
— ரவிகுமார்
பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்டத்தால் வடிவெடுத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராக வல்லபாய் பட்டேல் இருந்தபோதிலும், நேருவை பிரதமராக்கினார் மகாத்மா காந்தி. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நேரு தனது நாடாளுமன்ற செயல்பாடுகளால் தன்னை நல்ல நாடாளுமன்ற வாதியாக, வெகுஜன தலைவராக நிறுவிக் கொண்டார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் குடும்ப கட்சியானது.
நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மூலம் உருவான தலைவர்களுக்கும் குடும்ப அரசியல் தலைமைக்கும் பெருத்த வேறுபாடு வெளிப்படையாக தெரிகிறது. குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் பண்புள்ளவர்களை, திறமையானவர்களை மதிப்பதில்லை. ஜனநாயக தலைமை பண்புகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியதில்லை.
இதற்கு மாறாக ஜனநாயக அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர் பிறந்து தொன்னூற்றிஓன்பது ஆண்டுகள் ஆகின்றன. காலமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இளைஞராக அரசியல் களத்துக்கு வந்தார். கடுமையான, கொதிப்பு மிக்க காலகட்டத்தின் ஊடாக நாடாளுமன்ற ஜனநாயக அரசியலின் மேலெழுந்து ராஜ தந்திரியாக, ராஜரிஷியாக ஆனவர். ஜனநாயக அரசியலின் சிறந்த உதாரணம் அவர்.
ஆர் எஸ் எஸ் ஸின் இந்துத்துவ கருத்தியலால் உத்வேகம் பெற்று, பயிற்சி பெற்று, முப்பத்தி மூன்றாவது வயதில் 1957 இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவரது அபார பேச்சாற்றலாலும் கருத்தியல் உறுதியாலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்தின் விரைவில் புகழ்பெற்றார்.
தேச விடுதலைக்கு பிறகான முப்பதாண்டு ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியின்போது அதற்கு சரியான கருத்தியல் மாற்றாக வாஜ்பாய் வடிவெடுத்தார். ஜன சங்கம்/ பாஜகவை வளர்த்தெடுத்தார். கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதும் நனித்தக்க நாகரிகத்துடன் இருந்தன அவரது வார்த்தைகளும் வாதங்களும். பிரதமராக இருந்த நேருவே அவரை பல அயல் நாட்டுத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன. பின்னொரு காலத்தில் இவர் பிரதமராவார் என்று நேரு சொன்னதாக ஒரு பேச்சு வழக்கு உண்டு.
அப்படி, அவர் பிரதமரானபோது தேசம் அது வரை கண்டிராததொரு தலைமை பண்பை வெளிப்படுத்தினர். மென்மையாக பேசும் உறுதியான தேசியவாதி என்பதை நாடு மட்டுமல்ல உலகமும் புரிந்து கொண்டது. மூன்று முறை பிரதமராக ஆறாண்டு காலம் ஆட்சி புரிந்தார். 23 கட்சி கூட்டணியை அரவணைத்து நடை போட்டார். மாநில கட்சி தலைவியால் ஆட்சி இழந்த போதும் யார் மீதும் எதிர்ப்பு உணவு இல்லாமல் இருந்த பண்பாளர்.
1998 அணு வெடிப்பு சோதனை வாஜ்பாயின் உறுதியான முகத்தை உலகிற்கு காட்டியது. “பாரதம் இப்பொழுது அணு ஆயுத நாடு. இது மறுக்க முடியாத உண்மை” என்று நாடாளுமன்றத்தில் அவர் தைரியமாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தடைகள் வரும் என்று தெரியும். தெரிந்துதான் செயல்பட்டோம். தடைகளை எதிர்கொள்வோம்’, என்றார். தடை விதித்த அமெரிக்காவிலிருந்து பாரதியர்கள் ஏராளமான நிதியை பாரத அரசுக்கு கொடுத்து தடையை தகர்க்க துணை நின்றார்கள். இதுபோன்ற நிகழ்வு பாரத வரலாற்றில் முதல் முறை. அதை நடத்திக் காட்டியவர் அடல் ஜி.
அவர் பிரதமராக மட்டுமல்ல எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்க அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகிறது. வங்கதேச விடுதலைப் போரின் போது அவர் பாரத அரசுக்கு ஆதரவு அளித்தார். நரசிம்ம அரசின் போது ஐநா மன்றத்தில் பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை தான் தேர்ந்தெடுத்து அனுப்பியது அன்றைய காங்கிரஸ் அரசு.
பண்டித நேருவின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்பவர்கள் இவர் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பால் வருவதில்லை தலைமை பண்புகள். 🪷