Traveller’s Cheque பயன்பாட்டிற்கு வந்த இடம் எது தெரியுமா?
Traveller’s Cheque பயன்பாட்டிற்கு வந்த இடம் எது தெரியுமா? அதென்ன ‘டிராவலர்ஸ் செக்’ என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்.
வேத காலத்தில் “நிஷ்கா”, “சதமானா”, “ஸ்வர்ணா” போன்ற நாணயங்கள் வழக்கில் இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இவை குறிப்பிட்ட எடையுடைய விலை உயர்ந்த உலோகங்களாகவும் ஆபரண வடிவிலும் கூட இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். “சொர்ண புஷ்பம் சமர்ப்பயாமி”என்று வேதம் ஓதுகிற இடத்தில் பூஜை நடைபெறுகிற இடத்தில் நாம் கேட்டிருக்கிறோம். இறைவனுக்கு நாம் சாற்றும் தங்க ஆபரணம் ஆகும் இது!!
சங்ககாலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர். நாணயங்கள் தயாரிக்க செம்பு, ஈயம், வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தி உள்ளார்கள்.
சேரர்கள் காசுகளில் வில் அம்பு,சோழர் காசுகளில் புலி, பாண்டியர்கள் காசுகளில் மீன் சின்னம், மலையமான் காசுகளில் குதிரை சின்னங்கள் பெரும்பாலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
சேரர், சோழர்,பாண்டியர் செப்புக் காசுகளில் யானை சின்னம் இடமாகவோ, வலமாகவோ, காசின் முகப்பிலும் அமைந்துள்ளது. யானை உருவத்திற்கு மேலாக மங்கலச் சின்னங்கள் ஸ்வஸ்திகம், கும்பம், மத்தளம், திருமறு போன்ற உருவங்களும் சிறு உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. குதிரை, காளை, சிங்கம், மீன், சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காசுகளின் எடை 500 மில்லிகிராம் முதல் 16 கிராம் எடை வரை பல்வேறு அளவுகளில் செப்புக் காசுகள் பழக்கத்தில் இருந்தன என்கிறார்கள் தொல்லியல் துறையினர்.
சங்ககால காசுகளில் யானை சின்னம் பொறிக்கப்பட்டதன் நோக்கமானது அரசர்களின் வலிமையையும் மேன்மையையும் காட்டுவதற்காக இருக்கலாம்.நாணயத்தில் சைவ சமய சின்னமான சிவனின் வாகனமாக கருதப்படும் காளை, நாணயங்களில் பொறிக்கப் பட்டிருக்கக்கூடும். காளை செல்வத்தின் அறிகுறி ஆகும் .
மலையமான் காசுகளில் முன்பக்கம் குதிரைச் சின்னமும், அதனுடன் அங்குசம், நந்திபாதச் சின்னம், பிறை, எருதுதலை, மேடையில் ஒரு தொட்டி போன்ற சின்னங்களில் ஒன்று அமைந்திருக்கும். அதன் பின் பக்கத்தில் மலை முகடுகளும், நதியும், நதியில் மீன்கள் நீந்துவது போன்ற உருவங்களும் பதிக்கப்பட்டிருக்கும் !!
முதன் முதலில் travellers cheque பயன்பாட்டிற்கு வந்த இடம் எது என்று தெரியுமா? எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்கா என்று தான் பதில் சொல்வோம். ஆனால் உண்மையில் Travellers Cheque அறிமுகம் ஆன இடம் தமிழகம் தான்.
அந்தக் காலத்தில் திருப்பனந்தாள் ஆதீனத்திடம் பொற்காசுகளைக் கொடுத்தால் பனை ஓலையில் பெற்றுக் கொண்டதற்கான விவரத்தை எழுதிக் கொடுப்பார்கள். இதை எடுத்துக் கொண்டு காசிக்குச் சென்றால் அங்குள்ள மடத்திடம் காண்பித்தால் அவர்கள் நமக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் தருவதோடு வசதிகளையும் செய்து தருவார்கள் என்று ஒரு கட்டுரையில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்த எழுத்தாளர் பருத்தியூர் சந்தான ராமன் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் travellers cheque எனகிற concept பிறந்த இடம் தமிழகம் தானே?
“மனிதன் தனது தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வாங்கவும், கொடுக்கவும் வேண்டியிருந்ததால் ஆரம்ப காலத்தில் பண்டமாற்று முறையைப் பயன்படுத்தினான். தங்களது பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களில் தேவைக்குப் போக மிஞ்சியதைப் பிறப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்காகப் பண்டமாற்று செய்தனர்.
இவ்வாறாகச் சில பகுதிகளில் சிறிது சிறிதாக நடைபெற்ற பண்டமாற்று மக்கள் பெருக்கம் காரணமாக வணிகப் பொருட்களுக்கு ஏற்பட்ட தேவையாலும் (demand) உபரி உற்பத்தியாலும் (Surpius production) பெருமளவில் நடைபெறத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக உப்புக்குப் பதிலாக அரிசியையும் நெய்யிற்கு மாற்றாக நெல்லினையும் பெற்றனர். நிலம், ஆபரணங்கள் போன்றவற்றைப் பரிமாற்றம் செய்யும் பொழுது சமமான மாற்றின்மையால் வணிக நடைமுறைகள் சிக்கலானது. இதனால் பொதுவானதொரு மாற்றுப் பொருளின் தேவையை உணரத் தொடங்கினர். எனவே தொடக்கக் காலங்களில் செல்வமாகக் கருதி வந்த “பசு”வை பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். அஸ்டாத்யாயி என்னும் நூலில்.“கோபுச்சம்”
(gobuchcham) என்ற ஒரு நாணய வகை குறிப்பிடப்படுகிறது. கோ என்பது மாடு என்றும் புச்சம் என்றால் வால் என்றும் பொருள்படும்” என்கிறார் ஒரு தொல்லியல் ஆய்வாளர்.
பெரிய புராணக் கதை ஒன்று இங்கே சிந்திக்க தக்கது……… கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம்தான் அரிசில் கரைப்புத்தூர். அரிசலாற்றின் தென்கரையில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.அழகாபுத்தூர் என்றும் அழைப்பார்கள்.63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணை நாயனார் பிறந்த ஊர் .
புராணத்தின் படி, புகழ் துணை ஏழ்மையில் இருப்பவர். ஆனால் தீவிர சிவபக்தர், கோவிலின் மூலவருக்கு தினசரி அபிஷேகம் செய்வார். இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆனாலும் புகழ் துணை அபிஷேகம் செய்யும் சேவையைத் தொடர்ந்தார். அவரது முதுமை மற்றும் ஏழ்மை காரணமாக, அவர் உடல்நிலை சரியில்லாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது மூலவரின் உருவத்தின் மீது விழுந்தார்.
மக்களை துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு சிவனிடம் கையெடுத்து கும்பிட்டு வேண்டினார். சிவன் அவரது பக்தியில் மகிழ்ந்து , ஒரு நாணயத்தை (தமிழில் படிக்காசு என்று அழைக்கப்படுகிறது) ஒவ்வொரு நாளும் வழங்கினார் என்று பெரிய புராணம் சொல்கிறது!!
திருவிளையாடல் புராணத்திலும் தருமி பாண்டிய மன்னனிடம் இருந்து பொற்காசுகளைப் பெற்ற விவரத்தையும் அறிய முடிகிறது. எனவே நாணயம் காசு என்கிற சிந்தனை பண்டைய காலம் தொட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்!