
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
தம் நாட்டின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரம், விஞ்ஞானம் போன்றவை பற்றி உலக நாட்டவர் பலரும் கர்வமும் பாசமும் கொண்டு காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அப்படி எதுவும் நம் தேசத்தில் பலருக்கும் இருப்பதில்லை. அலட்சியம், வெறுப்பு, உதாசீனம் போன்ற குணங்களால் வயிறு எரிபவர்களே அதிகம்.
மேலை நாட்டவர் நம்மை ஆண்ட போது, தேசியமான, நமக்கே உரித்தான உள்நாட்டு மருத்துவம், யோகம், சிற்பக்கலை, வான்வெளி அறிவியல் போன்ற சாத்திரங்களை உபயோகமற்றவை என்று சித்திரித்தார்கள். மேல் நாட்டவர் கண்டறிந்தவையே விஞ்ஞானம் என்று அறிவித்தார்கள். அடிமைத்தனம் பழக்கமாகிப்போன இந்தியர்கள் அவர்களுக்கு ஜால்ரா போட்டார்கள். அவர்களே அதிகம் படித்தவர்களாக மதிக்கப்பட்டு விடுதலைக்குப் பிறகும் அதே அடிமை புத்தியைத் தொடர்ந்தார்கள். அங்கங்கே ஏதோ கண்துடைப்பாக ஆயுர்வேதம் போன்ற சாத்திரங்களின் ஒரு சில பயிற்சி நிலையங்களை அமைத்தார்களே தவிர பண்டைய தேசிய சாத்திரங்களின் உயர்வை நிலைநாட்டும் முயற்சிகள் சொல்லும்படியாக நிகழவில்லை.
அண்மையில் ஹைதராபாத் கல்வி நிலையங்களில் சம்ஸ்கிருத மொழிப் பயிற்சிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க முன்வந்த போது சில கும்பல்கள் அதனை எதிர்த்தன. அதோடு தம் முடிவில் பின் வாங்கிவிட்டது அரசாங்கம். தேசமெங்கும் பல சாஸ்திரங்களையும் அழியாத காவியங்களையும் வெளியிட்டு அனைத்து மாநிலங்களும் அங்கீகரித்த சமஸ்கிருத மொழியின் மேல் இந்த துவேஷம் எதற்காக? இதற்கு அரசாங்கம் தலை வணங்குவது ஏன்? என்பது புரியாத கேள்வி. கேள்விகளுக்கு மதிப்பளிக்காத அரசு.
அதே போல் ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைப் பிரிவு அமைக்க முன்வந்த போது, நவீன அலோபதி மருத்துவ நிபுணர்கள் அனைவரும் ஒன்று கூடி கண்டனம் தெரிவித்தார்கள். உண்மையில் அறுவை சிகிச்சை என்ற முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே ஆயுர்வேதம். சுஸ்ருதர் போன்ற மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் இடம் வகித்த ஆயுர்வேதத்தின் மீது இத்தகைய வெறுப்பை காட்டுவதில் ஏதாவது பொருள் உள்ளதா? ரஷ்யா போன்ற நாடுகளின் நவீன மருத்துவ நூல்களில் முதலாவதாக சரகர், சுஸ்ருசர் போன்றோர் எழுதிய மருத்துவ நூல்கள் பற்றி உயர்வாகக் குறிப்புட்ட பின்னரே பிற குறிப்புகள் உளளன. ஆனால் நம் தேசத்தில் குறைந்த அளவு கௌரவம் கூட அளிக்கப்படுவதில்லை.
உலக மேதைகள் பலரையும் ஆச்சர்யத்திலாழ்த்தும் கணிதம், வானவியல் போன்றவை வேதங்களின் ஆதாரமாக நிரூபிக்கப்பட்ட சாஸ்த்திரங்கள். ஆனால் இவை நம் தேசத்தில் உபயோகமற்றவையாகக் கருதப்படுகின்றன. இவற்றைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு தெரியச் செய்யலாம் என்றாலும் செய்யவிடாமல் தடுக்கும் தேச விரோதிகளுக்கும், அவர்களுக்கு ஆமாம் போடும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆயுர்வேதத்தை ‘சூடோ சயின்டிஃபிக்’ என்றும் ‘ஃப்ராட்’ என்றும் எழுதும் புத்திசாலிகள் அதிகம் தென்பட்டாலும் அவர்களை யாரும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.
மருத்துவ முறைகள் அனைத்துமே மதிக்கப்பட வேண்டியவை. ஆனால் மத வெறி போல குறுகிய மனப்பான்மை மக்களிடையே வளர்ந்து வருகிறது. பாரத தேசத்தைச் சேர்ந்த சில ஊடகங்களும் அமைப்புகளும் இத்தகைய தவறான எண்ணங்களை உலகில் பரப்புகின்றன.
நவீன மருத்துவக் கல்வியின் வளர்ச்சி தேவைதான். அதே நேரத்தில் நம் தேசத்தின் மிகப் பழமையான மருத்துவத்தையும் அதன் மூலம் இன்றைக்கும் பலர் பயனடைந்து வரும் உண்மையையும் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவது முட்டாள்தனம். விசாலமான இதயம் தேவையல்லவா.
சற்றும் ஆராயாமல் தவறான முடிவுக்கு வருவது விஞ்ஞான முறை அல்ல. சிறிது காலத்திற்கு முன் வரை யோகாவை ஏளனம் செய்தவர்கள் இப்போது சிறிது சிறிதாக அதன் பயனை அங்கீகரித்து வருகிறார்கள்.
ஜோதிட விஞ்ஞானத்தை கல்லூரிகளில் ஒரு பாடமாக வைத்த போது அதை எதிர்த்து ஒரு கும்பல் கூச்சல் போட்டது. நம் தேசத்தின் மொழியையும் சாத்திரங்களையும் கல்வி நிலையங்களும் ஏற்காமல், மக்களும் அவை தோன்றிய தேசத்திலேயே கௌரவிக்காமல் போவதென்பது மன்னிக்க முடியாத குற்றம்.
தேசியம், பண்டைய வைபவம், நம் தேச சரித்திம், நம் கலாச்சாரம் எலலாவற்றையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்த்து கேவலமாக விமர்சிப்பது என்பது போலி மேதாவிகளின் வழக்கமாகி விட்டது. விஞ்ஞானம் என்பது விசாலமான உள்ளத்தோடு பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. அதற்கு பழமை, புதுமை என்ற வேறுபாடோ, தேசியம் வெளிநாடு என்ற எல்லைகளோ கிடையாது. பரவி வரும் உலக மயமாக்கலில் குறுகிய மனப்பான்மையை விட்டு விட்டு ஞானம் பெரும் கண்ணோட்டத்தோடு பயிற்சி பெற வேண்டும். ஆழமாகப் படித்தறிய வேண்டும். சமன்வயம், சமரசம் என்ற குணங்களைக் கைக்கொண்டு எல்லாவற்றிலும் இருக்கும் நன்மைகளை உணர்ந்து, மானுட இனத்தின் நலனுக்காக உயர்ந்த வெளியீடுகள் வெளிவரவேண்டும்.
அன்னியரின் ஆட்சி ஒழித்தாலும், பாரத தேசத்தை வளரவிடக் கூடாது என்று பலவித சதித் திட்டங்களைத் தீட்டி, மேலை நாட்டவரின் பரிபாலனையைப் போற்றித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, தேசத்தையும், தேசியத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்று எண்ணும் சுதேசிகளை பாரத தேசத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
கேளிக்கைகள், இஷ்டம் வந்தாற்போல வாழ்வது என்பதை மட்டுமே இயல்பாகக் கொண்ட பெரும்பாலான பாரத தேசத்தவருக்கு தேசம் பற்றியும் அதன் பழமை பற்றியும் அதன் உயர்ந்த பாரம்பரியம் பற்றியும் புரிதலோ விருப்பமோ கௌரவமோ துளியும் இல்லை. அவற்றை ஏற்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் பெற்றோரும் கல்விக் கூடங்களும் முயற்சிப்பதில்லை. ஏதாவது நல்ல முயற்சியை அறிஞர்கள் செய்ய முன்வந்தால் அவற்றைத் தடுப்பவரே அதிகம். பாரதிய பாரம்பரியச் செல்வங்களான கலைகளை வளர்க்கும் அமைப்புகள் இருந்தாலும் அவற்றுக்குத் தடைகளும் மறுப்புகளும் நீதிமன்றங்களில் இருந்து கூட அதிகம் வருகின்றன.
அன்று அன்னியர் ஆட்சியில் இருந்ததை விட சுதந்திர இந்தியாவில் பாரதியத்தை சேதப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ளது. அதுமட்டுமல்ல. இந்தியாவின் பாரம்பரியச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்க முன்வருபவர்களை ‘ஹிந்துமத பாரபட்சம்’ என்று முத்திரை குத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக தடை கூறுவது வழக்கமாகிவிட்டது.
இப்போது இன்னுமொரு தேசிய இயக்கம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நிகழ வேண்டும். அதற்குத் தேவையான விவேகமும் அறிவுக் கூர்மையும் முன்னோக்குப் பார்வையும் இந்திய இளைஞர்களிடம் விழித்தெழும் என்று எதிர்பார்ப்போம்.
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மே, 2024)