- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

நிலைமை சரியில்லாத போது, சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து, ஏற்றம் பெற்று விருத்தியடைவது இந்த கந்துக நியாயம் அளிக்கும் செய்தி. 

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் – 39

தெலுங்கில் – பி எஸ் சர்மா 
தமிழில் – ராஜி ரகுநாதன்  

கந்துக நியாய:  கந்துக: = பந்து 

“ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற பொருளில் பயன்படுத்தும் நியாயம் இந்த “கந்துக நியாயம்”. 

கீழே விழுந்தாலும் அசாதாரண மனிதர்கள் சமாளித்துக் கொண்டு எழுந்து நிற்பார்கள். தரையை நோக்கி அடித்த பந்தைப் போல உடனே மேலே எழுவார்கள். சாதாரண மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்தால் கீழே விழுந்தால் மண் உருண்டை போல நசுங்கிப் போவார்கள். இதுவே கந்துக நியாயம் கூற வரும் செய்தி.

யதா கந்துகபாதேநோத்ப்தத்யார்ய: பதன்னபி |
ததா த்வனார்ய: பததி ம்ருத்பிண்டபதனம் யதா ||(பர்த்ருஹரி நீதி சதகம்) 

பொருள் – தரையில் அடித்த பந்து மீண்டும் எழும்பி வருவது போல தீரம் நிறைந்தவன் தோல்வியடைந்தாலும் மீண்டும் காரிய சாதனைக்கு முன்வருவான். அதில் வெற்றியும் பெறுவான். மண் உருண்டையைப் போல கீழ் விழுந்து அப்படியே அடங்கிவிடுபவன் சிறந்தவன் அல்ல. 

வாழ்க்கையில் எதிர்வரும் கஷ்டங்களைக் கண்டு துவண்டு விடக் கூடாது என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. ஏதோ சிறிது துன்பம் எதிர்ப்பாட்டாலும், ஐயோ என்று புலம்பி வாழ்க்கையே முடிந்து விட்டது என்றெண்ணும் பயங்கொள்ளிகள் சிலர் இருப்பார்கள்.  நோய்கள், அவமதிப்பு, பொருளாதார சிரமங்கள் போன்றவை சிலரை பலவீனப்படுத்தும்.  நல்ல உற்சாகமும் நல்ல சங்கல்பமும் இல்லாத மனிதர் கீழே விழுந்தால் மீண்டும் எழ மாட்டார். இவர்கள் இந்த நியாயத்தை அறிந்து முன்னேறவேண்டும். 

பந்தை போல் கீழே விழுந்தாலும் மேலெந்த மனிதர்கள், நாடுகள், கட்சிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் வரலாற்றில் பலர் உண்டு. அவர்கள் பிறருக்கு ஊக்கமூட்டுபவர்களாக உள்ளனர். எதிர்கொண்ட ஆபத்துகளைத் தாங்கிக் கொண்டு நின்ற ராஜா ஹரிச்சந்திரன் பல யுகங்களாக ஆதரிசமாக நிற்கிறான். 

சத்துவ குணத்தைப் பிரதானமாகக் கொண்ட மனிதர்கள் உயர்ந்த சிகரங்களை எட்டிய பின்னும் ஏதோ காரணத்தால் கீழே விழவேண்டி வந்தாலும், மீண்டும் பந்து போல மேலே எழுந்து வந்த தலைமைப் பண்பு மிக்கவர்கள் நம் புராணங்களில் பலர் உள்ளனர்.   

யுதிஷ்டிரன் –

சிறந்த ராஜ்ஜியத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டதற்கு வருந்திய பாண்டுவின் புதல்வன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூற வந்த வியாச பகவான் இவ்வாறு எடுத்துரைத்தார்,

சுகஸ்யானந்தரம் துக்கம் துகஸ்யானந்தரம் சுகம் |
பர்யேணோபசர்பந்தே நரம் நேமி மிரா இவ ||

(வன பர்வம் 261/49)  

பொருள் – ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரங்கள் கீழும் மேலும் சென்று வருவது போல மனிதனுடைய வாழ்க்கையில் சுகத்திற்குப் பிறகு துக்கம் வருவதும், துக்கத்திற்குப் பிறகு சுகம் வருவதும் இயல்பு. இந்த உண்மை அனைவருக்கும் நினைவில் இருக்க வேண்டும் என்பர் அறிஞர்கள். 

“ஒரு நாள் இந்த துயரங்கள் அனைத்தையும் தாண்டி நீயும் உன் ராஜ்யத்தைப் பெறுவாய்” என்று கூறிய வியாசபகவான், “யுதிஷ்டிரா, தவம் செய். மீண்டும் நல்ல நாட்கள் வரும்” என்று ஆசிர்வதித்தார்.

ALSO READ:  செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மொபைல் ஏடிஎம்.,!

நள மகாராஜா –

“என்னைப் போன்ற துரதிருஷ்டசாலியோ துயரமே உருவானவனோ வேறு யாரவது இருப்பாரா?” என்று வேதனையோடு கேட்ட தர்மராஜனுக்கு ப்ருஹதஸ்வர் என்ற முனிவர் இவ்விதம் தைரியம் கூறினார். 

“மஹாராஜா, உன் கஷ்டம் ஒன்றும் பெரியதல்ல. பராக்கிரமம் நிறைந்த தம்பிகள், மனைவி, உனக்கு நலன் விளைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் அந்தணர்கள் உன்னோடு உள்ளார்கள். துணை யாருமின்றித் தனியாகத் தவித்த நள மகாராஜாவின் கதையைக் கூறுகிறேன் கேள்” என்று கூறி நளதமயந்தி கதையை விவரமாகத் தெரிவித்தார். நளன் அனுபவித்த துன்பங்களின் முன்னால் நீ படும் கஷ்டம்  ஒன்றுமேயில்லை” என்று உற்சாகப்படுத்தினார். 

அதுமட்டுமின்றி, காட்டில் வசித்த பாண்டவர்களுக்கு, மார்கண்டேய மகரிஷி, பேரிடி போன்ற கஷ்டங்களையும் தைரியமாக எதிர்கொண்ட ஸ்ரீராமரின் வரலாற்றை விவரித்தார். இத்தகைய மாமுனிவர்கள் அளித்த ஊக்கத்தால் கீழே அடித்த பந்து மேலே எழுவது போல பாண்டவர்கள் தவம் செய்து சக்தி பெற்று எதிரிகளை அழித்து மீண்டும் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள். கந்துக நியாயத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும்?

மகநீயர் யல்லாப்ரகட சுப்பாராவு –

இன்றைய தலைமுறையில், கந்துக நியாயத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறத் தகுந்த மனிதர், பாரத தேசத்தின் விஞ்ஞானிகளில் இமயமலை போன்று உயர்ந்தவர் டாக்டர். யல்லாப்ரகட சுப்பாராவு அவர்கள். (1895-1948).  ஏழ்மை காரணமாக கல்வியறிவு புகட்டுவதற்குப் பின்வாங்கிய குடும்பத்தில் பிறந்தாலும், கஷ்டப்பட்டு மெட்ரிக் பரீட்சைக்கு பணம் கட்டினார்கள். ஆனால் அதில் தோல்வியடைந்தார். தந்தையின் மரணம் மேலும் கஷ்டத்தைக் கூட்டியது. ஆனால் தாயார் சளைக்காமல் தான் அணிந்திருந்த தங்கநகைகளை விற்று மகனை பீமாவரத்திலிருந்து மதராசுக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். 

பல தடைகளையும் பொருளாதார அழுத்தங்களையும் தாண்டிப் படித்து வந்தார் சுப்பாராவு. மூத்த சகோதரனின் மரணம் பேரிடியாக வந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு சகோதரனும் மரணமடைந்தார். குடும்பம் மிகுந்த மனக்கவலைக்கு ஆளானது. சகோதரர்களின் மரணத்திற்குக் காரணமான ‘வெப்பமண்டல ஸ்ப்ரூ’ என்ற நோய்க்குச் சரியான மருந்து இல்லாத நாட்கள் அவை. அதற்குத் தீர்வு கண்டறிய வேண்டும் என்று எண்ணி மருத்துவ ஆராய்ச்சியாளராக வேண்டும் தீர்மானித்தார் சுப்பாராவு. 

மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. தேசபக்தி நிறைந்த சுப்பாராவு கதராடை அணிந்ததால் வெளிநாட்டு பேராசிரியர்கள் பழிவாங்க நினைத்து அவருக்கு எம்.பி.பி.எஸ் டிகிரி கொடுக்காமல் குறுக்கே நின்றார்கள். 

1925 ம் ஆண்டு தொடக்கத்தில் அதிசார நோயான வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சுப்பாராவு மெலிந்து போனார். மதராசில் அன்றைய நாட்களில் புகழ்பெற்று விளங்கிய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ‘ஆச்சண்ட லக்ஷ்மிபதி’ என்பவர் சுப்பாராவுக்கு சிகிச்சை  செய்து உயிர் காத்தார். பண்டைய மருத்துவ நூல்களை சுப்பாராவு ஆர்வத்தோடு  பயின்றார். ஆராய்ச்சி பரிசோதகராக ‘லீடர்லி’ என்ற கம்பெனியில் சேர்ந்து ‘போலிக் ஆசிட்’ என்ற மருந்தைக் கண்டறிந்தார். 

யானைகால் நோய், டைபாயிடு. பாண்டுரோகம் எனப்படும் வெண் குஷ்டம், கான்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகளை ஆராய்ந்து கண்டறிந்தார். ஹைட்ரஜன், டெட்ராசைக்ளின், ஆரியோமைசின் போன்ற பல மருந்துகளைக் கண்டறிந்தார்      உலகத்தார் அனைவரும் நன்றியோடு நினைத்துப் போற்றத்தகுந்த மனிதராகச் செயலாற்றினார். இவர் அற்புத மருந்துகளின் நாயகன் என்று அறியப்படுகிறார். மனித குலத்திற்கு மிக முக்கியமான மருந்துகளைக் கண்டறிந்து உலகின் சிறந்த விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்பட்டார். பெயருக்காகவோ பேடென்ட் உரிமைக்காவோ அலையாத நவீன பாரத ருஷி நம்முடைய டாக்டர் யல்லாப்ரகட சுப்பாராவு.  

ALSO READ:  அந்த 8 பெட்டி வந்தே பாரத் ரயிலை ‘இங்கே’ இயக்கலாமே!

இவரது மகத்தான பணியை கௌரவிக்கும் வகையில் புதிதாகக் கண்டுபிடித்த ஒரு ஃபங்கசுக்கு உலகம் சுப்பாராவின் பெயரைக் கொடுத்து, “சுப்பாராவோமைசஸ்” என்று அழைத்து கௌரவம் அளிக்கும் உயரத்திற்கு இந்தப் பந்து எழும்பியது.  

இஸ்ரேல் –

உலக நாடுகளில் பந்தினைப் போல மேலே எழும்பிய தேசங்கள் பல உள்ளன. இஸ்ரேல்   அவற்றுள் ஒன்று. யூதர்கள் தம் ராஜ்ஜியத்தை இழந்து, தாக்குதலுக்கு உள்ளானார்கள். 

அங்கங்கே சிதறி, உலகின் பல தேசங்களில் அகதிகளாகக் குடியேறவேண்டி வந்தது. அவமரியாதைக்கு ஆளாக நேர்ந்தது. தேச பக்தியோடும் எதிர்பார்ப்போடும் வாழ்ந்தார்கள். யாரேனும் இரண்டு யூதர்கள் எங்கு சந்தித்தாலும், “அடுத்த முறை ஜெரூசலத்தில் சந்திப்போல்” என்று ஹீப்ரூ மொழியில் பேசிக்கொள்வார்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருந்தார்கள். பல தலைமுறைகள் கடந்தன. சிறிய பந்தை தரையில் ஓங்கி அடித்தால் மேலே எழும்புவது போல, இந்தச் சிறிய தேசம் தன்னம்பிக்கையோடும் சுயச்சார்போடும் இன்று பிரபஞ்சத்தில் தனக்கென்று ஒரு பிரத்தியேக இடத்தை சாதித்துள்ளது. 22,145 கி.மீ. பரப்பளவும், 88 லட்சம் மக்கட்தொகையும் கொண்டு 1948 ல் தோற்றமெடுத்தது. இந்தியாவைப் போலவே பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது. 

ஜப்பான் – 

அதேபோல் மேலெழுந்த மற்றொரு தேசம் ஜப்பான். அமெரிக்க செய்த மனிதத்தன்மையற்ற கொடூரமான கோரச்செயலுக்கு ஆளான சிறிய தேசம் ஜப்பான். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மேல் நடந்த அணு ஆயுதப் போரால் சாம்பாலான ஜப்பான், மீண்டும் பந்தினைப் போல மேலே எழுந்தது. தேசபக்தியோடு அனைவரும் ஒன்றிணைந்துப் பணிபுரிந்து உலக நாடுகளுள் ஒரு பிரத்யேக இடத்தைப் பெற்றது 

பாரதம்

பிற நாடுகள் மட்டுமல்ல. நம் பாரத தேசமும் பந்தினைப் போல எழும்பி வளர்ந்த தேசங்களில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொள்ளையடிக்கபட்டாலும் அதனைத் தாங்கிக் கொண்டது. லட்சக்கணக்கானோரின் பலிதானத்தையும் மரண ஹோமங்களையும் எதிர்கொண்டது. பட்டினிச் சாவுகளைக் கண்ணால் பார்த்தது. விடுதலை பெற்றுத் தன் பூமியின் பகுதிகளை இழந்தது. மத மாற்றங்களுக்கு ஆளானது. கடந்த ஆட்சியாளர்களின் குள்ளநரித் தந்திரங்களுக்குப் பலியானது. 

நிகழ்காலத்தில் தெய்வீக சக்தியாக, பார்வைக்கெட்டாத அளவுக்கு உயரமாக வளர்ந்துள்ளது. உலகத்திற்கே நட்பு நாடாக மாறியுள்ளது. அன்னபூரணியாக மலர்ந்ததோடு   உலகிற்கே ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. பகைவர்கள் நடுநடுங்கும் ஆயுதங்களைத் தாயாரிக்கிறது. நம்முடைய வெற்றிகரமான சுபிக்ஷத்தால் உலகநாடுகள் நம்மிடம் அடக்கத்தோடு நடந்து கொள்ளும்படி உயர்வுற விளங்குகிறது.  

கந்துக நியாயத்திற்கு நம் புண்ணிய பாரத தேசத்தை விட மேலான எடுத்துக்காட்டு என்ன இருக்கப் போகிறது? 

கிரேக்கம், ரோமானியம் போன்ற பல கலாச்சாரங்கள் மண்ணோடு மண்ணாகிப் போயின. அருங்காட்சியகங்களில் அடங்கிவிட்டன. 

ALSO READ:  கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

ஆனால் எத்தனை முறை தாக்கபட்பாடாலும் மீண்டும் மீண்டும் மேலெழுந்த தேசம் நம்முடையது. காரணம் என்னவென்றால், ஹிந்து தேசத்திற்கு சிறந்த கொள்கை ஒன்றுண்டு. “க்ருண்வந்தோ விஸ்வமார்யம்” என்ற சங்கல்பமும், “வசுதைவ குடும்பகம்” என்ற உயர்ந்த நோக்கமும் இதற்குண்டு.

A3  நமக்களிக்கும் செய்தி – 

* கந்துக நியாயதிற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஆபிரகாம் லிங்கன், அன்னா ஹஜாரே, அப்துல் கலாம் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர்கள் கீழே விழுந்தாலும் அஞ்சவில்லை. பந்தைப் போல எழும்பி வெற்றி மலரைச் சூடினார்கள். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட பல சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு லட்சியத்தை அடைவது நம் கடமை என்பது இந்த A3  நமக்களிக்கும் செய்தி. 

பாரதிய ஜனதா பார்ட்டி –  

* ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக நிறுவப்பட்ட ஜனசங்/ பாரதிய ஜனதா பார்ட்டியை  கந்துக நியாயத்திற்கு உதாரணமாகக் கூறலாம். டிபாசிட் கிடைக்காமல் தோற்றாலும் பீதியடையாமலும் தம் கொள்கையிலிருந்து விலகாமலும் தேசத்தில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் போட்டியிட்டு, இரண்டே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றாலும், தைரியத்தை இழக்காமல் நிலைத்து நின்றது. நிகழ்காலத்தில் தேசத்தையே ஆளும் பலத்தைப் பெற்றது. தேசம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை அளிக்கும் விதமாக ஆள்கிறது. உயர்ந்த லட்சியத்திற்காக பணி புரியும் அமைப்புகளும் இது போன்ற கட்சிகளும் கந்து நியாயத்திற்கு எடுத்துக்காட்டுகள். 

* ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த தெரிந்த ஒரு குடும்பத்தை சாலை விபத்து வடிவில் விதி கீழே வீழ்த்தியது. குடும்பத் தலைவனின் அகால மரணம் அவர்களை சோகத்தில் ஆழ்த்தி சோர்வடைச் செய்திருக்கும். ஆனால் சுய கௌரவமும் விடாமுயற்சியும் கொண்ட அந்த இல்லாள் தைரியத்தோடும் சங்கல்பம், சாதனை, பண்பாடு என்னும் குணங்களின் உதவியோடும் பிரச்சினைகளை எதிர்கொண்டார். தரையில் அடித்த பந்தைப் போல மேலே எழுந்தது அந்த இல்லத்தரசியின் சிறப்பு. அண்டை அயலாரின் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தார். தன் குழந்தைகள் இருவருக்கும் கல்வி போதித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாகச் செதுக்கினார். 

* வியாபாரத்தில் நஷ்டமடைந்த ஒரு மனிதர் நொந்து விழாமல், விடாமுயற்சியும் உழைப்பும் காரணமாக மீண்டும் ஓம் என்று பிள்ளையார் சுழி போட்டு உயர்ந்து நின்றார். இது போன்ற பல உதாரணங்கள் இல்லாமல் இல்லை. 

கந்துக நியாயத்திற்கு இவர்களனைவரும் உதாரணங்கள். கஷ்ட, நஷ்டங்களைத் தாங்கித்  தரையில் அடித்த பந்தைப் போல மேலே எழுந்த இவர்கள், பிறருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் ஆதரிச மனிதர்கள். 

தெய்வமும் விதியும் பாதகமாக இருக்கும் போது. மனித முயற்சிகள் சாதகமாக இல்லாத போது வருந்துவது இயற்கை. அத்தகைய சந்தர்ப்பங்களில், “தைரியமாக இரு” என்று தட்டிக்கொடுக்கும் நியாயம் இது. 

விஷமாவஸ்திதே தைவே
பௌருஷே பலதாம் கதே 
விஷாதயந்தி நாத்மானம் 
சத்யோபாஸ்ரயணோ நரா: 
(மகாபாரதம், வனபர்வம் 79/14)

நிலைமை சரியில்லாத போது, சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து, ஏற்றம் பெற்று விருத்தியடைவது இந்த கந்துக நியாயம் அளிக்கும் செய்தி. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version