முன்பே – 1946 நவம்பரில் முக்கியமான சிலர் அப்போதைய தேவைக்காக எழுதிய, நம் அரசாங்கச் சட்டத்தை, இந்த 70 ஆண்டுகளில் 106 முறை மாற்றங்களும் சேர்ப்புகளும் செய்து கொண்டோம். பலருக்குத் தெரியாத செய்தி – “இது என்னுடைய அரசாங்கச் சட்டம் அல்ல. தம் அபிப்பிராயங்களை சிலர் என்னைக் கொண்டு எழுத வைத்தார்கள். அவ்வளவுதான்” என்று கூறினார் அரசாங்கச் சட்டத்தை அமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கார். ஒருமுறை எழுதியவற்றை நாட்டு நலனுக்காக மாற்றங்கள் செய்து கொள்வது தவறல்ல. ‘மாற்றங்கள் செய்ய மாட்டோம்’ என்று கூறுவதுதான் மூடத்தனம்.

மேம்படுத்திக் கொள்வதற்கு –

தனிமனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு சிம்ஹாவலோகனம்   உதவுகிறது. அதற்குச் சாதனம் தினசரி எழுதும் டைரி. பழங்காலத்தில் பலருக்கும் இருந்த இந்த பழக்கத்தைப் இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் நடவடிக்கைகள், நாம் செய்யும் நேர விரயம், அனாவசியச் செலவுகள் போன்றவை குறித்து நமக்குப் புரிதல் ஏற்படும். நாம் அனுதினம் எழுதும் டைரி, சரியான பாதையில் வழிநடக்க அறிவுறுத்தும்.

மலையாள மொழியில் ஒரு கதை –

ஒரு சிறந்த ஓவியன் இருந்தான். அவன் வரைந்த சித்திரங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. அவனுடைய மகன் அந்தக் கலையை கற்றுக் கொண்டான். ஆனால் அதை யாருமே வாங்கவில்லை. தந்தையைக் கேட்டபோது ஓவியம் தீட்டுவதில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்தார். மகன் தன் குறைகளைத் திருத்திக் கொண்டு தந்தைக்கு சமமாக மக்களுடைய ஆதரவைப் பெற்றான். ஆனால் ஒரு நிலைக்கு வந்தபின், “எனக்கு எல்லாம் தெரியும். தந்தை சொன்னது என்ன இருக்கிறது?  குருவின் துணை தேவையில்லை” என்று கர்வம் ஏற்பட்டதால் அவனுடைய வீழ்ச்சி தொடங்கியது. நிரந்தரம் நம்மை நாம் பரிசீலித்துக் கொண்டு நம்மை நாம் பண்படுத்திக் கொண்டு நம் குறைகளைக் களைய வேண்டும் என்று இந்த நியாயம் கூறுகிறது.

மதிப்பாய்வு –

மனிதர்களுக்கு மட்டுமல்ல. அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் கூட இப்படிப்பட்ட சிம்ஹாவலோகனம் தேவை. ஏதாவது நிகழ்ச்சியை நடத்திய பின் அனைவரும் சேர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். நிகழ்ச்சியை வெளி மனிதர்களின் அற்புதம் என்று கூறினாலும் இப்படிப்பட்ட சிம்ஹாவலோகனத்தால் மட்டுமே நிர்வாகிகளின் கண்களுக்குக் குறைகள் தென்படும். எதிர்காலத்தில் அவற்றை சரி செய்து கொள்ளலாம். “ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இந்த சிம்ஹாவலோகனம் நடக்க வேண்டும்” என்று  ‘சங்கடனா சாஸ்திரம்’ கூறுகிறது.

இடைச்செருகல்களை களைந்தெறிதல் –

ரிஷிகள் அளித்த நூல்களில் நுழைந்த இடைச்செருகல்களைக் கண்டு நீக்கும் செயலும் சிம்ஹாவலோகனமே. அண்மையில் ரிஷிகளுக்குச் சமமான ஒருவர் மனு ஸ்மிருதியை பரிசீலித்து அதில் உள்ள மூல ஸ்லோகங்களை (1226) மிஞ்சிய இடைச்செருகல்கள் (1459) இருப்பதைக் கண்டறிந்து கூறினார்.

நரசிம்மஹாவலோகனம் –

கம்யூனிசம், சோஷலிசம் போன்ற இஸங்களின் காலம் கடந்து விட்டது என்ற உண்மையை அறிந்து, நேரு கடைபிடித்த முறைகளுக்கு மாறாக பொருளாதார சீர்திருத்ததிற்கு திரை தூக்கிய முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ஹா ராவு நம் தேசத்தின் பொருளாதார நிலைப்பேற்றுக்கு வித்திட்டார்.  இது உண்மையிலேயே ‘நரசிம்மஹாவலோகனம்’.

யாரொருவர் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றங்களையும் சேர்ப்புகளையும் செய்ய மாட்டாரோ அவர் மக்களின் நினைவிலிருந்து மறைந்து போவார். மாற்றத்தை ஏற்காமல் முன்னேற்றத்தை தடுக்கும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. கொலைகள், ரத்தகிளரி,  கொலைச்சரித்திரம் நிறைந்த அந்தக் கட்சி சிம்ஹாவலோகனதிற்குத் தொலைவாக இருப்பதால்தான் உலகிலிருந்தே துரத்தி விடப்பட்டது. குருட்டு நடவடிக்கை காரணமாக செமிட்டிக் மதங்களிடமிருந்து பகுத்தறிவு வாதம் செய்பவர்கள் கூட விலகி ஓடுகிறார்கள்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தேசங்கள் ஆத்மாவலோகனமும், சிம்ஹாவலோகனமும் – ஆத்ம பரிசீலனையும், மதிப்பாய்வும் செய்து கொள்வது முன்னேற்றத்தின் அடையாளம்.

ஆஜாதி கா அமிர்த மகோத்சவ் போன்ற கொண்டாட்டங்களின் பயன் இதுவே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version