― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (30): ஸ்மசான வைராக்ய ந்யாய:

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (30): ஸ்மசான வைராக்ய ந்யாய:

- Advertisement -

தெலுங்கில் –பி.எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ஸ்மசான வைராக்ய ந்யாய:

ஸ்மசானம் – இறுதிக் கிரியை நடத்தும் இடம்
வைராக்யம் – துயரங்களை நீக்கும் தெளிவு

மனிதனுக்கு தர்மத்தின்படி உறவுகளிடமும் தோழர்களிடமும் அன்பு இருப்பதோடு வைராக்கியமும் இருக்க வேண்டும். ராமன், ராகமும் விராகமும் ((பற்றும் பற்றின்மையும்) சரியான அளவில் கொண்ட ஆதிரச மனிதனாக வர்ணிக்கப்படுகிறான். சீதா தேவியைக் காணவில்லை என்றவுடன் சாதாரண மனிதனைப் போலவே அழுதான். நாளை உனக்குப் பட்டாபிஷேகம் என்று கூறிய போது எவ்வாறு இருந்தானோ, உனக்கு பட்டாபிஷேகம் நடக்காது என்று கூறியபோதும் அதேபோல் இருந்தான். செல்வத்தை புல்லுக்குச் சமமாக விலக்கிவிடும் மனநிலையை விராகம், வைராக்கியம் என்பார்கள்.

மிகவும் கடினமான மனக் கட்டுப்பாடு, பழக்கத்தாலும் வைராக்கியத்தாலும் மட்டுமே சாத்தியமாகும் என்கிறான் கீதாச்சாரியன்.

ஸ்லோகம்:
அஸம்ஸயம் மஹாபாஹோ மனோதுர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே.

(பகவத் கீதை 6 -55)

வைராக்கியத்தில் பலவிதங்கள் இருந்தாலும் முக்கியமானவை மூன்று.

  1. விவேகத்தோடு கூடிய வைராக்கியம் – சத்திய வஸ்துவை அறிந்தவனுக்கு ஏற்படுவது. எது நித்தியம் எது அநித்தியம் என்று தெரிந்தபின் வரக்கூடிய சாஸ்வதமான வைராக்கியம்.
  2. நிமித்த வைராக்கியம் – சில கஷ்டங்களால் ஏற்படும் வைராக்கியம்.
  3. த்ருணாக்னி வைராக்கியம் – புல்லை எரித்தால் வரக்கூடிய நெருப்பு உடனே    அணைந்து விடுவது போல ஏற்பட்ட உடனே மறைந்துவிடும்.

1. விவேகத்தோடு கூடிய வைராக்கியம் – ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் இந்த நியாயத்தோடு தொடர்புடைய சில உதாரணங்கள் உள்ளன

ஒரு இளம் பெண் தன் அண்ணனைப் பற்றி தன் கணவனிடம், “எங்கள் அண்ணா அண்மையில் எங்கள் எல்லோருக்கும் வேதனையை ஏற்படுத்தி வருகிறான். ஒரு வாரமாக சன்யாசிகளோடு லந்து விடுவேன் என்கிறான். என் அண்ணியும் பெற்றோரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்றாள். அதற்கு கணவன் சிரித்துக்கொண்டே, “அட பைத்தியக்காரி, உங்கள் அண்ணனின் விஷயத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. அவனுடைய இயல்பு எனக்குத் தெரியும். அவன் என்றுமே சந்நியாசம் வாங்க மாட்டான்” என்று கூறினான்.

ஆறுதலடைந்த மனைவி, “பின், சன்னியாசி ஆகும் முறை எப்படி?” என்று ஆர்வத்தோடு கேடடாள். உடனே அவன் தன் தோளில் இருந்த துண்டைக் கிழித்து கோவணமாகக்  கட்டிக்கொண்டு, “பார், இன்றிலிருந்து நீ மற்றும் அனைத்து பெண்களுமே எனக்குத் தாய் போன்றவர்கள்” என்று கூறி மனைவி பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளியில் சென்று விட்டான். வீட்டைத் துறந்த அந்த மனிதன் மீண்டும் திரும்பி வரவில்லை. தீவிரமான ஆன்மீக சாதனையும் மனப்பக்குவமும் உள்ளவருக்கே பிரம்ம சாட்சத்காரம் கிடைக்கும்.

விவேகத்தோடு கூடிய வைராக்கியம் பற்றிய மற்றொரு கதையும் உள்ளது. ஒரு அரசன்  சிறந்த அரண்மனை ஒன்றைக் கட்டி, அதில் ஏதாவது தோஷங்கள் இருக்கிறதா என்று கூறச் சொல்லி நிபுணர்களையும் வாஸ்து சாஸ்திர அறிஞர்களையும் கேட்டான். நன்றாக பரிசீலித்த அவர்கள், “ராஜா, இந்த மாளிகையில்  எந்தவிதமான குறையும் இல்லை” என்றார்கள். ராஜா மகிழ்ச்சி அடைந்தான். அதற்குள் ஒரு சாது எழுந்து, “ராஜா, இந்த பவனத்தில் இரண்டு குறைகள் உள்ளன” என்றார். உடனே ராஜா, “மகாத்மா, அவை என்ன?” என்று கேட்டான். அதற்கு அந்த சாது, “மகாராஜா, இந்த அரண்மனையைக் கட்டினவன் ஒருநாள் இறப்பான். இது முதல் தோஷம். இரண்டாவது இந்த மாளிகையும் எப்போதாவது காலகதியில் சிதலமடைந்து போகும்” என்றார். அந்த சத்திய வாக்கு அரசனின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி ஞானக் கண்களைத் திறந்தது. வைராக்கியம் உதயமானது. தன்னுடைய அஞ்ஞானத்தை எண்ணி வருந்தி மீதி உள்ள வாழ்க்கையை உய்வித்துக் கொண்டான். குடிமக்களுக்கு நல்ல அரசாட்சியை அளித்து சிறந்த அரசனாகப் பெயர் வாங்கினான்.

2. நிமித்த வைராக்கியம் – இதற்குத் தொடர்புடைய கதையை ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறுவதுண்டு. ஒரு இல்லறத்தான், ஒரு சன்னியாசி இருவரும் சந்தித்து வேதாந்த விஷயங்களை விவாதித்துக் கொண்டார்கள். சன்னியாசி அந்த இல்லறத்தானிடம் இவ்வாறு கூறினார், “மகனே! உலகத்தில் யார் மீதும் ஆசையோ மோகமோ வைத்துக் கொள்வது தகாது. நீ என்னவர் என்று எண்ணக்கூடியவர் யாருமே கிடையாது” என்றார்.

அவன் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அதை நேரடியாகவே நிரூபிக்க வேண்டும் என்று ஒரு நாடகம் நடத்தச் சொன்னார் சன்னியாசி. இல்லறத்தான் தன் வீட்டுக்கு சென்று வயிற்று வலியால் துடிப்பது போல் உடலை நெளித்து மிகவும் வருந்தினான். அவனுடைய தாய் அழுதாள். மனைவி கலங்கினாள். மருத்துவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அந்த நேரத்தில் சன்னியாசி வந்து, “இது உயிரைப் பறிக்கும் வியாதி. ஆனால் யாராவது தன் உயிரைக் கொடுத்தால் இவன் நலமடைவான்” என்றார். அவனுடைய தாய், மனைவி, குழந்தைகள் எல்லோருமே ஏதோ ஒரு காரணம் சொல்லி தம் உயிரைக் கொடுப்பதற்கு சம்மதிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள். அப்போது உலகத்தின் நிலைமையை நேரடியாகப் பார்த்த அந்த மனிதன், சன்னியாசியின் வார்த்தைகளை ஏற்று, அவரை அனுசரித்துச் சென்றான். ஏதாவது பலமான காரணத்தால் ஏற்படும் வைராக்கியத்திற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.

மேற்சொன்ன கதையைப் போலவே உலகின் மீது மோகமும் பற்றும் உள்ளவருக்கு    உண்மையைப் புரிய வைக்கும் மற்றொரு உதாரணத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்.

குரு அளித்த பயிற்சிகளால் ஒரு இல்லறத்தான் தன் கைகளை நீட்டி சவாசனத்தில் நீண்ட நேரம் இறந்து கிடப்பது போல் படுத்துக் கிடந்தான். அதைப் பார்த்து அவனுடைய நண்பர்கள் அழுதார்கள். மனைவி நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதாள். அவன் உடலை அறையிலிருந்து வெளியில் எடுத்து வருவதற்கு வழியில்லாமல் கைகள் நீட்டி இருப்பதால் இறந்த உடல் அந்த வாசல் வழியாக வராது என்று தெரிந்து சுவரை உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள்.

துயரத்தில் இருந்த மனைவி, “வேண்டாம். இப்பொழுது சுவரை உடைத்தால் மீண்டும் கட்டுவதற்கு நிறைய செலவாகும். வேறு வழி ஏதாவது இருக்கிறதா, பாருங்கள்” என்றாள். அவளே, “கையை வெட்டி விடலாமே. இறந்து போனவருக்கு அது தெரியவா போகிறது?” என்றாள்.

சவாசனத்தில் இருந்த இல்லறத்தான் எழுந்து அமர்ந்தான். தான் அன்பாகக் காதலிக்கும் மனைவிக்கு தன் மேல் உள்ள அன்பு எப்படிப்பட்டது என்று புரிந்தது. பஜகோவிந்தம் ஸ்லோகம் ஞாபகத்துக்கு வந்தது. குரு சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்பட்டு வைராக்கியம் உதயமானது. குருவோடு சேர்ந்து சன்மார்க்கத்தில் நடக்கத் தொடங்கினான்.

தன்னவர்களுக்கு தன் மீதிருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது தெரிந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது போன்ற உதாரணக் கதைகள் பல உள்ளன. வால்மீகியின் வாழ்க்கையில் கூட இதைப் போன்ற கதை மிகவும் புகழ்பெற்றது.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version