கட்டுரை: திருப்பூர் கிருஷ்ணன்
இப்போது நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிற விநாயக சதுர்த்தி விழாவில் இத்தகைய உற்சாகமான போக்கு தோன்றக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கீதைக்கு உரையெழுதிய பால கங்காதர திலகர். அவருக்கு மதப்பற்றும் ஆன்மிகப் பற்றும் மிகுதி.
ஒருமுறை ரயில் பயணத்தில் தற்செயலாக விவேகானந்தரைச் சந்தித்தார் அவர். விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
அவரைத் தம் இல்லத்தில் ஓர் அறையில் தங்குமாறு வேண்டினார். பத்து நாட்கள் திலகர் வசித்த இல்லத்தில் ஓர் அறையில் விவேகானந்தர் தங்கியிருந்தார்.
அந்த அறையை விவேகானந்தர் தங்கி தியானம் செய்த இடம் என்பதால், புனிதமானது என்று கருதியது திலகரின் மனம்.
இந்தியர்களை ஒருங்கிணைத்தால்தான் சுதந்திரம் பெற முடியும். விவேகானந்தர் வழிதான் சரியானது. இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்பது தான் சாத்தியமானது.
மொழிகளாலும் மாநிலங்களாலும் இந்திய மக்கள் பிரிந்திருந்தாலும் ஆன்மிகம் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஆன்மிகம் மொழிப் பிரிவு, எல்லைப் பிரிவு கடந்து பரவியிருக்கிறது.
வடக்கே காசிக்குச் செல்பவர்கள் தெற்கே ராமேஸ்வரத்திற்கும் வருகிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. கீதை எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
ஆன்மிகம் இந்தியர்களின் ஆழ்மனத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்தியாவில் நாத்திகச் சிந்தனைகள் மிக மிகக் குறைவு.
எனவே விவேகானந்தர் வழியில் ஆன்மிகத்தின் மூலம் இந்தியர்களை ஒன்றிணைப்பதே சரி, அதுவே எளிதில் சாத்தியமாகக் கூடியது எனத் திலகர் முடிவெடுத்தார்.
அப்படியானால் இந்தியர்களை எளிதில் ஒன்றிணைக்கக் கூடிய ஆன்மிகக் கொள்கை எது எனவும் யோசனையில் ஆழ்ந்தார்.
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற பலவகைத் தத்துவப் போக்குகள் பாரதம் முழுவதும் பரவியிருக்கின்றன.
எனவே ஒரு குறிப்பிட்ட தத்துவம் சார்ந்து இந்தியர்களை ஒருங்கிணைப்பது சிரமம். மற்ற தத்துவப் பிரிவினர் மனத்தால் இணைவதில் சங்கடம் எழும்.
ஆனால் மக்கள் போற்றித் துதிக்கும் ஏதேனும் ஒரு கடவுள் வடிவத்தின் மூலம் ஒற்றுமையை உண்டுபண்ணி விடலாம்.
அதிலும் ஒரு சிக்கல். இந்துமதம் எல்லா வகை வழிபாட்டுக்கும் இடம்தரும் பரந்த மனப்பான்மை கொண்ட மதம்.
சிவனை வணங்குபவர்கள், திருமாலை வணங்குபவர்கள் என தெய்வ வடிவங்களில் தங்களுக்கு உகப்பானதை ஏற்றுத் தொன்று தொட்டு அந்த மரபில் வழிபடுபவர்கள் பற்பலர்.
அவர்களை ஒரே தெய்வ வடிவத்தைப் போற்றுவதன் மூலம் இணைப்பது எப்படி? அந்த வகையில் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் வகையில் ஒரு தெய்வ வடிவம் வேண்டுமே?
திலகர் மனத்தில் ஒளிவீசும் விநாயகர் உருவம் தோன்றியது. விநாயகர்தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள்.
வைணவர்களும் கூடத் தும்பிக்கை ஆழ்வார் என விநாயகரைக் கொண்டாடுகிறார்கள். இந்து மதத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதத் தொடங்குகிறார்கள்.
சத்ரபதி சிவாஜி காலத்தில் விநாயக சதுர்த்தி விழா ஓரளவு பிரபலமாகியிருந்தது.
`நாம் விநாயக சதுர்த்தி விழாவை தேசிய விழாவாக மறுபடி உருவாக்குவோம். மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைப்போம்.
ஆங்கிலேய ஆட்சி நீங்கி நல்லாட்சி மலர இது ஒன்றே வழி. இந்திய மக்களை ஒருங்கிணைத்து விட்டால் சுலபமாக சுதந்திரம் பெற்றுவிட முடியும்.`
சரியாகச் சிந்தித்த திலகர் சரியாகவே முடிவெடுத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை தேசமெங்கும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலும் விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பிரசாரம் செய்யலானார்.
தாம் முன்னின்று நடத்திய முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை ஒரு புனிதமான இடத்திலிருந்து தொடங்கி நடத்த விரும்பினார். அத்தகைய மிகப் புனிதமான இடம் அவர் இல்லத்திலேயே இருந்தது. விவேகானந்தர் பத்து நாட்கள் தங்கியதால் புனிதமடைந்த அறைதான் அது.
அந்த அறையிலிருந்தே தம் முதல் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் தொடங்கினார். அவ்விதம் தொடங்கியதுதான் நாடெங்கும் நிகழும் இப்போதைய விமரிசையான விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்குத் தொடக்கத்தில் போடப்பட்ட பிள்ளையார் சுழி!…
*மகாபாரதத்தை, வியாசர் சொல்லச் சொல்ல தந்தத்தால் எழுதி நமக்களித்தவர் பிள்ளையார்தான். பலவகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள்.
கணிப்பொறியைக் கையில் வைத்து இயக்கும் கணிப்பொறி விநாயகர் கூட இப்போது காட்சிப் படுத்தப் படுகிறார். கணிப்பொறி விநாயகருக்கு ஒரு செளகரியம். அவரிடம் `மவுஸ்` ஏற்கெனவே உண்டு!
விநாயகரைப் பற்றிப் பல்வேறு தலங்களில் பற்பல கதைகள் உலவுகின்றன. `கடுக்காய்ப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்ற திருத்தலத்தில் காட்சி தருகிறார்.
அந்தப் பிள்ளையாருக்குக் கடுக்காய்ப் பிள்ளையார் எனப் பெயர்வந்த கதை சுவாரஸ்யமானது.
அந்த ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் டோல்கேட் என்கிற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை என்று பொய்சொல்லி ஏமாற்ற எண்ணினான்.
அதிகாரிகள் ஏமாற வேண்டுமே? அதற்காக வண்டியில் முன்னாலும் பின்னாலும் கடுக்காய் மூட்டைகளைப் போட்டுக் கொண்டு ஜாதிக்காய் மூட்டைகளை மறைத்து எடுத்துக் கொண்டு வந்தான்.
அந்த விதமாக வரி கொடுக்காமல் ஏமாற்றி ஜாதிக்காய் மூட்டைகளை ஊருக்குள் கொண்டுவந்து விட்டான் வியாபாரி.
பிள்ளையார் அநீதி செய்தால் தண்டனை கொடுத்து விடுவாரே? அதனால் உண்மையாகவே எல்லா மூட்டைகளிலும் இருந்த ஜாதிக்காயை இரவோடு இரவாக கடுக்காயாகவே மாற்றிவிட்டார்.
மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, திகைத்துப் போனான். இனி என்ன செய்வது? ஏராளமான பண நஷ்டம் ஏற்படுமே?
கடுக்காய் மட்டும் மறுபடி ஜாதிக்காயாக மாறினால் அதற்குண்டான வரியும் அதற்குமேல் அபராதமும் கட்டுவதாக வேண்டிக் கொண்டான்.
அவன் பிரார்த்தனை பிள்ளையார் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மறுபடி கடுக்காயை ஜாதிக்காயாக மாற்றிவிட்டார் பிள்ளையார்.
மகிழ்ச்சி அடைந்த வியாபாரி ஒப்பந்தப்படி வரி செலுத்திவிட்டு பக்தியுடன் பிள்ளையாரை வணங்கினான் என்கிறது கடுக்காய்ப் பிள்ளையார் கதை. பிள்ளையாருக்கு யாராலும் கடுக்காய் கொடுத்துவிட முடியாது!
இப்படியாக இனிக்கும் கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் பிள்ளையாருக்கு அந்த ஊரில் கசக்கும் கடுக்காய், பெயரில் அமைந்துவிட்டது!
*`அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் மிகுந்த பக்தி. தனக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டபோது அதை விரும்பாத அவ்வையார் பிள்ளையாரை வேண்டித்தான் முதுமையைப் பெற்றார்.
அவ்வைப் பாட்டி ஊர் ஊராகச் சுற்றிப் பல்வேறு இடங்களுக்குச் சென்றாள். மன்னர்களைச் சந்தித்ததோடு மக்களையும் சந்தித்தாள்.
தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பினாள். உயர்ந்த நீதிக் கருத்துகளை அழகிய வெண்பாக்களில் தொகுத்துத் தந்தாள்.
`வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு`
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
என்றெல்லாம் அவ்வைப் பாட்டி தன் இஷ்ட தெய்வமான விநாயகரைப் பாடித் துதித்திருக்கிறாள்.
`சீதக் களப செந்தாமரை` எனத் தொடங்கும் அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் யோக சாஸ்திரம் முழுவதையும் செய்யுளில் சொல்கிறது. தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர வளர்த்த பெருமை அவ்வைக்குரியது.
பாரதியார் பிள்ளையார்மேல் `விநாயகர் நான்மணி மாலை` எழுதி அவரைத் தம் கவிதையில் போற்றுகிறார்.
பிள்ளையார் தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம்.
சிவன் பார்வதியின் மூத்த பிள்ளையான பிள்ளையாரை மரியாதையோடு ஆர் விகுதி சேர்த்துப் பிள்ளையார் என வழங்குகிறோம். நமக்கு வரும் விக்கினங்களை அழிப்பதால், விக்னேஸ்வரர் என்கிறோம்.
எந்த பூஜை செய்தாலும் முதலில் அவருக்கு பூஜை செய்துவிட்டுத் தான் தொடங்குகிறோம். எப்போதும் முதல் பூஜை அவருக்குத்தான்.
தமிழகத்தில் அரச மரத்தடியிலும் தெரு மூலைகளிலும் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இந்த அளவு பிள்ளையார் கோயில்கள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழ் மக்கள் விநாயகர்மேல் அளவற்ற பக்தி உடையவர்கள். பல அரச மரத்தடிகளில் மேற்கூரை கூட இல்லாமல் பிள்ளையார் காட்சி தருகிறார்.
எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் எழுதத் தொடங்குகிறோம்.
மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களை எழுதினால்கூட அந்தக் காகிதத்தில் பிள்ளையார் சுழிபோட்டுப் பிறகுதான் வாங்கவேண்டிய பொருட்களை எழுதுகிறோம்!
நம் சுழி எப்படியிருந்தாலும் பிள்ளையார் அதைச் சரிசெய்து விடுவார் என்பது நம் நம்பிக்கை.
`நம்பிக்கை கொண்டிங்கு நாளும் தொழுவோர்க்கு
தும்பிக்கை நாதன் துணை!`
என்கிறது புகழ்பெற்ற ஈரடி வெண்பா ஒன்று. விநாயகரை வழிபடுவோம். விக்கினங்கள் நீங்கப் பெற்று வாழ்வில் உயர்வோம்!