தென்மாவட்டங்களில் ஏற்பட்ட அதீத மழைப் பொழிவு மற்றும் வெள்ளப் பெருக்கின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணிக் கரையோர மக்களின் உயிருக்கும் உடைமைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் உயிர்ச் சேதம், பயிர்ச் சேதம் என விவசாயிகளின் வாழ்க்கையில் பேரிடி விழுந்திருக்கிறது. இவற்றுக்கான காரணம் என்ன, ஏன் இவ்வளவு பெரும் சேதம்? வருங்காலங்களில் தவிர்ப்பது எப்படி என்ற உள்ளார்ந்த, எதிர்கால பலனை நோக்கிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விடுத்து, அரசியல் காழ்ப்பில் தற்காலிக பலன்களை உத்தேசித்து களம் இறங்கியிருக்கிறது மாநில அரசு.
ஒருபுறம், அரசியல் ரீதியாக மாநில அமைச்சர் ஒருவர், மத்திய அமைப்பின் மீது காழ்ப்புடன் கூடிய கருத்து தெரிவித்திருக்கிறார் என்றால், அவருக்கு, அதாவது ஆளும் திமுக., அரசுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் அரசின் குரலாக ஒலிக்கும் அதிகார வர்க்கமும் இறங்கியிருப்பது வெட்கக்கேடு.
வானிலை ஆய்வுமையம் துல்லியமான தகவல்களைத் தரவில்லை, அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் மாநில அமைச்சர் மனோ தங்கராஜ். அவரது குரலை அடியொற்றி, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனாவும் மத்திய அரசின் அமைப்பைக் கைகாட்டியிருக்கிறார். ஆனால், நடந்த உண்மைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில நூறுகளை அள்ளிவீசி சமூக ஊடகங்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் தங்கள் குரலில் பேச வைக்க முடியும்; ஆனால் அடிவயிற்றில் அடித்துக் கொண்டு அரற்றிய சாமானியனின் குரலை வெறும் ஒரு சில ஆயிரங்கள் பணம் கொடுத்து கொடுத்து மாற்றி விட முடியாது. காரணம் இழப்பின் வலியில் இருந்து மீண்டு வருவது அவர்களுக்கு அவ்வளவு சுலபமல்ல.
பொதுவாக, மழை பெய்யும், அல்லது வழக்கமாக அதிக மழையை எதிர்பார்க்கும், அல்லது அதீத மழைப் பொழிவுகளை அனுபவிக்கும் பூமி இது என்பதால், மக்களுக்கு மழையும் வெள்ளமும் இயல்பான ஒன்று. கன மழை பொழிந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற உடனடி செயல்பாடுகளும் தாமிரபரணிக் கரையோர மக்களுக்கு பழகிய ஒன்றுதான். ஆனால் இந்த முறை ஏற்பட்டது அதீத மழைப்பொழிவு என்பதுடன், தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரால் ஏற்பட்ட திடீர்த் தாக்குதலால் உண்டான நிலைகுலைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
வானிலை ஆய்வு மையமும் ஒரு வாரத்துக்கு முன்பே, மழை குறித்த எச்சரிக்கையை விடுத்தது. (பார்க்க படம்) 5 நாட்களுக்கான எச்சரிக்கை – எங்கெங்கே சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் கணித்து வெளியிட்டது. வானிலை ஆய்வுமையத்தைப் பொருத்த அளவில், 21 செ.மீ.,க்கு அதிகமாக மழை இருக்கும் என்ற நிலையில் சிகப்பு எச்சரிக்கையை விடுக்கும். அதற்கு மேல் அவர்களுக்கான எச்சரிக்கைக் குறியீடு இல்லை. அதுதான் உச்சபட்ச எச்சரிக்கைக் குறியீடு. அது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் என 15ம் தேதியே கொடுத்துவிட்டது.
இந்த எச்சரிக்கையை, ஒவ்வொரு நிமிடமும் வானிலை ஆய்வுமையத்தின் தரவுகளை மிகச் சாதாரண மக்களும் கூட அதன் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அண்டை நாடுகளான இலங்கையும் வங்கதேசமும் கூட இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளைக் கண்டு, தங்களை எச்சரிக்கையுடன் காத்துக் கொள்கின்றன.
வானிலை ஆய்வுமைய எச்சரிக்கைகளை கணித்தே, அடிக்கடி புயல்களால் பாதிக்கப்படும் தனது மாநிலத்தை, மிகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காத்துக் கொள்கிறார் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக். அவர், எந்நாளும் வானிலை ஆய்வு மையத்தைக் குறை சொன்னாரில்லை. ஒரு புயல் அறிவிப்பு வந்தால், உடனே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி தங்குமிடம் அளித்து, உணவு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்து உயிரிழப்புகளைத் தடுக்கிறார்.
ஒடிஸாவுக்கு அடுத்து ஆந்திரமும் இப்படி அதிகம் பாதிக்கப்படுகிறது. சென்னை, கடலூர் என வங்கக் கடலின் நகரங்களும், கேரளம், கர்நாடக, மகாராஷ்டிர, குஜராத்தின் அரபிக் கடலோர நகரங்களும் புயல்களால் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் அரசுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழகத்தில் 2021க்குப் பிறகு அமைந்த அரசு, எப்படி நடந்து கொல்கிறது என்பதையும் மாநில மக்கள் அனுபவித்து உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
2021 வரை சரியாக இருந்த வானிலை ஆய்வு மைய அறிக்கைகள், இப்போது துல்லியமாக அமையாமல் போய்விட்டது தமிழகத்துக்கு! அதனால் தான் திமுக., ஆட்சிக்கு வந்த உடனே வானிலைத் தகவல்களுக்காக சூப்பர் கம்ப்யூட்டர் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கியது போலும்! அது என்ன ஆனது என்பது இப்போதுவரை தகவல் இல்லை. ஒதுக்கியதாகச் சொன்னது பொய்யா, ஒதுக்கப்பட்டு வீணானது பொய்யா, அல்லது ஒதுக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டதாகச் சொல்லி கணக்கு காட்டினார்களா என்ற கேள்வியை சாமானியன் இன்று சமூகத் தளங்களில் எழுப்புகிறானே, அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த அரசு?!
பொதுவாக, வருவாய்த் துறையினர் இது போன்ற வெள்ளக் காலங்களில் தயாராகவே இருக்க வேண்டும். இரவு பகல் பாராமல் 24 மணி நேரப் பாய்ச்சலுக்கு தயாராக இருக்க வேண்டியவர்கள் அவர்கள். மழை வருகிறது, தாமிரபரணியில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறார்கள். நம் பகுதியை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு விபரீதம் நிகழப் போகிறது என்று தூத்துக்குடி ஆட்சியர் ஒரு வருவாய்ப் பணியாளரிடம் பேசும் குரல் ஒலிப்பதிவு சமூகத் தளங்களில் வைரலானதே! அதை வெளியிட்டது யார்?! ஆட்சியரா அல்லது சம்பந்தப்பட்ட பணியாளரா?
எனில், முன்னெச்சரிக்கை தகவல்கள் இல்லாமலா அவ்வாறு ஓர் ஆட்சியர் பேசமுடியும்?! ஒருவேளை அமைச்சருக்கும் தலைமைச் செயலருக்கும் அந்த ஆடியோ சென்றடையாமல் போனதா?! அப்படி வானிலை ஆய்வு மைய எச்சரிகைகள் இல்லாமல் ஒரு ஆட்சியர் விபரீதம் நிகழ்ப் போகிறது என்று பதற்றக் குரலில் பேசுவார் என்றால், அது வதந்தியாக அன்றோ கொள்ளப்பட்டிருக்கும்?!
அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் எல்லாம் மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. அந்தப் பணியாளர்களின் தரவுகளை நிர்வாகம் சரியாகக் கணித்திருந்தால், பெய்யும் மழையைக் கணித்து, முன்கூட்டியே நீர் திறப்பை சிறிது சிறிதாக மேற்கொண்டிருக்கலாமே என்று சாமானியன் கேட்கிறானே, அதற்கு என்ன பதில்?
தாமிரபரணியின் ஆக்கிரமிப்புகளைக் குறித்து நெல்லை மக்கள் எத்தனை மாதங்களாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்? அது ஆட்சியாளர்களின் காதில் கேட்டதோ?! பாதாளச் சாக்கடைத் திட்டம் என்று கூறி நன்னீர் ஓட வேண்டிய ஆற்றில் கழிவுகளைக் கலந்து ஓடச் செய்தது யார் குற்றம்!? நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி, தற்காலிக பலன்களை உத்தேசித்து அனுமதிகளைக் கொடுத்து ஆக்கிரமிப்புகளை வளரச் செய்தது யார் குற்றம்!?
எத்தனை கிராமச் சாலைகளில் இப்போது பராமரிப்பு, மறு கட்டுமானம் என்று சொல்லி நீர்செல்லும் கால்வாய்களை அடைத்து ‘ஒப்பந்ததாரர்களின்’ தயவுடன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று பட்டியல் வெளியிடுவார்களா!?
அவசர கால சூழல் என்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன மேற்கொள்வது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி இல்லாமலா ஆளும் தரப்பு இருக்கிறது?! எத்தனை எத்தனை சீர்கேடுகளை, கையாலாகத் தனத்தை, ஓட்டைகளை தன்னிடம் வைத்துக் கொண்டு, ஒரு மாநில அமைச்சரும் தலைமைச் செயலரும், வானிலை ஆய்வு மையம் துல்லியமான தகவல் தரவில்லை என்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் சரியாக உள்ளன என்றும் அரசியல் காழ்ப்பில் குறை சொல்வார்கள்!? இந்த மடை மாற்றும் அரசியல் பேச்சைக் கேட்டு, ஏற்கெனவே சூப்பர் கம்ப்யூட்டருக்கு ரூ.20 கோடி, இனி வெளிநாட்டு நிறுவனத்திடம் தகவல் பெறுவோம் என சில ஆயிரம் கோடிகளை ஆட்டையப் போறப் போறாங்களே என சாமானியன் சமூகத் தளத்தில் கேலி செய்கிறானே!
தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனாவின் செய்தியாளர் சந்திப்புத் தகவல்கள் இவை…
“காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழையும், திருச்செந்தூரில் 92 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவு மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது தென் மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. 1350க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதில் 250 பேர் மாநில பேரிடர் மீட்பு படையினர். ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் படகில் கூட செல்ல முடியவில்லை. சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
நெல்லையில் 65,900 லிட்டர் பால் மற்றும் தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடக்கிறது. 13,500 கிலோ உணவு விநியோகம் செய்யப்பட்டது. 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி, குமரி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் 18 சதவீத மின் விநியோகம் வழங்கப்பட்டது. இங்கு, மின்மாற்றிகள், மின்கம்பிகள் சேதம் அடைந்ததால் உடனடியாக மின்சாரம் வழங்க முடியவில்லை. உடனடியாக வழங்கினால் வெள்ளத்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விமானப்படை, கடற்படை மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. ராமநாதபுரத்தில் இருந்து 323 படகுகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடக்கிறது. அமைச்சர்களுடன் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 27 எருமை மாடுகள், 297 ஆடுகள், ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாக உள்ளது. வானிலை மையத்தின் கணிப்பு சரியாக இருந்தால், முன்னெச்சரிக்கை நன்றாக இருக்கும். சென்னை மற்றும் தென் மாவட்டகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது. வெள்ளம் வடிந்த பின் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் அறிவிக்கப்படும்…”
வெள்ளத்துக்குப் பிறகான இந்தத் தகவல்கள் எல்லாம் மிகத் துல்லியமானவை என்று மாநில அமைச்சர் ’சர்ட்டிபிகேட்’ கொடுப்பாரா?! ஏரலில் நிகழ்ந்த கால்நடை இழப்பு கோரங்களின் வீடியோ இன்று பலரின் மனத்தை ரணமாக்கியுள்ளது. இன்னும் இழப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நெல்லை ஜங்ஷன் பகுதி வர்த்தக நிறுவனங்கள், கடைகளின் பொருள் இழப்புகளும் சேர்ந்து ஒவ்வொருவரும் சொல்வார்களே! அதற்கு வெறும் சில ஆயிர இழப்பீடுகள் கொடுத்து தற்காலிக அரசியல் செய்து விட்டால் போதுமா!? யானைப்பசிக்கு சோளப்பொரி என்பதாக!
மாநில ஆளுநர் அதிரடியாக கூட்டத்தை நடத்தி, மத்திய மாநில அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருக்கிறார். இதில் மாநில அரசின் சார்பில் எவருமே கலந்து கொள்ளவில்லை. மாநில அரசின் அரசியல் காழ்ப்பில் மக்களின் நலன் அன்றோ பாதிக்கப்பட்டிருக்கிறது?! மாநில அரசு செயல் அற்ற அரசாகப் போனால்தான், இப்படி மத்திய அரசின் உடனடி களம் இறங்கல் நடவடிக்கை இருக்கும். அதனை மாநில அரசு ஒப்புக் கொள்கிறதா?! இல்லாவிட்டால், மாநில அரசின் பிரதிநிதிகளை அனுப்பி, நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்று காட்டிக் கொண்டிருக்குமே!
மொத்தத்தில் – இந்த அரசு, நம்பி வாக்களித்த மக்களைப் பாதுகாப்பதற்கு வழியற்ற, செயலற்ற அரசாகவே வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது!