
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
மதம் மாறுவது இந்துக்கள் மட்டுமே. மாற்றப்படுவதும் இந்துக்கள் மட்டுமே. இந்த மதமாற்றச் செயல்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தும் அவர்களின் அலுவலகமாக உள்ளன. ஆனால் எவ்வாறு ஹிந்துக்களை மட்டுமே அவர்களால் மாற்ற முடிகிறது?
நீண்ட காலத்திற்கு முன்பு ஹிம்சை, அதிகார துஷ்பிரயோகம் போன்றவை காரணங்களாக இருந்தன. அதன் பிறகு ஆசை காட்டித் தூண்டுவது காரணமாக இருந்தது. தற்போது அவற்றோடு கூட இன்னும் ஏதோதோ காரணங்கள் தென்படுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் – ஹிந்துக்களுக்கு தன்மானம் குறைந்துவிட்டது. அதோடு கூட தம் மதத்தின் மீது ஹிந்துக்களுக்குச் சரியான புரிதல் இல்லை. நியமத்தோடு கூடிய மத அனுஷ்டானம் இல்லவே இல்ல. பூஜ்யம் என்றே கூறவேண்டும். மதத்தைப் பற்றிய மரியாதையும் கௌரவமும் இல்லை. இந்த நான்கும் மிக முக்கியமான காரணங்கள்.
இதற்கு பெற்றோரே பொறுப்பாளிகள். அவர்களிடம் இருக்கும் இந்த நான்கு குறைகளாலேயே தம் பிள்ளைகளுக்கு கூட தம் பாரம்பரியத்தை அளிக்காமல் போகிறார்கள்.
பிற மதங்களில் சிறுவர் சிறுமிகளுக்குக் கூட அவர்களுடைய மதம் பற்றிய பற்றும் கௌரவமும் இருக்கிறது. ஹிந்து சிறுவர் சிறுமிகளுக்கு இந்த இரண்டும் சிறிதளவு கூட இல்லை. மதத்தின் மீது அர்ப்பணிப்பு என்பது இருப்பதில்லை. வெறும் கோரிக்கைகளுக்காக, ஏதோ ஒன்று வேண்டும் என்பதற்காக எப்போதோ ஒருமுறை கோவிலுக்குச் செல்வதைத் தவிர, பெரியவர்களின் தூண்டுதலால் கோவிலுக்குச் செல்வதை முறையான ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ளவில்லை. மத நூல்களைப் படித்தறிவதில்லை.
அதோடு கூட ஆசாரங்களைப் பற்றி ஏளனம் செய்வதும், தெய்வங்களை இகழ்வதும், அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதும் அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. இது தர்க்கம் செய்யும் அறிவு என்று எண்ணிக் கொள்கிறார்களே தவிர அறியாமை, அஞ்ஞானம் என்று தெரிந்து கொள்வதில்லை.
இதில் விந்தை என்னவென்றால் இந்த தேசத்தில் நாஸ்திகர்களில் அதிகமாக இருப்பவர் ஹிந்துக்களே. நாஸ்திகனுக்கு எந்த மத விசுவாசமும் மூடத்தனம் தான். மூடநம்பிக்கை தான். ஆனால் இந்த தேசத்தில் நாஸ்திகர்களுக்கு இந்து மதம் மட்டுமே மூட விசுவாசத்தின் கீழ் கணக்கிடப்படுகிறது. பிற மதத்தினரின் விசுவாசம் விஷயத்தில் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். மேலும் அவர்களுடைய கருத்துகளை கௌரவிக்க வேண்டும் என்று கூடக் கூறுவார்கள். நீதித் துறை பிரமுகர்களின் பேச்சும் அவ்வாறே இருக்கிறது. இந்த நாஸ்திகர்களை பல சேனல்களில் பெரிய மரியாதை கொடுத்து பேச வைத்து வினோதிப்பதும் நடக்கிறது. நம் சிறுவர் சிறுமிகளுக்கும் இளைஞர்களுக்கும் கூட பிற மதங்களை சேர்ந்தவர்கள் மீதும் அவர்களுடைய மதப் பழக்கங்கள் மீதும் மிகுந்த கௌரவம் உள்ளது.
பெற்றோர் எந்த மத அறிவும் பெறும் முயற்சியைச் செய்யாமல் பிள்ளைகளுக்கு அளிக்கும் நோக்கமும் இல்லாமல் வளர்க்கும் வகைமுறையே ஒவ்வொரு வீட்டிலும் தென்படுகிறது.
வெளியில் ஸ்கூலுக்கு அனுப்புகிறோம் என்று நினைக்கிறார்களே தவிர அங்கு மதப் பிரச்சாத்தாலும் வஞ்சனைச் சதியின் தாக்கத்தாலும் பிள்ளைகளின் சிந்தனையில் விஷம் கலக்கப்படுகிறது என்பதை கவனிப்பதில்லை.
அண்மையில் ஒரு மாணவியின் வீட்டில் ஒரு பண்டிகையன்று பொட்டு வைத்துக்கொள்ளச் சொன்னபோது அவள் மறுத்து பிடிவாதம் பிடித்துள்ளாள். அது மட்டுமல்ல. நம் சம்பிரதாயங்களின் மீது வெறுப்பைக் கூட உமிழ்ந்தாள். அதற்குக் காரணம் அவளுடைய பள்ளியில் பிற மதப் பிரச்சாரம் செய்யும் ஆசிரியர்களின் தாக்கம் அதிகம்.
ஆங்கில மொழி படிப்பதற்காக சில தசாப்தங்களின் முன்பு கான்வென்ட்களில் சேர்ந்தவர்களின் தாக்கம், சில தலைமுறைகளை நம் கலாச்சாரத்தில் இருந்தே விலக்கி வைத்து விட்டது.
இப்போது செக்யூலரிசம், மதப் பிரச்சார சுதந்திரம் போன்றவற்றை சாக்காக வைத்துக் கொண்டு ஊடுருவலாகச் செய்துவரும் பிரெயின் வாஷ் சாதாரணமானதல்ல. மேலும் பிள்ளைகளின் வாழ்க்கை, பள்ளியிலிருந்து கல்லூரி வரை சிறிது சிறிதாக அவர்களை வீட்டுத் தொடர்பிலிருந்து தொலைவாக வைக்கின்றன. அவர்களுக்கு வீடு, பெற்றோர், நம் பாரம்பரியம் இவற்றை விட வெளி விவகாரங்களும் மாணவ வாழ்க்கையுமே அதிகம்.
ஹிந்து வீடுகளில் மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பது, அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது போன்றவற்றை விட படிப்பின் மீது அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற திடமான அபிப்பிராயம் இருக்கிறது. ஆனால் பிற மதத்தவர்களுக்கு மதத்திற்குப் பிறகுதான் எதுவாக இருந்தாலும்.
மதம் மாற்றினால் புண்ணியம், பிறரைத் தம் மதத்தவர்களாக மாற்றுவது தம் கடமை, தம் மதத்தைத் தவிர மீதி எல்லாமே வீண், அவற்றை அழித்துவிட வேண்டும் என்று அவர்களின் மதப் பாடங்களில் தெளிவாகவும் திடமாகவும் போதிக்கிறார்கள். இப்போது பிற மதப் பிரச்சாரர்களாகவும் மத தீவிரவாதிகளாகவும் இருப்பவர்கள் அந்த மதத்தில் ஐக்கியமான முன்னாளைய ஹிந்துக்களே. அவர்களுக்கு பிற மதத்தின் போதனைகள் நன்றாகப் பதிந்து விட்டன.
தம் மதத்தைப் பற்றிக் கூட எதையும் அறிந்து கொள்ளாத இந்துக்களால் பயனில்லை என்பதால் பிற மதங்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கிடந்தலையும் அரசியல்வாதிகள் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை வெளிபடையாகக் காட்டுவதற்கும் தயங்குவதில்லை.
ஹிந்து அல்லாத பிற மதங்களுக்கு ஜால்ரா போடும் நாஸ்திகர்களின் கூட்டமும் இந்து சனாதன தர்மத்திற்குப் பெரிய எதிரிகளாக உள்ளது. அவர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட தேச வரலாறு கூட திரித்தலுக்கு ஆளாகி ஹிந்துக்கள் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், பணம் பறிப்பவர்கள் என்று சித்திரிப்பது நடக்கிறது.
இந்த தேச செல்வங்களையும், விஞ்ஞானங்களையும் அழித்து, கொள்ளையடித்து இந்த தேசியர்களைக் கொடுமையாக கொலை செய்த கிராதகர்களை உயர்ந்த தலைவர்களாகக் காட்டுவதற்குக் கூட அவர்கள் தயங்குவதில்லை. அவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கு நம் தேசத்தின் மீதும் மதத்தின் மீதும் கௌரவமோ தன்மானமோ எவ்வாறு ஏற்படும்?
நம் தார்மீக நூல்களை போதிப்பவர்களைக் கூட பெரிய விரோதிகளாகவோ அறிவியல் அறியாத மூடர்களாகவோ மூடநம்பிக்கையை வழிபடும் அடிபப்டைவாதிகளாகவோ சித்திரிக்கும் போக்கு ஹிந்துக்களிடையே பரவியுள்ளது. ஹிந்து மதத்தின் மீது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செய்துவரும் தாக்குதலும் அழிவும் ஹிம்சையும் வரலாறு மூலம் தெரியவராமல் பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். தெரியச் செய்தால் வெறுப்பு வளரும் என்பதை ஒரு காரணமாகக் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று உண்மைகளை மறைத்து வைப்பது துரோகம் அல்லவா?
நடந்த அழிவுகளைத் தெரிந்து கொண்டால் அவற்றைச் செய்தவர்களின் வாரிசுகளான இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பரிதாபம் ஏற்பட்டு இனிமேல் இப்படிப்பட்ட தப்புகளை செய்யக்கூடாது என்ற சிந்தனை உதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அழிவுக்கும் ஹிம்சைக்கும் ஆளானவர்களின் பரம்பரையைச் சேர்ந்த இன்றைய தலைமுறை ஹிந்துக்கள் பாரம்பரியச் செல்வத்தை மீட்டெடுக்கும் முயற்சியைச் செய்யக்கூடும். ஆனால் பிள்ளைகளுக்கு உண்மை தெரியாமல் போவதால் சனாதன தர்மத்தின் மீது தாழ்வு மனப்பான்மையும் மரியாதைக் குறைவும் அளவுக்குதிகமாக வளர்வதை ஹிந்து இல்லங்களில் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.
இப்பொழுது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நவீன தொழில்நுட்ப அறிவாலும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு சில அறிஞர்கள் செய்யும் ஆய்வாலும் அறிவுரையாலும் இன்றைய இளையதலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களில் சிறிதளவு மாற்றம் தென்படுகிறது என்பதை கூறத்தான் வேண்டும். ஆனால் பிறரின் வஞ்சனைத் தாக்குதல் வளரும் வேகத்தின் அளவுக்கு இந்த மாற்றங்களின் வளர்ச்சியில் வேகம் இல்லை என்றே கூற வேண்டும்.
ஹிந்துக்கள் பிறரை மாற்றுவதற்கோ வெறுப்பதற்கோ முயற்சிக்கத் தேவையில்லை. ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ்வதற்கும் வாழ வைப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.
வரலாற்றுத் திரித்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் பெரியவர்களின் சொற்களை சிந்தித்துப் பாருங்கள். அதனைப் பரப்புங்கள். தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் கூடிய ஹிந்து மதம் ஏற்பட வேண்டும்.
(ருஷிபீடம் மே 2023 தலையங்கம்)